செவ்வாய், 7 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன் 6

ஐம்பொருள்

முக்தியைப் பெற விரும்புமவன் முமுக்ஷு. இவன் முக்கியமாய் உணரவேண்டும் பொருள்கள் ஐந்து. அவையாவன:--


(1) நம்மால் அநுபவிக்க வேண்டிய எம்பெருமானுடைய ஸ்வரூபம் (பரமாத்ம ஸ்வருபம்)
(2) அப்பெருமானை அநுபவிக்கும் சேதனனுடைய ஸ்வரூபம் (ஜீவாத்ம ஸ்வரூபம்)
(3) அப்பெருமானைப் பெறுதற்கான உபாயத்தின் ஸ்வரூபம் (உபாய ஸ்வரூபம்)
(4) அவ்வுபாயத்தினால் பெறக்கூடிய பேற்றின் ஸ்வரூபம் (பலஸ்வரூபம்)
(5) அப்பேற்றைப் பெறவொட்டாமல் தடை செய்கின்ற ப்ரதிபந்தகத்தின் ஸ்வரூபம் (விரோதி ஸ்வரூபம்).
இவற்றையே " அருத்தபஞ்சகம் என்பர்.
 

    "ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச்ச ப்ரத்ய காத்மந: |ப்ராப்த்யுபாயம் பலம் சைவ ததாப்ராப்தி விரோதிச || வதந்திஸ கலாவேதாஸ் ஸேதிஹாஸ புராணகா:|

என்று ஹாரீத ஸம்ஹிதை இதனை அறுதியிட்டது.

இவ்வைம்பொருளை ஸ்ரீ ஸ்வாமிதேசிகன் அனைவரும் அறிந்து உய்யும் பொருட்டு ஸர்வ சாஸ்த்ரார்த்த ஸங்க்ரஹமான அவ்வருத்த பஞ்சகத்தில் ஒவ்வொன்றையும் இரண்டு பாசுரங்களினால் நிரூபிக்கிறதாய்ப் பத்துப் பாசுரங்களும், பல ச்ருதியாக ஆக ஒருபாட்டும் அருளிச்செய்த தமிழ்ப்பிரபந்தமே " அருத்த பஞ்சகம்" என்பது. மூலப்ரமாண சுலோகத்தில் ஜீவாத்ம ஸ்வரூபத்துக்கு அடுத்தபடி உபாயம் குறித்திருந்தபோதிலும் விரோதியை அறிந்து அத்தாலே சோகமுண்டாகி பிறகு உபாயாநுஷ்டாநம் ஏற்பட வேண்டுமென்கிற அர்த்த க்ரமத்தை அநுஸரித்து இந்நூலில் விரோதி ஸ்வரூபத்தின் பின்னர் உபாய ஸ்வரூபம் வெளியிடப்பெறுகின்றது. எனவே, இங்குள்ள முறைவைப்பு வருமாறு:-

(1) பரமாத்ம ஸ்வரூபம் (2) ஜீவாத்ம ஸ்வரூபம் (3) விரோதிஸ்வரூபம் (4) உபாயஸ்வரூபம் (5) பலஸ்வரூபம் என்பன.

(1) அவன் ஒருவனே நாம் அடையவேண்டிய வஸ்து என்று சொல்லும்படி யிருக்கிற அலர்மேல்மங்கை மணாளன்
(2) அவனுடைய திருவடிகளை அடைந்து அவனுடைய அருளோடு ஒன்றியிருக்கிற அவனை அனுபவிக்கிறவனான அன்பனான சேதனன்
(3) செய்யவேண்டிய உபாயம்
(4) அந்த ஜீவனுடைய ஸ்வரூபாநு குணமான பிரயோஜநம்
(5) அவித்யையோடுகூடிய கர்மங்களாகிற பலமான விலங்கு
என்கிற இந்த ஐந்து விஷயங்களையும் அறிந்த ஆசார்யர்கள் அஜ்ஞானம் சற்றும் இல்லாதபடி என்னுடைய மனமானது நன்கு அறியும்படி உபதேசித்தனர் என்ற கருத்தடங்கிய

" பொருளொன்றென நின்ற பூமகள் நாதன் அவனடி சேர்ந்து
அருளொன்று மன்பன் அவன்கொளுபாயம் அமைந்த பயன்
மருளொன்றிய வினை வல்விலங்கென்று வையைந்தறிவார்
இருளொன்றிலாவகை எம்மனந்தேற வியம்பினரே."

                                             - (அதிகாரச் சுருக்கு. 11)
என்று இவ்வாசிரியர் தாமே அருளிச்செய்துள்ளார். இங்கு முறைவைப்பு மூலப்பிரமாண சுலோகப்படியேயுள்ளது.

" அயன்பணியு மத்திகிரி அருளாளரடி யிணைமேல்
நயங்கொள் சேர்கச்சிநகர் நான்மறையோர் நல்லருளால்
பயன்களிவை யனைத் துமெனப் பண்டுரைத்தார்படி யுரைத்த
வியன்கலை களீரைந்தும் வேதியர் கட் கினியனவே." (11)

என்ற பாசுரத்தில் ஈரைந்து" என்றதனையும் நன்கு நோக்குக.

ஐங்கால காரியங்கள்

.ஸாத்விக ஸ்மிருதிகளில் கூறப்பட்டதாயும், " இருமுப் பொழுதேத்தி" என்கிற பாசுரத்தில் ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்டதும், எம்பெருமானாரால் நித்யத்தில் சுருக்கி உரைக்கப்பெற்றதாயும் இருக்கிற பஞ்சகால ப்ரக்ரியை யாய்ச் செய்யப்பெறும் பகவத் ஸமாராதநமாகிற உத்தர கைங்கர்ய விசேஷத்தை விளக்கும் பத்துப்பாக்கள் கொண்டது  "ஸ்ரீ வைஷ்ணவ தினசரி" எனும் தனித்தமிழ்ப் பிரபந்தம். இதில்,

(1) அபிகமநம் :- ப்ராஹ்ம முகூர்த்தம் என்று சொல்லக் கூடிய வைகறையில் எழுந்து நிர்மலமான உள்ளம், உரை, செயல் இவற்றுடன் கூடினவனாய் ஸர்வ ஜகத்காரணனான ஆதியம் பகவானைக் குறித்து தியானம், தோத்திரம் முதலியவற்றால் புகழவேண்டும். இக்காலத்தில் சரீராதிகளின் சுத்திக்காக ஸ்நாநம் முதலியவற்றைச் செய்வதும் ஸந்த்யோபாஸநாதிகளைச் செய்வதும் தகும். அன்று முழுதும் நடக்கவேண்டிய கைங்கரியங்கள் தடையின்றி நடந்தேற வேண்டுமென்று எம்பெருமானிடம் விண்ணப்பித்து பிரபத்தி செய்வதுமாம்.
(2) உபாதாநம் :- அதிகாலைக்கடன்கள் பூர்த்தியானதும், பகவானுடைய திருவாராதநமாகிற யாக நிஷ்பத்தியின் பொருட்டு திருத்துழாய், புஷ்பம், பலம், முதலிய ஸாதனங்களைச் சேகரித்தலும், சித்த சுத்திக்காக ஆழ்வார் ஆசாரியர்கள் அருளிச்செய்துள்ள காலக்ஷேபத்திலீடு படுதலும், தர்மாநு குணமான திரவ்யார்ஜநமும் செய்யுங்காலமிது.
(3) இஜ்யை:- மாத்யாஹ்நிக காரியங்களைச் செய்துவிட்டு அஷ்டாங்கயோக புரஸ்ஸரமாகவோ அல்லது ஆஹ்நிகங் களிற் கூறியாங்கு முறைப்படி எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்யுங்காலம்.
(4) ஸ்வாத்யாயம் :- அபராஹ்நத்தில் பகவத் கதைகளின் சிரவணம், அவற்றைப்பற்றிய சிந்தநம், பகவானைப்பற்றிய வேதாந்த பாகங்களைப் படித்துப் பரிசயம் செய்தல் முதலியவற்றைச் செய்யுங்காலம்.
(5) யோகம் :--ஸாயங்காலத்திற் செய்ய வேண்டிய ஸ்மார்த்த கர்மங்களைச் செய்து விட்டு, யதோசிதம் பகவந் நிவேதநம் முதலிய கார்யம் முடிந்த பிறகு விச்ரமத்தை அடையும் முன்னதாகப் பகவானை உபாஸிக்கவேண்டும். இதற்கு யோகம் என்று பெயர். எம்பெருமானுடைய திருவடி களைத் தியானம் செய்தலும், தன்னுடைய தூக்கவேளை யிலும், பகவான் திருவடிகளில் தன் தலையை வைத்திருப்ப தாய் தியானித்துவிட்டு சயனித்தலும் இவ்வேளையில் செய்யவேண்டுவன.

என்ற ஐந்து கால காரியங்களையும் பேரருளாளன் விஷயமாகவாக்கி ஒவ்வொன்றையும் முறையே இரண்டிரண்டு பாசுரங்களால் நிரூபித்துள்ளார் நம் சந்தமிகு தமிழ் மறையோன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக