……………..காரிகையார்
சொற்பாங்கியர் தமக்கும் சொற்றிடேன்
கற்பாங் கியல்தரும்என் காமவிடாய் தீராத
சொற்பாங் கியர்தமக்கும் சொற்றிடேன் – நற்பாங்கின் .45.
பூங்குயிற்கும் ஆசை புகன்றிடேன்
ஆங்குயிர்க்கும் அன்னைதனக்(கு) அல்லாற்பின் தாய்க்குதவாப்
பூங்குயிற்கும் ஆசை புகன்றிடேன் – தேங்குயற்சீர்ப் .46.
என்னெஞ்சுக்கு இன்னல் எடுத்துரைப்பேன்
பொன்னெஞ் சுவக்கும் புயல்பாற் பொஒருந்தியுற
என்னெஞ்சுக்(கு) இன்னல் எடுத்துரைப்பேன் – துன்னும்சீர் .47.
மாலிலியாய் நின்று வருந்துவேன்
மாலிலியாய்நின்று வருந்துவன் மன்மதன் தேர்க்
காலிலியாய் நிற்போற்கென் கட்டுரைப்பேன் – வேலைஎன .48.
கள்ளருந்து வார்க்கு என் கழறுகேன்
விள்ளருந்துன் புற்று மெலிகுவேன் வேரிமலர்க்
கள்ளருந்து வார்க்கென் கழறுகேன் – தெள்ளறநீர் .49.
ஓடும் கயல்மீன் உறாதனவேல்
ஓடுங் கயல்மீன் உறாதனவேற் உள்ளமிக
வாடுங் குருகினுக்கெவ் வாறுரைப்பேன் – பீடுபெறும் .50.
45. காரிகையார் – பெண்களின்; கற்பாங்கியல் தரும் –கல்லைப் போன்ற கடினத்தன்மை கொண்ட; என் காமவிடாய் – என் விரகதாபம், தீராத – தீர்க்காத, சொற்பாங்கியர் தமக்கும் –இன் சொற்றோழியரிடமும், சொற்றிடேன் – கூறவில்லை, நற்பாங்கின் – நல்ல இணக்கம் உடைய.
46. ஆங்குயிர்க்கும் – அங்கே என் நிலை கண்டு பெருமூச்செறியும், அன்னைதனக்கு –தாய்க்கும், அல்லால் பின் – அல்லாது, தாய்க்குதவா – தன்னை முட்டை இட்ட தாய்க்கு உதவாமல் காகக்கூட்டில் பிறக்கும், பூங்குயிற்கும் – அழகிய கோகிலத்துக்கும், ஆசை – என் ஆவலை, புகன்றிடேன் – கூறவில்லை, தேங்குழற்சீர் – இனிய கூந்தல் சிறப்புடைய.
47. பொன் – திருமகள், நெஞ்சுவக்கும் – மனம் மகிழும், புயல்பால் – மேக வண்ணனிடம், பொருந்தியுற – சேர்ந்தடைய, என் நெஞ்சுக்கு – என் மனத்துக்கு ஏற்பட்ட, இன்னல் – தாபம், எடுத்துரைப்பேன் –எடுத்துக் கூறுவேன், துன்னும் சீர் – சிறப்பமைந்த.
48. மாலிலியாய் நின்று – மயக்கமுடையவளாயிருந்து, வருந்துவேன் – துன்புறுவேன், மன்மதன் தேர் –மன்மதன் இரதமாம், காலிலியாய் – காலற்ற தென்றற் காற்றாக, நிற்போற்கென் கட்டுரைப்பேன் – நிற்பவருக்கு (வருந்தும் தலைவருக்கு) என்ன கூறுவேன், வேலை என – கடல் போல.
49. விள்ளரும் – கூற அரிய, துன்புற்று – இடரடைந்து, மெலிகுவேன் – வாடுவேன், வேரி மலர்க் கள்ளருந்து வார்க்கென் கழறுகேன் – பூந்தேன் நுகரும் வண்டுகளுக்கு என்ன கூறுவேன், தெள்ளற நீர் – தெளிவற்ற நீரில்
50. ஓடும் கயல் மீன் – விரைந்து செல்லும் மீன், உறாதனவேல் –கிடைக்காவிடில், உள்ளம் மிகவாடும் குருகினுக்கு – மனம் மிகுதியாக வாட்டமுறும் கொக்கினுக்கு, எவ்வாறு உரைப்பேன் – எவ்விதம் கூறுவேன் – எவ்விதம் கூறுவேன், பீடு பெறும் – புகழ் பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக