திங்கள், 6 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன் -- 5

பன்னிரு நாமம்.

எம்பெருமானது துவாதச நாமங்களாவன :- (1) கேசவன் (2) நாராயணன் (3) மாதவன் (4) கோவிந்தன் (5) விஷ்ணு (6) மதுசூதனன் (7) திரிவிக்கிரமன் (8) வாமனன் (9) சிரீதரன் (10) இருடீகேசன் (11) பற்பநாபன் (12) தாமோதரன்.
    நம்மாழ்வார் “கேசவன் தமர் " என்ற இரண்டாம் பத்து "' ஏழாந்திருவாய்மொழியைப் "பன்னிரு நாமப்பாட்டு" என்கின்றார்.

"வண்ணமாமணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென்குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ்மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணிற் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே." (13)

என்ற திருநாமப் பாசுரங்காண்க.

    பெரியாழ்வார் காது குத்தும் வியாஜத்தால் "பன்னிருநாமத்தால் அந்தாதி" பாடியுள்ளார்.

"வார் காது, தாழப்பெருக்கி யமைத்து
    மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்
    சிந்தையுள் நின்று திகழ
பாரார்தொல் புகழான் புதுவை மன்னன்
    பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார்
    அச்சுதனுக்கு அடியாரே.''
- (பெரியாழ்வார் திருமொழி 2-3-13)

என்ற பாசுரத்தை நோக்குக.
    இவ்விரு ஆழ்வார்களின் அருளிச்செயல்களை நன்கோதிய நம் மறைமுடிக் குருவரனார், ஸ்ரீ வைஷ்ணவர்கள் தினந் தோறும் புண்ட்ரம் தரிக்கும்போது அநுசந்திப்பதற்காக கேசவன் முதல் தாமோதரன் வரையிலுள்ள பன்னிரண்டு திருநாமங்களைச் சொல்லி அவ்வவ்வெம்பெருமான்களை ஆவாஹநம் செய்து ஸேவிக்கும் முறையில் அவ்வவ்வெம்பெருமான்களின் திருமேனி நிறம், அவர்கள் அணிந்திருக்கும் ஆயுதங்கள், அவர்கள் தலைவராய் வீற்றிருக்கும் திசை, நம் சரீரத்தில் புண்ட்ரரூபமாய் அவர்கள் வசிக்கும் பாகம் ஆகியவற்றையும் சேர்த்து "பன்னிரு நாமம் " என மகுடஞ் சூட்டி ஒரு பிரபந்தம் அருளிச்செய்துள்ளார். இங்கு பன்னிருநாமம் ஆழ்வார்கள் முறையை அநுசரித்து அமைக்கப்பெற்றுள்ளது செந்தமிழணங்கிற்கோரணிகலனே.
"கத்தித் திரியுங்கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப்
பத்திக்குறு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு
முத்திக்கு மூலமெனவே மொழிந்த இம்மூன்று நான்கும்
தித்திக்குமெங்கள் திருவத்தியூரரைச் சேர்பவர்க்கே.'' (13)

என்ற இப்பிரபந்தத்தின் இறுதிப்பாசுரம் ஒதியோதி யுணருந்தொறு முணர்ச்சி யுதவும் வேதமொத்தது. இங்ஙனம் அடைவு அமைக்கும் அற்புதனின் ஆற்றலை யாரே அறியகில்லார் ?

திருச்சின்னமாலை.

    “ திருச்சின்னமாலை" என்பது வேதமுடித்தேசிகனார் திரு வாய் மலர்ந்தருளிய ஒரு தனித் தமிழ்ப்பிரபந்தம். இது பதி னொன்று பாசுரங்கள் கொண்டது. 'திருச்சின்னம்' என்னும் வாத்ய விசேஷம் எம்பெருமானுடைய ஸந்நிதிகளில் ஸேவிக் கப் பெறுவதுண்டு. அதன் ஒசையின் காம்பீர்யமும் இனி மையும் ஒப்பற்றன. ஸ்ரீ தேவப்பெருமாளுடைய திருச் சின்ன வாத்யவோசையில் ஒரு நுட்பத்தைக் கண்டார் ஸ்வாமி தேசிகன்.
    இம்மாலையில் உலகம் போற்றும் உத்தமரான தூப்புற் குலமணி, தேவாதி தேவனான பேரருளாளனுடைய யாத்ரோத்ஸவாதிகளில் ஊதப்படுகிற திருச்சின்னத்தின் நாத நலம் இருக்குமிருப்பை அநுஸந்தித்து அகமகிழ்ந்து இது போன்ற நாதவின்பத்தை நல்குமோ இதர தேவதைகளின் பிரயாணகாலத்தில் முழங்கப்பெறும் காஹளாதி வாத்தியங்கள் என்று அநுபவித்து, அந்த அதிமதுரநாதம் மற்றத் தேவதைகட்கு ஸாதாரணமல்லாமையினாலே திருமந்திரம் முதலிய மூன்று இரகசியங்களிற் பொதிந்துள்ள பகவானுடைய அஸாதாரண குணங்களை நிரூபித்து அப்படிப்பட்ட உயர்குணங்களை உடைய பெருமாள் எழுந்தருளினார் என்று காட்டுவதாகத் திருவுள்ளம்பற்றி  அருளிச் செய்துள்ளார். ரஹஸ்யார்த்த கர்ப்பமான திருச்சின்ன ஓசையை ப்ரதி பாதிக்கிறபடியினால் இந்நன்னூல் " திருச்சின்னமாலை " என்று பெயர் பெற்றது என்பர். தூப்புலிறை தமது அநுபவ பரீவாஹ மேலீட்டால் திருச்சின்னத்துக்குப் பாமாலை சாத்தி மகிழ்ந்தார் போலும்.

    இது, மன்னு திருமந்திரத்தின் பொருளும், வாழ்துவயத்தின் பொருளும், துன்னுபுகழ்க்கீதை தனிற் சொன்ன வெண்ணான்கின் பொருளும் இன்னபடி என்றுரைக்கும் செய்ய தமிழ் மாலை. இதனுள், முதலாறு பாசுரங்கள் திருமந்திரத்தைப் பிரதிபாதிக்கின்றன. இவற்றின் முதல் மூன்று பாட் டுக்கள் பிரணவார்த்தத்தை வெளியிடுகின்றன. அவற்றுள் ஆதிப்பாட்டு, பிரணவத்தில் அகாரத்தின் அர்த்தத்தை சுருங்கக் கூறுகின்றது. பிரயோஜனாந்தர பரருக்கும் அவன்  ரக்ஷகன் என்பதும், பிரமன் பிரமன் முதலியோரைக்கொண்டு ஜகத் ஸ்ருஷ்டி பண்ணிவைக்கிறபடியினால் அவன் நிமித்த காரணன் என்பதும் இதில் விளக்கம். இரண்டாம் பாட்டு அயனுக்கு அன்று அருமறைகளை உபதேசித்து ஜ்ஞானத்தை உண்டாக்கி அத்தால் நிமித்த காரணமாகும் பிரகாரமும், சாஸ்திரங்களை ப்ரவர்த்திப்பித்து மோக்ஷ ப்ரதானமாகிற ரக்ஷண ப்ரகாரமும் கூறுகின்றது. மூன்றாம்பாட்டு அகாரத்தின்மேல் ஏறி லோபித்துக்கிடக்கும் நான்காம் வேற்றுமையையும் உகார மகாரங்களின் அர்த்தங்களையும், வாக்யார்த்தம் இருக்கும்படியையும் விளக்குவன. நான்கு முதல் ஆறு வரையுள்ள பாக்கள் நம: சப்தார்த்தத்தையும், நாராயண சப்தார்த்தத்தையும், சதுர்த்தீவிபக்தியினால் லக்ஷணையாகச் சொல்லப் படுகிற கைங்கர்யமாகிற அர்த்தத்தையும் விளக்குகின்றன.  துவயார்த்தத்தை வெளிக்காட்டுவது ஏழாம் பாட்டு. சரம சுலோகக் கருத்தைச் சுருக்கிக்கூறுவது எட்டாம் பாட்டு. அச்சுலோகத்தில் மாம், அஹம் என்கிற பதங்களிலே ப்ரஸ்துதங்களான பரத்வ ஸௌலப்யாதி குணங்களை அவனுடைய திவ்ய சேஷ்டித முகத்தாலே நிரூபிப்பது ஒன்பதாம் பாட்டு. பத்தாம் பாட்டு அர்ச்சாவதார வைபவத்தைப் பரக்கப் பேசுகின்றது. நிகமனப்பாசுரம் இம்மாலைச்  சுருக்கத்தையும், சங்கதியையும் பேரருளாளன் பிரபாவமான இந்நூல் சிற்றின்பம் இசையாதார்க்கு இனிதாம் என்பதையும் நன்கு புலப்படுத்துகின்றது.
-
இம்மாலையின் இறுதிப்பாசுரமான,
"மறைத்தலையிலிசை யெழுத்தில் வணங்கும் வாக்கில்
    மந்திரத்தினா லெழுத்தாந் திருநாமத்தில்
நிறைத்திலகு வேற்றுமையி லிரண்டாமொன்றி
    னெடுமாறன் கீதையெல்லா நிறைந்த சொல்லில்
உறைத்தவர் கண்டுரைத்த பொருளான தெல்லாம்
    உயர் விருத வருளாளப் பெருமாள் தேசின்
திறத்திலிவை திருச்சின்னமாலை பத்துஞ்
    செவிக்கினிதாஞ் சிற்றின்ப மிசையாதார்க்கே." (11)

[மறைத்தலை - வேதமுடி ; இசை எழுத்து - பிரணவம்; மந்திரம் - மூலமந்திரம் ; நாலெழுத்தாந்திருநாமம் - மூலமந்த்ராநு ப்ரவிஷ்டமாய் சதுரக்ஷரமான நாராயண என்பது; இலகு - விளங்குகிற ; வேற்றுமை - நான்காம் வேற்றுமை ; இரண்டாம் ஒன்றில் - கண்டத்வயாத்மகமான துவய மந்திரத்தில் ; நெடுமால் - விபூத்யத்யாய விச்வ! ரூபாத்யாயப் படியே ஸர்வோத் க்ருஷ்டரான கண்ணன்; கீதை - கீதா சாஸ்த்ரம் ; நிறைந்த சொல் - பூர்த்திகரமான சரம சுலோகம்; தேசின் திறத்தில் - தேஜஸ்ஸு விஷயமாக ; இசையாதார்க்கு - ஸம்மதியாதவர்கட்கு ; இனிதாம் - போக்யமாம்.)
என்பது இம்மாலைப் பொருளை அடைவாக அமைத்து அருளியுள்ளதை அங்கைக் கனிபோல அறிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக