புதன், 28 டிசம்பர், 2016

கோதாஸ்துதி


கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.
த‌மிழாக்க‌ம்
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)




சுலோகம் 7
வல்மீகத: ச்ரவணதோ வஸுதாத்மநஸ் தே
        
ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: |
கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே
        
வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: ||   (7)

புவிமகளா நின்செவியிற் போந்தமுனி நுங்கோன்
கவிமகனாய் வாழ்ந்து களித்தான் -- சவிமருவு
நீதா னியற்றுகவி நேசமுற மாலை வைத்தாய்
கோதாய் வியப்பென்னோ கூறு
.        (7)

பதவுரை
         கோதே -- கோதாய்!; வஸுதாத்மந: -- பூமிப்பிராட்டி ரூபமான; தே -- உனது; ச்ரவணத: -- செவியாகிற; வல்மீகத: -- புத்திலிருந்து; ஜாத: -- பிறந்த; - அந்த; முநி -- மஹர்ஷி; கவிஸார்வ பௌம: -- கவிகளுக்குள் சக்கரவர்த்தியாக; பபூவ -- ஆனார்; (ஆகையால்), தே -- உனது; வக்த்ராரவிந்த -- முகமென்னும் கமலத்திலிருந்து (பெருகும்); மகரந்தநிபா: -- தேன்போன்ற; அமீ ப்ரபந்தா: -- இந்த ப்ரபந்தங்கள்; ஸ்வதந்தே -- ருசிக்கின்றன; இதியத் -- என்னும் இது; கிமத்புதம் -- என்ன ஆச்சரியம்?

         கோதாய்! பூமிப்பிராட்டியேயான உன்னுடைய காதென்று சொல்லும் வல்மீகத்திலிருந்து (புற்றினின்று) பிறந்த அந்த முனி (வால்மீகி முனிவர்) கவிச் சக்கரவர்த்தியானார். அப்படியிருக்க, உன்னுடைய திருவாயாகிய தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான இப்பிரபந்தங்கள் இனிமையாயிருக்கின்றன என்பது என்ன ஆச்சர்யம்.

அவதாரிகை

         (1) வால்மீகியையல்லவோ உத்தம கவி என்பர்! அவரையல்லவோ கவிகள் நல்வாக்குகளுக்காகப் பிரார்த்திப்பர்! "இதம் குருப்ய: பூர்வேப்யோ நமோவாகம் ப்ரஸாஸ்மஹே" என்று பவபூதி வால்மீகியை முதலிலேயே பணிந்தார். அவர்தானே கவிகளுக்கு மார்க்கதர்சீ! நீரும் உம்முடைய தேவநாயகன் ஸ்துதியில் "ப்ராச; கவீந் நிகமஸம்மித ஸூந்ருதோக்தீந், ப்ராசேதஸ ப்ரப்ருதிகாந் ப்ரணமாமி நித்யம்" என்று அம்முனிவரைப் பணிந்தீர். பாதுகாஸஹஸ்ரத்திலும், "யஸ்யாஸூதரவிந்த ஸம்பவ வதூ மஞ்ஜீர சிஞ்ஜாரவ ஸ்பர்த்தா துர்த்தர பாதபத்தபணிதி வல்மீகஜந்மா கவி:" என்று அவர் ராமாயணத்தைப் புகழ்ந்தீர். பெரிய பிராட்டியாருடைய அவதாரமாகிய ஸீதாதேவியின் சரித்ரத்தைப் பாடிய கவியிலும் உயர்ந்த கவியுண்டோ? "கவிப்ரதம பத்ததிம்" என்றல்லவோ காளிதாஸர் ராமாயணத்தைப் புகழ்ந்தார். "பரம் கவீநாம் ஆதாரம்" என்றபடி அக்காவ்யந்தானே எல்லாக் கவிகளுக்கும் மூலாதாரம்.!

         (2) பெருமாள் கேட்டு மகிழும்படி பாட நான்தான் வாக்கு அளிக்கவேண்டும் என்று இச்சகம் பேசுகிறீர். ராமாயணம் 24000 சுலோகங்களையும் பெருமாள் "பபூஷயா ச்ரோத்ருமாநா பபூவ" என்றபடி தன் ஸத்தையும் தாரணமும் அதனால்தானென்று "மஹாநுபாவம் சரிதம்" என்றும், "மமாபி பூதிகரம்" என்றும் புகழ்ந்துகொண்டு கேட்கவில்லையே! என் விஷயமாக ஓர் சின்ன ஸ்துதி பண்ணுவதற்கு என்னையே வாக்பிக்ஷை கேட்கிறீரே?

         (3) ஓரிரவில் பாதுகா ஸஹஸ்ரம் பாடி அதைப் பெரியபெருமாளே திருவோலக்கத்தில் தூக்கத்தைத் தள்ளி லக்ஷ்மியோடு கூடத் திருச்செவி சாற்றவில்லையோ! அந்தப் பாதுகா ஸஹஸ்ரத்திற்கு திவ்ய வாக்கை வால்மீகியைப் பிரார்த்தித்து அடையவில்லையோ? அதற்கு என்னைக் கூப்பிடவில்லையே? ஸமயத்திற்குத் தகுந்தபடி பேசுவது அழகோ? நான் கவியா? அவர் கவியாஇதற்கெல்லாம் பதில் கூறுகிறார் இங்கே.

         வால்மீகி ஆதிகவி என்பதும், அவரை மற்றக் கவிகள் பணிந்து வாக்கைப் பெற்றனர் என்பதும் உண்மையே. அடியேனும் அவரைப் பணிந்து யாதவாப்யுதயம் பாடினேன். பாதுகா ஸஹஸ்ரமும் பாடினேன். பெருமாளும் அவர் ஸீதைப் பிராட்டி விஷயமாய்ப் பாடிய ஆதிகாவ்யத்தை இன்புறக் கேட்டருளினார். நான் இப்பொழுது உன்னைப் பிரார்த்திப்பதற்கும் நான் முன் வால்மீகியைப் பிரார்த்தித்தற்கும் ஓர் விரோதமுமில்லையே அம்மா! வால்மீகியைப் பிரார்த்தித்துக் கவிதை பெற்றதைக் கொண்டு கைமுத்யத்தால் உன்னைப் பிரார்த்தித்து வாக்குப் பெறவேண்டியதற்கு ஔசித்யம் ஸித்திக்கிறதே. வாதத்தில் இதுபோன்ற உன் கேள்வியை 'சுங்கத்தில் போது விடிந்ததுபோலும்' என்பாரம்மா! வால்மீகி யாரம்மா? வல்மீகத்தில் பிறந்தவர்தானே? வல்மீகம் என்பது என்ன? "வஸுதாச்ரோத்ரம்"தானே? பூமிதேவியின் காது (ச்ரவணம், ச்ரோத்திரம்). நீதானே பூமிதேவி? உன் செவியிற் பிறந்த மஹிமையாலே அவர் கவிஸார்வ பௌமரானார். உன்னுடைய குழந்தை (அம்சம்) விபூதிதானே அவர்! அவர் கவிதாசக்திக்கு நீதானே மூலம்! ஆதாரம்! உன்னை த்யானித்துக்கொண்டேதான் யாதவாப்யுதயமும் பாதுகாஸஹஸ்ரமும் பாடினேன். "வஸுதா ச்ரோத்ரஜே தஸ்மிந்" என்று உன் ச்ரோத்ரத்தில் பிறந்தவரென்றுதானே அவரை ஆரம்பத்தில் இரண்டாவது ச்லோகத்தில் புகழ்ந்தேன்? அப்படியே பாதுகா ஸஹஸ்ரத்திலும் "வஸுதா ச்ரோத்ர ஜந்மா முநிர்மே" என்று உன் மூலமான புத்ர ஸம்பந்தத்தைப் பேசிக்கொண்டேதானே திவ்யவாக்கின் அநுக்ரஹத்தை யாசித்தேன்? உன் ச்ரோத்ரத்திலிருந்து பிறந்த கவி பாடின க்ரந்தமானதால், ராமாயணம் முழுவதையும் பரிஷத்தில் பெருமாள் இன்புறக் கேட்டார்.

         (4) இப்படிப் பதில் சொல்வது அழகாயிருந்தாலும், ஓர் கேள்வி கேட்கிறேன். அதில் நீர் அகப்பட்டுக்கொண்டே தீரவேணும். ஸீதைப் பிராட்டியார் தன்னுடன் பிறந்தவரான (ஸஹஜரான) கவீச்வரரைக் கொண்டு தன் சரித்ரமான ராமாயணத்தைப் பாடிவைத்தாள் என்று பாதுகாஸஹஸ்ரம் முடிவில் பாடினீரே! இப்பொழுது ராமாயண காவ்யம் என் மூலம் என்கிறீரே? இந்த விரோதத்தை எப்படிப் பரிஹரிப்பீர்? பெரியபிராட்டியார் எனக்கு அம்சி, நான் அம்சம். அம்சத்திற்குள் அம்சி அடங்குமோ?

         அம்மா, இந்தக் கேள்வியும் ஸுபரிஹரம். நீ பெரியபிராட்டியாருடைய அம்சமாயிருந்தபோதிலும், பெரியபிராட்டியார் உன்னிடமுள்ள நிரதிசயப்ரீதியால், உன் பெண்ணாகப் பிறந்து உன்னை பஹுமானித்து உனக்கு சேஷமாயிருக்கும் ரஸத்தை அநுபவிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு பூமிஸுதையாக (உன் பெண்ணாய், ஸீதையாக) அவதரித்தாள். அந்த அவதாரத்தில் பெரியபிராட்டியார் இச்சாவசத்தால் அம்சாம்சி பாவம் மாறிவிட்டது. நீ அம்சியும், ஸீதை உன் அம்சமான புத்திரியுமானாள். தாயும் அம்சியுமான நீ பாடிவைத்ததைத்தானே அங்கே ஸீதை பாடி வைத்ததாக ஔபசாரிகமாகப் பேசினேன். "ஸஹஜோ கவீச்வரேண" என்றதால் இது வ்யஞ்ஜிதம். வால்மீகிக்கும் ஸீதைக்கும் ஸஹஜத்வம் எப்படி? பூமிதேவியே நீ! உன்னிடமிருந்து இருவரும் பிறந்தாரென்பதுதானே! உன்னிடம் பிறந்தவர் ஸஹஜகவி. கவீச்வரியான தாயாருடைய பிள்ளைதானே ஸஹஜகவீச்வரரானார்? "கரிணீ"தானே களபத்தைப் பெறும்? தாய் வேறுஜாதி குட்டி வேறுஜாதியாமோ? நீ கவீச்வரி. உன்னிடம் ஜாதர் கவீச்வரர். "மாதரம் த்விபதா இதி". ஆண் பிள்ளைகள் தாய் ஸ்வபாவத்தை அநுஸரித்திருப்பர். ஆகையால் விரோதம் இல்லை அம்மா!

         வஸுதாத்மந: -- பூமிஸ்வரூபமான (பூமிதேவியான) பூமி வடிவுடைய உன்னுடைய. "ஸாக்ஷாத் க்ஷமாம்" என்று முதல் ச்லோகத்திலேயே இதை ஸாதித்தார். "வல்மீகம்" - புற்று. அதற்கு "வஸுதாச்ரோத்ரம்" என்று பெயர். வல்மீகத்தில் பிறந்தவர். பூமியின் செவியில் பிறந்தவர். "வஸுதாச்ரோத்ர:" என்ற பர்யாயபதத்தைப் புத்திக்கும் கொண்டுவருவதற்காக "வஸுதா" சப்தத்தைப் பிரயோகித்தது.

         தே -- உன்னுடைய; ச்ரவணத -- திருச்செவியிலிருந்து. ஜன்ஹுமஹர்ஷியின் ச்ரவணத்திலிருந்து கங்கை அவதரித்தாள். அதுபோல உன்னுடைய ச்ரவணத்திலிருந்து ராமாயண கங்கா ப்ரவாஹ ஹேதுவான வால்மீகிமுனி பிறந்தார்.

         வல்மீகத: -- கரையான் புற்றிலிருந்து; ஜாத: -- பிறந்த. (ஜாதோ பபூவ) பிறவியாலே ஆனார். பிறந்ததும் ஆனார். ஜாத: கவிஸார்வபௌம: கவீச்வரராகவே பிறந்தார். "ரூபதாக்ஷிண்ய ஸம்பந்த: ப்ரஸூத:" என்ற இடத்தில்போல பிறவிக் கவீச்வரர். உன்னிடத்திலிருந்து பிறந்ததே அவருடைய நிரதிசயமான கவிதைக்கு மூலம்.

         ஸ முனி: -- அந்த முனி. முனீச்வரர் கவீச்வரரானார். 'முனி' என்பது வாய்திறவாத மௌனியைச் சொல்லும். வாய் திறவாதவரும் வாசஸ்பதியாகப் பேசுவர். "மூகையான் பேசலுற்றேன்", "மூகம் கரோதி வாசாலம்", "ரகுவரசரிதம் முனிப்ரணீதம்", "ஸ்ரீமத்பாகவதே மஹாமுனிக்ருதே பராசரம் முநிவரம்".

         கவிஸார்வபௌம: -- கவிச்சக்கரவர்த்தியாய், கவீச்வரராய். முனி என்பவர் யோகி. யோகத்தில் 7 பூமிகள், மேல்மேல் உப்பரிகைகள், மேல்மேல் ஏறவேண்டும் (ஆரோஹம்). 7 பூமிகளையும் ஏறுவர். 7 பூமிகளேறின யோகத்தை ஸார்வபௌமமென்பர். யோகி ஸார்வபௌமர் கவிஸார்வபௌமரானார். யோகத்தில் 7 பூமிகள்போல், ராமாயணம் ஸப்த காண்டம். ராமாயணத்தைப்போல், திவ்யதம்பதிகளிடம் மனம் லயிக்க வேறு ஸாதனமில்லை. ராவண ஜயம் மனோஜயமாகும். ராவணலயம் மனோலயம். அது யோககாஷ்டை.
         பபூவ-- ஆனார்.

         கோதே! -- வாக்கையளிக்கும் தேவியே! உன் புத்திரரான வால்மீகிக்கு நீதான் வாக்கையளித்தாய். ஆகையால்தான் அவருக்கும் கவிதாமூலமான உன்னை பிக்ஷை கேட்கிறேன். "பரம் கவீநாம் ஆதாரம்" என்பதற்கும் மூலாதாரம் நீ.

         (தே) வக்த்ராரவிந்த மகரந்தநிபா: -- உன் திருமுகக் கமலத்திலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான (உன் ப்ரபந்தங்கள்). ஸாமான்யமான தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பிடமுடியாது. உன் திருவாயாகிய தாமரையிலிருந்து பெருகும் தேனுக்குத்தான் ஒப்பிடலாம். உன் ப்ரபந்தங்களாகிய தேனுக்கு உனக்கு பாஹ்யமான உபமானமொன்றும் ஒப்பாது. கண்ணன் பாடிய கீதையை "யா:ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத்மாத் விநிஸ்ஸ்ருதா:" என்று வர்ணிப்பர். "வால்மீகேர் வதநாரவிந்த கபிதம் ராமாயணாக்யம் மது" என்று தித்திப்பதற்கும் நீதான் மூலமென்பதை ஸூசிப்பிக்கிறார்.

         (தே) ப்ரபந்தா: -- உன்னுடைய தேன் ப்ரபந்தங்கள். ப்ரபந்தமென்பதற்குப் பரம்பரை விஸ்தாரம் என்றும் பொருள். த்வநிபரம்பரை போய்க்கொண்டிருக்கும். கட்டிலடங்காது. திருநாமம் மட்டும் கட்டுப்பட்டது என்ற பொருளைக் கொடுக்கும். பொருள் விஸ்தாரம் கட்டிலடங்காது. பொருள் பரம்பரை எல்லையில்லாமல் மேல்மேலே போய்க்கொண்டிருக்கும். "மங்களாநாம் ப்ரபந்தாந்", "க்ரியாப்ரபந்தா தயமத்வராணா மஜஸ்ர மாஹூத ஸஹஸ்ரநேத்ர:"

         அமீ ப்ரபந்தா: -- இப்பிரபந்தங்கள். இந்த என்று சொல்லலாமேயொழிய, இப்படிக்கொத்தது என்று வரையறுத்துப் பேச முடியாது. இதோ என் மனதுக்கும், காதுக்கும், நாக்குக்கும் சுவைக்கிறதே அந்தப் பிரபந்தங்கள். "க்ருஷ்ணேத்யக்ஷரயோரயம் மதுரிமா" என்று ஜகந்நாத பண்டிதர். "க்ருஷ்ண" என்ற இரண்டு அக்ஷரங்கள் தன் மனதிற்குச் சுவைத்த இனிப்பை "இவ்இனிப்பு" என்று பேசியதுபோல.

         யத் ஸ்வதந்தே -- தித்திப்பது என்னும் இதம் இது, தித்திப்பது.

         கிமத்புதம் -- என்ன ஆச்சரியம்? இது ஓர் ஆச்சரியமா? கைமுத்தியத்தால் கிடைப்பது ஆச்சர்யமாகுமோ? 'அத்புதம்' என்பதை அத்புதம் ஸ்வதந்தே என்று ஒட்டிக்கொள்ள வேண்டும். இங்கே இரண்டு கைமுத்தியங்கள். (1) உன்னிடம் பிறந்தவர் லோகோத்தரகவியாகையால் உன் காவ்யங்கள் லோகோத்தரமென்பதற்கு என்ன தடை? (2) உன் காதில் பிறந்தவர் வாக்கு அத்தனை இனிமையாகையில் உன் திருவாயிலிருந்து வரும் வாக்குகளின் இனிப்புக்குக் கேட்பானேன்?

         வால்மீகி விஷயமான இந்த சுலோகத்தை 7வது சுலோகமாக வைக்கப்பட்டது. உன் "ச்ரவணத்திலிருந்து" என்பதற்கு எதிர்த்தட்டு உன் "வக்த்ராரவிந்தத்திலிருந்து" என்பது.    (7)    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக