நூற்றேழாவது ஸர்க்கம்
[சீதை சபதஞ் செய்ய வருவதை ராமன் அறிதல்]
அன்று முதல் ராமன் நாள் தோறும் பல ரிஷிகளும் மன்னர்களும். வானரர்களும் புடைசூழச் சபையின் நடுவே முனிகுமாரர்களை வரவழைத்து மிகச் சிறந்ததும், சுபமானதுமான அவர்களது சங்கீதத்தைக் கேட்டுக் களி கூர்ந்தனன். இவ்ஙனம் பல நாள் நடந்து வருகையில் அக்காட்டிலேயே அக் குச லவர்கள் ஜானகியிடம் பிறந்த தனது புதல்வர்கள் என அறிந்து அகமகிழ்ந்து ராமன் ஒரு நாள் சபை நடுவே சிறந்த தூதர்களை விளித்து, 'நீங்கள் உடனே வால்மீகி முனிவரிடம் சென்று சீதை குற்றமில்லாத நல்லொழுக்கமுள்ளவளாயின் அம்முனிவரது அனுமதி பெற்று இச் சபையிலுள்ள அனைவர்க்கும் நம்பிக்கையுண்டாகும்படி அவள் தான் மிகப் பரிசுத்தமானவள் எனப் பிரமாணஞ் செய்யக் கடவள், என யான் சொன்னதாய் அம் முனிவரிடம் அறிவித்து இது விஷயத்தில் அவரது கருத்தும், சீதையின் கருத்தும் இத் தன்மையதெனத் தெரிந்து கொண்டு தீவிரமாக வருக’. என நியமித்தான். அத்தூதர்கள் வேகமாக வால்மீகி முனிவரிடஞ் சென்று ராமனுடைய கருத்தை வெளியிட்டனர். அது கேட்டு வால்மீகி முனிவர் 'தூதர்களே! உங்களுக்கு மங்களமுண்டாகுக. சீதாதேவி அப்படியே ப்ரமாணஞ் செய்வாள். குலமகட்குத் தெய்வம் கொழுநனே யன்றோ’ என்று அருளிச் செய்ய அவர்கள் ராமனிடஞ் சென்று அதை அறிவித்தனர். ராமன் மஹரிஷியின் சொல் கேட்டு மகிழ்ச்சி கொண்டு ஆங்கு வந்து கூடிய சபையோர்களையும், அரசர்களையும் பார்த்து, ‘சபையோர்களே! நாளைய தினம் தனது நல்லொழுக்கந்திற்கு நிதர்சனமாகப் ப்ரமாணஞ் செய்யப் போகின்றாள் -- சிஷ்யர்களுடன் கூடின எல்லா முனிவர்களும் பரிஜனங்களுடன் கூடின அரசர்களும் அதனை வந்து நேரில் பார்க்கலரம். இன்னும் எவனேனும் காணக் கருத்துடையனாயின் அவனும் அதனை வந்து காணலாம்’, என யாவருமறிய எடுத்துக் கூறினான். மன்னவனது மொழியைச் செவியுற்ற அனைவரும் நன்று நன்று. இங்ஙன முரைப்பது இப்புவியில் ராமன் ஒருவனுக்கே தகும்; மற்ற எவர்க்கும் தகாது' என்று கூறி ராமனைப் போற்றிப் புகழ்ந்தனர்.
நூற்றெட்டாவது ஸர்க்கம்
[சீதையின் தூய்மையை வால்மீகி வெளியிட்டது]
அப்பால் மறுநாள் பொழுது விடிந்ததும் எல்லோரும் தத்தம் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு ராஜஸபைக்கு வந்து சேர்ந்தனர். ராமன் அனைவர்க்கும் முன்னமே தனது சகோதரர்களுடன் வந்து சிங்காசனத்தில் வீற்றிருந்தான். அங்கு அப்பொழுது எல்லா ரிஷிகளும், ராக்ஷஸர்களும், வானரர்களும் சீதையைக் காண பேராவல் கொண்டவர்களாகி வந்து நிறைந்தனர். இவ்விதமாகவே அனேக தேசங்களிலிருந்து க்ஷத்ரியர்களும், வைச்யர்களும் சூத்ரர்களும் ஆயிரமாயிரமாக வந்து கூடினர். அப்பொழுது வால்மீகி முனிவர் சீதாதேவியுடன் ராஜசபைக்கு வெகு சீக்கிரமாக எழுந்தருளினார. அவரது பின்புறத்தில் சீதை ராமனையே தன் மனதில் த்யானித்தவண்ணம் குனிந்த சென்னியும் குவித்த கையுமாய்க் கண்களில் நீர் ததும்ப அவரைத் தொடர்ந்து சென்றாள். மைதிலியினது மகத்தான துயரத்தைக் கண்டு சபையிலுள்ள பலரும் ஒருவர்க்கொருவர் கலகலவெனப் பலவாறு பேசிக்கொள்ளலாயினர். ராமன் இவ்வாறு செய்யத் தகுமோ எனச் சொல்லிச் சோகமுற்றனர். சீதையினுடைய பொறுமையை யாம் என்னென்று சொல்வது எனப பலர் புகழ்ந்தனர். இங்ஙனமொழுகுதல் இவர்கள் இருவர்க்குமே தகும் என வேறு சிலர் வியந்தனர். அப்பொழுது வால்மீகி முனிவர் ராமனைப் பார்த்து,’ ஹே, ரகுநந்தனா! இதோ நிற்கிற சீதா தேவி மஹா பதிவ்ரதை. எந்நாளும் மேலான தர்மங்களையே அநுஷ்டித்து வருபவள். அவள் தனது கற்பு நிலைமை நன்கு விளங்க இன்று இச்சபை நடுவே சபதம் செய்ய வந்திருக்கின்றாள். பாடுகின்ற இச்சிறுவர்கள் இருவரும் உன்னுடைய புத்திரர்களேயென்று ப்ரமாணமாகச் சொல்கிறேன். யான் எப்பொழுதும் பொய் பேசாதவன். வருண பகவானது பத்தாவது புதல்வன். யான் பல்லாயிரமாண்டுகள் பெருந்தவம் புரிந்திருக்கின்றேன். இந்தச் சீதை குற்றமுள்ளவளாயின் அநேகமாயிரம் ஆண்டுகள் இயற்றிய தவங்களின் பயனை இழக்கக் கடவேன். யான் எனது பஞ்சேந்த்ரிய சாக்ஷியாகவும், மிகப் புனிதமானவள் என்று ஆய்ந்துணர்ந்தே வனத்தில் தனியே நின்று புலம்பிய இப்பதிவ்ரதையை அழைத்து ஆதரித்து வந்தேன். இவளை நீ காட்டில் விட்ட காலத்திலேயே யான் இவளைச் சிறிதும் களங்கமற்ற குணபூஷணியெனவும், இவளது தூய்மை உன் மனதிற்கே தெரிந்திருக்கையிலும் லோகாபவதாதத்தைக் கேட்டு மனங்கலங்கியே நீ இவளை அவ்வாறு துறந்தாய் எனவும் யோகத்ருஷ்டியால் அறிந்துகொண்டேன்’ என எல்லாருக்கும் நன்கு விளங்குமாறு கூறினார்.
நூற்றியொன்பதாவது ஸர்க்கம்
(சீதை ப்ரமாணஞ்செய்து பூமியில் புகுதல்)
அதுகேட்டு, ஶ்ரீராமன் சபையின் நடுவில் கைகூப்பி நின்று, வால்மீகி முனிவரைப் பார்த்து, ‘தபோநிதியே! தேவரீர் உறுதியாகச் சொன்ன சத்யவாக்கினாலேயே அடியேனுக்கு நம்பிக்கை உண்டாகிவிட்டது. அன்றியும் முன் ராவண ஸம்ஹாரத்திற்குப் பின் தேவதைகளின் முன்னிலையில் நடந்த கார்யத்தினாலேயே இவளிடத்இல் சந்தேகம் நீங்கியது.
இவள் சிறிதும் குற்றமில்லாதவள் என யான் நன்கு அறிந்தவனாயினும், உலக நிந்தைக்கு பயந்து இவளைக் கைவிட வேண்டியதாயிற்று. தேவரீர் அப்பிழையை பொறுத்தருள வேண்டுகிறேன். சீதை இப்பொழுது இச் சபையில் தான் மிகப் புனிதமானவன் என்பதை வெளியிட்டு எனக்கு தன்னிடம் விசுவாசம் உண்டாகுமாறு செய்து கொள்ளக் கடவள்” என்றனன். அப்பொழுது சீதாப்பிராட்டியார் சபதம் செய்வதைக் காணும் பொருட்டு இந்த்ராதி எல்லா தேவர்களும் நான்முகனை முன்னிட்டு ஆங்கு வந்து கூடினர் பன்னிரண்டு ஆதித்யர், எட்டு வசுக்கள், பதினோரு ருத்ரர்கள், அச்வினி தேவதைகள், மருத்துக்கள், கந்தர்வர், விச்வே தேவர்கள், ரிஷிகள், ஆகிய அனைவரும் வந்து சேர்ந்தனர். அந்த சமயம் வாயு பகவான் திடீரென்று திவ்யமான பரிமளத்துடன் மனோஹரமாயும், மங்களமாயும் வீசி சபையோர் அனைவரும் மகிழுமாறு செய்தான். அவ்வத்புதத்தை கண்டு மண்ணவரும் விண்ணவரும் இஃதென்ன க்ருத யுகமோ என்று ஆச்சர்யமுற்று நின்றனர். இவ்வாறு மண்ணவரும் விண்ணோரும் வந்து குழுமியிருக்கும் மிக்க பெருஞ்சபை நடுவில் அரையில் காஷாய வஸ்த்ரம் தரித்த வைதேஹி சபையோரனைவரையும் பார்த்து கை கூப்பிக் கொண்டு தலையைக் குனிந்து தரையை நோக்கிய வண்ணமாய், “யான் மன மொழி மெய்களால் என்றும் ராமனையை பூஜித்திருப்பவளாயின், இப் பூமாதேவி எனக்கு இடங் கொடுக்கக் கடவள். யான் ராமனையன்றி மற்ற எவரையும் மனத்தாலும் சிந்தியாதவளாயின் இப் பூமாதேவி எனக்கு இடம் கொடுக்கக் கடவள். யான் உரைத்தவை யாவும் உண்மையேயாயின், ராமனையன்றி மற்ற எவரையும் அறியாதவளாயின் என்னைப் பெற்ற பூமா தேவி எனக்குத் தன்னுள் இடங்கொடுக்கக் கடவள்,” என மூன்று தரம் சபதம் செய்தாள். உடனே திடீரென்று பூமியினின்றும் ஒப்புவுமை இல்லாத திவ்யமான சிங்காசனமொன்று திவ்யசரீரமுள்ள நாகங்களால் முடிகளில் தாங்கப் பெற்று வெளித் தோற்றியது. உடனே பூமாதேவி தோன்றி சீதாப் பிராட்டியை நல்வரவு கொண்டாடி அன்புடன் போற்றிப் புகழ்ந்து தனது இரண்டு கைகளாலும் அணைத்து எடுத்து அச் சிங்காசனத்தின் மீது வைத்துக் கொண்டாள்.
அவ்வாசனத்தில் வீற்றிருந்தவாறே பூதலத்தினுள் ப்ரவேசிக்க அது கண்டு விண்ணவர்கள் சீதையின் மீது பூமாரி பொழிந்து 'நன்று நன்று’, எனப் புகழ்ந்தார்கள். அவ்வதிசயத்தைக் கண்டு யாகசாலையில் வந்து கூடிய முனிவர்களும், மன்னர்களும், மற்றுமுள்ள பலரும் வெகுநேரம் யாதும் தோன்றாமல் ஆனந்தித்துக் கொண்டிருந்தனர். மண்ணிலும் விண்ணிலுமுள்ள சராசரங்கள் அனைத்தும் ஆகாயத்தில் நின்ற அசுரர்களும், பாதாளத்திலிருந்த பன்னகர்களுமாகிய யாவரும் சீதைக்குண்டான அபவாதம் தொலைந்தது என மகிழ்ந்து ஆனந்தக் கூச்சலிட்டனர். மைதிலி மஹீதலத்தில் புகுந்தது கண்டவளவிலே எல்லோரும் அதிக ஆச்சர்யமடைந்தவர்களாக ஒரு முகூர்த்த காலம் இவ்வுலகம் முழுமையுமே மோகத்தில் மூழ்கியது போலாகி விட்டது.
நூற்றிப் பத்தாவது ஸர்க்கம்
[ஸ்ரீராமனைப் பிரம்மதேவன் தேற்றியது.)
வைதேகி வஸுதாதலத்தில் புகுந்த பொழுது எல்லா வானரர்களும் ஆஆ! எனக் கூச்சலிட்டனர். முனிவர்கள் எல்லோரும் ஸ்ரீராமபிரானது சந்நிதானஞ் சேர்ந்து இதென்ன ஆச்சர்யம்? என்று கூறி ப்ரமித்து நின்றனர். ராமன் ஒரு தண்டத்தை யூன்றித் தலை குனிந்து கண்ணீர் மல்கி மனஞ் சோர நின்று அழுதரற்றிக் கோபமும் சோகமும் விஞ்ச பூமி தேவியைப் பார்த்து, "நிலமகளே! ஸ்ரீதேவி யெனச் சிறந்த ரூபவதியாய் விளங்கும் வைதேகி என் கண்ணெதிரிலேயே காணாமற் போனதால் ஒரு நாளும் உண்டாகாத விசனம் இப்பொழுது உண்டாகி என் மனத்தை மிக வருத்துகின்றது. முன் நெடுங் கடலுக்கு அப்பால் இலங்காபுரியிற் சென்றிருந்த சீதையை சிறை நீக்கி கொணர்ந்த எனக்கு இப்பொழுது உன்னிடமிருந்து எடுத்துக் கொண்டு விடுவது நலம். அங்ஙனம் செய்கின்றனையா? என் கோபத்தை யான் உன் மேல் செலுத்துவதா? சீக்கிரம் உனது மகளான சீதையை என்னிடம் அழைத்து வருக; இல்லையேல் அவளுக்கு இடங் கொடுத்தது போல் எனக்கும் உள்ளே போக இடங் கொடு. பாதாளத்திலோ, நரகத்திலோ வைதேகியுடன் கூடி யானும் வஸிக்கின்றேன். அவள்பொருட்டு நான் அதிகமாக மோகங் கொண்டிருக்கிறேன். அங்ஙனம் இல்லையாயின் நீ நிலை குலையுமாறு இந்நாளில் முழுமையும் நாசமாக்கி விடுகிறேன் பார்," என்றான். ஸ்ரீராமன் இவ்வாறு கோபமும், சோகமும் மேலிட்டுக் கதறுமளவில் ஸகல தேவதைகளுடன் பிரம்மதேவன் அவ்விடத்திற்கு வந்து ரகுவீரனைப் பார்த்து "ஹே ராமா! நீ இவ்வாறு வருந்தலாகுமா? உனது பூர்வ ஸ்வரூபமான விஷ்ணுபாவத்தையும் நீ தேவதைகளுடன் கூடி நிகரற்ற நாராயண ரூபத்தை நினைத்து சோகந்தணிக. அணுவளவும் இழுக்கில்லாத சீதாப்பிராட்டி உனது ஆதியுருவத்தை அணுக ஆவல்கொண்டு இப்பொழுது ஸ்ரீவைகுண்டத்தில் இனிது வீற்றிருக்கின்றாள் நீ பரமபதத்தில் அப்பிராட்டியுடன் சேரலாகும். இதில் சந்தேகமில்லை. ஹே ராமா! காவ்யங்கள் பலவற்றிலும் சிறந்த உனது சரித்ரமான இம் மஹா காவ்யமே முழுமையும் கேட்கப்படுமாயின் எல்லாவற்றையும் உனக்கு விளங்க நினைப்பூட்டு மென்பதற்குச் சந்தேகமிலது வீரனே! உனது திரு அவதாரம் முதற் கொண்டு சுக துக்க ரூபமாக நடந்த நினது சரித்ரமும், இனி நடக்கப்போகிற உத்தர சரித்திரமுமாகிய யாவும் வால்மீகி முனி எனது அநுக்ரஹத்தினால் அற்புதமாகச் செய்திருக்கின்றர். இதுவே ஆதி காவ்யம் எனப்படும். ரகு குலதிலகனான நீ யொருவன் தவிர மற்ற எவரும் இக்காவியத்திற்கு கதாநாயகன் ஆகின்ற பெருமை வாய்ந்தவனல்லன். மிகவும் அத்புதமாயிருக்கின்ற சத்யமாகிய நினது திவ்ய சரிதத்தை யான் முன்னமே ஸகல தேவதைகளுடனும் ஸந்தேகமறக் கேட்டுக் களித்திருக்கின்றேன். ஆதலின் ஹே ராகவா! உனது மிகுந்துள்ள கதையை விளக்கும் உத்தர ராமாயணத்தையும் முனிவர்களுடனே கூடிக் கேட்டருள்க,'' என்று கூறி ராமனை சமாதானப்படுத்தி பிரம்மதேவன் தேவர்களுடன் கூடி விடை பெற்று விண்ணுலகம் சென்றான். பிரம்ம லோகத்தவர்களான மஹரிஷிகள் இனி நடக்கப் போகின்ற ஸ்ரீராகவனது சரிதமாகிய உத்தர ராமாயணத்தைக் கேட்க ஆசை கொண்டவர்களாகி அம்புயத்தோனிடம் அனுமதி பெற்று அவ்விடம் திரும்பி வந்தனர். அச் சமயம் அவனியினின்றும் அசரீரி வாக்கொன்று உண்டாகி, “ஹே ராமா வீணான வருத்தத்தை மேற்கொள்ளாது மகிழ்க. பிரம்மதேவன் கூறியது யாவும் உண்மையே அதன்படி நடப்பாயாக” என்று கூறியது. உடனே ராமன் வால்மீகியைப் பார்த்து ‘முனிவர் பெருமானே எனது உத்தர சரிதத்தைச் செவிக் கொள்ளுமாறு பிரம்ம லோகத்து முனிவர்களும் வந்து காத்திருக்கின்றனர். நாளைய தினம் அதனை நடத்தல் வேண்டும்’, என மொழிந்து அங்குள்ள யாவருக்கும் விடை கொடுத்து குமாரர்களை கையில் பிடித்துக் கொண்டு பர்ண சாலைக்கு எழுந்தருளினான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக