புதன், 15 மார்ச், 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 42

எண்பத்தியெட்டாவது ஸர்க்கம்

(ஸ்ரீராமன், அகத்தியரிடம், திவ்யாபரணம் பெற்றது)

                பிறகு, அகத்தியர், தமது ஆசிரமத்திற்கு வந்த கைல தேவதைகளையும், ஒரு தன்மையாக விசேஷமாக உபசரித்துப் பூஜிக்க, அகத்தியரளித்த அதிதி பூஜைகளைப் பெற்றுப் பெருமகிழ்ச்சி கொண்டு, தேவர்கள் யாவரும், அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, தேவலோகம் சென்றனர். ஸ்ரீராமன், புஷ்பக விமானத்திலிருந்து இறங்கி, அகத்திய முனிவரை வணங்கி நிற்க, அம் முனிவர் ஸ்ரீராமனை நன்றாக உபசரித்து, அவனை நோக்கி, "ஹே ராம! நீ சம்புகனை வதைத்து, வைதிகன் மகனைப் பிழைப்பித்துத் தருமத்தைச் சீர்படுத்தினை, என்று தேவர்கள் கூறக்கேட்டு, உனது வருகையை எதிர் பார்த்து இருந்தேன். நீ இன்றிரவு என்னருகில் வஸித்திருந்து நாளைக் காலையில் அயோத்திக்குச் செல்வாயாக, நீ ஸாக்ஷாத் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியன்றோ! நீயே ஸகல பூதங்களுக்குப் பிரபுவும்,, ஆதிபுருஷனுமாய் விளங்குகின்றனை"- எனக் கூறிப் பலவித உபசாரங்கள் செய்து, பிறகு சோதி மயமாய் விளங்குகின்ற ஒரு திவ்யாபரணத்தைக் கொணர்ந்து, "ஹே ராம! விச்வகர்மாவினால் நிருமிக்கப் பட்ட அற்புதமான இவ்வாபரணத்தைப் பெற்றுக் கொள்க. இதை உனக்கு, நன்கொடையாகத் தருகிறேன்," என்றார்.

                ஸ்ரீராமன் அதுகேட்டு, அம் முனிவரை நோக்கி, "முனிச்ரேஷ்டரே! தானம் வாங்கும் அதிகாரம் பிராம்மணர்களுக்கன்றோ உரியது, க்ஷத்திரியருக்கு அவ்வதிகாரம் இல்லையே. அப்படியிருக்க இதனை, யான் எங்ஙனம் பெற்றுக் கொள்வது? தேவரீரே இதனை, அடியேனுக்கு விளக்கமாகத் தெரிவிக்க வேண்டும்'' என வேண்டினன்.

                அதற்கு, அகத்தியர் ஸ்ரீராமனை நோக்கி, "ரகுநந்தன! முன் பிராம்மணர் பெருமை பெற்று விளங்கிய கிருத யுகத்தில் அரசனில்லாமல் ஜனங்கள். ஒவ்வொருவரும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. தேவர்கட்கு மாத்திரம் மஹேந்திரன், ஒருவன் அரசனாயிருந்தனன். அதனால், அரசனில்லாத மானிட உலகத்தவரனைவரும், நான்முகக் கடவுளை யணுகி, 'தேவ! தேவர்களுக்கு இந்திரனை அரசனாய் ஏற்படுத்தியதுபோல் எங்களுக்கும் ஓரு அரசனை விதித்தல் வேண்டும். அவ்வரசனுக்கு, நாங்கள் ஏற்றபடி பூஜை புரஸ்காரங்கள் செய்து கொண்டு, பாபத் தொழிலொழிந்து வாழ்வோம்' என வேண்டினர். அது கேட்டுப் பிரம்மதேவன் தேவேந்திரனையும் மற்றுமுள்ள திக்பாலகர்களையும் வரவழைத்து, 'தேவர்காள்! இப்பொழுது பூலோகத்தைப் பாதுகாக்க ஒரு அரசனைப் படைக்க வேண்டுமாதலின் அதன் பொருட்டு நீவிர் ஒவ்வொருவரும். உங்களது உத்தமமான, அம்சங்களின் ஒரு பகுதி தருக,' என்று கேழ்க்க, அவர்கள் அவ்வாறே தந்தமையால் பிரம்மதேவர், அவைகளைக் கொண்டு, 'க்ஷுபன்' எனப் பெயர் கொண்ட ஒரு புருஷனைப் படைத்து, அவனை பூலோகத்திற்கு அரசனாக்கினார்.

                அவ்வேந்தன் இந்திரனது கலையினால், இப்பூமி யெங்கும் அதிகாரம் செலுத்துகின்றனன். வருணனின் கலையினால் சரீரங்களை வளர்க்கின்றனன். குபேரனது கலையினால் தனாதிகாரியாகி, ராஜ்யத்திற்குப் பொருளை ஜனங்களுக்கு அளிக்கின்றனன். யமனது கலையினால், அறநெறி தவறாது, பிரஜைகளை தண்டிக்கின்றனன். ஆதலின் ராம!தேவேந்திரனது, அம்சம் உன்னிடத்தில் இருக்கின்றமையால், அதைக் கொண்டு பிரஜைகளைப் பரிபாலிப்பதன் நிமித்தம், இதனை நீ பெற்றுக் கொள்ளத் தகும்," எனக் கூறினர்.

                அகத்தியர், தர்மத்திற்கேற்றவாறு, இங்ஙனம் கூறக் கேட்டு இராமன் திருப்தியடைந்து, அந்த உத்தமமான ஆபரணத்தைப் பெற்றுக் கொண்டு, அம் முனிவரை நோக்கி “தபோதனரே! இவ்வற்புதமான, திவ்யாபரணம், எவ்விதமாக, எவ்விடத்திலிருந்து, யாரால் தேவரீருக்குக் கிடைத்தது? இதன் வரலாற்றைக் கேட்டறிய விரும்புகின்றேனாதலின், அதை அருளிச் செய்ய வேண்டு’         மென்று வினவினன.

89ஆவது ஸர்க்கம்

                அகத்தியர், ஸ்ரீராமனை நோக்கி, 'ரகுவீரரே! திரேதாயுதத்தில் ஆதியில் யான் நிர்மானுஷ்யமான மிகப் பெரிய ஒரு வனத்தைக் கண்டு, அதில் தவம் செய்ய விரும்பினேன். அவ்வனத்தின் நடுவின். அன்னம், காரண்டவம். சக்ரவாகம், முதலிய, நீர்ப் பறவைகள் பல விளையாடப் பெற்று, தாமரை, நெய்தல் முதலான மலர்கள் அழகாக மலர்ந்து; பாசியின்றி நிர்மலமாய் மதுரமான தண்ணீர் நிறைந்து. கலக்கவொண்ணாது, ஆழ்ந்த ஒரு பொய்கை இருந்தது அப்பொய்கைக் கரையில், மிகத் தூயதும், அற்புதமான, மகிமை பெற்றதுமான ஆச்ரம மொன்று இருக்கக் கண்டேன் அதில் தபசி ஒருவருமில்லை. அந்த புண்ய ஸ்தலத்தில் ஒருநாளிரவு துயின்று, வைகறை நேரம் துயிலெழுந்து அத்தடாகத்தின் கண், நீராடி, நித்ய கர்மங்களைச் செய்யச் சென்றேன். அதில் ஒரு மனிதப் பிணம், கொஞ்சமேனும் கரையாது புஷ்டியுள்ள தேஹத்துடன், மூப்பிலாததாய் மிதந்து கொண்டிருக்கக் கண்டேன்.

                ராம! அங்ஙனம் காணப்பட்ட மனிதன் சவத்தை யான், வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கையில், திடீரென்று, அவ்விடத்தில் வாயுவேக, மனோவேகமாய் வருகின்ற திவ்ய விமான மொன்று கண்ணிற்குப் புலப்பட்டது. அதில் திவ்யமான, பூமாலைகளும், ஆபரணங்களும் அணிந்து காந்தியும் அழகுமடைந்த திவ்ய புருஷனொருவன் தோன்றினான். அவனைச் சுற்றிலும், அரம்பையர்கள், மதுரமான கீதங்கள் பாடினர், சிலர், மங்கள வாத்தியம் முழங்கினர். சிலர், அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். சிலர், நா்த்தனமாடினர். ரகுகுல திலக! யான் பார்த்துக் கொண்டிருக்கையில்,' அந்தப் புருஷன், அவ்விமானத்தினின்று இறங்கி வந்து, அச்சவத்தின் கொழுப்பு மிகுந்துள்ள தசைகளை வயிறார உண்டு, அக்குளத்தில் கை கழுவி, மீண்டும் தனது விமானத்திலேற எழுந்தனன்.

                தேவனுக் கொப்பான அவனை யான் நோக்கி, ''ஐய! நீர் யார்? இத்தன்மையதான உணவில், ஆசையும் கருத்தும், உம்மைப் போன்ற பெருமையுடையோர்க்கு உண்டாகுமோ? தேவத்தன்மையுடைய உமது உணவு மிகவும் இகழத்தக்க தாகயிருக்கின்றதே. இது எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கின்றதாதலின், இதன் காரணத்தைத் தெரிய உரைப்பீராக" என வினவ, அத் தேவன் மிருந்த மகிழ்ச்சியுடன், யாவையும் என்னிடம் கூறலாயினன்.

தொண்ணூறாவது ஸர்க்கம்

[ஸ்வேத ராஜன் அகத்தியருக்கு ஆபரணமளித்தது]

                “ஸ்ரீராம! அத்தேவன் என்னை நோக்கி, முனிவர் பெருமானே! முன், விதர்ப்ப தேசத்தில், மிகுந்த பராக்ரமசாலியான மூவுலகங்களிலும் பிரஸித்தி பெற்ற, சுதேவரென்னும் பெயருடைய ஒரு அரசன் ஆண்டு வந்தனன், அவருக்கு, இரண்டு மனைவியரிருந்தனர். அவ்விருவருக்கும். ஸ்வேதன் என்கின்ற யானும், ஸுரதன் என்கிற என் தம்பியுமாக இரண்டு மகன்கள் பிறந்தோம். தந்தை ஸ்வர்க்கத்தை யடைந்த பின்னர், பட்டணத்து ஜனங்கள் என்னைத் தங்களுக்கு அரசனாக்கிக் கொண்டனர். யானும், அவ்வரசாக்ஷியை ஏற்றுக் கொண்டு நீதி முறை தவறாது பல்லாண்டு காலம் ராஜ்ய பரிபாலனஞ் செய்து வந்தேன். வேதியர் பெருமானே! இவ்வாறிருக்கையில், நான் எனது வாணாள் இவ்வளவுதான் என்பதை ஸாமுத்ரிகம் முதலிய அடையாளங்களால் அறிந்து. நற்கதியடையக் கருதி, ராஜ்யத்தைத் துறந்து, தம்பிக்கு முடிசூட்டி, இவ்வனத்துள் புகுந்து இத்தடாகத்தின் தீரத்தில் மூவாயிரமாண்டளவு அருந்தவமியற்றிப் பிரம்மலோகமடைந்தேன். பிணி, பசி, மூப்பு, எனும் துன்பங்களில்லாத அவ்வுத்தம உலகத்தில் என்னைப் பசியும் தாகமும் மிகவும் பீடிக்கலாயின. அது கண்டு, யான் சிந்தை கலங்கி, நான்முகக் கடவுளை யணுகி, 'ஸ்வாமின்! பசி தாகமில்லா இவ்வுத்தம ப்ரம்ம லோகத்தில் என்னைப் பசியும் தாகமும் பீடிப்பது ஏன்? எந்த ஆஹாரத்தால் திருப்தி உண்டாகும். அதை அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டும்' என வேண்டினேன்.

                பிதாமஹர், என்னை நோக்கி, 'சுதேவன் மைந்தனே! உத்தமமான தவம் புரியும்போதும், உனது உடலின் மீது ஆசை யொழியாதவனாகி, அதை அதிக ஆதரத்துடன் போஷித்து வந்தனை. அங்ஙனம் போஷித்து வருகையிலும், நீ சிறிதும் திருப்தி யடையவில்லை. அதனால், அப்பசி தாகங்கள் உன் தவத்தின் பெருமையால் இந்த லோகம் புகுந்தும், உன்னை விட்டு விலகவில்லை. நீ உதர போஷணத்தில் வைத்திருந்த அதிகமான ஆசையினால் நீர் வேட்கையும் நல்லுணவில் ஆசையும், உன்னை யிங்கு பீடிக்கின்றன.

                ராஜனே! முன் ஒரு ஸன்யாஸி உன்னிடம் பிக்ஷை வேண்டி வர, அவனுக்கு நீ அன்னமிடாமற் போயினை. அதனால், முன்னம் நீ கொடுத்து வைத்தது ஒன்றுமிலாதாதலின் உனக்கு வேறு ஆகாரமெதுவும், இங்கு கிடைப்பதரிது. நீ செய்த தவத்துடனே நல்லுணவு அளித்து, அருமையாய் ஆதரித்த, உடலொன்று மாத்திரமே மிகுந்துளது. எனவே நீ போஷித்து வைத்த உனது சரீரத்தின் மிக மதுரமான மாமிசத்தையே நீ நாடோறும் அருந்தி, திருப்தியடையக் கடவை. ஹே சுவேத! நீ தவம் புரிந்த வனத்திற்கு எப்பொழுது மஹாத்மாவான அகத்திய முனிவர். எழுந்தருளுகின்றனரோ, அப்பொழுது உனக்கு, இதிலிருந்து விமோசனம் ஏற்படும்' என்றனர்.

                “தபோதனரே! அன்று தொட்டு, அடியேன், அனேகம் ஆண்டுகளாக மிகவும் இகழத் தக்கதான, எனது உடலையே உணவாகத் தின்று வருகின்றேன். எத்தனை காலம் புசித்தும இவ்வுடலின், ஊன் சிறிதளவேனும் குறைவு படுவதில்லை. எனக்கும் பசி தணிந்து திருப்தி யுண்டாவதில்லை.

                முனிச்ரேஷ்டரே! இன்று நீரே என்னைக் கடைத்தேற்ற வேண்டும். அதற்குப் பிரதிமாக திவ்யமான, இவ் வாபரணத்தைப் பெற்றுக் கொண்டு, அடியேனிடம் அருள் புரிக. இது பொன், பட்டாடை, ஆபரணம், பஷ்யம், போஜனம் ஆகிய யாவற்றையும், ஸகலமான போகங்களையும் அளிக்கும்' என்று கூறி வேண்டிக் கொண்டனன்.

                இங்ஙனம் சுவேதராஜனின் துக்ககரமான விருத்தாந்தத்தைக் கேட்டு யான் அதினின்று அவனை விடுவிக்குமாறு அவ்வாபரணத்தைப் பெற்றுக் கொண்டேன். அதனை யான் கைகொண்டவளவில் அந்த ராஜ ரிஷியினது பழமையான மானிட தேஹம், அழிந்து போயிற்று. உடனே அவ்வரசன் மிகுந்த மகிழ்ச்சி யடைந்து ஸுவர்க்கலோகம் சென்றனன். அந்த சுவேதராஜனால் கொடுக்கப் பட்ட ஆபரணமே இதுவாகும், என்று கூறி முடித்தனர்.

தொண்ணூற்றியொன்றாவது ஸர்க்கம்

(தண்டகன் சரித்திரம் [

                அகஸ்திய மஹரிஷி கூறிய அற்புதமான கதையைச் செவியுற்ற ஸ்ரீராமபிரான் மிகவும் ஆச்சரியமடைந்து, அவரைப் பார்த்து, 'முனி வரரே! விதர்ப்பதேசாதிபதியான சுவேத ராஜன் கடுந் தவம் புரிந்த அரண்யம், மிருக பஷிகளேதுமில்லாமல் சூன்யமானதற்குக் காரணமென்ன? அவ்வரசன் அங்கு தவம் புரியக் காரணமென்ன?" என்று வினவினன். அகஸ்தியர் ராமனை நோக்கி,

                'ஸ்ரீராம! முன்பு கிருதயுகத்தில், மனுவானவர் தபஸ் செய்யக் கருதி தனது புதல்வனான இக்ஷ்வாகுவை அரசனாக நியமித்து, அவனைப் பார்த்து -“குமார! நீ நீதி தவறாமல் அரசாக்ஷி செய்ய வேண்டும். காரணமின்றி எவரையும் தண்டிக்கக் கூடாது, குற்றஞ் செய்யாதவரை தண்டித்தால் முடிவற்ற நரகானுபவமுண்டாகும். எனவே பிரஜைகளை தண்டிக்கும் விஷயத்தில் மிகவும் கவனமாயிருக்கவேண்டும்,” என்று புத்திமதிகளைக் கூறி தவம் செய்து முக்தியடைந்தனர். பிறகு இக்ஷ்வாகு மகாராஜன், நீதியுடன் அரசாக்ஷி செய்து வருகையில், அவருக்கு நூறு புத்திரர்கள் பிறந்தனர். அவர்களுள் கடைசியிற் பிறந்த குமாரன், மூடனும், கல்வியற்றவனும். கொடியவனுமாகப் பெரியோர்களை, அவமதித்து வந்தனன். அது கண்டு, இக்ஷ்வாகு சினங் கொண்டு அவன் கட்டாயம் தண்டனை யடைவானெனக் கருதி, அவனுக்கு, தண்டன் எனப் பெயரிட்டு விந்திய பர்வதத்திற்கும் சைவலபர்வதத்திற்கும் இடையினுள்ள பூமியை யவனுக்கு அளித்தனன். பிறகு அவன் அந்தப் பிரதேசத்திற்கு அரசனாகி, அழகிய அம் மலைச் சாரலில் ஈடற்ற அற்புதம் வாய்ந்த நகரமொன்றை நிர்மாணஞ்செய்து அதற்கு, 'மது மந்தம்' எனப் பெயர் சூட்டி, அதில் குடி புகுந்தனன். சுக்கிராசாரியாரைத் தனக்குப் புரோஹிதராக வரித்துக் கொண்டு, அவருடன் கூடி தேவலோசுத்தில் தேவராஜன் ஆட்சி புரிவது போல அந்நகரத்தை ஆண்டு வந்தனன்" என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக