திங்கள், 17 ஏப்ரல், 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 49

நூற்றிப் பதினைந்தாவது ஸர்க்கம்

[ஸ்ரீராமனிடம் பிரம்மதேவன் தூதனுப்பியது]

                ஸ்ரீராமபிரான் இவ்வண்ணம் தருமம் தழைத்தோங்க ராஜ்ய பரிபாலனஞ் செய்து வருகையில் ஒரு நாள் கால ருத்ரமூர்த்தி தவசி வேஷந்தரித்து, ராமனது அரண்மனை வாயிலில் வந்து, அங்கே வெகு தீரமாக நின்ற லக்ஷ்மணனைப் பார்த்து ‘யான் மகாப்ரபாவசாலியான அதிபல மகா முனிவரது தூதன். யான் ஒருபெரிய காரியத்தின் பொருட்டு வந்திருப்பதாக நீ வேந்தனிடம் விரைவில் அறிவிக்க’, என்று கூற, லக்ஷ்மணன் அங்ஙனமே விண்ணபஞ்செய்ய அத்தவசி யாவரினும் அற்புதமானதோர் ஒளிதிகழ ராஜசபையிற் சென்று ராமரை வாழ்த்த,ராமன் அவரை நன்கு வரவேற்றுப் பூஜித்து ஓர் சித்ராசனத்தில் எழுந்தருளச் செய்த பின் அவரைப் பார்த்து "தபோதனரே! தேவரீரது வரவு நல்வரவாகுக. தேவரீர் யாவருடைய தூதராக எழுந்தருளியதோ அவரது பணிப்பை யருளிச் செய்க" என்றான். அது கேட்டு அம்முனிவர் ‘ராமா என்னைத் தூதனுப்பிய தபோதனர் மொழிந்த இதவசனத்தைக் கேட்க விருப்பமாயின் நாமிருவர் மாத்திரமே தனித்திருக்கையில் அதனைப் ப்ரஸ்தாவித்தல் வேண்டும். அப்படி நாம் சம்பாஷிக்கு மளவில் யாவரேனும் அதைக் கேட்டாலும் அத்தருணத்தில் யாவரேனும் இங்கு வந்து பார்த்தாலும் அவர் உடனே மரணத்திற்கு ஆளாவாரென உக்ரமாகக் கட்டளையிட வேண்டும்’ என்றார். ராமன் ‘அங்ஙனமே ஆகுக’ என்று கூறி லக்ஷ்மணனை விளித்து ‘லக்ஷ்மணா! நீ வாயிலோனை அப்புறம் போக விடுத்து நீயே வாயிலில் காவல் காத்திருத்தல் வேண்டும். யானும் இம் முனிவரும் ஏகாந்தமாக சம்பாஷணை செய்கையில் எவரேனும் இங்கு வந்து பார்த்தாலும் இதனைக் கேட்டாலும் மரண தண்டனைக்கு ஆளாகுவர்’ என்று கட்டளையிட்டு லக்ஷ்மணனை அரண்மனை வாயிலில் காவல் இருக்கும்படி செய்து இருவரும் தனியே நின்றபோது ராமன் முனிவரைப் பார்த்து சுவாமி ‘இங்கு ஒருவருமில்லை இனி விசாரமின்றி மனத்திலுள்ளதை கூறலாம்’, என்றான்.

நூற்றிப் பதினாறாவது ஸர்க்கம்

(காலனுக்கும் காகுத்தனுக்கும் உரையாடல்]

            அப்பொழுது அத்தவசி ராமனைப் பார்த்து "ராஜனே நான் பிரம்ம தேவனால் இவ்விடம் தூது அனுப்பப்பட்டவன். ஹே வீர! பூர்வத்தில் நான் உனக்கு புத்திரனாகப் பிறந்தவன். உலகங்களை அழிக்கும் நிமித்தமாக நீ என்னை உனது திவ்ய சக்தியினால் உண்டாக்கினை. நான் திரிபுர ஸம்ஹாரஞ் செய்த கால ருத்ரமூர்த்தியே யாவேன், பிரம்மதேவன் சொல்லியனுப்பியது யாதெனில் படைப்பு, அழிப்பு, அளிப்பென்னும் முத்தொழிலுக்கும் உரியனான நீ, சகல லோகங்களையும் ரக்ஷிப்பதே பெரிய விரதமாகக் கொண்டவனன்றோ? ஆதலின் அதன் பொருட்டு நீ உன்னடிச் சோதிக்கு (ஸ்ரீவைகுண்டத்திற்கு) வந்து சேர வேண்டிய சமயம் வந்து விட்டது. ஆதியில் நீ உனது திவ்ய சக்தியினால் எல்லா உலகங்களையும் வயிற்றிலடக்கிப் பெரும்புறக் கடலில் பள்ளி கொண்டு முதலில் என்னைப் பிறப்பித்துப் பிறகு உனக்குப் படுக்கையான ஆதிசேஷனை தோற்றுவித்தாய். அப்பால் மகாபலிஷ்டர்களான மதுகைடபர்களைப் படைத்தனை. அவர்களில் கைடபன் என்னும் அசுரன் முதலை முத்துச் சிப்பி முதலியபோல் உடம்பில் எலும்புகளே மேலிட்டவனானது பற்றி பின் எலும்புகள் இப் பூமியெங்கும பரவி மலைகளும், மேடுகளுமாயின. மற்றவனான மதுவினுடல் மீன் முதலியவற்றின் உடலென நிணமே மேலிட்டிருந்தமையின் அது படிந்து பூமியெங்கும் புல் பூண்டு முதலியவை முளைக்கும் படியான செழிப்புடையதாகி மேதினியென்னும் பெயர் பெற்றது.

                ராமா! நீ மனோ வாக் காயங்களுக்கு எட்டாத பரவாசுதேவன் என்ற ஆதி மூர்த்தியினின்றும் மகாவிஷ்ணுவாக தோன்றினாய். தவிர அதிதியினிடத்தில் உபேந்த்ரனாக வந்து பிறந்து தேவதைகளுக்கு நேர்ந்த துன்பங்களைப் போக்கினாய். இது இங்ஙனமாக, ராவணனை ஸம்ஹரிப்பதற்காக தசரதனுடைய புத்ரனாய் தோன்றினாய். ஆதியில் செய்த ஸங்கல்பப்படி நீ பூலோகத்தில் வசிக்க வேண்டிய ஆயுளளவு பூரணமரகி உன்னடிச் சோதிக்கு எழுந்தருள வேண்டிய காலம் நெருங்கி விட்டது. மறுபடி சில காலம் இங்ஙனம் பூலோகத்திலேயிருந்து ஜனங்களைப் பரிபாலித்து வரவேண்டுமென விருப்பமாயின் அப்படியே செய்க. உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு. தேவலோகத்திற்கு உனக்கு வர விருப்பமாகில் சகலமான தேவர்களும் உனது  வரவை எதிர்பார்த்திருக்கின்றனர். அங்கே எழுந்தருளி அவர்கட்கு சேவை சாதித்து அவர்களுடைய விருப்பத்தை தணித்தருள்க,’ என விண்ணப்பஞ் செய்யுமாறு இங்கு அனுப்பினர்” என்றார். நான்முகன் சொல்லியனுப்பியதாகக் கால ருத்ர மூர்த்தி கூறியதைக் கேட்டு ராமன் சிரித்தவாறு "ஹே! தேவ! மூவுலகத்தவர்க்கும் ஆக வேண்டிய கார்யத்தை முடித்தலின் பொருட்டே நான் இங்கு வந்து பிறந்தேன், இனி யான் வந்தவிடம் போய்ச் சேருகிறேன். மனத்தில் நினைத்ததையே சதுர்முகன் கூறியனுப்பினான். ஆதலின் அது விஷயத்தில் எனக்கு விசாரம் ஒன்றுமில்லை. எனது பக்தர்களான தேவதைகளுக்கு வசப்பட்டவனாதலின் அத் தேவர்களில் முதல்வனான பிரமதேவன் கூறுகின்றவாறே நடக்கக் கடமை உள்ளவன்" என்றான்.

நூற்றிப் பதினேழாவது ஸர்க்கம்

[துர்வாச முனிவர் வந்ததும் லக்ஷ்மணன் பிரிந்ததும்]

            காலனும் காகுத்தனும் இவ்வாறு சம்பாஷணை செய்து கொண்டிருக்கையில் துருவாச ரிஷி ஸ்ரீராமனைத் தரிசிக்க வேண்டி அரண்மனை வாயிலை அடைந்து அங்கு காவல் காத்திருந்த லக்ஷ்மணனைப் பார்த்து, ‘சீக்கிரம் என்னை ராமனிடம் அழைத்துச் செல்லுக’ என்றார். லக்ஷ்மணன் அது :கேட்டு முனிவரை நமஸ்கரித்து ‘தேவர்க்கு ஆக வேண்டிய கார்யம் எதுவோ அதை அடியேன் நிறைவேற்றுகிறேன். மன்னவன் மற்றெரு கார்யத்தை மேற்கொண்டிருப்பதால் அவனைப் பார்க்க ஒரு முகூர்த்த காலம் பொறுத்தருள வேண்டுகிறேன்’ என, துர்வாசர் கோபத்தினால் கண்கள் சிவந்து ‘யான் வந்திருப்பதை நீ இந்த நிமிஷமே ராமனிடம் தெரிவிக்க வேண்டும். தவறினால் உன்னையும் இத்தேசத்தையும், நகரத்தையும் நான் சபித்துவிடுவேன். ராமனையும்,பரதனையும், உங்கள் ஸந்ததிகளையும் சபித்துவிடுவேன். மேலெழுந்த கோபத்தை நான் மீண்டும் உள்ளடக்க வல்லவன் அல்லேன்’ என கோபமாகக் கூறினார். சொன்ன வண்ணஞ் செய்யும் தவப் பெருமை பெற்ற துருவாச முனிவர் கூறிய க்ரூரமான வார்த்தைகளைக் கேட்டு லக்ஷ்மணன் சிறிது யோசித்து என்னொருவனுக்கு மரணம் நேர்ந்தாலும் நேரட்டும். இம் முனிவரின் கோபத்திற்கு ஆட்பட்டு யாவும் அழியாதிருந்தால் போதும்' என மன உறுதி செய்து கொண்டு உள்ளே சென்று முனிவர் வந்திருக்கின்ற செய்தியை ராமனிடம் விண்ணப்பஞ் செய்தான். கோபமுனிவர் வந்திருப்பது கேட்டு காகுத்தன் காலமூர்த்திக்கு விடை கொடுத்தனுப்பிவிட்டு உடனே துர்வாசரை எதிர்கொண்டு சென்று அவரை வணங்கி பூஜித்து கைகூப்பியவாறு அவரைப் பார்தது ‘சுவாமி அடியேனுக்கு இப்போது என்ன கார்யம் நியமிக்கின்றது’ என்று வினவ அந்த ரிஷி ராமனைப் பார்த்து ‘தருமமே துணையாகக் கொண்ட கரகுத்த! யான் ஆயிரம் வருஷங்களாக எந்தவிதமான ஆகாரமும் இன்றி அருமையான தவம் புரிந்தேன். ஆதலால் எனக்குப் பசி அதிகமாக இருக்கின்றது. விதிமுறைப்படி எனக்குப் போதுமான போஜனமளிக்க வேண்டுகின்றேன், என்றார் ராமன் அது கேட்டு மகிழ்ச்சியுடன் அவருக்கு முறைப்படி போஜனம் அளிக்க, அமுதமயமான அவ்வுணவை அருந்தவ முனிவர் அருந்தி உள்ளம் மகிழ்ந்தவராகி ராமனை ஆசீர்வதித்து விடைபெற்று தமது ஆச்ரமத்திற்குச் சென்றார். அப்பால் ராமன் கால ருத்ரமூர்த்தி கூறிய க்ரூரமான வார்த்தையை நினைத்து தவித்தவனாகி மிகவும் தீனனாய்த் தலை குனிந்து ஒன்றும் சொலல வாய் எழாமல் நின்று நமக்கு சகோதரனேது? வேலைக்காரனேது? ஒருவருமில்லை என்று நிச்சயித்து மௌனமாய் இருந்தான்.

நூற்றிப் பதினெட்டாவது ஸர்க்க்கம்
[ராமன் லக்ஷ்மணனை பிரிந்தது.]

            இவ்வாறு வாய் திறவாமல் மௌனமாய் நின்ற இராமனை பார்த்து லக்ஷ்மணன் மகிழ்ச்சியடைந்தவனாகி "எனக்காக தேவரீர் வருந்துவது உசிதமில்லை. அன்று விதித்தவாறே யன்றோ யாவும் நடந்தேற வேணும். காலகதி இப்படிப்பபட்டதுதான். ஆதலால் தேவரீர் அடியேனைத் துறந்து, செய்த ப்ரதிக்ஞையை நிறைவேற்றி அருள்க. செய்த ப்ரதிக்ஞயைப் பரிபாலியாது தவறினவர்கள் நரகமே புகுவார்கள். தேவரீருக்கு அடியேனிடம் அன்பும் அருளும் உள்ளனவாயின், மனதில் சிறிதும் கலக்கமில்லாமல் அடியேனைத் துறந்து தர்மத்தை வளரச் செய்க”, என்றான். லக்ஷ்மணன் இவ்வரறு கூறியதைக் கேட்டு ராமன் துக்கம் அடைந்தவனாகி மந்திரிமார்களையும், புரோகிதரையும் உடனே வரழைத்து, துர்வாசமுனிவர் எழுந்தருளியதையும், அவருக்கு முன் வந்த தவசியிடம் தான் செய்த ப்ரதிக்ஞயையும், அதன் மேல் நடந்த வ்ருத்தாந்தத்தையும். அவர்களிடம் கூற, அது கேட்டு அவர்கள் ஒன்றும் தோன்றாமல் மௌனமாய் இருந்தனர். அப்பொழுது வஸிஷ்டர் ராமனைப் பார்த்து ‘ஹே, தாசரதே! உனக்கு இப்படிப்பட்ட சங்கடங்களும் இளையவனோடு பிரிவும் உண்டாகும் என முன்பே தெரிந்த விஷயமே. அதைப் பற்றி விசனமுறுவதில் பயனில்லை. விதியே வலியுள்ளதால் லக்ஷ்மணனைப் பிரிந்திடுக. செய்த ப்ரதிக்ஞயை வீணாக்கலாகாது. ப்ரதிக்ஞை வீணாகுமாயின் தர்மம் நசியும். தர்மம் நசித்தால் மூவுலகங்களும் தேவ ரிஷிகணங் களும் நசியும்; ஸந்தேஹமில்லை. ஆதலின் இம் முவுலகங்களின் நன்மைக்காக அவற்றின் பரிபாலகனாய் இருக்கின்ற நீ லக்ஷ்மணனைத் துறந்து ப்ரதிக்ஞையைக் காப்பாற்று ‘ என்றார்.

            மந்திரிகள் பலருங் கூடிய பெரிய சபையில் வஸிஷ்ட பகவான் இவ்வாறு கூறக் கேட்டு இராமன் லக்ஷ்மணனைப் பார்த்து ‘லக்ஷ்மணா தர்ம நிலை அழியாமைக்காக யான் உன்னை இன்றோடு இழந்து விடுகிறேன். சாதுக்களுக்குத் த்யாகமும் வதமுமாகிய இரண்டும் சமமென விதிக்கப்பட்டிருக்கின்றனவன்றோ’ என்றான். இவ்வாறு இராமன் சொல்லியதும் லக்ஷ்மணன் கண்களில் நீர் ததும்ப ஐந்து இந்த்ரியங்களும் உள்ளமும் கலங்கினவனாகி நேராக சரயு நதிக்குச் சென்று ஸ்நாநம் செய்து கை கூப்பி வணங்கி ப்ராணாயாமஞ் செய்து பரவாசுதேவனது என்றும் அழிவில்லாத திருவடியையே மனதில் எண்ணி மரணமடைந்தான். அப்பொழுது இந்திராதி தேவர்கள் அப்ஸரஸ்ஸுகள் தேவரிஷிகள் எல்லோரும் லக்ஷ்மணன் மீது பூமாரி பொழிந்தனர். பிறகு மானிடர் ஒருவர் கண்ணுக்கும் புலப்படாமலேயே இந்த்ரன் லக்ஷ்மணனை அத்தேகத்துடனேயே தேவலோகத்திற்கு எழுந்தருளச் செய்துகொண்டு போனான் --- ஸாக்ஷாத் ஸ்ரீமஹா விஷ்ணுவினது அம்சத்தில் நாலில் ஒரு பாகமான அம் மஹாநுபாவன் எழுந்தருளியது கண்டு தேவர்களும், தேவரிஷிகளும், பெரும் மகிழ்ச்சி கொண்டவர்களாகி அவனைப் பூஜித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக