சனி, 15 ஏப்ரல், 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 48

நூற்றிப் பதினோராவது ஸர்க்கம்

[ராமன் பல யாகங்கள் செய்தருளியது.)

           இராப்பொழுது கழித்து மறுநான் உதயமானவளவில் ராமன் எல்லா முனிவர்களையும் அழைப்பித்து அவர்களனைவரும் தத்தமக்சூரிய ஆசனங்களில் அமர்ந்த பின்னர் மற்றக் காவ்யத்தை கானம் பண்ணுமாறு தனது குமாரர்களுக்கு கட்டளையிட, அவர்கள் உத்தர ராம சரிதத்தை முறையே பாடத் தொடங்கினர். சீதையைப் பிரிந்த ராமனுக்கு இவ்வுலகம் முழுமையுமே சூன்யமாகத் தோற்றியது. ஆனால் ராமன் சோகம் தணியாதவனாகி அந்த யாகத்தை விதிமுறைப்படி நிறைவேற்றி அவரவர்களுக்கு செய்ய வேண்டிய சன்மானங்கனைச் செய்து சகலமான ராஜாக்களையும் வானர ராக்ஷஸர்களையும். மற்றுமுள்ள பலரையும் விடை கொடுத்தனுப்பி விட்டு. மைதிலியின் மோகமே மனதிற் குடிகொண்டவனாகி அயோத்யாபுரிக்குச் சென்றான். அப்பால் ராமன் தனது இரு குமாரர்களுடனும் கூடிக் களித்து அநேக யாகங்கள் செய்து தர்மம் வளரச் செய்தனனேயல்லது. மைதிலியை யன்றி மற்றெருத்தியை மனையாட்டியாக மணம் புரிய மனமிசைந்திலன். அவன் செய்த ஒவ்வொரு யாகத்திற்கும் ஸ்வர்ணசீதையே பத்னியாக நின்றாள். பொற்சீதையையே கொண்டு பதினாயிரமாண்டளவு ராமன் அநேகம் அசுவமேத யாகங்கள் செய்தருளினான். அதுவன்றி அவற்றினும் பதின்மடங்காய் வேண்டிய பொருள் செய்து வாஜபேயம் அக்னிஷ்டோமம் அதிராத்ரம் கோஸவம் இன்னும் அநேக யாக யஜ்ஞங்களும் செய்து விசேஷமான தக்ஷிணைகள் கொடுத்து அறநெறி தவறாது ப்ரஜைகளைப் பாதுகாத்து வந்தான். ராமன் இவ்வாறு ராஜ்ய பரிபாலனஞ் செய்து வருகையில் அவனை வானரர்களும் இராக்கதர்களும் ப்ரதி தினம் ஸேவித்து அவனை அக மகிழச் செய்து அவனது ஆணைக்குட்பட்டு நடந்து வந்தனர். ராமராஜ்யத்தில் காலந்தவறாது மாதம் மும்மாரி பொழிய ராஜ்யமெங்கும் செழிப்பாய் இருந்தது. நாட்டிலும் நகரத்திலுமுள்ள நானாவிதமான ஜனங்களும் புஷ்டியும், துஷ்டியும் அடைந்தனர். அந்நாளில் எவர்க்கேனும் அகால மரணமென்பதே சம்பவித்ததில்லை. ஒருவர்க்கும் ஒருவிதமான வ்யாதியும் உண்டானதில்லை. இவ்விதம் பலவாண்டுகள் செல்ல ராமனது தாய்மார்களான கௌஸல்யை, சுமித்ரை, கைகேயி முதலியோர் புத்ரர்களும்; பேரன்மார்களும் புடை சூழ்ந்திருக்க ஒருவர்பின் ஒருவராக சுவர்க்க லோகமடைந்து அங்கு தம் கணவனான தசரதனுடன் கூடிக் களிப்புற்றிருந்தனர். ராமன் அவர்களுக்குச் செய்ய வேண்டிய சரம க்ரியை (மரணச் சடங்கு) முதலான எல்லாவற்றையும் யாவருக்கும் வேற்றுமையின்றி ஒரே சீராக நடத்திச் சிறந்த தருமங்களை அந்தணர்கட்கும் அருந்தவ முனிவர்கட்கும் அந்தந்த காலத்தில் தவறாமல் செய்து பிதுர் தேவதைகளுக்குப் ப்ரீதியை விருத்தி செய்பவையான பிண்ட பிதுர் யஜ்ஞம் முதலியவற்றையும் செய்து சந்தோஷிப்பித்தான். இங்ஙனம் அநேகமாயிர வருஷங்கள் சென்றன.

நூற்றிப் பன்னிரண்டாவது ஸர்க்கம்

[யுதாஜித்து ஸ்ரீராமனிடம் தூது அனுப்பியது கூறல்)

                இவ்வாறு சில காலஞ் செல்லுகையில் ஒரு சமயம் கேகய தேசாதிபதியான யுதாஜித் மன்னன் ஸ்ரீராமனுக்கு பரிசாகப் பல்லாயிரம் நற்பரிசுகளும், விசித்திரமான வஸ்திரங்களும் அத்புதமான ஆபரணங்களும், கொடுத்துத் தமது புரோகிதரான கார்க்ய முனிவரை ராமனிடம் அனுப்பினான். அம்முனி வருவது கண்டு ராமன் தனது சைன்யங்களுடன் அவரை ஒரு நாழிகைவழிதூர மெதிர்கொண்டு சென்று தேவேந்திரன் தேவகுருவைப் பூஜிக்குமாப் போலே அவரைப் பூஜித்தான். அப்பால் ராமன் தன் மாமன் கொடுத்தனுப்பிய மேலான பொருள்களைப் ப்ரீதியுடன் பெற்றுக்கொண்டு ஒவ்வொருவர் யோக க்ஷேமங்களையும் வினவிய பின்னர் அம்முனிவரைப் பார்த்து ‘ஸ்வாமி! எனது நல்லம்மான் யாது நியமித்து அருளினார்?. தேவரீர் இவ்வளவு தூரம் எழுந்தருளின விசேஷம் யாது ?’ என வினவ, கார்க்ய முனிவர் கூறலுற்றனர். 'ஹே காகுத்தா நமது நாட்டிற்கருகில் மிக்க வளமுள்ள கந்தர்வதேசம் சிந்து நதியின் இருகரையும் பரவியிருக்கின்றதல்லவா? அந்நாட்டை சைலூஷனது மக்களும் சிறந்த பலிஷ்டர்களுமான கந்தருவர் அநேகமாயிரத்தவர் கைப்பற்றிக் கொண்டு அரசர்கள் பலரைத் துன்புறுத்தி வருகின்றனர், ஆதலால் ராமா! நீ உடனே அக்கொடிய கந்தருவர்களை வென்று அவர்களது நகரத்தை நமது ராஜ்யத்துடனே சேர்த்துக்கொள்ள வேண்டும். இக்காரியம உன்னாலன்றி மற்ற எவராலும் முடியத்தக்கதன்று. நீ இக்கார்யத்திற்கு உடன் படவேண்டும், என்று உனது நலலம்மான் சொல்லியனுப்பினான்’ .எனக் கூறினார். மாமன் சொல்லியனுப்பிய வ்ருத்தாந்தத்தை மஹரிஷியின் மூலமாய்க் கேட்ட ராமன் பரதனை விழித்து நோக்கி, பிறகு அம்முனிவர் பெருமானைப் பார்த்து, ‘சுவாமி நம் பரதனது மக்களான மகாவீரர்களாகிய தக்ஷனும், புஷ்கலனும் அத்தேசத்திற்கு வருகின்றனர். இவர்கள் வேண்டிய படைகள் புடைசூழ பரதனை முன்னிட்டுப் புறப்பட்டு அங்குச் சென்று அக்கந்தருவர்களை வெற்றி கொள்வார்கள் பிறகு அவ்விராஜ்யத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்து அவ்விரண்டிலும் இவ்விரண்டு புத்ரர்களுக்கும் பட்டாபிஷேகஞ் செய்வித்துப் பரிபாலித்து வருமாறு ஸ்தாபித்து பரதன் திரும்பி என்னிடம் வந்து சேருவான்’ என்று கூறி, சீக்கிரம் சேனைகளுடன் புறப்பட்டுச் செல்லுமாறு பரதனுக்குக் கட்டளையிட பரதன் தனது குமாரர்களுடனும் பெருஞ்சேனையுடனும் புறப்பட்டுச் சென்று பதினைந்து நாட்கள் வழி நடந்து சுகமாகக் கேகய தேசம் போய்ச் சேர்ந்தான். தேவர்களாலும் வெல்வதற்கரியதான பரதனது சேனை பரதனைப் பின் தொடர்ந்து செல்லுகையில் தேவேந்திரனுடன் செல்லும் தேவசேனையென விளங்கியது.

நூற்றிப் பதிமூன்றாவது ஸர்க்கம்

(தக்ஷ புஷ்கலர்களை கந்தருவ தேசத்தில் அரசர் களாக்கியது.)

            சதுரங்க சேனைகளுடன் வந்த பரதனைக் கண்டு கேகய ராஜனான யுதாஜித் மிகவும் சந்தோஷமடைந்து தானும் விரைந்து தனது சேனைகளுடனும் பரதனுடனும் கூடிப் புறப்பட்டு கந்தருவ நகரம் போய்ச் சேர்ந்தான். அது கண்டு கந்தருவர் அனைவரும் ஒன்று கூடி வந்து அவர்களை எதிர்த்தனர். அப்பால் அவ்விரு திறத்தவர்க்கும் மிகப் பயங்கரமாக ஏழுநாள் வரை வெற்றி தோல்வி இன்றி யுத்தம் நடந்தது.  கட்கம், கத்தி, வில் முதலானவை முதலைகளாகவும், மனித சரீரங்களே பெரிய மரங்களாகவும் மிதக்க, உதிர வெள்ளம் எப்புறமும் பெருக்கெடுத்தோடியது. அக்காலையில் பரதன் மிகுந்த கோபங் கொண்டு பயங்கரமான ஸமவர்த்தமென்கிற காலமூர்த்தியினது அஸ்த்ரத்தை எடுத்துக் கந்தருவர்களின் மீது ப்ரயோகித்தான். அதனால் மகா பராக்ரமசாலிகளான மூன்று கோடி கந்தருவர்களும் கால பாசத்தால் கட்டுண்டவராகி க்ஷணப் பொழுதில் மாண்டனர். அப்பால் பரதன் மிகவும் செழிப்புள்ளவைகளான கந்தருவதேசத்திலும், காந்தார தேசத்திலும் ஒன்றுக்கொன்று ஏற்றத் தாழ்வின்றி சகல சம்பத்துக்களும் நிறைந்த தக்ஷசீலமென்றும் புஷ்கலாவர்த்தமென்றும் பெயர் பெற்ற இரண்டு அற்புதமான நகரங்களை நிருமித்து அவற்றிற்கு முறையே தக்ஷனையும், புஷ்கலனையும் அரசர்களாக்கினான். தேவ மாளிகை போல் மிகவும் அற்புதமாய் ஏழெட்டு அடுக்குள்ள மாளிகைகள் நிறைந்து பெரிய வீதிகளும், எல்லாப் பண்டங்களும் குறைவற நிறைந்த கடைவீதிகளும், ரமணீயமான உத்யானவனங்களும் அமைந்து அந்நகரங்கள் எவரும் வியக்கத் தக்கவைகளாய் விளங்கின. அங்கு எல்லா விவரங்களும் நீதிமுறைப்படி நன்கு நிறைவேறி வருமாறு தன்குமாரர்கள் அரசு புரியும் அதிசயத்தைக் கண்டு களிப்புற்று பரதன்: ஐயாண்டளவு அவ்விடத்தே வசித்திருந்து அப்பால் அயோத்திக்குச் சென்று ராமனை வணங்கி கந்தருவர்களை வதைத்த வரலாறுகளையும், தமது ஆட்சியை அங்கு ஸ்தாபித்த விதத்தையும் விண்ணப்பஞ் செய்ய, ராமன் அதுகேட்டு மிகவும் களிப்புற்றான்.

நூற்றிப் பதினாலாவது ஸர்க்கம்

(காருபத தேசத்தில் அங்கதன், சந்திரகேது களுக்கு மகுடாபிஷேகம் செய்தது.)

            அப்பால் ஸ்ரீராமன் லக்ஷ்மணனைப் பார்த்து "லஷ்மணா! உளது குமாரர்களான அங்கதன் சந்திரகேது என்னுமிருவரும் இராஜ்ய பரிபாலனஞ்செய்யும் திறமையுடையவர்களாய் விளங்குகின்றனர். ஆதலால் அவர்களையும் ஓரிடத்தில் அரசர்களாக நியமிக்க வேண்டும். அதற்குத் தகுந்ததான தேசமொன்றை தெரிந்து சொல்’’ என்று கூறினான். அதுகேட்டு பரதன் "அண்ணா காருபதமென்கிற மிகவும் அழகான தேசமென்று உளதன்றோ? அஃது அரசாளுதற்கு ஏற்ற இடமாகையால் ஆங்கு அங்கதனுக்கும் சந்திரகேதுவுக்கும் அற்புதமான நகரங்கள் நிருபிக்கலாம்” என விண்ணப்பஞ் செய்தான். ராமன் அஃது உசிதமேயென்று கருதி அத்தேசத்தில் அங்கதீயை என்கிற பட்டணம் ப்ரதிஷ்டை செய்து அதில் அங்கதனை அரசு செலுத்தி வருமாறு நியமித்து, பிறகு வடக்கே மல்ல பூமியென்னுமிடத்தில் சுந்தரக்ரந்தை யென்ற திவ்யமான நகரமொன்றை நிருமித்து அதில் ஆட்சி புரியுமாறு சந்திரகேதுவுக்கு அபிஷேகஞ் செய்வித்து சந்தோஷமடைந்தான். லக்ஷ்மணன் அவர்களுடன் கூட சென்று அவர்கள் அரசாட்சி செய்யும் திறத்தைக் கண்டு வியந்து ஓராண்டு அளவு அங்கேயே இருந்து அப்பால் அயோத்தியை அடைந்து ராமனை வணங்கினான். பிறகு லக்ஷ்மணனும் பரதனும் ராமனுக்கு சகலவிதமான பணிவிடைகளையும் செய்துகொண்டு காலஞ் செல்வது தெரியாமலே பதினாயிர மாண்டுகளைக் கழித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக