ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஸ்ரீ அஹோபில மடம் சிஷ்யர்களுக்கு ஒரு நன்னாள்.


            நம் வாழ்வில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளுக்கும் பெருமாள் ஒரு காரணம் வைத்திருக்கிறார். சிறுமதி படைத்த நமக்கு அவை உடனே விளங்குவதில்லை. பின்னால்தான் உணர்கிறோம். ஓரிரு நாட்களுக்கு முன் சென்னை செல்வதாக ஸ்ரீமத் அழகியசிங்கர்களிடம் விஞ்ஞாபித்து திருப்புல்லாணியிலிருந்து கிளம்பி, மதுரை சென்று மாமனார் அகத்திலே இரு நாட்கள் இருந்துவிட்டு, அங்கிருந்து கிளம்புகிற நேரத்திலே, அடியேனுடைய 40 வருட பி எஸ் என்எல் “ஸேவை” (?) யில் அடியேன் சண்டை போடாத, அடியேனால் மிக மதிக்கப்பட்ட ஒரே ஒரு உயர் அதிகாரியின் வேண்டுகோளை ஏற்று, சென்னை செல்லும் முடிவை மாற்றிக் கொண்டு திருப்புல்லாணி திரும்புகையில் அதன் உண்மையான காரணத்தை அடியேனால் சரியாக உணரமுடியவில்லை. இன்று, காயத்ரி ஜபத்தன்று, ஸ்ரீ அஹோபில மடத்தில், பெரிய அழகியசிங்கரே திருவாராதனங்களைப் பண்ணியதைப் பார்க்கும் பாக்யம் கிடைத்த பிறகுதான், ஆஹா! இந்த சந்தோஷத்தை உலகெங்கும் உள்ள ஸ்ரீ மடம் சிஷ்யர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு பேறுக்காகத் தான், அந்த அதிகாரியை வ்யாஜ்யமாக வைத்து, பெருமாள் அடியேனைத் திருப்புல்லாணி வர வைத்திருக்கிறார் என்று புரிந்தது. தன்னை நம்பி வரும் சாமானியர்களுக்கே வேண்டியதைச் செய்து அருள் பாலிக்கும் எங்கள் பத்மாசனித் தாயார்,  சிஷ்ய வர்க்கங்களை அன்புடன் பரிபாலிக்கும் அழகியசிங்கர் மீது தன் கருணை மழையைப் பொழிந்து அவரது திருமேனி நாளும் திடமடையச் செய்து வருவதில் வியப்பொன்றுமில்லைதான். ஏற்கனவே 2008ல் முதன்முதலாக ஸ்ரீமத் ஆண்டவன் இங்கு சாதுர்மாஸ்யத்துக்கு எழுந்தருளியபோதும், பட்டிக்காடே, அங்கு வைத்ய வசதிகள் கிடையாதே என்ற ஆதங்கத்தில் வரவேண்டாம் என்று அன்பின் மிகுதியால் மன்றாடியவர்களும் பிரமிக்கும் வகையில் ஸ்ரீமத் ஆண்டவனின் திருமேனி ஸௌக்யங்களுக்கு அனுக்ரஹித்தவள் அவள். இன்றும் அதே அற்புதங்களைச் செய்து, எல்லாரையும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்க வைத்திருக்கிறாள். உலகெங்கும் இருக்கும் சிஷ்யர்கள் ஒருமுகமாக அவளைப் ப்ரார்த்தித்தால், ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் இங்கிருந்து உத்தானமாகி யாத்ரை கிளம்புவதற்குள், பெரிய அழகியசிங்கர் ஸ்ரீ அஹோபில மடத்திலிருந்து நடந்தே வந்து தன்னை மங்களாசாஸனம் செய்யவும் வைப்பாள். ப்ரார்த்திப்போம்.
பெரிய அழகியசிங்கர் திருவாராதனம் செய்யும் இந்த வீடியோ காட்சிகளைக் கண்டு மகிழ்வதற்கு முன், அடியேனை க்ஷமித்துக் கொண்டு தொடரவேணும். அவசரத்தில், காமிரா லென்ஸில் இருந்த தூசியைக் கவனிக்காததால் வீடியோ அனைவரும் விரும்பும் வகையில் தெளிவாக இல்லை. ஆனால், அடியேன் நோக்கம், ஒரு பட்டிக்காட்டில் இருக்கிறாரே, திருமேனி எப்படி இருக்கிறதோ, என்ன சிரமப்படுகிறாரோ என்று தினமும் கவலைப் படும் சிஷ்யர்களுக்கு சற்று நிம்மதி அளிப்பதுதான். எனவே, வீடியோவின் தரம் பற்றி மிகவும் கவலைப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உண்டு. 
To enjoy the video visit
http://youtu.be/nfneX9Pxxdc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக