புதன், 22 பிப்ரவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

சுலோகங்கள் 18ம் 19ம்

 

சுலோகம் 18

சூடாபதேந பரிக்ருஹ்ய தவோத்தரீயம்
மாலாமபி த்வதௌகைரதிவாஸ்ய தத்தாம் |
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே
ஸௌபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் || (18)

பாலார் கடற்றுயின்று பாரநெடுஞ் சோலைமலை
மேலாகி வேங்கடத்து மேவியே -- மாலானோன்
சேட்டு முலைக்கலிங்கஞ் செல்வியுன தைம்பாற்பொன்
சூட்டணிந்து மேன்மையுறுந் தொட்டு. .18

பதவுரை

கோதே -- கோதாய்! ரங்கபதி: ஏஷ: -- ரங்கபதியாகிய இவர்; தவ உத்தரீயம் -- உனது ஸ்தன உத்தரீயத்தையும்; த்வதௌகை: -- உன்னுடைய குழற்கற்றைகளால்; அதிவாஸ்ய -- வாஸனையேற்றி; தத்தாம் -- கொடுக்கப்பட்ட; மாலாமபி -- மாலையையும்; சூடாபதேந -- கிரீடத்தின் ஸ்தானமான சிரஸால்; பரிக்ருஹ்ய -- பெற்று (அணிந்து); ஸௌபாக்யஸம்பதபிஷேக மஹாதிகாரம் -- மங்களத்தன்மை, மங்களம் செய்யும் தன்மையாகிய ஸௌபாக்ய ஸம்பத்தில் முடிசூடப் பெறும் அரிய யோக்யதையை; ப்ராயேண -- மிகவும்; பிபர்த்தி -- தரிக்கிறார்.

கோதாய்! ரங்கப்ரபுவாகிய இவர் உன் திருமார்ப்புக்கச்சையையும், நீ சூடி வாசனை ஏற்றிக்கொடுத்த மாலையையும் சிரஸினால் க்ரஹித்து ஸௌபாக்ய ஸம்பத்தென்னும் ஐச்வர்யத்தில் முடிசூடப்பெறும் அரும்பெரும் அதிகாரத்தை நன்றாய் தரிக்கிறார்.

அவதாரிகை

(1) கந்யை ரூபத்தை வரிப்பாளென்பர். திவ்ய தேசத்தெம்பெருமான்கள் அழகுக்கடல்கள். மற்ற எம்பெருமான்களிலும் அழகுமிக்கோன் என்று சொல்லக்கூடியதால் ஆண்டாளால் மணாளனாக வரிக்கப்பட்டதை நேரில் தம் திருவாக்கால் பேசாமல் அதை வ்யஞ்ஜனம் செய்கிறார். ஆண்டாள் திருவாக்கினால், காளிதாஸர் அற்புதமாக ஈடுபட்டு வர்ணித்திருக்கும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட அழகுக்கடலைக் காட்டிலும், அழகரென்று அஸாதாரணமாகத் திருநாமம் பெற்ற திருமாலிருஞ்சோலைமாமாயனிலும், திருவேங்கடத்துக்கார்முகிலிலும், 'அரங்கம் தன்னுள் துயிலும் எங்கள் மாலே' என்று வரிக்கப்படும் மஹாபாக்யத்தை வர்ணிக்கிறார்.

(2) பெருமாள் ஸந்நிதியில் சிரஸில் பரிவட்டம் கட்டி மாலை சேர்த்து சிரஸில் ஸ்ரீசடாரியாகிய கிரீடத்தை நமக்குச் சாற்றுவர். இங்கே ஆண்டாள் கோயிலில் பெருமாள் சிரஸில் ஆண்டாள் திருமார்ப்க்கச்சைப் பரிவட்டமும், மாலையும் சாற்றப்படுகிறது. சிரஸிலிருந்து ஸர்வேச்வரத்தின் சிந்ஹமான கிரீடத்தைக் கழட்டிவிட்டு சிரஸில் இவ்விரண்டையும் பரிக்ரஹித்தார். இவை ஸௌபாக்யஸம்பதபிஷேகத்திற்குக் கிரீடமாயிற்று. ஸர்வேச்வரத் தன்மையைக் காட்டிலும் இது பெரிய அதிகாரம்.

தவ உத்தரீயம் -- உன் மேலாடையை; கோபிகள் கண்ணன் எழுந்தருளியதும் தங்கள் ஸ்தனகுங்குமங்களால் முத்திரைபோட்ட உத்திரீயங்களால் ஆத்ம்பந்துவான காந்தனுக்கு ஆஸனம் ஸம்ர்ப்பிவித்தார்கள் என்றார் சுகர். கோதையின் ஸ்தன சந்தனம் கலந்த ஆடையை.

த்வதௌகை:அதிவாஸ்ய -- உன்னுடைய குழற்கற்றைகளால் மணமூட்டி; கூந்தல் முழுவதின் முழுவாஸனையையும் மாலையிலேற்றி. பன்மையால் குழலில் ஓரிடமும் பாக்கியில்லாமல் சூடி என்று காட்டுகிறார்.

தத்தாம் -- கொடுக்கப்பட்ட; மாலாமபி -- மாலையையும்; சூடாபதேந -- சிகைஸ்தானத்தால்;

பரிக்ருஹ்ய -- ஆதரத்துடன் க்ரஹித்து; "பரிக்ருஹ்ய" என்பது மணம்புரிதலையும் சொல்லும். விவாஹ ஸந்தர்ப்பத்தையும் விளக்குகிறது.

கோதே -- கோதாய்! ரங்கபதியையும் கோதையையும் "ரங்கபதிரேஷ கோதே" என்று ஓரடியில் ஜோடி சேர்த்தார்.

ஏஷ ரங்கபதி -- இந்த ரங்கபதி; விவஸைப்ரகரணம் ஸ்வாமிக்கு எதிரில் ஸாக்ஷாத்காரமாகிறது. 'பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழிலரங்கம் தன்னுள் துயிலும் எங்கள் மாலே' என்று வரிக்கப்பட்ட இவர்.

ஸௌபாக்யஸம்பதபிஷேகமஹாதிகாரம் -- ஸர்வேச்வரத்வாதிகாரத்திலும் பெரியதோர் ஸௌபாக்யச்வைர்யாதிகாரம். ஸமரான பெருமாள்களிலும் மஹத்தான ஓரதிகாரம். தமயந்தி ஸ்வயம்வரத்தில் பல தேவர்கள் கூடினார்கள். இங்கே ஒரே தேவர் பல ரூபங்களோடு பலராகக் கூடினர். எம்பெருமான்கள் கூட்டத்திலும் 'எங்கள் மாலே' என்று மஹாவ்யாமோஹத்துடன் வரிக்கப்படும் ரஹாஸௌபாக்யம்.

ப்ராயேண -- அதிகமாக; பெருமாள்களுக்குள் தாரதம்யத்தைஐ நான் அறுதியிடேன். உத்ப்ரேக்ஷையாகக் கவிபாடுவது மட்டுமே தேவிமார் பேசலாம்.

சுலோகம் 19

துங்கைரக்ருத்ரிமகிர: ஸ்வயமுத்தமாங்கை:
யம் ஸர்வகந்த இதி ஸாதரமுத்வஹந்தி |
ஆமோதமந்யமதிகச்சதி மாலிகாபி:
ஸோபி த்வதீயகுடிலாளகவாஸிதாபி: || .19.

தேசுறுநி னண்பன் றிருவே திகழ்சருவ
வாசனையா னென்று மறையோத -- மாசற நீ
சூடிக் களைந்த மலர்த் தொங்கன் மிகு கந்தமெனக்
கோடிக்குந் தன்முடிமேற் கொண்டு. .19.

பதவுரை

அக்ருத்ரிமகிர: -- ஒருவராலும் செய்யப்படாத ச்ருதிகள்; துங்கை: -- உயர்ந்த; உத்தமாங்கை: -- சிரஸுகளால் (உபநிஷத்துகளால்); யம் -- எவனை; ஸர்வகந்த இதி -- எல்லா நற்கந்தங்களையுமுடையவனென்று; ஸாதரம் -- ப்ரியத்தோடு; உத்வஹந்தி -- தாங்குகின்றனவோ; (விவாஹம் செய்துகொள்ளுகிறார்களோ, மாலையிடுகிறார்களோ,); ஸோபி -- அவனும்; த்வதீயகுடிலாள கவாஸிதாபி: -- உன் சுருட்டைக் குழல்களால் மணமேற்றிய; மாலிகாபி: -- மாலைகளால்; ஆமோதம் அந்யம் -- ஓர் புதிய விலக்ஷண வாஸனையை; அபிகச்சதி -- பெறுகிறார் (அனுபவிக்கிறார்)

அபௌருஷேயமான ச்ருதிகள் தங்கள் உன்னதமான சிரஸுகளால் எவனை 'ஸர்வகந்தன்' என்று தாங்குகின்றனவோ (மாலையிடுகின்றனவோ), அவனும் உன்னுடைய வக்ரமான குந்தளங்களால் மணமூட்டப்பட்ட மாலைகளால் ஓர் 'புதிய மணத்தை'ப் பெறுகிறான். (உன் மாலை மணத்தைப் பெற்று உன்னை மணம் புரிந்து திருமால் ஓர் புதுமணம் பெறுகிறார்.)

அவ: -- எல்லா ஸுகந்தங்களையுடையவனென்று ச்ருதிகள் உன் நாயகன் உத்தம கந்தத்தைப் புகழ்ந்து தங்கள் தலைகளால் அந்த வாசனையோடு கூடினவனைச் சூடி வாஸனை பெறுகின்றன. ச்ருதிசூடைகள் ஸர்வகந்தனைச் சூடுகின்றன. எவனை அனந்த ச்ருதிதேவிகள் சிரஸால் ஆதரத்தோடு சூடுகின்றனவோ! ஸர்வகந்தத்திற்குள்ளகப்படாத கந்தமுண்டோ? உண்டு.

துங்கை -- ச்ருதிதேவிகளின் சிரஸுகள் உபநிஷத்துக்கள். உபநிஷத்துக்களிலும் உன்னதமானதுமுண்டோ? ஸர்வோத்தங்களை எட்டி அவனருகிலுள்ள உபநிஷத்துக்களும் ஸர்வோத்தங்கள்.

அக்ருர்த்திமகிர: -- ஒருவராலும் செய்யப்படாமல் தாமாக நித்யமாயுள்ள ச்ருதிகளான வாக்குதேவிகள். கோதை ஸ்துதியில், கோதை கல்யாணத்தில், எல்லாம் இயற்கையானதேயல்லாது, செயற்கைப் பொருளே இல்லை.

ஸ்வயம் -- ச்ருதிதேவிகள் ஸ்வயமாக பூர்ணபாவத்தோடு உன் மணாளனிடம் நாயகப்ரீதி செய்கிறார்கள்.

உத்தமாங்கை: -- ச்ருதிதேவிமாரான அபூர்வ பரிமளமுடைய ச்ருதிதேவிகளான பெண்கள் தங்கள் சிரஸில் ஸர்வகந்தனென்று உன் மணாளனைச் சுமந்து அவன் பரிமளத்தைத் தங்கள் சிரஸில் ஏற்றுகிறார்கள்.

உத்தமாங்கை: -- சிரஸுகளால், சுடர்மிகு சிரஸுகளால். யம் -- யவனை

ஸர்வகந்த: இதி - எல்லா ஸுகந்தங்களையுமுடையவனென்று. 'ஸர்வகந்த:ஸர்வரஸ' என்று சாண்டில்யோபநிஷத்து. சாண்டில்யர் பக்திஸூத்ரங்களியற்றியவர். பஞ்சராத்ரத்தில் அர்ச்சைப் பெருமாள்களின் மஹிமையை விஸ்தரித்திருக்கிறார். ச்ருதியின் பதத்தையே இங்கே அமைக்கிறார்.

ஸாதரம் -- 'ஸர்வகந்த:' என்பதை அந்த உபநிஷத்து வாக்கியம் திருப்பித் திருப்பிப் பேசுகிறது. அதனால் அந்த கந்தத்தில் ச்ருதியின் ஆதரம் தோற்றுகிறது. 'ஆதராதலோப:' என்கிற ஸூத்ரத்தின் பாஷ்யத்தை இங்கே நினைக்கிறார். அப்யாஸத்தால் தாத்பர்யமதிகம்.

உத்வஹந்தி -- உத்வாஹமென்பது விவாஹத்தையும் சொல்லும். ச்ருதிதேவிகள் உன் மணாளனை மணம் புரிகிறார்கள். எனவே வாஸனைமாலையாகத் தலையில் சூடுகிறார்களோ

ஸோபி -- அந்த ஸுகந்தக் களஞ்சியமான பெருமாளும்

அதீயகுடிலாளக வாஸிதாபி: -- உன்னுடைய சுருட்டைக் குழல்களால் மணமேற்றப்பட்ட. ஆர்ஜவமே வடிவுகொண்ட உனக்குக் குழல்களொன்றுதான் வக்ரகுணமுடையது. அதுவும் அழகு ஸ்வபாவத்தால். 'ஸ்வபாவ வக்ராண்யௌகாநி தாஸாம்' என்பர். மயிர்கள் சுருண்டிருப்பதுபோல வாசனையும் சுருண்டு சுருண்டு வீசுகிறது. (அகிற்புகை சுருள்வதுபோல)

மாலிகாபி -- மாலைகளால். 'மாலைகளே மாலிகைகள்'

ஸ்வார்தம் -- நீ சூடினாலும், மாலைகள் தேவார்ஹமாக தேவபோக்யமான மாலைகளாகவே இருக்கின்றன.

அந்யம் -- எல்லாமென்பதிலும் அகப்படாத ஓர் புதிய

ஆமோதம் -- வாஸனையை

அதிகச்சதி -- அடைகிறார், அநுபவிக்கிறார். பரிமளரங்கனிலும் வாசனாரஸிகனுண்டோ? (19)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக