ஞாயிறு, 24 மே, 2009
"மார்கழித் திங்கள்"
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் !
நீராடப் போதுவீர் ! போதுமினோ நேரிழையீர் !
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய் !
பதவுரை :--
மார்கழித் திங்கள் -- மார்கழி மாதத்தில் ;
மதி -- சந்திரன் நிறைந்த -- பூர்த்தியாயிருக்கின்ற
நன்னாள் -- நல்ல தினமாகிய (நல்--ஏற்றமிகுந்த)
ஆல் -- (ஆரல்) கார்த்திகை நக்ஷத்திரம் கூடிய தினத்தில்;
நீர் ஆட -- ஸ்நாநம் செய்ய, (ஒழுக்க முறையில் ஈடுபட பகவத்குணாநுபவம் செய்யப்)
போதுவீர் --விரும்பி வருபவர்கள்;
போதுமினோ -- வாருங்கள்;
நேர் -- தகுந்த, பொருந்திய; இழையீர் -- ஆபரணத்தையுடையவர்களே!
நேர் -- ஒழுங்கான சாஸ்த்ர விஹிதமான , இழையீர்-- செய்கை, நடத்தையுடை யவர்களே;
நேர்-- கிடைத்தவற்றைக் கொண்டு, இழையீர் --வாழ்க்கை நடத்துபவர்களே;
நேர் -தர்மத்திற்கு எதிர்த்தட்டில்; இழையீர் -- புகுரமாட்டாதவர்களே!;
நேர் ---எதிரிலே, பகவத் ஸந்நிதியிலே; இழையீர் --வாழ்க்கை நடத்துபவர்களே!;
சீர் -- சிறப்பு;மேன்மை; மல்கும் --பலமடங்காகப் பெருகுகின்ற
ஆய்ப்பாடி -- இடைச்சேரி, தாய்மார்கள் இருக்கும் ஊர்;
ஆய் -- தெரிந்தெடுத்த ;
பாடி --ஊர் (எம்பெருமாள் அவதாரத்துக்கு யாதுமறியாரிடையே விளையாடப் பொறுக்கித் தெரிந்த ஊர்)
(பகர வொற்று மிகை வினைத் தொகையாகக் கொள்ளில்);
செல்வ -- அருமையான;
சிறுமீர்காள் --குழந்தைகளே (அறிவினாலும், உணர்வினாலும், ஸம்ஸ்கார அநுஷ்டானங்களாலும் சிறியோர்களே!)
கூர் --கூரிய ,சிறப்புற்ற; வேல் -- வேலாயுதத்தையுடைய;
கொடும் -- தன் காத்தல் தொழிலினின்றும் வளைந்து நிற்பது போன்று காணப்படுகிற;
தொழிலன் -- செயலையுடையவன் (சம்ஹாரத்தையும் செய்பவன்)
நந்தகோபன் குமரன் -- நந்தகோபனுக்கு மகனாக இருப்பவன்;
ஏர் -- அழகு;
ஆர்ந்த -- ஒளிவிடுகிற, நிறைந்த,
கண்ணி-கண்ணையுடையவள், சிறந்த மாலையையுடையவள், பூர்வீகர்கள் செய்துள்ள பாக்களைச் சொல்லிக் கொண்டிருப்பவள்;
யசோதை -- யசோதைப் பிராட்டியார், புகழைத் தருபவள்;
இளஞ்சிங்கம் -- சிங்கக் குட்டி;
கார்மேனி -- உருவம் கருத்தும், மேகம் போன்ற மேனி அழகும், குளிர்ச்சியும் உள்ள மேனி;
மேனி -- உடல், உருவம்,அங்கம், மேகத்தின் மினுக்கு;
செங்கண் -- சிவப்பு நிறமுடைய கண், செம்மையான உருவாலும், நோக்காலும் உள்ளன்பின் வெளியீட்டாலும், திருந்திய கண்; கதிர்
மதியம்போல் -- சூரிய சந்திரர்கள் போல், ஒளிவிடு சந்திரன் போல்;
கதிர் -- விளையும், பயன்தரும் சந்திரன் என்றுமாம்;
போல்-- ஒத்திருக்கின்ற
முகத்தான் -- முகத்தினழகுடையவன், ப்ரவேசமுடையவன் (முகம்-- இடம், சந்தி, தொனி, புறம், முகப்பு, வதனம், வாய்,வாயில் வேதம், ஆரம்பம்,, உபாயம்) (இவ்வெல்லாப் பொருட்களும் கொள்ளத் தக்கன) இவைகளையெல்லாம் தனக்கு ஸ்வரூப ரூபகுணசேஷ்டிதங்களாக உடையவன்
நாராயணனே -- ஒப்பார் மிக்காரின்றி உயர்வற வுயர் நலமுடைய நாராயணனே (உயர்வு சிறப்பு)
நமக்கே -- எவ்விதத்திலும் அவனை அடைய முயற்சிக்கும் மார்க்கமொன்று அறியமாட்டா மனிசரிற் றுரிசனாய்,
பறை -- சொல், அபயம், என்றும்காத்தலைச் செய்யும் தீர்மானச் சொல், காத்தலுமாம்;
தருவான் -- நமக்கு ஸாரூப்ய நிலைமையை உண்டாக்கி, அளிப்பான்;
பாரோர் -- உலகத்திலுள்ளோர்கள்;
புகழ -- உவக்க, ஆச்சர்யப்பட, மெச்ச, ;
படிந்து -- இறங்கி, ஈடுபட்டு, அந்வயித்து, ஆழ்ந்து (அல்லது) உணர்ந்து;
எம்பாவாய் -- என் மனத்தில் நினைந்திருக்கும் ப்ரதிமா வடிவு உடைய ஹார்த்த ஸ்வரூபியான மூர்த்தியே! என்று விளி;
ஏல் -- ஏற்றுக்கொள்,அல்லது மேன்மையுற்ற, உயர்ந்த;
ஓர் -- உணர் அல்லது ஒப்பற்ற, தனித்த பெருமையுடைய ;
ஏல் -- உயர்ந்த; ஓர் --ஒப்பற்ற
எம்பாவாய் என்றும், எம்பாவாய்-- எம்பாவையே ஏற்றுக் கொள், உணர் என்றும் இருவகையாலும் பொருள் கொள்ளவும்
சனி, 23 மே, 2009
புதன், 13 மே, 2009
சேதுக்கரையில் தீர்த்தவாரி
திங்கள், 11 மே, 2009
11th day (Vidayaatri) at Thiruppullani
மாலையில் சாத்துமுறைக்காக காத்திருந்த சமயத்தில், அங்கு கூடியிருந்த பெண்களிடம் பாலிகையைச் சுற்றி கும்மி அடிக்க கோவில் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அவர்களோ … தயங்கினார்கள் எனக்குத் தெரியாது உனக்குத் தெரியாது என ஒதுங்கினார்கள். கோவிலாரோ விடுவதாயில்லை. ஒருவழியாக ஆரம்பித்தாலும், தட்டுத் தடுமாறி என்ன பாடுவது எப்படி கும்மி அடிப்பது என்று புரியாமல் திகைத்த வேளையில் “கல்கி” கதை ஆழ்வார்க்கடியான் போல் ஒருவர் திடீரென்று பெண்கள் நடுவில் நுழைந்து ஆண்டாள் குறவஞ்சியைப் பாடிக்கொண்டு கும்மி அடிக்க ஆரம்பித்தார் அதன்பின் அவரைப் பார்த்து எங்களூர்ப் பெண்களும் ஒருவழியாக கும்மி அடித்து முடித்தார்கள்.
இதில் வேதனை பெண்கள் அனைவருமே கோவில் கைங்கர்ய பரர்கள் குடும்பத்தினர் என்பதும் வந்தவர் திருக்குறுங்குடி நாராயண பாகவதர் என்ற அபிராமணர் என்பதும்தான்.
,
அந்த வீடியோ காட்சியைக் காணுங்கள். முதலில் பெண்கள் திகைப்பதையும், நடுவில் பாகவதர் நுழைந்து தூள் கிளப்புவதையும் கவனியுங்கள்.
கும்மி ஒலியில் பாடல் தெளிவாகக் கேட்கவில்லை. என்னிடம் இருப்பதோ ஸ்டில் காமரா. ஆண்டாள் குறவஞ்சி கேட்க விரும்புபவர்களுக்காக அவரை மீண்டும் பாடச் சொல்லி பதிவு செய்துள்ளேன். அதை இங்கிருந்து கேட்கலாம் தரவிறக்கிக் கொள்ளலாம்.
