சனி, 9 ஜனவரி, 2010

செல்வமும் சேவகமும்

25. அன்பர் துயரத்திற்கும் நெருப்பு

                 முந்திய பாட்டில் தன்னை வாழ்த்தித் தனக்கு ஜயமங்களம் பாடிய பெண்களை நோக்கிக் கண்ணன் 'பெண்களே! நம்முடைய வெற்றிக்குப் பல்லாண்டு பாடியது பொருத்தம்தான்; ஆனால் இதற்கா இந்தக் குளிரிலே வருந்தி வந்தீர்கள்?' என்று கேட்டதாக ஊகிக்கலாம். அந்தக் கேள்விக்குப் பதில் கூறுவதுபோல் அமைந்திருக்கிறது இந்த இருபத்தைந்தாவது பாசுரம்.

                          'எம்பெருமானே, எங்களுக்காவது, வருத்தமாவது! உன்னுடைய திருப்பெயர்களையும் குணங்களையும் பாடிக்கொண்டே வரும்போது குளிர் எங்கே? வருத்தம் எங்கே? கொஞ்சமும் சிரமம் என்ற உணர்ச்சி இல்லாமல் சுகமாகவே வந்து சேர்ந்தோம்' என்கிறார்கள். 'நாங்கள் பறை என்று சொல்லிக்கொண்டு ஒரு முக்கியமான வேண்டுகோளுடன் வந்திருக்கிறோம்' என்றும் விண்ணப்பம் செய்து கொள்கிறார்கள்.

                          தங்கள் வேண்டுகோளை விண்ணப்பம் செய்துகொள்வதற்குப் பொருத்தமாகக் கண்ணனை விளித்துப் பேச விரும்புகிறார்கள். செயற்கருஞ் செயல்களையும் எளிதாகச் செய்து முடித்தவன் கண்ணன் என்கிறார்கள். துளசி பரிமளத்துடன் தோன்றுவதுபோல் இத்தகைய ஆச்சரிய சக்தியுடன் பிறந்த மேதைக்குப் பெயர்தான் கண்ணன் என்கிறார்கள்.. இத்தகைய கண்ணனுக்குத் தங்கள் வேண்டுகோளை நிறைவேற்றிக் கொடுப்பது அரிதாகுமா என்கிறார்கள்.

                      ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்த அதிசயத்தைக் குறிப்பிடுகிறார்கள். தேவகி மகனாய்ப் பிறந்து யசோதை மகனாய் வளர்ந்துவரும் பிரசித்தமான கதைதான் இது. ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்று தொடங்குகிறார்கள்.

                         இப்படி ஒளித்து வளரும் கண்ணனைக் கம்சன் மறந்துவிட வில்லையாம். 'நம்முடைய கண் வட்டத்தில்தான் இல்லையே; நம்முடைய பலத்திற்கும் செல்வத்திற்கும் இப்போது ஒரு குறையும் இல்லையே; ஒளித்து வளரும் குழந்தை நம்மை என்ன செய்துவிடப் போகிறது?' என்று ஆறியிருக்கவில்லையாம் கம்சன். பொறாமை இம்சிக்கிறது; பொறுக்க முடியவில்லை.

               பொறாமையில் என்ன என்ன செய்துவிட்டான் பாருங்கள்! வண்டி, கொக்கு, கழுதை, குதிரை, கன்று, மரம் என்று இப்படிப் பல பொருள்களில் கம்ச கிங்கரர்களான அசுரர்கள் ஆவேசித்துக் கண்ணனைக் கொல்ல வந்தார்கள். பூதனை என்ற பேய் வந்தது; குவலயாபீடம் என்ற யானை வந்தது. இப்படியெல்லாம் கம்சன் கருதிய தீங்கிற்கு எல்லையுண்டோ? எப்படியாவது கண்ணனை ஒழித்துவிட வேண்டுமென்று கருதியிருந்தான். ஒழித்துவிட்டு, 'என் மருமகன் ஐயோ! செத்துப் போய்விட்டானே' என்று அலறியடித்துக்கொண்டு அழுது புலம்பித் துக்கம் கொண்டாடவேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தானாம்.

                      ஆனால் நடந்ததென்ன? கம்சனுடைய கொடுங்கோன்மையும் சூழ்ச்சிகளும் ஆண்களோடு பெண்களுக்கும் ஒரே வயிற்றெரிச்சலை உண்டாக்கின அல்லவா? அந்த வயிற்று நெருப்பை யெல்லாம் கண்ணன வாரிக் கம்சன் வயிற்றில் இட்டான் என்கிறார்கள்.

தருக்கிலன் ஆகி,தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடு மாலே!

என்று அழைக்கிறார்கள்.

                    இப்படி ஆய்ச்சியர் கண்ணனை அழைத்ததும், அவன் 'பெண்களே, அந்தக் கதையெல்லாம் இப்போது எதற்காக? உங்களுக்கு நான் செய்யவேண்டியது என்ன?' என்று கேட்கிறான். அதற்கு மறுமொழியாக இவர்கள், 'உன்னை அருத்தித்து வந்தோம்' என்று பதில சொல்லுகிறார்கள். அதாவது 'உன்னை யாசித்து வந்திருக்கிறோம்' என்கிறார்கள்.

                  'என்னையா? ஏதோ பறைகேட்டு வந்ததாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்? அப்படியல்லவா நீங்கள் விரும்புவதாக ஞாபகம்?' என்கிறான் கண்ணன். அதற்கு இவர்கள் இப்போது முடிவாக ஒன்றும் பதில் சொல்லாமல் 'பறை தருதி ஆகில் அதனைப் பெற்றுக் கொள்வோம்' என்கிறார்கள். கண்ணனது செல்வத்தையும் சேவகத்தையும் பாடி வருத்தம் தீருவோம், மகிழ்ச்சி அடைவோம் என்கிறார்கள்.

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

என்று பாடுகிறார்கள்.

           ஏற்கனவே கண்ணன் பெயரையும் குணங்களையும் பாடிக் கொண்டு வந்தபோதே இவர்களுக்கு வருத்தம் ஒன்றும் தெரியவில்லை. ஆகையால் இப்போது இவர்கள் வருத்தம் என்று வந்த சிரமத்தைக் குறிப்பிடவில்லை. என்பது தெளிவு. அவனைப் பிரிந்து படுகிற துயரம் நீங்கி மகிழ்ச்சி அடைவோம் என்றுதான் சொல்லுகிறார்கள். 'திருத்தக்க செல்வம்' அல்லவா இவர்கள் இப்போது விரும்புவது? இதை மேலும் தெளிவுபடுத்துவது இறுதிப் பாட்டுக்கு முந்திய பாசுரத்தில்தான்.

செல்வமும் சேவகமும்

ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி ஆகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


விளக்கம்

வடிவழகையும் நடையழகையும் குண அழகையும் அனுபவித்த பின் – அனுபவித்து வெறி தீர்ந்தபின் –வந்த காரியம் ஒன்று உண்டு என்பதை நினைவூட்டிக் கொண்டார்கள். நோன்பிற்குப் பறை கொள்ளும் காரியம் அது என்று தெரிவித்து, இரங்கவேண்டும் என்றார்கள் முந்தின பாட்டிலே. இந்தப் பாட்டிலே 'கண்ணா, உன்னிடம் யாசித்து வந்தோம்' என்கிறார்கள். 'பறை' என்பதில் புதைபொருளாகிய தங்கள் மனோரதம் ஒன்று உண்டு என்பதையும் குறிப்பாகப் புலப்படுத்துகிறார்கள்.

'திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி' என்று கூறுவதில் கண்ணனிடம் ஒன்றைப் பெறுவதைக் காட்டிலும் கண்ணனைப் பெறுவதே தங்கள் அந்தரங்க நோக்கம் என்ற குறிப்பையும் ஒளித்துக் காட்டுகிறார்கள்.

பிராட்டியும் விரும்பத்தக்க செல்வத்தை இவர்களும் விரும்புகிறார்கள். பிராட்டி காதலித்த வீரத்தை இவர்களும் காதலிக்கிறார்கள். 'உன்னை அடைவதற்குத் தடையாக இருப்பது எதுவோ அதையெல்லாம் போக்கி அருளவேணும்' என்கிறார்கள். 'நாங்கள் பிரிந்து படுகிற வருத்தமெல்லாம் தீர்ந்து மகிழ்ச்சியிலே நாங்கள் வளர்ச்சி பெறுமாறு நீ எங்களை அங்கீகரிக்க வேணும்' என்று பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக