நாடு விடுதலை அடைந்த நன்னாளை நாம் எத்தனையோ விதங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நெய்வேலி ஸ்ரீஅஹோபில மட நித்யாராதன கமிட்டிக்காரர்கள் இந்தத் திருநாளை ஸ்ரீஅஹோபில மடம் மாலோலன், மற்றும் அவனுடன் மகிழ்ந்து உறைகின்ற கண்ணன், மற்றும் ஆழ்வார் ஆசார்யர்களோடு கொண்டாடுவதை கடந்த இருபது ஆண்டுகளாக வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்களாம்.எவ்வளவு உயர்ந்த நோக்கம்! அந்த ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் உளம் குளிர்ந்தால் நாடும் நகரும் செழிக்கும், அதனால் ஸர்வே ஜனோ சுகினோ பவந்து என்பது அவர்கள் எண்ணமாக இருக்கலாம். அந்த வழக்கப்படி இன்று 15/8/2011 அன்று திருப்புல்லாணியிலும் மிக மிக விசேஷமாக அவர்கள் திரளாக வந்திருந்து கொண்டாடி கூடியிருந்த அனைவரையும் ஆனந்தப்பட --- இல்லை இல்லை கைங்கர்யபரர்கள் அனைவரும் ஆத்மார்த்தமாக ஸ்ரீமடம் ஆராதன மூர்த்திகளுக்கு செய்த கைங்கர்யங்களைக் கண்டு உளம் நெகிழ ---- வைத்தனர். நெய்வேலிக்காரர்கள் உபயமாக இன்று நடந்தது பெரிய திருமஞ்சனம். இந்த ஆண்டு அவர்களுடன் டோம்பிவிலி ப்ருஹஸ்பதி ஸ்ரீ சந்தானம் வாத்தியாரும் உபயதாரராக சேர்ந்து கொண்டார். பெரிய திருமஞ்சனம் என்றால் மாலோலன் முதல் ஆராதன மூர்த்திகள் ஒருவர் விடாமல் அனைவருக்கும் மிக விசேஷமான திருமஞ்சனம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்த திருமஞ்சனம். திருமேனி தளர்வையும் பொருட்படுத்தாமல் கூடவே இருந்து பெரிய அழகியசிங்கரும், சின்ன அழகியசிங்கரும் நடத்தி வைத்த திருமஞ்சனம். பார்த்தவர்கள் எல்லாரும் மெய்மறந்த திருமஞ்சனம். கண்டு களித்தோரெல்லாம் நெய்வேலிக்காரர்களை மனம் நிறைந்து வாழ்த்த வைத்த திருமஞ்சனம்.
”வாழி நரசிங்க மால்கழல்கள் மாலடியார்
வாழி அகோபிலத்து மாதவர்தாள் – வாழி
அழகிய சிங்கர் அணிமரபு வாழி
பழகிய மெய்ச்சீர் பயின்று”
என்று பரவிப் பரவசப்பட வைத்த திருமஞ்சனம்.
சரி!சரி! திருமஞ்சன வீடியோ எங்கே? அதைக்காட்டாமல் என்ன வசனம்? என்கிறீர்களா?
தீர்த்தக்கரைப் பாவி என்று சொல்வார்களே! இன்று அடியேன் நிலையும் அதேதான்! மேலே வர்ணித்ததெல்லாம் பார்த்தவர்கள் சொல்லி மகிழ்ந்தது. அடியேனுக்கு அந்த பாக்யம் இன்று கிட்டவில்லை. வேறு ஒரு காரியத்தில் தவிர்க்க முடியாமல் ஈடுபட வேண்டியிருந்ததால் இங்கேயே இருந்தும் மடத்தின் பக்கம் திருமஞ்சனங்கள் முடியும்வரை போகவே முடியவில்லை. அதனால் அதைப் பதிவு செய்யும் நல்வாய்ப்பும் அடியேனுக்குக் கிடைக்கவில்லை. அதுமட்டுமில்லை. கடந்த 5 ஆண்டு காலமாக யாரை ஸேவிக்க வேண்டுமென்று மனம் நிறைந்த ஆசையுடன் இருந்தேனோ, யாரால் இன்று இந்திய மொழிகள் பலவற்றில் கம்ப்யூட்டர்களில் மிக எளிதாக எழுத முடிகிறதோ, யார் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயங்களிலும் நிகரற்ற தேர்ச்சி பெற்று, கணிணி தொழில்நுட்பங்களிலும் அகில உலக அளவில் பேசப்படுகிறாரோ, அந்த ஸ்ரீ சோகத்தூர் ராமானுஜம் ஸ்வாமியை, அவராகவே அடியேனைப் பார்க்க விரும்பிய நேரத்திலும், அடியேனுடைய கமிட்மெண்ட் பார்க்க விடாமல் செய்தது அடியேனுடைய மிகப் பெரிய துர்பாக்யம்.
ஆக மடத்தில் திருமஞ்சனங்கள் முடிந்து தீர்த்த கோஷ்டி ஆகி ததீயாராதனம் நடந்தபோது மணி மாலை 4-30. மாலோலனை விட்டு மனம் அகலாமல் இருந்த நிலையில் யாருக்கும் பசிக்கவுமில்லை. இன்று வந்திருந்த சுமார் 250 பேர்களுக்கும் மேற்பட்டவர்கள் அனைவரும் நிதானமாக இருந்து ததீயாராதனத்தில் அந்வயித்து பலமந்த்ராக்ஷதை பெற்றுச் சென்றது மற்றும் ஒரு சிறப்பு.
இழந்தோமே ஒரு நல் வாய்ப்பை என்று கவலைப்பட்டவனுக்கு மாலையில் ஒரு சந்தோஷம் காத்திருந்தது. இந்த நெய்வேலிக்காரர்கள் வழக்கமாக டோலோத்ஸமும் பண்ணுவார்களாம். சுமார் 7 மணிக்கு ஆரம்பித்த அந்த டோலையும் தொடர்ந்த ஆராதனங்களும் கோஷ்டியும் முடிய 9 மணிக்கு மேலாகி விட்டது. அப்பப்பா! ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காத கைங்கர்யபரர்கள்! அதைக்காட்டிலும் அசராத மடைப்பள்ளிக்காரர்கள்! இரவு கோஷ்டியில் வந்துகொண்டே……….யிருந்த ப்ரஸாதங்கள்! மலைக்க வைத்தன.
இப்போதைக்கு டோலையின்போது எடுத்த சில படங்கள் மட்டும் இங்கே! வீடியோ யூட்யூபில் ஏறிக்கொண்டிருக்கிறது. அதை நாளை தருவேன். இப்போதே மணி 12 ஆகி விட்டது. பொறுத்துக் கொள்ளுங்கள். யூட்யூப் அடியேனைப் போல் சோம்பேறியல்ல என்று நிரூபித்து விட்டது. இதை எழுதி முடிப்பதற்குள் அது பதிந்து விட்டது. வீடியோ பதிவின் இறுதியில் உள்ளது.
ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் வரும் செப்டம்பர் முதல் நாள், 1.9.2011, அதாவது 44ம் பட்டம் முக்கூர் அழகியசிங்கர் திருநக்ஷத்திரத்துக்கு மறுநாள், ஸ்ரீஆதி ஸேதுவில் சமுத்திர ஸ்நானம் செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறார்கள். அன்று விநாயகர் சதுர்த்தி. அரசு விடுமுறை. ஸ்ரீஅஹோபில மடம் சிஷ்யர்கள் வாய்ப்பை நழுவ விடமாட்டார்கள் இல்லயா! அவசியம் வந்து அழகியசிங்கர்களுடன் சமுத்திர ஸ்நானம் செய்யும் பாக்யசாலிகளாகப் போகிறார்கள்தானே! தங்குவதற்குத் தனி அறைகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை! இருக்கிற இடத்தில் சமாளித்துக் கொள்வோம் என்று இப்போதே பயணத்திற்குத் தயாராகிவிடுவார்கள்தானே!
டோலையில் எடுத்த சில படங்கள் இங்கே! கண்ணனை கண்ணாரக் கண்டு அவன் அணிந்து நம்மை மகிழ்விக்கின்ற அந்த ஆபரணங்களை, குறிப்பாக அந்த ஜடை அலங்காரத்தைக் கண்டு களியுங்கள்.
இப்போது
“மாற்றுயர்ந்த செழும்பொன்னால் கால்கள் நாட்டி
வலிமிகுந்த வச்சிரத்தால் விட்டம் போட்டுத்
தோற்றமுறு மாணிக்கத் தொடர்கள் பூட்டித்
துங்கமுது நீலமணிப் பலகை தூக்கி
ஏற்றுதிரு மாமணிமண் டபத்தின் னூசல்
எழிலுடனா டியபடியே யிங்கு மன்பர்
ஆற்றலுறக் கடைக்கணித்தே யாடி ரூசல்
அலங்கார மாயவரே யாடி ரூசல்.
செங்கமலத் தோள்புரிந்த மாயங் கண்டு
சிறுவரோடு கன்றினமாய்ச் சென்றே யன்பர்
தங்கள்மனம் களித்திடவு மலரோன் கொண்ட
தருக்கன்று தாழ்ந்திடவுந் தாள்செய் திம்பர்ப்
பொங்கிவளந் தழைத்திடச்செய் யமுனை யாற்றிற்
போராவி னடித்ததகை தீரக் கொண்ட
அங்கைநவ நீதமுனீ ராடி ரூசல்
அலங்கார மாயவரே யாடி ரூசல்.
அண்டமெனுங் கூடத்தை நாள்கோள் தம்மால்
அலங்கரித்து மேருவினைத் தூண்க ளாக
விண்டலமார் துருவநிலை விட்ட மாக
விரவுதுரு வச்சுழல்சங் கிலிக ளாகக்
கண்டலஞ்சேர் வதிர்க்கடவுள் பலகை யாகக்
காலமெனுங் கடவுளுளக் கனிவொ டாட்டப்
பண்டைமறைப் பரம்பொருளே யாடி ரூசல்
பரிதினுட் பரஞ்சுடரே யாடி ரூசல்.”
என்று அன்று திரு ஹரிஹர அய்யர் பாடியதற்கேற்ப அந்த மாயக் கண்ணன் டோலையிலே வீற்றிருக்கும் அழகைப் பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக