புதன், 15 ஏப்ரல், 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 10

 

ஜீவாத்மாக்களும் இவ்வகைப்பட்டன. இரண்டாவது 5பரிணாமி, நித்யம் ; ப்ரக்ருதி, காலம் முதலியவைகள் இதைச் சேர்ந்தன.

ப்ரக்ருதியாவது ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதிவீ முதலிய விகாரங்களை அடைந்துகொண்டு இவைகளுக்கெல்லாம் மூலகாரணமான வஸ்து. உலகில் காணப்படும் எல்லாப் பதார்த்தங்களும் இதன் விகாரங்களே யாகும். ப்ரக்ருதி-ஸ்வரூபம் எப்போதும் அநுவர்த்திக்கும்; அதன் விகாரங்கள் அவ்வப்போது உண்டாய் சிலகாலமிருந்து பிறகு கழியும். அவைகளைக் கொண்டு காரியங்கள் நடக்கிறபடியால் அவைகளெல்லாம் ஸத்யம். ஆனால் ஸ்வப்னத்தில் ஒரு மனிதன் பொன் வெள்ளி முதலியவைகளைக் காண்பதாகவும், அவைகளைக்கொண்டு காப்பு, கடுக்கன் முதலி யவை செய்து தரிப்பதாகவும் காண்கிறான். இப்படி ஸ்வப்னத்தில் காணப்பட்ட வெள்ளி முதலானவைகளைக் கொண்டு நகை செய்வது தரிப்பது முதலிய காரியங்கள் நடக்கிறபடியால் அவை ஸத்யமாகத் தடையென்ன என்றால், ஸ்வப்நகாலத்தில் அவைகளால் சில கார்யங்கள் நடந்ததாகக் கண்டாலும், தூங்கி எழுந்ததும், தன் கையிலும் காதிலும் பூண்டு கொண்டதாகக் கனவு கண்ட காப்பு கடுக்கன் முதலியவைகள் காணப்படுவதில்லை. ஸ்வப்நம் கண்டேன், ஒன்றுமில்லை என்று அந்த வஸ்துக்களுக்கு இல்லாமை காண்கிறபடியால் ஸ்வப்நத்தில் கண்ட வஸ்துக்களும் அதனால் உண்டானதாகக் கண்ட காரியங்களும் பொய்யாகின்றன. *ஜாக்ரத்தசையிலும் நடுப்பகலில் கானல் நீரைக்கண்டு, பின்பு கிட்டப்போய்ப் பார்த்தால், இது ஜலமன்று நாம் ப்ரமித்தோம் என்று புத்தி உண்டாகிறபடியால் இது மித்யை. உண்மையான நதீ ஜலத்தில் **ஜாக்ரத்தசையில் நாம் ஸ்நாநபானம் செய்வதாலும், செய்தது பொய்யென்று பின்னால் தோன்றாதபடியாலும், ப்ரத்யக்ஷத்தால் காணப்படுகிற சராசர ரூபமான ப்ரபஞ்சம் ஒன்றுமில்லை என்கிற ஞானம் உண்டாகாமையாலும் இவை உண்மையாக உள்ளவை. இங்கு இது அறியத்தக்கது-சில இடங்களில் இல்லாத வஸ்துக்கள் தோன்றுகின்றன. சில இடங்களில் இருக்கிற வஸ்துத்தான் தோன்றுகிறது. ஆகையால் ஒரு வஸ்து தோன்றுகிறது என்கிற இவ்வளவு மாத்திரத்தைக் கொண்டு வஸ்து உண்மையாகவே உள்ளது என்று நிச்சயிக்கக் கூடாது. கண்டபின் கிட்டப் போய்ப்பார்த்து, வஸ்து அங்கே இல்லாமற்போனால், 'வஸ்து இல்லை, இருப்பதாக நாம் ப்ரமித்தோம்' என்று ஞானமுண்டானால் முன் பிறந்த ஞானம் ப்ரமமென்றும், கண்டது மாத்ரமேயொழிய இங்கே ஒன்றுமில்லை என்று ஞானமுண்டாகாதபோது முன்புண்டான ஞானம் யதார்த்த(यथार्थः)மென்றும் நிச்சயித்து, இவைகளைக் கொண்டு வஸ்து உண்டு இல்லை என்று நிச்சயிக்கவேண்டும்

ஸ்வப்னத்தில் கண்ட வஸ்து தூங்கி எழுந்த பின் கண்டதொழிய ஒன்றுமில்லை யென்றும், பாலைவனத்தில் தோன்றியது ஜலம் இல்லை என்று உறுதியாகத் தெரிகிறபடி யாலும், முதலிலுண்டான ஞானம் ப்ரமமாய், அதில் தோன்றிய வஸ்துவும் அஸத்யமாகிறது. ப்ரத்யக்ஷத்தில் காண்கிற ப்ரபஞ்சத்திலுள்ள வஸ்துக்களில் இவை ஒன்றுமில்லை என்கிற புத்தியுண்டாகக் காணாமையால் இந்த ப்ரத்யக்ஷம் யதார்த்தமாகி அதில் காணும் வஸ்துக்களும் ஸத்யமாக இருக்கின்றன. இது ஸத்யம், இது மித்யை, என்று அறிவதற்கு இது வழி.

சராசரரூபமான உலகம் ப்ரத்யக்ஷத்தால் அஸத்யம் என்று ஏற்படாவிட்டாலும், ச்ருதியில் 'ப்ரபஞ்சமொன்றும் ஸத்யமன்று என்று சொல்லப் படுகிறபடியால், இந்த ப்ரபஞ்சம் அஸத்யம் என்று ஒப்புக்கொள்ள வேண்டாவோ என்றால் ஸர்வஸம்மதமான ச்ருதிகளில் அப்படிச் சொல்லியிருப்பதாகக் காண வில்லை. மேலும் ப்ரத்யக்ஷ விருத்தமான விஷயத்தை ச்ருதி சொல்லவும் மாட்டாது. மேல்பார்வையில் சில ச்ருதிகளுக்கு அப்படி அர்த்தம் தோன்றினாலும், ப்ரத்யக்ஷத்திற்கு விரோதமில்லாமல் அவைகளுக்கு அர்த்தம் சொல்ல முடியுமாயிருக்க, ப்ரத்யக்ஷத்திற்கு விரோதமாக அர்த்தம் செய்வது உசிதமன்று

**जाग्रदशा –– விழித்துக் கொண்டிருக்கும் காலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக