ஞாயிறு, 5 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன். -- 3

 திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கம்

24-09-1944ல்

வெளியிட்ட

15ஆவது நூலான

அடைவு அமைக்கும் அற்புதன்


பகுதி 4


சரம சுலோகச் சுருக்கு. 

கீதோபநிஷத் சாரமான சரம சுலோகம், 

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ! 

அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமிமாசுச:"" 

என்பது. 

பரம காருணிகரான தூப்புற் பிள்ளை இச்சுலோக ரத்தினத்தின் அருமையை அனைவரும் அறிந்து அவனியை அமரருலகம் ஆக்கத் திருவுள்ளங்கொண்டு பதினொன்று பாசுரங்கள் கொண்ட "சரம சுலோகச் சுருக்கு" எனும் பிரபந்தம் அருளிச்செய்திருக்கின்றார். இதில் முதற்பாசுரம் சரம சுலோகத்தின் முழுத்தாத்பர்யமும், பின்னுள்ள பத்துப் பாசுரங்களும் முறையே 

1. ஸர்வதர்மாந்பரித்யஜ்ய, 2. மாம், 3. ஏகம், 4. சரணம், 5. வ்ரஜ, 6. அஹம், 7. த்வா, 8. ஸர்வ பாபேப்ய:, 9. மோக்ஷயிஷ்யாமி, 10. மாசுச: என்னும் பாகங்களுக்கு வியாக்கியானமுமாக அமைத்துள்ளார் அருமறை முடி அண்ணல்.

''ஸ்ரீ'' சப்தார்த்தம்.

" ஸ்ரீ " என்று பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம். இச்சப்தத்துக்கு சாஸ்திரங்களில் ஆறுவிதமாக அர்த்தம் கூறப்படுகின்றது. 

(1) அருவமான சேதன வஸ்துக்கள், உருவுடைய அசேதன வஸ்துக்கள் என்ற சகல வஸ்துக்களும் தன்னை ஆச்ரயித்திருக்க, 

(2) தான் பகவானை அடைந்து, (அன்றிக்கே அந்த வஸ்துக்களை உள்ளே புகுந்து வ்யாபரித்து நின்று) 

(3) அவை அலற்றுகிற வார்த்தைகளைத் தான் கேட்டு,

(4) அவற்றைப் பகவானும் கேட்கும்படி செய்து, 

(5) பகவானை அடைய வொட்டாமலும், ஆச்ரயிக்க வொட்டாமலும் தடுத்துக்கொண்டு நிற்கிற பாவங்களைப் போக்கடித்து, 

(6) சேஷபூதர்களான ஆத்மாக்களிடத்திலும் சேஷியான பகவானிடத்திலும் ஆக இரண்டு விஷயத்திலும் உண்டான அன்பினால் சம்சாரிகளான நம்மை போக்யமான பகவானுடைய திருவடிகளைச் சேர்க்கிற (அன்றிக்கே புருஷார்த்தத்துக்கு அநுகுணமான அருளைப்பண்ணுகிற) திருவே இலக்குமி. 

இவ்விசேடார்த்தங்களை நம் அன்பர் குலச்சிங்கம் ஒரு திருப்பாசுரத்தில் அழகுற அமைக்கும் பெற்றியே பெற்றி. 

அப்பாசுரம் வருமாறு:-

அருவுருவானவை தன்னை 
          யடைந் திடத் தானடைந்து
வருவுரைகேட்டு அவை கேட்பித்து 
               அகற்றும் வினைவிலக்கி
இருதலை யன்பு தனால் எம்மை 
                       யின்னடி சேர்த்தருளும்
திருவுடனே திகழ்வார். சிறந்தா 
                      ரெங்கள் சிந்தையுள்ளே.
                                      -(துவயச்சுருக்கு, 2)

" அருள் தரு மடியவர்பான் மெய்யைவைத்து
        தெருள்தர நின்ற தெய்வநாயக! நின்
அருளெனுஞ் சீரோரரிவை யானதென
       இருள்செக வெமக்கோரின்னொளி விளக்காய்
மணிவரையன்ன. நின் திருவுருவில்
      அணியமராக வலங்கலா யிலங்கி
நின்படிக்கெல்லாம் தன்படியேற்க
      அன்புடனுன்னோடவதரித்தருளி
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்
       தீண்டியவினைகள் மாண்டிட முயன்று
தன்னடிசேர்ந்த தமருனை யணுக
       நின்னுடன் சேர்ந்து நிற்குநின் திருவே."
                                             --(மும்மணிக்கோவை. 1)

[தெருள் - பூர்ண ஜ்ஞாநம் ; அருள் எனும்சீர் - கிருபை என்கிற கல்யாண குணம் ; ஓர் -- ஒப்பற்ற; அரிவை - பெண் (இருபது முதல் இருபத்தைந்தளவுமான பருவமுடையவள்); இருள் - அஜ்ஞாநாத்யந்தகாரம் ; செக - நசிக்க ; விளக்கு -- நிரதிசயாநந்த ரூபமான பகவத்ஸ்வரூபம், அபராதாநுகுணமாக தண்டதரனான அவன்படி ஒளிவிளக்கு, பெரிய பிராட்டியின்படி இன்விளக்கு, ஏகதத்வம் என்னலாம்படி ஸர்வாவஸ்தையிலும் ஸ்ரீ விசிஷ்டனான எம்பெருமான்படி இன்னொளி விளக்கு. ஆகையாலே த்வத்விசிஷ்டையான பெரிய பிராட்டியாரின்படி ஓரின்னொளி விளக்கு ; மணிவரை - மரகதமலை ; திருவுருவில் - திருமேனியில் ; ஆகம் - திருமார்பு; அலங்கலாய் -- மாலையாய் ; இலங்கி - விளங்கி ; நின்படிக்கெல்லாம் - என்னென்ன யோனியுமாய்ப் பிறக்குமுன் வகைகளுக்கெல்லாம் ; அன்புடன் - இருதலையன்புதனால்.) என்றும் ;

" வினை விடுத்து வியன் குணத்தா லெம்மையாக்கி
            வெருவுரை கேட்டவை கேட்க விளம்பினாளும்
தனையனைத்து மடைந்திடத் தானடைந்து நின்ற
         தன்றிரு மாதுடனிறையுந் தனியா நாதன்                                       -                 (அமிருதாசுவாதினி. 8)

என்றும் திருவின் பொருளைத் தெளிவுறத் தெரிவித்துள்ளார் திருவெங்கடேச குரு.

தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக