புதன், 25 ஆகஸ்ட், 2010

தேசிகப்ரபந்தம்

ஸ்ரீ ஆர்.கேசவ அய்யங்கார் பதிப்பித்த “தேசிகப்ரபந்த”த்தின் முன்னுரை.

தேசிகப்ரபந்தம் : தேசிகமாலை

திருமாலடியார்களால் திரட்டித் தொகுக்கப் பெற்றுத் திருமுறையாய்த் திகழும் வேதாந்த தேசிகர் அருளிச் செய்த தமிழ்ப்பாடற்ப்ரபந்தங்களும் மணிப்பவளப்ரபந்தப்பாடல்களும் தேசிகப்ரபந்தம் என்னப்பெறும். இப்ரபந்தம் ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தத்தோடு சேர்த்து ஓதப்பெறும் சீர்மை உடையதால் தேசிகப்ரபந்தம் என்னும் திருநாமம் பெற்றுள்ளது. திருமால்தானே அருள்மிகுத்த தனது சிறந்த வடிவமாகிய தேசிக வடிவத்தில் இவரது மனத்திலும் வாக்கிலும் குடிகொண்டு இவர் வாயிலாகப் பாடியருளியதால் இது தேசிகப்ரபந்தம் என்று நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தோடொத்த சிறப்பு மறையாய்த் திகழாநின்றது. “வெள்ளைப்பரிமுகர் தேசிகராய் விரகாலடியோம், உள்ளத்தெழுதிய தோலையிலிட்டனம்”1 என்ற இம்மஹாதேசிகர் திருவாக்கால், தேசிகப்ரபந்தம் என்றது திருமாலார்தாமே தேசிகராய் உள்ளத்தில் எழுதியதை இத்தேசிகர் ஓலையிலிட்ட ப்ரபந்தம் என்ற சீரிய பொருள் காண்க. சடகோபரை “மாமறையை வினவாதுணர்ந்த விரகன்2 என்றார் கம்பர். இருமாலையிலும் “விரகு” என்றதன் பொருள் ஒன்றாதல் காண்க. “ஓதாதோதும் வேதாந்தாரிய னுதயம் செய்திடுநாள்”3 என்ற இம்மஹாதேசிகர் விஷயமான திருநாட்பாடலும் இப்பொருளதே. இப்பரபந்தம் தேசிகமாலை என்னவும் பெறும். வேதாந்த தேசிகர் பாடியருளிய செய்யதமிழ் மாலையாதலால் அப்பெயர் பெற்றது. ‘வேதாந்த தேசிகர்’ என்றதற்கு உபய வேதாந்ததேசிகர் என்று பொருள். உபநிடதமும் திருவாய்மொழியும் உபயவேதாந்தமாம். உபயம் என்றதற்கு இரண்டு என்று பொருள்.

             வேதாந்த தேசிகன் என்பது அத்தனுயர் வேங்கடமாலின் திருநாமம். அதை அன்னவன் இவர்க்கருளி இவர்வாயிலாய் உபயவேதாந்தத்தின் ஒருமை விளங்கப் புரிந்த பேரருளே இவரது ப்ரபந்த வடிவம் கொண்டுள்ளது. “நாவலரும் தென்வடமொழி நற்பொருள் பெற்ற நம்பி! காவல! தூப்புற் குலத்தரசே!”4 என்று பிள்ளையந்தாதிப்ரபந்தகாரர் இவரது உபயவேதாந்த தேசிகத் திருவைக் கண்டமை காட்டியபடி. “பாரினிலரங்கபதி யாரருளிற் பெற்ற, பேருபய வேதாந்த இறைமையுறு கீர்த்தி”5 என்று இவரது திருவருள் பெற்ற மெய்யடியாராகிய ஸப்ததிரத்நமாலிகாகாரர் இவருடைய இருமறை இறைமையைப் போற்றித் தொழுதவாறு. “பேசுபய வேதாந்த தேசிகன் தாள்தொழுவல் பேரழகனூல் தழையவே”6 என்றார் அழகர்பிள்ளைத் தமிழ்நூலார். இம்மஹாதேசிகரது உபயவேதாந்த தேசிக கீர்த்தியைப் பாடியுள்ள படிகள் பிறவும் கண்டுகொள்க. ஆதலால் தேசிகப்ரபந்தம் என்பது உபயவேதாந்த தேசிகப்ரபந்தம் என விரியும். இருமறையும் ஒன்றித் திகழும் ஒருமையும் இனிமையும் விளங்கும் சீர்மை இப்ரபந்தத்தின் தனிச்சிறப்பாகும். அஃதே இங்குச் சிறிது விளக்கப் பெறும். இதன் பரப்பு ‘ப்ரபந்தஸார’ உரையில் விரித்து விளக்கப் பெறும்.



1. தேசிகமாலை அதிகாரஸங்க்ரஹம் 56; 2 சடகோபரந்தாதி 44; 3 பிள்ளையந்தாதி 17;  

4 ஸப்ததிரத்நமாலிகா 31 (தமிழ் செய்தது) 5 திருமாலிருஞ்சோலை அழகர்பிள்ளைத் தமிழ் பழிச்சினர்ப் பரவல் 10.



                   …………………தொடர்வது --  ப்ரபந்த வுணர்வு : பொது: சிறப்பு :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக