செவ்வாய், 14 மார்ச், 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம் -- உத்தர காண்டம் 41

84ஆவது ஸர்க்கம்

[பிள்ளையை யிழந்து பிராம்மணன் புலம்பியது.]

                இவ்வாறு ஸ்ரீராமபிரான் சத்ருக்னளை மதுராபுரிக்குச் செல்ல விடுத்தபின், மற்ற சகோதரர்களுடன் கூடி ராஜ்ய பரிபாலனஞ் செய்து வருகையில், ஒரு நாள், ஒரு கிழ வேதியன், மரணமடைந்த தனது சிறு மகனை எடுத்துக் கொண்டு ராஜ மாளிகையை யடைந்து, 'ஐயோ' மகனே! இதுவரை 'யான், எவ்விதமான பாபமும் செய்தேனில்லை. அங்ஙனமிருக்க, பாலகனான நீ, எனக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களை ஒன்றும் செய்யாமல், இளமைப் பருவத்திலேயே துர்மரண மடைந்த காரணமென்ன? இத்தகைய கோரமான காக்ஷியை இதுகாலும் கண்டதுமில்லை, கேட்டதுமில்லையே! இந்த ராமனது. ராஜ்யத்தில்தான், இவ்விதமான அகால மரணமுண்டாகின்றது. ஆதலின் இத் தேசாதிபதியான, ராமனே ஏதோ மகத்தான பாபம் செய்திருக்க வேண்டும். ஐயோ! ராம! பிராணனை இழந்திருக்கும் இப்பாலகனை நீ பிழைப்பிக்க வேண்டும். இல்லையாகில், யான் திக்கற்றவனாக, என் இல்லறத் துணைவியுடன் உன் மாளிகை வாயிவில், உயிரை விட்டு விடுகின்றேன். நீ பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்து, சுகமாக வாழ்ந்திருப்பாயாக"என்று இப்படி பலவாறு புலம்பியழுதனன். பின்னும் அவ்வேதியன், வஸிஷ்டர், வாமதேவர், முதலான புரோஹிதர்களின் முன்னிலையில், ராமனை நோக்கி, ", ராகவ! நாங்கள் இவ்விராஜ்ஜியத்தில் இனிது வாழ்ந்து வருகிறோம். இவ்லிதமான விபத்து உன் வசத்திலிருப்பதனால் இப்பொழுது ஸம்பவிக்கலாயிற்று. இக்ஷ்வாகு முதலான மகாத்மாக்கள் பரிபாலித்து வந்த இத்த ராஜ்யம், இன்று நாதனற்றதாகியது. நீ அரசனாக ஏற்பட்டபின், விதிப்படி ஜன பரிபாலனம் செய்யாதது பற்றி ராஜ தோஷத்தினால் பாலகர்கள் மரிக்கத் தலைப்பட்டனர். ஆதலால் உனது ராஜ்யத்தினது அரசாக்ஷியில் நாட்டிலும் நகரத்திலும் சரியான நடவடிக்கையில்லாததினால் இப் பாலகன், இங்ஙனம் அகாலத்தில் பிராணனை யிழந்தனன்'' என்று மீண்டும் அநேகவிதமாக ராமனை யிகழ்ந்து அழுது அழுது புலம்பினன்.

எண்பத்தியைந்தாவது ஸர்க்கம்.

(வைதிகன் மகன் மரணமடைந்த காரணம்.)

                இவ்வாறு, புத்திரளைப் பறி கொடுத்த துயரம் தாங்கமாட்டாது. கதறிய பிராமணனது அழுகைக் குரலைக் கேட்டு, ஸ்ரீராமபிரான், வருத்தமடைந்து தனது ஸபையில் வீற்றிருந்த முளிச்ரேஷ்டர்களையும், மற்றுமுள்ள மந்திரிப் பிரதானிகர்களையும் கைகூப்பி வணங்கி, பிராம்மணனது வரலாற்றை அவர்களிடம் விவரமாக விண்ணப்பம் செய்தனன்.

                அங்கு முனிவர்களிடையில் வீற்றிருந்த நாரதர் அது கேட்டு, ராமனை நோக்கி, "ஹே, ரகு வீர! இச்சிறுவன் எப்படி அகால மரணமடைந்தான் என்பதைக் கூறுகிறேன் கேள். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வருணத்தவர் தவம் புரிய அதிகாரம் உடையவராகின்றனர். முதன் முதலில், கிருத யுதத்தில் பிராம்மணர்கள் மாத்திரமே, தவம் செய்ய அதிகாரம் பெற்றிருந்தனர். திரேதா யுகத்தில் க்ஷத்திரியர்களும், தவம் புரிய அதிகாரம் பெற்றனர். துவாபர யுகத்தில் வைசியர்களும், கலியுகத்தில் சூத்திரர்களும், இவ்வித அதிகாரம் பெறுவர். சூத்திரர், கலியுகத்தில், தவம் செய்ய வேண்டியிருக்க, இந்தத் த்ரேதாயுகத்தில் (வைசியருக்கே தவம் செய்ய அதிகாரமில்லாத காலத்தில்) ஒரு சூத்திரன், தவம் செய்வானே யாகில், இதைவிட ஓர் அதர்மம் வேறு இருக்குமோ! ! ராம! இப்பொழுது கீழ்க் குலத்தவனான ஒரு சூத்திரன் கெட்ட புத்தி யுடையவனாகி, உனது, ராஜ்யத்தின் எல்லையில் மிகவும் கொடிய தவமியற்றுகின்றனன். துலாபர யுகத்திலேயே, சூத்திரன். தவம் செய்வது அதர்மமாகும் பொழுது. இந்தத் த்ரேதாயுகத்தில் கேழ்க்கவும் வேண்டுமோ? அக் காரணங் கொண்டே இப்பாலகன் மரண மடைந்தனன். எவனேனு மொருவன் ஒரு அரசனது நாட்டிலாயினும், நகரத்திலாயினும் செய்யத்தகாத செய்கைகளையேனும், அதர்மங்களையேனும் செய்வானாகில் அங்ஙனம் செய்கிறவன் மாததிரமேயனறி, அந்த நாட்டரசனும், நரகம் புகுவானென்பது சாஸ்த்ரம், பிரஜைகளை அற நெறி தவறாது பரிபாலிக்கின்ற மன்னவன், அந்தப் பிரஜைகள் செய்யும், வேதாத்யயனம், தவம், சுக்ருதம், (புண்ணியம்) ஆகிய பல புண்யங்களிலும் ஆறிலொரு பாகம் பெறுகின்றனர். அங்ஙனமாக அவர்கள் புரியும் அதர்மத்தின் ஆறிலொரு பாகம் பாபத்தை மாத்திரம் பெறாதொழிவானோ ஆதலின் நீ உடனே உனது தேசமெங்கும் திரிந்து இப்பாபத் தொழில் புரியும், சூத்திரனைக் கண்டு பிடித்து தண்டிப்பாயாகில், இப்பாலகன் மீண்டும் உயிர் பெற்றெழுவான்," என்றனர்.

எண்பத்தாறாவது ஸர்க்கம்

(ஸ்ரீராகவன் சம்புகனைத் தேடிச் செல்லுதல்)

                பிறகு ராமன், அந்தப் பிராம்மணனை வியஸனமுறாது இருக்குமாறு தேற்றி, உயிரிழந்த அவனுடைய சிறுவனது சரீரம் சிதைவுற்று அழியாவண்ணம், ஸுகந்தமிட்டு, அதனை, எண்ணைக் குடத்திலமைத்துப் பாதுகாத்து வரும்படி லக்ஷ்மணனுக்குக் கட்டளையிட்டுப் புஷ்பக விமானத்தைத் தன்னிடம் வருமாறு மனதில் நினைத்தனன். உடனே ஒரு முகூர்த்த காலத்தில் அவ் விமானம் வந்து சேர்ந்தவளவில், இராமன் இராஜ்யத்தை லக்ஷ்மண பரத சத்ருக்னர்கள் வசம் ஒப்புவித்து, உடனே வில், பாணம், கத்தி இவைகளைத் தரித்து புஷ்பகத்தின் மீதேறி சம்புகனைத் தேடித் திரியலாயினன். முதலில் மேற்கு திசையை நோக்கிச் சென்றான், அங்கு அவனைக் காணாதவராய் வடக்கு திக்கை நோக்கிச் சென்றனன். அங்கும் அவனைக் காணாது தென் திசையை நோக்கிச் சென்றாள் அங்கும் விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள 'சைவல' மென்னும் மலையின் வடபாகத்தில் பொலிவுற்று விளங்கும் பொய்கை யொன்றை ஸ்ரீராமன் கண்டனன். அதன் கரையில், ஒருவன் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு கோரமான தவம் இயற்றுவதைக் கண்ட காகுத்தன், அவனை அணுகி, “அருந்தவமியற்றும் பெரியோனே! நீ யாது பயனைக் கருதி இத்தகைய செய்வதற்கரிய செயலைச் செய்கின்றனையோ அதனை யான் அறிய விரும்புகின்றேன். நீ வரம் வேண்டுகின்ற பிராம்மணனாயின், இனிது வாழ்க. அங்ஙன மன்றாகில், நீ எந்த வருணத்தைச் சேர்ந்தவன்? நீ இப்பொழுது தவத்தை மேற்கொண்டிருக்கின்றனைய ராதலின், பொய் பேசாது,உள்ளபடி உண்மையைப் பேசுக”, என வினவினன்.

எண்பத்தேழாவது ஸர்க்கம்

(ஸ்ரீராகவன் சம்புகனை வதைத்தல்)

                இங்ஙனம் இராமன் வினவியதைக் கேட்டு, அத்தவசி “ஐய! யான் சூத்திர யோனியிற் பிறந்தவன், 'சம்புகன்' என்று பெயருடையவன். சரீரத்துடன், ஸுவர்க்கம் புக எண்ணி இப்படி யருந்தவமியற்றுகின்றேன்"என்றனன். இராமன் அவனை நோக்கி, "சம்புக! இந்த யுகத்தில் சூத்திரர் தவமியற்றும் அதிகாரம் பெற்றிலராதலின் இவ்வண்ணம் நீ செய்வது தருமத்திற்கு மாறேயாகின்றது. யான் நாடெங்கும் அறம் தவறாது பாதுகாப்பவனான தசரத குமாரனாவேன். ஆதலால் தருமத்தைப் பாதுகாத்தற்குரிய யான் இப்போது உன்னை வதைப்பது தரும முறைப்படி எனது கடமையாகின்றது. இதற்கு நீ, யாது பதில் கூறுகின்றனை?'' என்று வினவ அந்த சம்புகன், “தேவரீர் திருக்கரத்தால் கொலையுண்பதும் அடியேனுக்கு. ஒரு பெரும் பாக்யமே யாகும்,” என்று கூற, அக்கணமே, ஸ்ரீராமன் உறையினின்றும் கத்தியை உருவி கையிலெடுத்து வீசிச் சம்புகனது சிரத்தைக் கீழே வீழ்த்தினன். அது கண்டு தேவர்கள் மனம் மகிழ்ந்து. அப் பார்த்திபன் மீது பூமாரி பொழிந்தனர். அவர்கள், இராமனை நோக்கி 'ஹே, ரகுவீர! சுவர்க்கம் புகுவதற்கு உரிமையுடையோனல்லாத இச் சூத்திரன் கொடிய தவமியற்றுதல் கண்டு, நாங்கள் மிக அச்சங் கொண்டிருக்கையில், அவனது தவம் முற்றுப் பெறுவதற்கு முன், நீ இவனை வதைத்தமையால் எங்களுக்குப் பெரிய உபகாரம் செய்தவனானாய். ஆதலால் நீ வேண்டிய வரமளிக்க விரும்புகின்றோம்", என்றனர்.

                இராமன், கூப்பிய கையனாய், அவர்களை நோக்கி. "தேவர்களே! எனது பிழையினால், ஒரு பிரம்மணனது ஏகபுத்திரனான பாலகன், அகாலமரணமடைந்து, யமலோகம் சென்றனன். அவ்வேதியன் மகனைப் பிழைப்பூட்டுவதாக, யான் வாக்களித்து வந்துள்ளேன். ஆகவே, நீங்கள் அவ் விளைஞனைப் பிழைப்பூட்டுக", என வேண்டினான். தேவர்கள் இராமனை நோக்கி, ''காகுத்த! நீ இவ்விசாரத்தை விட்டொழிக. எந்த முகூர்த்தத்தில். அந்த சூத்திரன் தலையற்று வீழ்ந்தனனோ, அக்கணமே, அவ்வந்தணனது மகன் உயிர்த்தெழுந்து, தனது பந்துக்களிடம் போய்ச் சேர்ந்தனன். இனி உனக்கு மங்கள முண்டாகுக. இராம! இப்பொழுது நாங்கள், அகத்திய முனிவரது ஆச்ரமம் செல்கின்றோம். அம் முனிவர், பனிரெண்டு வருஷ காலமாக மிகப் பெரிய தீக்ஷை கொண்டு, ஜலத்திலே படுத்து, அருந்தவம் இயற்றுகின்றனர். அவ்விரதம் இப்பொழுது முடிவு பெறுகின்ற தாதலின், அவரைப் போய்க் கண்டு களித்து வரவேண்டும், நீயும் எம்முடன் வருக" என்றனர்.

                ஸ்ரீராமன், அவ்வண்ணமே வருவதாக இசைந்து அக்கணமே புஷ்பக விமானத்திலேறி, அவர்களைப் பின்தொடர்ந்து அகஸ்த்யாச்ரமத்திற்குச் சென்றனன்.

1 கருத்து: