முதற்பதிப்பு முகவுரை
வினாவிடை ரூபமாகப் பாரதம், பாகவதம் ஆகிய இவைகளை எழுதுவதாகத் தீர்மானித்து, முதலில் சிறந்ததும், ஐந்தாம் வேதம் என்று பெயர் பெற்றதுமாகிய மஹாபாரதம் வெளியிடப் பட்டிருக்கிறது. பாரதத்தை மூன்று பாகமாக எழுதுவதாகத் துணிந்து இப்புத்தகத்தில் முதல் ஐந்து பர்வங்கள் மாத்திரம் எழுதப்பட்டிருக்கின்றன. இவைகளுக்கு முன் எழுதப்பட்டுள்ள பீடிகையில், மஹாபாரதம் வெளிவந்தமாதிரி, பர்வங்களின் ஸாரம் முதலிய மஹாபாரதத்தைப் பற்றிப் பொது விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.
இவ்வாறு பாரதம் முதலிய நூல்களை எழுதத் துணிந்ததற்குக் காரணம் பின்வருமாறு. வெகு நாளாக என்மனதில் சிறுவர்களும் எளிதில் உணரும்படியாக, பாரதம் முதலியவைகளை தமிழில் எழுதவேண்டும் என்ற ஒரு ஆவலிருந்தது. இதற்கு முன்பாக அச்சிட்டு வெளிவந்திருக்கும் பாரதம் முதலியவைகள் வெகுவாக விரித்தும், வர்ணனை முதலியவைகள் நிறைந்தும் இருக்கின்றன. அவைகளிலிருந்து சிறுவர்கள் கதைகளின் ஸாரங்களை எளிதில் அறிவது கஷ்டம். மேலும், ஆதி பர்வம், உத்தரகாண்டம் முதலிய உற்பத்திகளைச் சொல்லும் பாகங்களில் சிறுவர்கள் படிக்காத வர்ணனைகளும் கதைகளும் இருக்கின்றன. ஆகவே இவைகளை விட்டுவிட்டு முக்கியமான விஷயங்களை மாத்திரம் தொகுத்து எழுதவேண்டியது எனக்கு அவசியமாகத் தோன்றியது. இவைகளை வேண்டியபடி தொகுத்து எளிய வசன ரூபமாக எழுதலாமா என்ற யோசனை வந்தபொழுது, அவ்வாறு எழுதத் தொடங்கினால் இவை மிக விரியும் என்று எண்ணி ஸாதாரண வசன ரூபமாக எழுதுவதிற் பயனில்லை என்று விட்டுவிட்டேன். இவ்வாறு இவைகளை எழுதும் வகை அறியாது இருக்கையில், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி மானேஜா மஹாஸ்ரீ திருநெல்வேலி ஏ. கிருஷ்ணஸ்வாமி அய்யர் அவர்களால் இயற்றப்பட்ட இராமாயண வினா விடையின் 'புரூப்'காகிதங்களை என்னிடம் கொடுத்து அவைகளைத் திருத்தும்படி சொன்னார். அந்த வினாவிடையில் யுத்த காண்டம் முடியத்தான் இருந்தது. அப்பொழுது உத்தர காண்டத்தையும் நான் வினா விடை ரூபமாகச் செய்து இராமாயண வினாவிடையைப் பூர்த்தி செய்வதாக ஒப்புக்கொண்டு அவ்வாறே செய்தேன். நான் எழுதிய உத்தரகாண்டத்தொடு ராமாயண வினாவிடை வெளி வந்தது. ( உத்தரகாண்டத்தைப்போல் மற்றைய காண்டங்களும் விஸ்தாரமாக எழுதப்பட்டு இராமாயண வினா விடையின் மூன்றாம் பதிப்பு கூட வெளிவந்திருக்கிறது) பாரதம் முதலியவைகளை எழுத ஆவல்கொண்டிருந்து, சுருக்கமாய் எழுதும் வழி தெரியாது மயங்கிக் கொண்டிருந்த எனக்கு உத்தரகாண்டம் எழுதிமுடித்ததும், பாரதம் முதலியவைகளையும் வினா விடை ரூபமாகவே எழுதலாம் என்ற துணிவு பிறந்தது. இதற்குள் பாரதத்தை வினா விடைரூபமாக எழுதினால் நலமாய் இருக்கும் என்று குப்புஸ்வாமி அய்யர் அவர்கள் தூண்ட இதை எழுதத் தொடங்கினேன்.
வினா விடை ரூபமாய்க் கதைகளை எடுத்துச் சொல்லுவதில், சிறுவர்களுக்கு இரண்டுவிதப் பிரயோஜனங்கள் உண்டு, சிறுவர்களது மனத்தை மாற்றி ஸாரத்தை அறியவொட்டாது. தடுக்கும் வர்ணனை முதலிய பாகங்களை வினா விடையில் விட்டுவிடலாம். ஆகையால் இந்த ரூபமாகக் சொல்லும் கதையின் ஸாரத்தை, சிறுவர்கள் எளிதில் அறிய இடமுண்டு. மேலும், வினா விடைரூபமாக ஒருகதையைச் சொல்லுங்கால் சிற்சில விடங்களில் கதையைத் தலைகீழாகச் சொல்லும்படியாக நேரிடும். அதில் முக்கிய விஷயங்கள் முன்னாகவும் மற்றைய விஷயங்கள் பின்னாகவும் வரும். இந்த ரூபமாக ஒரு கதையைப் படித்த சிறுவனுக்கு ஒழுங்காக அக்கதையைச் சொல்லும் திறம் வந்துவிட்டால் அவன் அக்கதையையும், அதன் முக்கிய பாகங்களையும் ஒருநாளும் மறக்கவே மாட்டான். வினா விடை ரூபமாகப்படித்த கதையை ஒழுங்காக மாற்றிச்சொல்வது சிறுவர்களது மனதை ஒழுங்குப் படுத்தும் ஒரு சிறந்த அப்பியாஸமாகும். இந்த ரூபமாகக் கதைகளை எழுதுவதில் இவ்விரண்டு உபயோகங்கள் இருப்பதால்தான் எனக்கு இவ்வாறு பாரதம் முதலிய கதைளை எழுதுவது நலம் என்ற உறுதி உண்டாயிற்று,
இந்த உறுதியோடு எழுதி வெளியிட்டிருக்கும் இப்புத்தகத்தின் சொற்குற்றம் பொருட்குற்றம் இருப்பினும் இருக்கும். அவைகளில் பெரும்பிழையாய்த் தோன்றுபவைகளை இரண்டாம் பதிப்பிற்கு ஸகாயமாகும்படி செய்யும் அன்பருக்கு நான் எக்காலத்தும் நன்றியறிதல் உடையவனாய் இருப்பேன். இப்புத்தகம் சிறுவர்களுக்கு ஆனந்த்தை விளைவிக்குமாயின், யான் எந்த எண்ணத்தோடு இதை எழுதத்தொடங்கினேனோ அந்த எண்ணம் பூர்த்தியானதாக எண்ணி மனத் திருப்தியோடு இருப்பேன்.
கடைசியாக இந்தப் புத்தகத்தை மிகுந்த ஜாக்கிரதையோடு அச்சிட்டு வெளிக்கொண்டு வந்திருக்கும் ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, மானேஜர் வி. குப்புஸ்வாமி அய்யர் அவர்களுக்கு நான் மிகுந்த நன்றியறிதலுடையவனாய் இருக்கிறேன்.
இரண்டாம் பதிப்பு முகவுரை.
இவ்விரண்டாம் பதிப்பில் சிற்சில சீர்திருத்தங்களும் ஒழுங்குகளும் புதிதாகச் செய்யப்பட்டுள்ளன. பீடிகையில் சிற்சில பாகங்கள் புதிதாக ஸம்ஸ்கிருத பாரதத்திற்கு ஏற்ப மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பர்வ ஆரம்பத்திலும் அவ்வவ்விடத்தில் வில்லிபுத்தூரார் எழுதியுள்ள காப்புச் செய்யுளை அமைக்கப்பட்டிருக்கிறது. இவைகள் மூலமாக வாசிப்போருக்கு கிருஷ்ண பரமாத்மாவின் திவ்ய சரிதம் வெளியாகி ஆனந்தத்தை விளைவிக்கும் என்ற கருத்தோடு இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. மேலும் முடிவில் எழுதியுள்ள அனுபந்தத்தில் தமிழ் பாரதத்திலுள்ள புதிய கதைகளை சுருக்கமாக எடுத்து எழுதப்பட்டிருக்கிறது.
ஆ.ஸீ.க.
🙏🙏
பதிலளிநீக்கு