செவ்வாய், 21 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

10. விசேஷாம்சங்கள்

இவருக்கு மற்ற ஆழ்வார்களைப்போலே சந்தமிகு தமிழ்மறைகளில் சில பாகங்களை ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளிய ஏற்றத்துடனே அவற்றையும் மற்றைய ஆழ்வார்கள் வெளியிட்டருளிய ப்ரபந்தங்களையும் மறுபடியும் ப்ரவர்த்தனம் செய்தருளினார் என்கிற ஏற்றமுண்டு. இத்தால் இவருக்கு ஆசார்யகோஷ்டியில் அனுஸந்திக்கப்படும் பெருமையுண்டு. மற்ற மூவாயிரம் பாசுரங்களைப்போலே இவருடைய திருவாய்மொழியை வீதிகளில் ஸேவிப்பதில்லை. ஸந்நிதிக்குள்ளோ, திருமாளிகைகளிலோ உட்கார்ந்துகொண்டே ஸேவிக்கும் ஏற்றம் பெற்றதாயிருக்கும்.

இவருடைய அவதாரத்தை ஸ்ரீபாகவதத்தில் 4ம் ஸ்கந்தத்தில் புரஞ்ஜனோபாக்யானம் கூறுகிறது. இவருடைய ப்ரபந்தத்தில் ஒரு விசேஷ மணம் வீசாநிற்கும் என்று ஆசார்யன் பல இடங்களில் நிரூபித்திருக்கிறார்.

திருவாய்மொழி எல்லோராலும் அனுஸந்திக்கப்படும் என்பதை ஆழ்வார் தாமே 'பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்' என்றனுஸந்தித்திருக்கிறார். இதன் கருத்து :--

ஸ்ரீபாகவதத்தில் பகவானுடைய திருக்கல்யாண குணங்கள்

'निवृत्ततर्षैः उपगीयमानात् भवौषधात् सोत्रमनोभिरामात्

என்கிறபடியே ஸம்ஸார ஸம்பந்தம் இல்லாத நித்யர்களாலும் முக்தர்களினாலும் கானம் செய்யப்படும் என்றும், ஸம்ஸாரத்தைப் போக்கடித்துக் கொள்ளுவதற்கு மருந்தாயிருப்பதினால் முமுக்ஷுக்களினாலே அனுஸந்திக்கப்படும் என்றும், கேட்பவர்களின் மனதிற்கு ஸந்தோஷத்தை உண்டாக்கும் என்றும் இப்படிகளினால் எல்லோராலும் அனுஸந்திக்கப்படுகின்றன எனக் கூறப்பட்டிருக்கிறது. அதைப்போலவே இத்திருவாய்மொழியும் என்பதை இதன் தனியனில்

भक्तामृतं विश्वजनानुमोदनं सर्वार्थदं

என்று கூறப்பட்டது. 'பக்தாம்ருதம்' என்றது ஸூரிகளுக்கும் முக்தர்களுக்கும் ஸ்வயம் போக்யமானது என்றபடி. 'விச்வஜனானுமோதனம்' என்றது ச்ராவ்யமாயிருப்பதினால் ஸம்சாரி சேதனர்களுக்கு ஸந்தோஷத்தை உண்டாக்கும் என்றபடி. 'ஸர்வார்த்ததம்'என்றது கற்பவர்களுக்கு வேதாந்த ஜ்ஞானத்தை உண்டாக்குகிறபடியினால் ஸம்ஸாரத்தைப் போக்குகிற அருமருந்தாய் நிற்கும் என்றபடி. இந்த மூன்று விசேஷணங்களும் ஆழ்வாரிடமிருந்து அவருடைய செவிக்கினிய செஞ்சொறகளான பாட்டுக்களை நேரில் கேட்டு, அப்படியே அவற்றை லோகத்தில் பரவச் செய்தருளிய ஸ்ரீமதுரகவிகளைக் கூறுமென்றும் சொல்லலாம்.

இந்த மூன்று விசேஷணங்களினாலும் ஸ்ரீதேசிகனைத்தான் ஆழ்வார் குறிப்பிட்டார் என்று அஸ்மத் ஸ்வாமி நிர்வஹித்தருளும். 'பாலேய் தமிழர்' என்றது தமிழ் பாஷை ஸம்ஸ்க்ருத பாஷையைப் போலவே ப்ரசஸ்தமானது, நித்யமானது என்றும், எல்லோரும் அதிகரிக்கலான பாஷை என்றும், சித்தரஞ்ஜனத்தோடு வேதாந்தார்த்தங்களைத் தெளிவிப்பதில் இவை ப்ரதானம் என்றும், அனுஸந்திக்கப் பட்டவுடனே எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் என்றும் நிரூபித்தது மாத்திரமன்றிக்கே, தம்மை,'சந்தமிகு தமிழ் மறையோன்' என்று த்ரமிட வேதாத்யாயீ என்று அனுஸந்தித்தருளிய ஏற்றம் ஸ்ரீதேசிகனுக்கு மாத்திரமுள்ள பெருமையல்லவா என்றபடி. 'இசைகாரர்' என்றது கீதி பகவத் விஷயமாகில் ப்ரசஸ்தம் என்று நிஷ்கர்ஷித்தது மாத்திரமன்றிக்கே பாடுமவர்கள் கோஷ்டியில் தாம் இடம் பெற்றவர் என்று அனுஸந்திக்கும்படியான பெருமை ஸ்ரீதேசிகனையே சேர்ந்ததல்லவா என்றபடி. 'பத்தர்' என்பதைப் பகவத் பக்தர்கள் என்றாலும் ஆழ்வாருடைய பக்தர் என்றாலும் அந்த இரண்டு அம்சங்களும் ஸ்ரீதேசிகனிடத்தில் பூர்ணமாயிருந்தமை ஸர்வஸம்ப்ரதிபன்னமானது. தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிந்தவராகத் தம்மை நிரூபித்துக்கொண்டவர் வேறொருவரு மில்லையே!

நிறைவடைந்தது

திங்கள், 20 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

எம்பெருமானார் திருவாய்மொழிக்குத் தம் சிஷ்யர்களில் ப்ரதானமானவரும், தம்மால் ஜ்ஞான புத்திரரென்று அபிமானிக்கப்பட்டவரும், தமக்குப் பிறகு உபய வேதாந்த ஸிம்ஹாஸனத்தில் மூர்த்தாபிஷிக்தருமான திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் கொண்டு திருவாறாயிரப்படி என்னும் வ்யாக்யானத்தை வெளியிட்டு, அதைத் தாமே தம் சிஷ்யர்களுக்கு முதல் முதலிலே ப்ரவசனம் செய்தருளினார். சந்தமிகு தமிழ் மறைகளின் அனுஸந்தானத்தின் பரீவாஹமாய்ப் பெரிய முதலியார் அருளிச்செய்த ஸ்தோத்திரத்தைப் பல தடவை அனுஸந்தானம் செய்ததினால் ஸுப்ரதிஷ்டிதமான ஜ்ஞானத்தால் எழுதப்பட்ட ஸ்ரீபாஷ்யத்தில் திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்த விசேஷங்களையே வெளியிட்டிருக்கிறார்.

ஸ்ரீபாஷ்யம் மங்கள சுலோகத்துக்கு மூலம்

'துன்பமும் இன்பமுமாகிய செய்வினையாய் உலகங்களுமாய்

இன்பமில் வெந்நரகாகி இனியநல் வான் சுவர்க்கங்களுமாய்

மன்பல்லுயிர்களுமாகிப் பலபல மாய மயக்குகளால்

இன்புறுமிவ் விளையாட்டுடையானைப் பெற்றேதுமல்ல லிலனே

என்னும் திருவாய்மொழிப்பாட்டு ( 3-10-7) இதின் திருவாறாயிரம் -- "நிகில ஜகதுதய விபவ லயாதிலீலனாய்" என்று. "இன்புறும் இவ்விளையாட்டுடையான்" என்றதையே எம்பெருமானார்

अखिलभुवनजन्मस्थेमभङ्गादिलीले

என்றருளிச் செய்திருப்பது. அப்படியே ஆழ்வார் முதல் திருவாய்மொழியில் 7ம் பாட்டில்

உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்து, உளன் சுர்மிகு சுருதியுள் என்றதையே

श्रुतिशिरअसि विदिप्ते ब्रह्माणि श्रीनिवासे என்றருளிச் செய்திருக்கிறார். உபக்ரமம் இப்படி. மேல் உபஸம்ஹாரம் எப்படி எனப் பராமர்சிப்போம். இறுதி ஸூத்திரம் 'இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தினால் முக்தி அடைந்தவன் மறுபடியும் இந்த ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவதில்லை -- அப்படியே ச்ருதிகளில் கூறப்பட்டிருப்பதினால்' என்பது. இதன் ஸ்ரீபாஷ்யத்தில் பகவத் ஸங்கல்பத்தினால் ஆத்மா முக்தி அடைகிறபடியினாலே பகவான் ஸ்வதந்த்ரன். அவன் திருப்பி அனுப்பாவிட்டால் என் செய்வது என்கிற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானம் இந்த ஸூத்திரத்தில் கூறப்படுகிறது என அவதாரிகையை அருளிச் செய்து திருப்பி அனுப்பமாட்டான் என்பதற்கு ப்ரமாணம் வேதங்களே -- எப்படி எம்பெருமான் உளன் என்று வேதங்களிலிருந்து அறியப்படுகிறதோ அப்படியே அவன் திருப்பி அனுப்பமாட்டான் என்பதையும் அந்த வேதங்களே கூறுகின்றன என்று அப்படிக் கூறும் வேதவாக்யங்களை உதாஹரித்து வேதங்களுக்குத் துல்ய ப்ரமாணமான ஸ்ரீகீதோபநிஷத் சுலோகத்தை மேற்கோளாகக் காட்டியுள்ளார். ஸூத்திரத்தில் சகாரம்கூட இல்லாமையினால் மேல் உபஸம்ஹாரம் செய்யவேண்டியிருக்க, அப்படிச் செய்யாமல் "ந ச " என்று ஆரம்பித்து இப்படித் திருப்பி அனுப்பாமைக்குக் காரணத்தை மற்றொரு விதத்தில் உபபாதித்திருக்கிறார். இதற்கு மூலம் ஆழ்வாருடைய

"மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவனோ

என்கிற திருவாய்மொழி 1-7-4ம் பாட்டே. எப்படி வேதங்கள் பகவானுடைய ஸ்வரூப ஸ்வபாவாதிகளை உபபாதிப்பதில் உத்தம ப்ரமாணங்களாக நிற்கின்றனவோ, அதைப்போலவே திருமாலாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார் பகவானை உள்ளபடியே ப்ரத்யக்ஷீகரித்து தாம் அனுபவித்தபடியை வெளியிடுகிற திருவாய்மொழியும் உத்தமமான ப்ரமாணமென்று திருவுள்ளம் பற்றி, எம்பெருமானார் தமது ஸ்ரீபாஷ்யத்தில் கீழ் உதாஹரிக்கப்பட்டதான ஸ்ரீத்ரமிடோபநிஷத்தின் பாட்டை அப்படியே ஸம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஸூத்திரகாரரோ ராஜாஜ்ஞை போலே வேதங்கள் கூறா நிற்கும் என்றார். அகில த்ராமிட ப்ரஹ்மதர்சியாகிய ஆழ்வாரோ அந்தக் காரணத்தை மேலே நிரூபிக்கப்போகிறவராய் பகவான் முக்தனைத் திருப்பி அனுப்பமாட்டானேயாகிலும் முக்தனே திரும்பி வந்துவிட்டால் புனராவ்ருத்தியில்லை என்பது ஸ்தாபிக்கப்பட்டதாகாதே என்பதற்காக இந்த அம்சத்தை மட்டும் விசேஷித்து உபபாதித்தருளினார் என்பதும், இதற்குக் கீழ்ப்பாட்டில், "என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே" என்பதை அனுவதிக்கிறார் என்பதும் இங்கு விவக்ஷிதமாகக் கடவது. ஸ்ரீபாஷ்ய பங்க்தியும், எம்பெருமானாருடைய காலக்ஷேபத்தின் ஸங்க்ரஹமான திருவாறாயிரப்படி பங்க்தியும் உதாஹரிக்கப்படுகின்றன.

नचउच्छिन्नकर्मबन्धस्य असंकुचितज्ञानस्यपरत्रह्मानुभवैकस्वभावस्य तदेकप्रेियस्य अनवधिकातिशयानन्दं व्रह्मानुभवतः अन्यापेक्षातदर्थीीरम्भाद्यसंभवात् पुन रावृत्तिशङ्का । न च परमपुरुषः•••

திருவாய்மொழிப்பாட்டின் திருவாறாயிரப்படி பங்க்தி

"இப்படி எம்பெருமானோடு ப்ரவ்ருத்தமான ஸம்ச்லேஷத்திற்கு ஒருபடியாலும் மேல் அழிவில்லை என்கிறார். தன் திறத்தில் எனக்குள்ள அஜ்ஞானமெல்லாம் போம்படி என்னுள்ளே புகுந்தருளி, தன்னுடைய கல்யாணமான குண ஸ்வரூபங்களை அத்யந்த விசதமாம்படி எனக்குக் காட்டியருளித் தனக்கு ஸத்ருசரான அயர்வறும் அமரர்களோடு ஸம்ச்லேஷிக்குமாப்போலே என்னோடு ஸம்ச்லேஷித்தருளியவனை எங்ஙனே விடும்படி என்கிறார்" -- என்பது. இங்கு "ஒருபடியாலும் அழிவில்லை" என்பதற்கு இதற்கு வ்யாக்யானமான இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யானத்தில் "என்னுடைய அஜ்ஞானமடியாகவும் விஷயாந்தர ஸங்கமடியாகவும் பகவத் ஸ்வாதந்த்ர்வமடியாகவும் என்னுடைய பாக்யஹானியடியாகவும் என்றபடி" என்று. கீழ் வேதவாக்யங்களுக்கு மேற்கோளாக ஸ்ரீகீதா ச்லோகத்தை உதாஹரித்தாற்போலே இந்த த்ரமிடோபநிஷத்துக்கும் மேற்கோளாக மற்றொரு கீதாச்லோகத்தை உதாஹரித்து உபஸம்ஹாரம் செய்தருளியிருக்கிறார் இப்படியே ஸ்ரீகீதாபாஷ்ய கத்யாதிகளிலும் பல ப்ரகரணங்களில் ஆழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளைப் பின்பற்றியே நிரூபித்தருளியிருக்கிறார்.

ஸ்ரீதேசிகன் இந்த ஆழ்வாருடைய பெருமைகளைப் பேசியிருக்கும் ப்ரகாரங்களை நிரூபிப்பதானால் அது ஒரு தனிப் புஸ்தகமாகும். ஆகையினால் அவற்றின் ஸங்க்ரஹம் மட்டும் செய்யப்படுகிறது. நம்முடைய விசிஷ்டாத்வைத ஸம்ப்ரதாயத்தை இந்தக் கலியுகத்தின் ஆரம்பத்தில் ப்ரவர்த்தனம் செய்தருளியவர் இவரே என்றும், இவற்றை மீண்டும் ஸ்ரீமந் நாதமுனிகளும் உபதேசித்தருளியவர் என்றும் ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தியில் ஸ்ரீமதுரகவிகள் முதலாக உண்டான ஸம்ப்ரதாய பரம்பரையாலும் திருவாய்மொழி முகத்தாலும் யோகதசையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் -- இவரை ப்ரபன்ன ஜன ஸந்தான கூடஸ்தநையாலே ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார்" இத்யாதியாக அனுஸந்தித்திருக்கிறார்.

நம்மாழ்வாருக்கும் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கும் நடுவில் பல வருஷங்கள் கழிந்துவிட்டதே என்பதற்கு ஸமாதானத்தை ஸ்ரீஸ்தோத்ரபாஷ்யத்தில்

कालविप्रकर्षेपि परमपुरुषसंकल्पात् कदाचित् प्रादुर्भूय सास्त्रादपि सर्वोपनिषदुपदेष्टारं என்றருளிச் செய்திருக்கிறார். இவருடைய அருளினால் "திருமால் தாளில் தலைவைத்தோம்" என்று அருளிச் செய்திருப்பதினால் இவருடைய க்ருபையில்லாவிடில் பகவானுடைய திருவடிகள் நமக்குக் கிட்டாது என வெளியிட்டிருக்கிறார். இவருடைய ப்ரபாவத்தை द्रमिडोपनिषत् द्रष्टुरस्य याथात्म्यमद्बुदं என்று வாசாமகோசரம் என நிரூபித்தருளினார். எம்பெருமான் நம்மாழ்வார் தம்முடைய திருவாய்மொழி 1000 பாட்டுக்கள் பாடிய பிறகே தன்னை உளனாக எண்ணி, அதற்கு ப்ரதியாகத் தானும் அவர் விஷயமாக 1000 பாட்டுக்களைப் பாடவேண்டும் என்ற அபிலாக்ஷையைத் தான் குருவரராய்த் தோன்றி ஸ்ரீபாதுகாசஹஸ்ரம் என்னும் க்ரந்தத்தை அருளிச்செய்து தீர்த்துக்கொண்டான். இவ்வம்சத்தை ஸ்ரீதேசிகன் தாமே ஸமாக்யா பத்ததியில் நம்மாழ்வாரும் ஸ்ரீபாதுகைகளும் ஒன்று என்று நிரூபித்திருப்பதினாலும், நாதபத்ததியில் பாதுகைகளின் நாதம் திருவாய்மொழிப் பாசுரங்களின் அனுதாதம் என்று அனுஸந்தித்திருப்பதினாலும், க்ரந்தத்தை "ஸந்த:" என்று தொடக்கம் செய்து "ஸந்த:" என்று முடித்திருப்பதினாலும் ஸூசிப்பித்திருக்கிறார். இவருடைய முதல் ப்ரபந்தமான திருவிருத்தத்தின் முதல் பாசுரத்திற்கு ஸ்ரீஉபகார ஸங்க்ரஹம் என்னும் ரஹஸ்யத்தில் வ்யாக்யானம் அருளிச் செய்திருக்கிறார். திருவாய்மொழிப் பாசுரங்களின் அர்த்தத்தை ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளீ, ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம், ஸ்ரீநிகம பரிமளம் இவைகளில் வெளியிட்டுள்ளார். இவருடைய சில பாட்டுக்களின் உண்மையான அர்த்தங்களை ப்ரமாணோபபத்திகளுடன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் முதலிய க்ரந்தத்தில் நிரூபித்தருளினார். இவர் நெடுமாற்கடிமையில் அனுஸந்தித்தருளிய அர்த்த விசேஷங்களையே புருஷார்த்தகாஷ்டாதிகாரத்தில் ஸங்க்ரஹித்திருத் தருளினார். இவருடைய திருவாக்கின் ப்ரபாவத்தை "அணிகுருகை நகர் முனிவர் நாவுக்கு அமைந்தன" என்றும் நிரூபித்திருக்கிறார்.

'ஒரு மதியன்பர் உளங்கவர்ந்தன', 'குருகையில் வந்து கொழுப்படக்கிய குலபதி' என்று இவருடைய ப்ரபாவத்தையும் பேசியுள்ளார். ஸ்ரீகீதாசார்யன் ஸாதுபரித்ராணார்த்தமாக அவதரிக்கிறேன் என்றது இவரையே ப்ரதானமாகக் குறிக்கும் என்று ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் ஸூசிப்பித்தார். அதாவது,

"न हि अमिषां अन्नपानं ताम्बूलादि धारण पोषणादिकं, किं तु अहं कृष्ण एव"

இவர் 'உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன்' என்பதைப் பின்பற்றியதாகும். இப்படியே இவர் 'கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரண்' என்றனுஸந்தித்ததையே

कृष्णःतत्वं परं तत्परमापि च हितं तत्पदैकाश्रयत्वं'

என்று கீதையின் பொருளாக ஸங்க்ரஹித்துள்ளார். பகவானுடைய திருக்கண்களின் சோபையை இவர் 'தாமரைக்காடுகள்' என்றனுஸந்தித்திருப்பதைப் பின்பற்றி

पुण्डरीकवन्लुण्ठाकलोचन

என்றனுஸந்தித்தருளினார்.

ஸ்ரீப்ரபந்தஸாரத்தில் 'முன்னுரைத்த' என்று இவர் ப்ரபந்தங்கள் விஷயமாக ஒரு பாட்டு அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. இவருடைய த்ராக்ஷா மதுரம் போன்ற ஸ்ரீஸூக்திகளை அனுஸந்தித்ததினால் உத்கர்ஷம் பெற்ற தம் வாக்குகள் ப்ரஹ்மாதிகள் விரும்பியும் பெறாத ஓர் ஏற்றம் பெற்றவைகளாய் நிற்கும் என்றனுஸந்தித்திருக்கிறார். கீழ்ப் பல இடங்களில் இவரைக்கொண்டாடியிருக்கும் ப்ரகாரம் காட்டப்பட்டிருக்கிறது.

இவருடையவும் இவருடைய ப்ரபந்தங்களின் ஏற்றத்தையும் மற்றவர்கள் கொண்டாடியிருக்கும் ப்ரகாரம் கீழ் முன்னுரையில் 42ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கவி சக்கரவர்த்தியென இக்காலத்தில் விசேஷித்துக் கொண்டாடப்படும் கம்பனாலும் இவர் விஷயமாக சடகோபர் அந்தாதி என்னும் க்ரந்தத்தில் இவருடைய பெருமை நன்கு நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

சனி, 18 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

6. விசேஷார்த்த நிரூபணம்.

மற்றைய திவ்ய ப்ரபந்தங்களிலும் பகவானுடைய குணங்கள் அனுஸந்திக்கப் பட்டிருந்தபோதிலும், திருவாய்மொழியிலே போலே ஒருக்ரமமாய்ச் சங்கிலித்துவக்குப்போலே அவை நிரூபிக்கப்படவில்லை. பகவானுக்கும் சேதனாசேதனங்களுக்குமுள்ள சரீராத்ம பாவத்தை விஸ்தரமாக உபபாதித்திருப்பதும் (திருவாய் 1-1-7) அர்ச்சிராதி மார்க்கத்தில் முக்தாத்மாவிற்கு நடக்கும் ஸத்கார விசேஷங்களை விவரமாக அனுஸந்தித்திருப்பதும் (திருவாய் 10-9) பாகவத ப்ரபாவத்தை 2 திருவாய் மொழிகளில் பரக்கப் பேசியிருப்பதும் (திருவாய் 3-7, 8-10) வேதங்களும் பகவானை அறிவது அசக்யம் என்றே அறிந்தன என்று நிரூபித்திருப்பதும் (திருவாய் 9-3-3) பகவதனுபவத்தை இங்கே செய்வதை விட மோக்ஷானுபவம் உயர்ந்ததன்று என்று அனுஸந்தித் திருப்பதும் ஸம்ஸார துக்கத்தைப் போக்கிக்கொள்வதற்கு பகவானுடைய குணானுஸந்தானத்தை விட ஸாதநம் கிடையாது என்று நிஷ்கர்ஷித்திருப்பதும் (பெ.திரு 86) ஆசார்ய ஸார்வ பெளமனுடைய அவதாரத்தை ஸூசிப்பித்திருப்பதும் (திருவிரு 26) மார்க்கண்டேயனுக்கு ருத்திரன் சிரஞ்சீவியாய் இருக்கும்படி வரம் கொடுத்ததும் பகவானுடைய அனுக்ரஹத்தினாலேயே என்று அனுஸந்தித்திருப்பதும் (திருவாய் 4-10-8) பகவானுடைய திருக்கண்களின் சோபைனை தாமரைக் காடுகள் என வர்ணித்திருப்பதும் (திருவாசி 2, திருவாய் 8-9-1) சில விசேஷார்த்த நிரூபணங்களாகும்.

8. இவருடைய திருநாமங்கள்.

மாறன், சடகோபன், வழுதிவளநாடன் என்று தாமே தம்மை வழங்கிக்கொண்டிருக்கிறார். இத்திருநாமங்களுக்கு விசேஷணங்களாக குருகூர் நகரான், குருகூர், வழுதிநாடன் குருகைக் கோன், காரி, திருமாலால் அருளப்பட்ட என்றுஅனுஸந்தித்துக்கொண்டிருக்கிறார். காரி என்றது தகப்பனாரின் திருநாமம். மாறன் என்பது குடிப்பெயர். லோகத்திலுள்ள மற்றவர்களைக் காட்டிலும் மாறான - வேறுபட்ட ஸ்வபாவத்தையுடையவர் என்றுமாம். சடகோபன் என்றது கெட்டவர்களைக் கோபித்துக்கொள்ளுமவர் என்றபடி. நம்மாழ்வார் என்பது இவரை உகந்து பெரியபெருமாள் அனுக்ரஹித்தருளிய திருநாமம். இத்திருநாமத்தாலேயே இவரை வ்யவஹரிப்பது ஸம்ப்ரதாயம்

குலபதி என்று ஸ்ரீஆளவந்தார் அனுஸந்தித்திருக்கிறார். ஸ்ரீதேசிகன் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி முதலியவற்றில் இவரை “சடரிபு:, சடஜித் சடமதநமுநி:, முநி: முநீந்த்ர யோகீ, சடாரி:, காரிஸூநு:, கேஸர ஸ்ரக் விபூஷ:, சடஜநமதந:, காரேஸ்தநூஜ:, காரேரபத்யம், காரிஜ:, : அகில த்ராமிட ப்ரஹ்ம தரிசி, சடகோப ஸூரி:, வகுளதர மஹர்ஷி, வகுளாபரண:, கூடஸ்த: என்றிவை முதலிய திருநாமங்களால் அனுஸந்திருக்கிறார்.

9. பூர்வர்கள் இவரைக் கொண்டாடியிருக்கும் ப்ரகாரம்

ஸ்ரீ மதுரகவியாழ்வார் இவர் விஷயமான ‘திருவழுதிநாடு’ என்றாரம்பிக்கும் தனியனையும், ஸ்ரீமந்நாதமுனிகள் ‘பக்தாம்ருதம்’ ‘மனத்தாலும்’ என்றாரம்பிக்கும் தனியன்களையும், ஸ்ரீஆளவந்தார் ‘மாதா பிதா’ என்கிற தனியனையும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

எம்பெருமானார், ‘முந்துற்ற நெஞ்சே’ என்கிற பெரிய திருவந்தாதித் தனியனையும், திருக்குருகைப்பிரான், ‘வான் திகழும் சோலை’ ‘மிக்க இறைநிலையும்’, ‘ஏய்ந்த பெருங்கீர்த்தி’ என்கிற திருவாய்மொழித் தனியன்களையும், கிடாம்பி ஆச்சான், ‘கருவிருத்தக்குழி’ என்கிற திருவிருத்தத் தனியனையும், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், ‘காசினியோர்’ என்கிற திருவாசிரியத் தனியனையும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீமதுரகவியாழ்வார், இவ்வாழ்வார் தம்முடைய அனுபவ பரீவாகமாக வெளியிட்ட பாசுரங்களைப் பட்டோலை கொண்டு, அவற்றை நான்கு ப்ரபந்தங்களாக லோகத்தில் வெளியிட்டருளினது மாத்திரமன்றிக்கே ஆழ்வாரையே ஆசார்யனாகக்கொண்டு, அவருடைய திவ்யார்ச்சையை திருப்ரதிஷ்டை செய்தருளி அதற்கு உத்ஸவாதிகளை நடத்தி, அதற்கு உபரோதம் செய்தவர்களை நிரஸித்து உத்ஸவாதிகளை யதா க்ரமம் நடத்திவைத்தார்.

திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கநாதனுடைய நியமனப்படி இவரு டைய ப்ரபந்தமான திருவாய்மொழியை ப்ரதி ஸம்வத்ஸரமும் மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி தொடக்கமாக ஒவ்வொரு நாளும் ஒரு பத்தைத் திருச்செவி சாற்றியருளும்படி ஏற்பாடு செய்தருளினார்.

ஸ்ரீஆளவந்தார் தமது ஸ்தோத்ரத்தில் பற்பல பாட்டுக்களின் கருத்தை வெளியிட்டருளியிருக்கிறார், உதாஹரணமாக

“மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே " என்று திருவிருத்தத்தில் ஆழ்வார் அனுஸந்தித்தருளியதை

‘न मृषा परमार्थमेव मे श्रृंणु विझापनमेकमग्रतः’

‘तत् सत्यं मधुमथन ! विज्ञापनमिदम्’

என்றும், உயர்வற உயர் நலமுடையவன் ’ என்றதை

‘स्वाभाविकानवधिकातिशयेशितृत्वं’

என்றும், "யாருமோர் நிலைமையன் என நினைவரிய எம்பெருமான் யாருமோர் நிலைமையன்என அறிவெளிய எம்பெருமான்" என்றதை

'विधिशिवसनकाद्ये: ध्यानुमत्यन्तदूरं पश्यन्ति केचिदनिशं त्वदनन्यभावाः' என்றும், 'நன்றெழில் நாரணன் ' என்றதை * नारायण ! त्वयि न मृष्यति वैदिकः कः ‘ என்றும், நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்" என்றதையே * न धर्मनिष्ठेस्मि न चात्मवेदी ° என்றும் *

நாளு நின்றடு நம் பழமையங்கொடு வினையுடனே

மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி

நாளும் திருவடியடிகள்தம் நலங்கழல் வணங்கி

மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே

என்றனுஸந்தித்தருளியதை * त्वर्देधिमुद्वदिश्य कदापि केनचिन्' என்ருரம்பிக்கும் கலோகத்திலும் விவரணம் செய்தருளிஞர்

சனி, 11 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

நிகமனத்தில் ஆறு சுலோகங்கள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன அதில் 128-ம் சுலோகத்தில் பத்துப் பத்துக்களினாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட குணவிசேஷங்களைக் காட்டா நின்றுகொண்டு, திருவாய்மொழிக்கு ப்ரதானார்த்தமாய், கீழ் நிரூபித்த ச்ரிய:பதியாகிற பகவான் தன்னை அடைவதற்குத் தானே உபாயம் என்பதை மறுபடியும் வற்புறுத்துகிறார், மேல் 128-ம் சுலோகத்தின் அர்த்தம் கீழே நம்மாழ்வாரின் வைபவத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

127-ம் சுலோகத்தில் இப்ரபந்தத்தை அனுஸந்திப்பவர்களின் மனோபாவம் இருக்கும்படியை வெளியிட்டருளுகிறார்.

ச்ரிய:பதியாய் எல்லையில்லாத கருணை, வாத்ஸல்யம் முதலிய வைகளை யுடையவனாய் ஸர்வஜ்ஞனாய், ஸர்வ சக்தியாய், ஸமஸ்த சேதனாசேதனங்களுக்கும் ஸ்வாமியாய் இருக்கும் பகவான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப்பட்ட ரக்ஷண பரத்தையுடைய நமக்கு இனி முக்திபெறுவதற்குச் செய்ய வேண்டிய கார்யம் என்ன? நமக்கு கிட்டாதது என்ன? என்ன துக்கம் ஏற்படப்போகிறது? இனி யாருக்குக் கடவோம்? இவை ஒன்றுமில்லையென்றபடி. இப்படிப்பட்ட அத்யவஸாயத்தைப் பெற்றவர்கள் ஸர்வோந்நதர் என்று திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கிறது.

வேதாந்தார்த்தங்களை ப்ரதிபாதிக்கும் ப்ரபந்தங்கள் பல இருந்தபோதிலும் அவைகளுக்கு இத்திருவாய்மொழியின் பெருமையில்லை. இந்த ப்ரபந்தமொன்றுமே மற்ற சாஸ்திரங்களில் ஸாரமாக அறிய வேண்டும் என்று கூறப்பட்ட அர்த்தங்கள் ஒவ்வொன்றிலும் ஸாரதமமான அர்த்தத்தைக் கூறுகின்றது என்று இதன் ஸர்வோத்தமத்வத்தை வெளியிடுகிறார் 128-ம் சுலோகத்தில். இதன் தாத்பர்யம் முகவுரையில் 68-ம் பக்கம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மேல் இரண்டு சுலோகங்களிலும் இந்த க்ரந்தத்தில் ஸங்க்ரஹிக்கப்பட்ட அர்த்தங்களே ப்ரமாணதமங்கள் என்றும், இப்ரபந்தத்தின் அவதார வைலக்ஷண்யத்தாலும் இது மற்ற ப்ரபந்தங்களை! விட உத்க்ருஷ்டமானது என்றும் நிரூபித்தருளுகிறார். அதாவது இத்த ஸங்க்ரஹமே எம்பெருமானும் அவனுடைய அடியார்களான பாகவதர்களும் உகப்பதாயிருக்கும் என்றபடி

இத்தம் - இவ்வாறு ஸத்ஸம்ப்ரதாயக்ரமஸமதிகத --எம்பெருமான் தொடக்கமாக ஸ்வாசார்யரான கிடாம்பி இராமானுசப் பிள்ளான் வரையிலான ஆசார்ய பரம்பரையினால் அடையப்பட்டதாய். அதாவது அவர்களுடைய க்ரந்தங்களினாலும் அவர்களுடைய உபதேசத்தினாலும் அவர்களுடைய அனுக்ரஹத்தினாலும் தாம் பெற்றதாய்

அசேஷ வர்ணார்ஹவேத -- எல்லா வர்ணத்தார்களும் அதிகரிக்கக் கூடிய வேதமாய் இருக்கும் திருவாய்மொழியில்

ச்ரத்தாசுத்தாசயாநாம் – ருசியையுடையவர்களாய் அத்தால் பரிசுத்த மான மனதுடன் கூடியவர்களான பாகவதோத்தமர்களுக்கு

அநகம் கெளதுகம் வேங்கடேச: அகடயத் - வென்றிப் புகழ் திருவேங்கடநாதனாய் அவதரித்தவர் எல்லையில்லாத சந்தோஷத்தை உண்டாக்கினார்.

தஸ்ய ஸம்யக்த்வே -- இது உண்மை என்பதைக்கூறும் விஷயத்தில் ஸாக்ஷாச்சடரிபு: அதவாஸர்வஸாக்ஷீஸ ஸாக்ஷீ - ஆழ்வார்தாமேயும் அன்றிக்கே எல்லாவற்றிற்கும் ஸாக்ஷியாய் இருக்கும் ஸர்வேச்வரன் தானும் ஸாக்ஷியாக ஆவர்கள்,

ஸாவத்யத்வேபிபி பஜதாம் அப்ரகம்ப்யானுகம்ப ஸோடும் ப்ரபவதி ஸாவத்யத்வேபி என்று நைச்யானுஸந்தானம் செய்கிறபடி. இதில் யாதொரு தோஷமுமில்லை. அப்படி எங்காவது தோஷமிருந்தாலும் கூட ஆச்ரிதர்களிடத்தில் நிரவதிக ப்ரீதியையுடைய பகவான் அதைப் பொறுத்தருளுவன் என்றபடி. இங்கு தமிழ் மறைகளின் அனுபவ பரீவாஹமான ஸ்ரீஸ்தோத்திரத்திற்கு வ்யாக்யானமிட்டருளி அதன் இறுதியில்,

‘उपनिषदुपधेयस्तोत्रतात्पर्यमेतत् यतिपतिरवधत्ते यामुनार्य स्वय वा’

என்றனுஸந்தித்திருப்பது நினைக்கத்தக்கதாகும்,

இந்த க்ரந்த அவதரணத்தின் சீர்மையை வெளியிடாநின்று கொண்டும் இதன் வக்த்ரு வைலக்ஷண்யத்தை நிரூபித்துக் கொண்டும் க்ரந்தத்தை உபஸம்ஹாரம் செய்து, இது எம்பெருமான் திருவுள்ளமுகந்ததாயிருக்கும் என்று ஸாத்விகத்யாகம் செய்தருளுகிருர்,

சரணாகதிவேதம் என்று கொண்டாடப்படும் பெருமையை உடைய ஸ்ரீராமாயணம் சோகத்தின் பரீவாஹமாய் உண்டானது. ஆணும் பெண்ணுமாய்ச் சேர்ந்திருந்த இரண்டு க்ரெளஞ்ச பக்ஷிகளில் ஒன்றைக் கொன்ற வேடனைப் பார்த்ததினால் உண்டான துக்கத்தின் மிகுதியினாலன்றோ ராமாயணம் உண்டாயிற்று,

அப்படியே அர்ஜுனனுடைய துக்கத்தைப் பொறுக்கமுடியாதவனாய்த் தன்னுடைய அபார காருண்யத்தினால் ஸ்ரீக்ருஷ்ணன் கீதோபநிஷத்தை வெளியிட்டான். ஆழ்வார் திருவாய்மொழியோ பகவானுடைய எல்லையில்லாத திருக்கல்யாண குணங்களை உள்ளபடியே அனுபவித்துத் தாம் அனுபவித்தபடியே பேசும் ப்ரபந்தமாகையினால் அவை இரண்டிலும் இதற்கு வாசி காட்டப்பட்டது.

சோகாச்லோகத்வம் அப்யாகதஇதி நயத - சோகத்தின் பரீவாஹத்தினால் ச்லோகம் உண்டாயிற்று என்கிற ந்யாயத்தினால்,

சுத்தபோதார்ணவோத்யந் நாதா கல்லோல நாதானுபவரஸ பரீவாஹத: - ஆழ்வாருடைய மயர்வற்ற மதியான ஸமுத்திரத்தில் உண்டாகியதாய், அனேகம் விதங்களான பகவதனுபவ பரீவாஹமாகிய-அதாவது பகவானுடைய திருக்கல்யாண குணங்களில் ஒன்றை அனுபவிக்கப்புக்கு, அது மற்றொரு குணானுபவத்தில் மூட்ட, இப்படியே மேன்மேலும் அவனுடைய கல்யாண குணங்க்ளைப் பல விதமாக அனுபவித்ததின் பரீவாஹமாக வெளிப்பட்டதன்றோ இத்திருவாய்ம்மொழி என்றபடி.

‘ச்ராவ்யவேதாத்’ என்பதினால் இது மிகவும் ச்ராவ்யமான வேதம். அதாவது பகவானுடைய திருக்கல்யாண குணங்களையே ப்ரதி பாதிக்கிறபடியினாலே மனதிற்கு ஆஹ்லாதத்தை உண்டாக்குகிறபடியினால் கேட்கத்தக்கது என்பதும், இசையுடன் கானம் செய்யப்பட வேண்டியதாகையால் எல்லோருடைய மனதைக் கவரக்கூடியது என்பதும், எல்லா வர்ணத்தாராலும் கேட்கத்தக்கது என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

வேதாந்தாசார்யக ஸ்ரீபஹுமதபஹுவித் வேங்கடேசோத்த்ருதா – வேங்கடேச: என்று அவதார ப்ரபாவமும், ‘வேதாந்தாசார்யக’ என்று பிறந்து படைத்த ப்ரபாவமும், பஹுமத பஹுவித் என்று ஆசார்யர்களின் அணுக்ரஹத்தினால் பெற்ற ஏற்றமும், அதடியாகத் தாம் பெற்ற பாகவதர்களின் பஹுமானமும் தெரிவிக்கப்படுகின்றன.

“ரம்யா " இத்யாதி - ச்ராவ்ய வேதமான திருவாய்மொழியிலிருந்து வேங்கடேசனால் கடைந்தெடுக்கப்பட்டு, மாலையாகக் கோக்கப்பட்ட இந்தத் தாத்பர்ய ரத்னாவளியானது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு ப்ரீதியைக் கொடுக்கும் என்று ஸாத்விக த்யாகம் செய்தருளியபடி. ஸ்ரீசரணாகதி கத்யத்தில் “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்ஸ்வ” என்பதற்கு ஸ்வாமிதேசிகன் தாமே ஸ்ரீரங்கம் என்றது மற்ற ஸத்வோத்தர க்ஷேத்திரங்களுக்கு உபலக்ஷணமாகக் கடவது என்று நிர்வஹித்தருளியதைப் பின்பற்றி, இங்கே ஸ்ரீரங்கநாதன் ப்ரீதி அடைவான் என்றதும் இத்திருவாய்மொழியைத் திருச்செவி சாற்றியருளுகிற மற்ற நூற்றேழு திருப்பதிகளிலுமுள்ள எம்பெருமான்களும் ப்ரீதி அடைவார்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டதாயிற்று.

ஆக இப்படிக் கீழ் ஸ்ரீ தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம் இவற்றைக் கொண்டு திருவாய்மொழியின் அர்த்தஸங்க்ரதாம் உபபாதிக்கப்பட்டது. ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முரமதந குண ஸ்தோமகர்ப்பம் முநீந்த்ர:” என்கிறபடியே திருவாய்மொழியில் ஒவ்வொரு பாட்டும் பகவானுடைய குணங்களை உட்பொதிந்துக் கொண்டிருக்கும். ஆனாலும் சில பாட்டுக்களின் ஸங்க்ரஹ சுலோகத்தில் குணம் ஸ்பஷ்டமாகக் கூறப்படவில்லை, சில இடங்களில் ஆதி பதத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றை விவரிக்கவேண்டும் என்று சிலருக்கு அபிப்ராயம். ஆகிலும் ஸ்வாமிதாமே ஸ்ரீதத்துவமுக்தா கலாபத்தின் இறுதியில் அருளிச்செய்திருப்பதை அடியொற்றி அவற்றை விவரிக்க வில்லை. மேலும் ஸ்வாமியின் வாக்கைக்கொண்டே நிரூபிக்கப்படும் குணவிசேஷங்களுக்கு ஸத்ருசமாக மற்றெரு பதத்தைக் குறிப்பிடுவதும் அபசாரமாகுமன்றோ என்று அவை விவரிக்கப்படவில்லை,

பிற்பட்ட வ்யாக்யாதாக்களான ஒன்பதினாயிரப்படிக்காரருக்கும் பதினெண்ணாயிரப் படிக்காரருக்கும் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி சுலோகத்தில் எந்தப் பதம் எந்தப் பாட்டின் அர்த்த ஸங்க்ரஹம் என்கிற விஷயத்தில் சிற்சில இடங்களில் அபிப்ராய பேதம் காணப்படுகிறது. கூடிய வரையில் இவர்களைப் பின்பற்றியே திருவாறாயிரப்படிக்கு அனுகுணமாக ப்ரதிபாதித்த குணங்கள் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.

செவ்வாய், 7 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

इच्छासारध्यसत्यापित गुणकमलाकान्तगीतान्तसिध्ध्य-

च्छुद्धान्ताचारशुद्धैरियमनघगुणग्रन्थिबन्धानुबद्धा |

तत्तादृक्ताम्रपर्णीतटगतशठजित् दृष्टसर्वीयशाखा

गाथातात्पर्यरत्नावलिरखिलभयोत्तारिणी धारणीया ||

இச்சா ஸார‌த்ய‌ ஸ‌த்யாபித‌குண‌ க‌ம‌லாகாந்த‌ கீதாந்த‌ ஸித்ய‌த் சுத்தாந்த‌ ஆசார‌ சுத்தை: --தானே விரும்பி ஆசையோடு செய்த‌ தேரோட்டும் தொழிலினால் உண்மையாகக் காட்ட‌ப்ப‌ட்ட‌ ஸௌல‌ப்ய‌ம் முத‌லிய‌ குண‌ங்க‌ளையுடைய‌ ச்ரிய‌:ப‌தியின் ச‌ர‌ம‌ சுலோக‌த்தால் (கீதை 18 – 56ம் சுலோக‌த்தால்) ஏற்ப‌ட்ட‌ அந்த‌:புர‌த்து ஒழுக்க‌த்தால் (வேறு உபாய‌த்தையும் ப‌ல‌னையும் நாடாத‌ த‌ன்மை முத‌லிய‌வ‌ற்றால்) மிக‌ ப்ர‌ஸித்த‌ர்க‌ளான‌ ப‌ர‌மைகாந்திக‌ளால்,

அந‌க‌ குண‌க்ர‌ந்தி ப‌ந்தானுப‌த்தா – குற்ற‌ம் க‌ல‌வாத‌ சிற‌ந்த‌ குண‌ங்க‌ளின் குழுவின் தொட‌ர்புடைய‌தாயும், அகில‌ ப‌யோத்தாரிணீ : ஸ‌ம்ஸார‌ம் அனைத்தையும் போக்க‌வ‌ல்ல‌துமான‌, இய‌ம் -- இந்த‌, தத்தாத்ருக் – அள‌வ‌ற்ற‌ பெருமையையுடைய‌, தாம்ர‌ப‌ர்ணீ த‌ட‌க‌த‌ --தாம்ர‌ப‌ர்ணீ நதிக்க‌ரையில் திருவவ‌தார‌ம் செய்த‌ருளி, ச‌ட‌ஜித் – ந‌ம்மாழ்வாரால், த்ருஷ்ட‌ --காண‌ப்ப‌ட்ட‌, அதாவ‌து ப்ர‌த்ய‌க்ஷீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌, ஸ‌ர்வீய‌சாகா – எல்லோரும் க‌ற்க‌ உரிய‌ த‌மிழ்ம‌றையின், காதா தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளீ – பாசுர‌ங்க‌ளின் க‌ருத்துக்க‌ளாகிய‌ ர‌த்ன‌ங்க‌ளின் குவிய‌லை வெளியிடுகின்ற‌ இந்த‌ தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளி என்னும் ஸூக்தியான‌து, தார‌ணீயா –ஹ்ருத‌ய‌த்திலே த‌ரிக்க‌த்த‌க்க‌தாகும், அனுஸ‌ந்திக்க‌த்த‌க்க‌தாகும் என்ற‌ப‌டி.

இந்த‌ க்ர‌ந்தத்திற்கு அதிகாரிக‌ளை – “இச்சா” இத்யாதியால் அருளிச் செய்திருக்கிறார். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ப்ரதானமான சரணாகதியை விதிக்கிற ஸ்ரீகீதை 18 - ம் அத்யாயம், 88-ம் சுலோகம் சரம சுலோகம் என்னப்படும். இது கீதையின் இறுதியில் கூறப்பட்டிருப்பதினால் 'கீதாந்த” என்னப்பட்டது. இதில் நிஷ்ட்டையுடைய பாகவதர்களின் அனுஷ்டானம் அந்த:புர ஒழுக்கம் எனப்படும். இவர்கள்தாம் பரமைகாந்திகள் என்னப்படுமவர்கள். அப்படிப்பட்ட பாகவதர்களினால், கீழ் இரண்டாம் சுலோகத்தில், *அநுபதிவிபுதை:அர்த்தித" என்பதை இங்கு இப்படிக் கூறியபடி. ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநனான பகவானுடைய திருக்கல்யாண குணங்களை ப்ரதிபாதிக்கிறபடியினால் ‘அநககுண’ என்னப்பட்டது. ‘க்ரந்தி பத்தானுபத்தா " என்றது அந்தக் குணங்களை ஒருமாலையாகக் கோத்துக் காட்டியபடி என்றபடி.

“தத்தாத்ருக்" என்கிற விசேஷணம் தாம்ரபர்ணிக்கும், சடஜித்தான ஆழ்வாருக்கும் தாத்பர்ய ரத்னாவளி என்பதற்கும், ஸர்வீயசாகா என்பதற்கும் விசேஷணம், தத்தாத்ருக் தாம்ரபர்ணி தடகத என்றது கலியுகத்தில் நாராயண பராயணர்கள் பலர் அவதரிக்கப்போகிறார்கள் என்று ஸ்ரீபாகவதத்தில் கூறும்பொழுது முதல் முதலில் எடுக்கப்பட்ட ஏற்றம் பெற்ற தாம்ரபர்ணி என்றபடி,

‘தத்தாத்ருக் சடஜித் ’ என்று ஆழ்வாருடைய அவதார வைலக்ஷண்யம் தெரிவிக்கப்படுகிறது. ஸாமாந்ய குழந்தையைப் போலப் பிறந்தபோதிலும் பிறந்தபிறகு ஸ்தத்யபாநாதிகளுள் ஒன்றும் செய்யாமல் பகவதநுபவத் தினாலேயே வளர்ந்த ஏற்றம் தெரிவிக்கப்பட்டதாகிறது. ‘தத்தாத்ருக் தாத்பர்ய ரனாவளி: ' என்று வக்த்ரு வைலக்ஷண்யம் ஸூசிப்பிக்கப்படுகிறது.

‘தத்தாத்ருக்ஸர்வீயசாகா’ என்பதினால் த்ரைவர்ணிகர்களினால் மட்டும் அத்யயனாதிகள் செய்யப்படக் கூடிய ஸம்ஸ்க்ருத வேதம் போலன்றிக்கே ஸர்வரும் அதிகரிக்கலான உத்கர்ஷம் பெற்றிருப்பது கூறப்பட்டதாகும். இந்த ஏற்றம் வேறொரு முகமாக இறுதியில் ‘ச்ராவ்யவேதாத்" ன்ன்று அருளிச் செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்யசந்திரிகையின் இறுதியில் இதே விசேஷணத்தை ‘தத்தாத்ருக் குருத்ருஷ்டிபாத மஹிம க்ரஸ்தேந யச் சேதஸா’ என்று அனுஸந்தித்திருப்பதைப் பார்த்தால் இது ஆழ்வாருக்கு விசேஷணம் என்றேற்படும். நம்மாழ்வாருக்கன்றோ இந்த ஸம்ப்ரதாயத்திற்கு இந்தக் கலியுக ஆரம்பத்தில் ப்ரதமப்ரவர்த்தகராயும் பின்பு ஒரவஸரத்தில் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு அதை மீண்டும் ப்ரவர்த்தநம் செய்தவராயும் இருக்கும் ஏற்றம்! அங்கு கீதோபநிஷத்தை வியாக்யானம் செய்வதற்கு ஆசார்யர்களின் அனுக்ரஹத்தின் பெருமையைக் குறிப்பிடுவதற்காக இதே பதம் ப்ரயோகிக்கப்பட்டிருக்கிறது என்றறியவும்.

‘காதா’ என்றது ‘ச்ருணுகாதாம்புராகீதாம்’ என்றதற்கு ஸ்ரீஅபய ப்ரதான ஸாரத்தில் :’கண்டு என்பான் ஒரு மஹர்ஷி கண்டதொருகாதை கேளிர்" என்றருளிச் செய்திருப்பது நினைவூட்டப்பட்டு, ஆழ்வாரால் ப்ரத்யக்ஷீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஸ்ரீத்ரமிடோபநிஷத் எனப்படும் திருவாய்மொழியாகிற பாட்டுக்கள் குறிப்பிடப் படுகின்றன

‘அகில பயோத்தாரீணி’ என்னும் பதம் இப்ரபந்தத்தை அனுஸந்திப்பதினால் எல்லா பயங்களிலிருந்தும் விடுபடுவான் என்ப்தைக் கூறுகிறது

இப்படி உபோத்காத ரூபமாக ஸ்ரீத்ரமிடோபநிஷத்தின் பெருமையைப் பத்து சுலோகங்களினால் ப்ரதிபாதித்தபிறகு, பத்து பத்துக் குணங்களை நிரூபிக்கும் 100 சுலோகங்களும், இதில் அஞ்சிறைய மடநாராய் திருவாய்மொழியில் ஆசார்யகுணரூபமாக ஒரு சுலோகமும், சீலமில்லாச் சிறியனேலும் என்கிற பாட்டுக்கு அர்த்தாந்தரரூபமாக ஒரு சுலோகமும், நண்ணாதார் முறுவலிப்ப என்பதற்கு அர்த்தாந்தரமாக இரண்டு சுலோகமும், பத்துத் திருவாய்மொழிகள் கொண்ட ஒவ்வொரு பத்தில் உள்ள பத்துத் திருவாய்மொழிகளிலும் ப்ரதிபாதிக்கப்படும் குணங்களைக் கூறும் 10 சுலோகங்களுமாக 114 சுலோகங்கள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன. இவை மேலே அந்தந்தத் திருவாய்மொழிகளுக்கு முன்பு அச்சிடப்பட்டிருக்கின்றன.