புதன், 26 மே, 2010

வைணவ ஆசாரியர்கள்

star முன் பதிவுகள் ஒன்றில், ஸ்ரீ அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி ஏராளமான பழைய புஸ்தகங்களை அனுப்பி உபகாரம் செய்ததைக் குறிப்பிட்டு இருந்தேன். அவைகளில் ஒன்று ‘வைணவ ஆசாரியர்கள்” என்ற தலைப்பில் ஸ்ரீ  T.S. ராஜ கோபாலன் எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு. 1972ல் சென்னை ஸ்டார் ப்ரசுரம்  வெளியீடு.. மிக எளிய நடையில் அனைவருமே ரசிக்கும் வண்ணம் நாத முனிகள், யாமுனாச்சாரியார், ஸ்ரீ இராமானுஜர், திருக்கச்சி நம்பிகள், முதலியாண்டான், கூரத்தாழ்வான், எம்பார் ஆகியோரைப் பற்றி இயற்றப்பட்ட அருமையான கவிதைகளுடன் இந்த முதல் பகுதி வெளியாகி உள்ளது. இரண்டாவது பகுதி வெளியானதா என்று தெரியவில்லை. கவிதைகள் சுலபமாக எல்லாருக்கும் எளிதில் புரியும்படி எழுதியிருந்தாலும், ஆசிரியரே பாடல்களுக்கு சுருக்கமான விளக்கங்களும் அளித்துள்ளார். படித்த நாள் முதல் அடியேன் வழக்கம் போல் இங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆசை இருந்தாலும், 1972ல் வெளியிடப் பட்ட நூலாயிற்றே, முன்பு நடந்தது போல் ஏதாவது ஆக்ஷேபணைகள் வருமோ என்று தயக்கம் இருந்தது. எதையும் வித்தியாசமாக சிந்திக்கும் நண்பர் வந்திருந்தார். இதைப் பற்றிப் பேச்சு வந்தது. நூலைப் பிரித்துப் பார்த்தார். “ ஓய்! இதில் காபி ரைட் என்று ஒன்றையும் காணோமே. தவிர நீர் எழுதுவதை ஏதோ விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர்தான் படிக்கப் போகிறார்கள். அவர்கள் தேடிப் போய் ராஜகோபாலன் ஸ்வாமியிடமோ அவர் வாரிசுகளிடமோ சொல்லப் போகிறார்களா என்ன?என்னமோ தமிழ் ப்ளாக்குளிலேயே நம்பர்1 ப்ளாக் உம்முடையது போலவும், அதை தினமும் ஆயிரக் கணக்கில் வாசகர்கள் படிப்பது போலவும் அலட்டிக் கொள்கிறீரே! சும்மா எழுதும் (காபி அடியும். அதுதானே உமக்குத் தெரியும்)” என்று ஊக்கம் அளித்தார். அவர் கூறியதும் சரியாகப் பட்டதால், நாளை முதல் தினமும் 10 பாட்டுக்களுக்குள் அந்நூலிலிருந்து இங்கு தருகிறேன். அந்நூலின் முதல் காப்புச் செய்யுள் மட்டும் இன்று இங்கு. தொடரப் போவது எப்படி இருக்கும் என்று காட்டுவதற்காக.

பதும முகமலர்த்தும் பாவை நகையலர்த்தும்
  பதும நயனத்தான் பாதப் – பதுமத்தின்
  தேன்காட்டுஞ் செல்வக் குரவன் திருவடியே
  தான்வாட்டிச் சார்வினையின் தாள்
.

திருமகள் கேள்வனாகிய இறைவனின் திருவடிகளின் இனிமையைக் காட்ட வல்லன, குருவின் திருவடிகள்; இவையே நமக்குத் தஞ்சமென்பது குறிப்பு. பதும முகம் அலர்த்தும் பாவை—திருமகள்; இவள் தோன்றப் பதுமம் அலர்ந்தது. பதும நயனத்தான் – செங்கண்மால்; இப்பாவையின் நகை இறைவனது நயனங்களாகிய பதுமங்களை அலர்த்தும் என்றும், இவனது நயனங்கள் இவளது நகையை அலர்த்தும் என்றும் இருவிதங்களிற் பொருள் அமைந்தது. தேன் – இனிகை; அப்பொழுதைக்கப்பொழுது ஆராவமுதமான இவனது திருவடிகள். குரவன் செய்வது –சார்வினையின் தாளை அறுத்துப் பாத பதுமத்தின் தேன் காட்டுவது. சார்வினை – நம்மைச் சாரும் புண்ணிய பாவங்கள்; இவை நீங்கித்தான் நாம் இறைவனை அடைய இயலும் என்பது இங்கு நோக்கு. தாள் – நாளம், பாதம். இதனை அறுத்தால், வினைகள் அறவே மாயும். செல்வன் – இறையவன் திருவடிகளைக் காட்டிக் கொடுத்தலால்.

இந்நூலைப் படிக்கும்போது இதற்கு முன் ஒருகாலும் தோன்றாத உணர்ச்சி வெள்ளம் தோன்றி, அடியேனை அவ்வெள்ளத்தில் ஆழங்கால் படுத்தியது. திரும்பத் திரும்ப இந்நூலையே படிக்க வேண்டும் என்ற எண்ணம் அடியேன் மனத்தில் தோன்றி விட்டது” என்று இளைய கோவில் கேள்வி அப்பன் சடகோப ஸ்ரீ ராமானுஜ சின்ன ஜீயர் ஸ்வாமி இந்நூலைப் பாராட்டி, “வைணவன் எனப்படும் ஒவ்வொருவனும் இந்நூலைச் சிரமேற் கொள்ளக் கடமைப் பட்டவன் என்பதே அடியேன் துணிபு” என்று தனது ஸ்ரீமுகத்தில் சொல்லியுள்ளார்.

நாளை பார்ப்போமா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக