சனி, 1 ஏப்ரல், 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம் --- உத்தர ராமாயணக் கதைகள் 46

நூற்று மூன்றாவது ஸர்க்கம்

[யாகம் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்வித்தல்.]

            இங்ஙனம் அத்புதமான இளன் கதையைக் கூறி முடித்த பின் ஸ்ரீராமன் லஷ்மணனைப் பார்த்து “லக்ஷ்மணா! நீ கூறியபடி அசுவ மேதமே புரிய விரும்புகின்றேன். ஆதலின் அதன் ப்ரயோகங்களை நன்கு அறிந்தவர்களான வஸிஷ்டர், வாமதேவர், ஜாபாலி முதலான அந்தணர்களை வரவழைத்து அவர்களுடன் ஆராய்ந்து தெரிந்து யாகஞ் செய்யத் தொடங்கி சிறந்த லக்ஷணங்களுடன் கூடிய குதிரையை விடுவேன்” என்றான். அங்ஙனமே ஸௌமித்ரி அன்னவர்களை வரவழைத்துவர, ரகுநந்தனன் அவர்களைப் பூஜித்து தனது விருப்பத்தை அவர்களுக்கு அறிவித்தான். அது கேட்ட அவர்கள் நல்லது, என்று ஸ்ரீராமனைப் புகழ்ந்தனர். பின்பு ராமன் லக்ஷ்மணனை விளித்து “தம்பி! நாம் செய்யும் அத்புதமான யாகத்தைக் கண்டு மகிழுமாறு எல்லா வானரர்களுடனும் இங்கு அதி சீக்ரத்தில் வந்து சேரும்படி சுக்ரீவ மஹாராஜனுக்கு தூது அனுப்பவும். விபீஷணனையும் எல்லா ராக்ஷஸர்களுடன் வந்து சேரும்படி அவனுக்கும் தூது அனுப்புக, நமது நன்மையை நாடுகின்றவர்களாய் இப் பூமண்டலத்திலுள்ள மன்னர்கள் பலரும் தங்கள் தங்கள் பரிவாரங்களுடன் நமது யாகத்தைக் காண வியக்குமாறு வந்து சேரும்படி ஓலைகள் அனுப்பவும். தேசாந்தரங்களிலுள்ள வேதியர்களையும், ரிஷிக்களையும் தபஸ்விகளையும் தங்கள் குடும்பத்துடன் நமது யாகத்திற்கு வரவழைப்பாயாக. கீத வாத்யங்களில் வல்லவர்களையும், நடனத்தில் தேர்ந்தவர்களையும் விசேஷமாக வரவழைக்க வேண்டும். யாம் யாகம் புரிவதற்குக் கோமதீ தீரத்தில் நைமிசாரண்யத்திலே மிகப் பெரியதான யாகசாலை அமைக்குமாறு கட்டளையிட வேண்டும். இப்பொழுதே அதற்கு வேண்டிய சாந்தி சுர்மங்களைச் செய்யுமாறு உத்திரவிடுக. லக்ஷக்கணக்கான வண்டிகளில் சிறந்த அரிசி, எள், பயிறு, கடலை, கொள்ளு, உளுந்து முதலான தான்ய வர்க்கங்களும், உப்பும், இவைகளுக்கு ஏற்றபடி நெய், எண்ணெய், பால்,தயிர் முதலிவைகளும், பலவகை வாசனாதித் திரவ்யங்களும், சந்தனக்கட்டைகளும், கோடிக் கணக்கான தங்க நாணயங்களும, பல கோடிக்கணக்கான வெள்ளி நாணயங்களுமாகிய பலவற்றையும் வெகு சாவதானமாக சேகரித்துக் கொண்டு பரதன் முன்னே செல்வானாக. அநேகமான சமையல்காரர்களும், பருவமுள்ள பணிப் பெண்களும், பரதனோடு கூட புறப்பட்டுச் செல்லட்டும். அநேகம் சேனைகளும் வேதம் தெரிந்த வேதியர்களும் வெகு சீக்கிரமாக முன்னதாகச் செல்லுக, அநேக வேலையாட்களையும், நமது தாய்மார்களையும், பரதன் முதலியோருடைய அந்தப்புர ஸ்த்ரீகளையும், சீதைக்கு ப்ரதியாக நிர்மித்து வைத்திருக் கின்ற ஸ்வர்ண சீதையையும் யாகம் செய்யும் முறைகளை நன்கறிந்த பல அந்தணர்களையும் முன்னிட்டுக் கொண்டு பரதன் முன்னெழுந்து செல்க. தங்கள் தங்கள் பரிவாரங்களுடன் கூடி வரும் வேந்தர்கள் பலருக்கும் ஆங்கு உத்தமமான விடுதிகள் அநேகம் அமைத்து வைக்க வேண்டும்”. என்று உத்திரவிட்டான்.

நூற்றிநாலாவது ஸர்க்கம்

[ராமன் அசுவமேத யாகம் செய்தல்.)

            அங்ஙனமே அசுவமேத யாகத்திற்கு வேண்டிய எல்லா கார்யங்களும் க்ரமப்படி மிகவும் அத்புதமாக நடந்து வருகையில் ஸ்ரீராமன் ரித்விக்குகளைக் கொண்டு விதிப்படி சிறந்த லக்ஷணமுள்ள ஒரு கருப்புக் குதிரையை லக்ஷ்மணனது காவலில் வைத்து விடுத்து எல்லா சேனைகளும் புடைசூழப் புறப்பட்டு நைமிசாரண்யம் போய்ச் சேர்ந்து அங்கு அற்புதமான யாக சாலையைக் கண்டு மகிழ்ந்தனர். எல்லா அரசர்களும், வானரர்களும், அரக்கர்களும் அங்கு வந்து சேர்ந்து அயோத்தி மன்னனை வணங்கி நிற்க, அவ்வரசர் பெருமான் அவர்களை வரவேற்று அவரவர்க்கு ஏற்படுத்திய இடங்களில் இறங்குமாறு கட்டளையிட்டான். அவர்களுக்கு வேண்டிய அன்னபானங்கள் ஆடையாபரணங்கள் ஆகியவற்றையும் பரதன் சத்ருக்னனோடு கூடி உடனுக்குடன் கொடுத்து ஒன்றில் ஒன்று குறைவின்றி வேண்டியபடி உபசரித்தான். சுக்ரீவ மஹாராஜனும் மற்றுமுள்ள வானரர்களும் அங்குள்ள வேதியர்கட்கு வணக்கத்துடன் அடிசில் முதலான பரிமாறி உபசரித்தனர். விபீஷணன் தன் துணைவரான மன்னர்களுடன் கூடி அங்குள்ள முனிவர்கட்குச் செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்தான். அசுவமேத யாகம் எல்லோரும் கொண்டாடும்படி அத்புதமாக நடந்தது. லக்ஷ்மணனால் பாதுகாக்கப் பட்ட மிகப் பெரிய பாய்மாவினது செய்கையும் முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. அந்த யாகத்தில் யாசகர்களுக்குத் திருப்தி உண்டாகுமளவும் எல்லாப் பொருட்களும் அவர்களுக்கு அளிக்கப் பட்டன. அங்குச் சென்றவர்களில் ஒருவராயினும் தமக்கு இது குறை யென்று கூற விடமின்றி வேண்டியவைகள் எல்லாவற்றையும் பெற்று,யாவரும் பெருமகிழ்ச்சி கொண்டு ஆனந்தமடைந்தனர், அங்கு எழுந்தருளியிருந்த நெடுங்காலங் கண்ட நன் முனிவர் பலரும், இத்துணைச் சிறந்த யாகம் நடக்க நாங்கள் எந்நாளும், கண்டிலோம், இத்தன்மையன எந்நாளும் நடக்கவில்லை என வியந்து கொண்டாடினர். இந்திரன், குபேரன், யமன், வருணன் ஆகிய லோகபாலகர்கள் செய்த யாகங்களும், இங்ஙனம் சிறக்கக் கண்டதில்லையெனத் தபோதனர்கள் போற்றிப் புகழ்ந்தனர். ராமன் செய்த அசுவமேத யாகம் இவ்வண்ணமாகவே யாவும் குறைவற நடந்து ஓராண்டளவேயன்றி அதற்கு மேலும் ஓயாது நடந்து கொண்டிருந்தது.

நூற்றியைந்தாவது ஸர்க்கம்

(வால்மீகி குசலவருக்கு ராமாயணம் பாடக் கட்டளை இடுதல்)

            இவ்வாறு சிறந்த வைபவத்துடன் நடக்கும் அத்புதமான அசுவ மேத யாகத்திற்கு வால்மீகி முனிவர் தமது சிஷ்யர்களுடன் எழுந்தருளி அதைக் கண்டு ஆச்சர்யமடைந்து யாகசாலைக்கருகில் ஒரு பா்ணசாலை நிர்மாணித்து அதில் தங்கினார். மஹாராஜனான தாசரதியும், மற்றுமுள்ள ரிஷிகளும் அவரை நல்வரவு கொண்டாடி விசாரித்து அவருக்குச் செய்ய வேண்டிய உபசாரங்கள் யாவும் செய்தனர். அப்பொழுது அமமுனிவர், தமது சிஷ்யர்களான செல்வச் சிறுவர்களை அழைத்து, “என் கண்மணிகளே! நீங்கள் இருவரும் கூடி வெகு ஜாக்ரதையுடன் புறப்பட்டு யான் கற்பித்த இராமாயணத்தை பெரு மகிழ்ச்சியுடனே பாடிக் கொண்டு ரிஷிகளின் வாசஸ்தானங்களிலும் வினோதமாகச் செல்க. யாகம் நடக்குமிடமான ஸ்ரீராமபிரானது சந்நிதானத்திலும், ரிதவிக்குகளின் எதிரிலும், இதனை விசேஷமாகப் பாடுக. இதோ யதேஷ்டமான இனிய கனி கிழங்குகள் இருக்கின்றன. இவற்றைப் புசிப்பீர்களாயின் உங்களுக்குச் சிறிதும் இளைப்பு தோற்றாது. ரிஷிகளுடைய மத்தியில் ராமன் உங்களுடைய பாட்டைக் கேட்க சமீபத்தில் வரவழைப்பானாயின் அவ்விடஞ் சென்று நீங்கள் கானஞ் செய்யலாம். யான் உங்களுக்கு முன்னம் போதித்தவாறே சுலக்ஷணமாக மிகவும் மதுரமாய்க் கேட்போர்க்கு கானாம்ருதமாய் இருக்கும்படி ப்ரதி தினம்  இருபது ஸா்க்கம் வீதமாகக் கானஞ் செய்து வருக. யாவரேனும் உங்களுக்குப் பொருள் கொடுப்பதாக ஆசைகாட்டி அழைத்தால் பல மூலமுண்டு ஜீவிக்கும் ஆச்ரமவாஸிகளுக்கு தனமெதற்கு என்று சொல்லி நீங்கள் அங்கு செல்ல வேண்டாம். நீங்கள் யாருடைய குமாரர்களென்று ராமன் கேட்பானாயின் வால்மீகி முனிவரின் சிஷ்யர்கள் என்று அவனுக்கு விடை சொல்லவும்.

                இந்த இராமாயணத்தை யாழின் தந்தி ஸ்வரத்துடனே அதிமதுரமாகச் செவிக்கின்பமாய் ஆதி தொடங்கியே வெகுதீரமாய்ப் பாடுவீர்களாக. நாளை காலை தொடங்கி நீங்கள் யான் சொன்ன வண்ணம் சரியாக வீணையை, மீட்டிக் கொண்டு செவிக்கின்பமாக இராமாயணத்தைப் பாடி வருக,” எனக் கட்டளையிட்டனர்.

நூற்றியாறாவது ஸர்க்கம்

[குமாரர்கள் பாடுவது கேட்டு சபையோர் மகிழ்தல்]

            பிறகு அன்றிரவு நீங்கி பொழுது புலர்ந்ததும் அவ்விரட்டையர் காலையிலெழுந்து நீராடிச் சந்த்யா வந்தனமும், ஸமிதாதானமும் செய்து முனிவர் கூறிய வண்ணம் இராமாயணததை கானஞ் செய்து கொண்டே சென்றனர். அக்காலையில் ஸ்ரீராமன் அதைக் கேட்டு மிகவும் வியந்து மகிழ்ச்சியடைந்தான். அப்பால் ராமன் தனது வைதிக காரியங்களைச் செய்து முடித்துக் கொண்டு கற்றுணர்ந்த பெரியொர்களையும் விருத்த சூத்திரமறிந்தவர்களையும், சங்கீதத்தில் தேர்ச்சியடைந்தவர்களையும், வ்யாகரணம், நீதி சாஸ்த்ரம் முதலிய சாஸ்த்ரங்களில் பாண்டித்யமுடையோரையும், முனிவர்களையும், மற்றும் பலரையும் வரவழைத்துச் சபை கூட்டி மிக்க பெருஞ்சபை நடுவே இந்தச் சிறிய பாடகர்களை (லவகுசர்களை) வந்து உட்காரும்படி நியமித்தான். அப்பொழுது அச் சபையில் வந்து கூடிய ரிஷிகளும், அரசர்களும, ராமனையும், அச் சிறுவர்களையும், தமது கண்களால் பானம் பண்ணுகின்றவரெனச் சிறிது நேரம் இமை கொட்டாது நோக்கி ஆ! இக் குமாரர்கள் இருவரும் ரூப ஸௌந்தர்யங்களில் ராமனுக்கு முற்றும சமானமாய் இருக்கின்றனர். ஒரு பிம்பத்தினது ப்ரதிபிமபம் எனவே தோற்றுகின்றனர். இச் சிறுவர்களுக்குச் சடை முடியும், மரவுரியும் மாத்திரம் இல்லாதிருக்குமாயின் இப் பாடும் பிள்ளைகளுக்கும் நம் அரசனுக்கும் பேதமே தோற்றாது என்று ஆங்காங்கு பேசிக் கொள்ளலாயினர் அக் காலையில் முனி குமாரர்கள் கேட்டோர்க்கு ஆனந்தம் மேன்மேலும் விளைவிக்குமாறு மதுரமாகப் பாடத் தொடங்கினா. அதுவரையில் மானிட உலகத்தவர்களால் எந்நாளும் பாடப்படாத திவ்யமான அவர்களது கானத்தைக் கேட்டவர்கள் எல்லோரும் கேட்கக் கேட்க ஆனந்தம் அதிகரித்தவர்களாகிச் சிறிதும் திருப்தியடையாதவராயினர். முதல் இருபது ஸர்க்கங்களைக் கேட்ட ராமன் அச் சிறுவர்களுக்குத் தனித் தனிப் பதினெண்ணாயிரம் பொன்னும் பின்னும் அவர்கள் யாது வேண்டினும் கொடுக்கும்படி தனது சகோதரர்களுக்கு கட்டளை யிட்டான். அப் பொருள்களை அங்ஙனமே வெகு சீக்ரத்தில் லக்ஷ்மணன் கொண்டு கொடுக்க அப் பாடகர்கள் அவற்றைப் பெற்றுக் கொள்ளாமல் காட்டிலுள்ள கனி கிழங்குகளையே ஆகாரமாகக் கொண்டு வசிக்கும் நாங்கள் இவற்றைப் பெற்று யாது செய்வோம? எமக்குப் பொன்னும் பொருளும எதுக்கு' எனச் சிறிதும் பொருளாசை இல்லாதவர்களாய்ப் பணித்தனர். அது கேட்டு அவையில் உள்ள எல்லோரும் ஸ்ரீராமபிரானும் மிக்க வியப்புற்றவர்களாகி அச்சிறுவர்களை மேலாகக் கொண்டாடினர். பிறகு ராமன் அந்தக் காவ்யத்தின் சரிதத்தைக் கேட்க ஆவல் கொண்டு அக் குமாரர்களைப் பார்த்து “சிறுவர்களே நீங்கள் பாடும் இக்காவ்யம் எவ்வளவு பெரியது? எது வரையில் இயற்றப்பட்டுள்ளது? இம்மஹா காவ்யத்தை இயற்றியவர் யார்? அவர் இப்பொழுது எங்கு எழுந்தருளியிருக்கின்றார்?” என வினவ, அக் குழந்தைகள் “மஹா ப்ரபுவே இக காவ்யத்தை இயற்றியது வால்மீகி பகவான். இபபொழுது அவர் இந்த யாகத்திற்கு இவ்விடம் எழுந்தருளியிருக்கின்றார். இப் ப்ரபந்தம் இருபந்தினாலாயிரம் சுலோகங்களும் நூறு உபாக்யானங்களும அடங்கியது. இதனை ஆதி முதல் ஐந்நூறு ஸர்க்கங்களாகவும், ஆறு காண்டங்களாகவும் வகுத்து இவற்றுடன் உத்தரகாண்டமும் சேர்த்துச் செய்தருளியிருக்கிறார். இந்தக் கதாநாயகர் ஜீவிததிருக்குமளவும் நடக்கும் அவரது சரித்ரம் யரவும் இதில் கூறப்பட்டுள்ளது. ராஜனே! தேவரீருக்கு இஷ்டமாயின் வைதிக கார்யங்களொழிந்து சாவகாசமாக இருக்கையில் சகோதரர்களுடனே தேவரீர் கேட்டருளலாம்,” என்று விணணப்பஞ் செய்தனர். ‘அப்படியே செய்க’ என்று ராமன் அனுமதி கொடுக்க அக் குமாரர்கள் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு வால்மீகி முனிவரிடம் போய்ச் சேர்ந்தனர். ராமனும் அக் குழந்தைகள் தாள லயங்களுக்கு இசைய வீணை மீட்டி இனிய குரலுடன் பாடிய கானத்தின் இனிமையைக் கேட்டு மகிழ்ச்சியை அடைந்தவனாகி யாகசாலைக்கு எழுந்தருளினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக