வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

அந்த நாள்போலவே இந்நாளிலும்





நேற்றே இதுவும் சேர்ந்து வந்திருக்க வேண்டியது. ஆனால் நேற்று ப்ளாகின் விசித்திரமான சில சிக்கல்களால் அது முடியாமல் போயிற்று.

இந்நாளில் அட்டையில் படங்கள் எப்படி வந்தாலும் உள்ளே சில நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இங்கே மாதிரிக்கு ஒரிரு ஓவியங்கள். தந்தை வழியில் வெற்றிநடை போடுபவர் கைவண்ணம்!

அந்த நாள்

இன்று பளபள வார்னிஷ் அட்டையில் யாராவது நடிகை படம் ஒன்றுடன், (அந்த நாளில் இந்தியாவைப் பற்றி மேலை நாடுகளில், கோவணம் மட்டும் கட்டிக் கொண்டு அலையும் ஆதிவாசிகள் நாடு என்று ஒரு எண்ணம் நிலவியதாமே, அதை உண்மையாக்க போனால் போகிறது என்று ஒரு கைக்குட்டையை ஆடையாக அணிந்த கோலத்தில்) வெளிவரும் பத்திரிகை களையே பார்த்து வரும் கண்களுக்கு ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று அந்த நாள் பத்திரிகைகளின் சில அட்டைப் படங்கள் இங்கே !



















திங்கள், 24 ஆகஸ்ட், 2009

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

இன்று தினமணியில் படித்து இரசித்தது


நன்றி; தினமணி.


மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்


அந்தக் காலத்திய மாம்பலத்தில் வினோதமாக சமையல் அறைக்கும் "டைம் ஷேர்' இருந்தது. ஒரு குடும்பம் சமைத்து முடித்து விட்டுப் போன பின்புதான் இன்னொரு குடும்பம்

மாம்பலம் என்ற கிராமத்தில் என்று தொடங்கி கதை, கட்டுரை எழுதினால் வாசகர்களே ஒருவேளை அதை ஒரு கற்பனை இடம் என்றோ, எங்கோ ஒரு கிராமம் என்றோ நினைக்கலாம். சுமார் 80 வருடங்களுக்கு முன்பு (1923) அன்று மாம்பலம் என்று அழைக்கப்பட்ட இன்றைய தி. நகரில் அங்கும் இங்குமாகச் சில வீடுகளும் கடைகளும் மட்டும்தான் இருந்தன. இன்று?

இப்போதைய தி. நகரின் தெற்குப் பகுதி 1916 வாக்கில் பெரிய வயல்வெளியாக இருந்தது. வடமேற்குப் பகுதி நீண்ட ஏரி. அப்போது மாம்பலம்தான். தியாகராய நகர் என்று பெயர் மாற்றப்பட்டது பிறகுதான். அப்பொழுது மாம்பலத்தில் சுப்ரமணிய ஐயர் என்ற ஒரு ஸ்டேஷன் மாஸ்டருக்குச் சொந்தமாக சுமார் நூறு ஏக்கர் நிலம் இருந்தது. அதாவது கணக்குப் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்போதைய மாம்பலம் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பர்க்கிட் ரோடு தொடங்கி, வெங்கட்நாராயணா சாலையில் திரும்பி மவுண்ட் ரோட்டைத் தாண்டி தெற்கு உஸ்மான் சாலையில் முடியும் செவ்வகம் எவ்வளவு விஸ்தீரணமானது என்று.

அவர் நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருந்தார். குத்தகை வரவு மிகவும் குறைவு. அதை வசூலிக்கப் பாடுபட வேண்டியதுடன் அரசாங்கத்திற்கு நிலவரி கட்ட வேண்டியது இன்னொரு சங்கடமாக இருந்தது. குத்தகை வரவும் நிலவரியும் ஏறத்தாழ சரிசமம் என்பதனால், இதில் லாபம் இல்லை என்று நினைத்த அவர் அந்த மிகப் பெரிய நிலப்பரப்பை விற்றுவிட்டார்.

இன்று பர்க்கிட் ரோடு தொடங்கி நான் மேலே சொன்ன எல்லைகளைக் கொண்ட இடத்தின் மனை மதிப்பு பல நூறு கோடி ரூபாய்கள். இது பொன் விளையும் பூமி என்று அன்று தீர்க்க தரிசனமாக உணர்ந்திருந்தால் நிலத்தை அப்போது விற்றிருப்பாரா? இப்போது விற்றால் அவருக்கு எவ்வளவு ஆயிரம் கோடிகள் தேறும் என்று நினைத்துப் பாருங்கள். மலைப்பாக இருக்கும்.

இன்று வாழ்க்கை முறை பெரிதும் மாறிவிட்டது. நவீன வாழ்க்கையில் இனி சமையல் அறை தேவைப்படாது போலிருக்கிறது. ஃப்ரிட்ஜ், மைக்ரோ அவண் மட்டும் போதும். அவற்றை டைனிங் ஹாலில் வைத்துவிடலாம். ஆனால் அந்தக் காலத்திய மாம்பலத்தில் வினோதமாக சமையல் அறைக்கும் "டைம் ஷேர்' இருந்தது. எங்கள் அந்தக் கால வாடகை வீட்டு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அப்போது சென்னையிலும் பிற ஊர்களைப் போலவே அநேகமாக எல்லா வீடுகளும் சொந்த உபயோகத்திற்காகவே கட்டப்பட்டன. வீடு ஒரு முதலீடு, கட்டி வாடகைக்கு வீடுகள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது.

வீட்டுக்காரர்கள் நல்லவர்களாக இருந்தாலும் குடித்தனக்காரர்களுக்கு வீடுகள் வசதியாக அமையவில்லை. பாதுகாப்பு, பேச்சுத் துணை அல்லது உரியவர்கள் தொலை தூரத்திற்குச் சென்றுவிட்டார்கள் என்ற காரணங்களினால் சிறிய வீடுகளோ அல்லது பெரிய வீட்டின் ஒரு பகுதியோ வாடகைக்குக் கிடைத்து வந்தது. எங்கள் வீட்டில் ஒரே ஒரு சமையல் அறைதான் இருந்தது. ஒரு குடும்பம் சமைத்து முடித்து விட்டுப் போன பின்புதான் இன்னொரு குடும்பம் சமையல் அறையைப் பயன்படுத்த முடியும். இரு குடும்பத்தினரும் தமக்குள் அனுசரித்துக் கொண்டு, முறை வைத்து சமையல் செய்வார்கள். ஆக ஒற்றுமை தேவைப்பட்ட, கடிகாரம் தேவைப்பட்ட, இடமாக இருந்தது சமையல் அறை.

தி. நகர் உருவான காலகட்டத்தில் மாம்பலம் ஹைரோடு மேற்கு எல்லை, மவுண்ட்ரோடு கிழக்கு எல்லை, வடக்கு எல்லை பசுல்லா ரோடு, தெற்கு எல்லை பர்க்கிட் ரோடு. பொதுவாக எல்லா நகரங்களிலும் கிழக்குப் பகுதி வேகமாக வளரும் என்பார்கள். தி.நகர் விதிவிலக்கு. இங்கே தெற்குப் பகுதியே இன்றும் வேகமாக வளர்ந்து வருகிறது. காரணம் பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், சிறிய, பெரிய கடைகள் தெற்கேதான் இருக்கின்றன.

மாம்பலத்தின் இரண்டு முக்கிய தெருக்கள் கோபதி நாராயணசாமி செட்டி சாலை மற்றும் வெங்கட் நாராயணா சாலை. இருபுறமும் மரங்கள், பெரிய பெரிய பங்களாக்கள் என்று நான் என் மாணவப் பருவத்தில் அங்கே கண்ட காட்சி இப்பொழுது பெரிதும் மாறிவிட்டது. பேனோசோனிக், சோனி போன்ற பெரிய நிறுவனங்களின் ஷோரூம்கள், கம்ப்யூட்டர் நிறுவனக் கட்டடங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் என்று அந்த இருபெரும் சாலைகளும் தம் முகத்தை அதி நாகரீகமாக ஒப்பனை செய்து கொண்டு வருகின்றன.

பார்க் ஷெராட்டன் ஓட்டல் எதிரே ஆர்ச் பிஷப் மத்தியாஸ் அவென்யூவில் அப்பொழுது விற்கப்பட்ட மனைகளின் குறைந்தபட்ச விஸ்தீரணம் எட்டு கிரவுண்ட். இப்பொழுது தி. நகரில் அரை கிரவுண்ட் தனி மனை கிடைப்பதே கூடக் கஷ்டம்.

இந்த நிலையில் இன்னமும் ஜி.என். செட்டி தெருவில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பங்களா ஒன்று அப்படியே இருக்கிறது. சொத்து கைமாறவில்லை. மனை பிரிக்கப்படவில்லை. கட்டடமும் பொலிவுடன், வலுவுடன் இருக்கிறது. அதுதான் ஜெயின் கோயில் அருகே உள்ள தொழிலதிபர் மாமன் மாப்பிள்ளை குடும்பத்து பங்களா.

திரு. ரவி மாமன் அங்கு குடியிருந்தார். அவரது தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது கட்டடம் கட்ட ஆன செலவு சதுர அடிக்கு வெறும் எட்டணா மட்டுமே என்றார். மனை, கட்டுமானம் உள்பட மாமன் மாப்பிள்ளை 1923-ல் செய்த செலவு ஐயாயிரம் ரூபாய். உத்தேசமாக ஒரு ஏக்கர் மனைக்கு இரண்டாயிரம் ரூபாய், ஐயாயிரம் சதுர அடி கட்டடம் கட்டச் செலவு மூவாயிரம் ரூபாய். நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை. இன்று (2008) அந்தப் பகுதியில் ஃப்ளாட் விற்பனை சதுர அடிக்கு இருபதாயிரம் ரூபாய் என்று உயர்ந்துவிட்டது.

இப்பொழுது மிக முக்கியமான கடைத்தெருவாகி விட்ட ரங்கநாதன் தெருவும் அந்தக் காலத்தில் ஒரு குடித்தனப் பகுதியே. எழுபதுகளில்தான் ரங்கநாதன் தெரு ஒரு கடைத் தெருவாக மாறும் அவலம் தொடங்கியது. அன்றைய மாம்பலத்தில், பாண்டி பஜார் பகுதியில், அப்போதைய ராஜகுமாரி தியேட்டர் எதிரில், ஒரு எண்ணெய் ஆட்டும் செக்கு இருந்தது.

இன்று தி. நகரின் பரபரப்பான பகுதி என்று தெற்கு உஸ்மான் ரோடினைச் சொல்லலாம். மிகவும் நெரிசலான பகுதி மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்லும் ரங்கநாதன் தெரு. அதற்குக் காரணம் கடைகளும் மற்றும் நடைபாதை வியாபாரிகளும்தான். அதுமட்டுமல்ல. மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து இறங்கி வருபவர்களும் அங்கு செல்பவர்களும் இந்த இரண்டு தெருக்களையும் பயன்படுத்துகிறார்கள். இதெல்லாம் சமீப கால மாறுதல்கள். இனி ஏற்படக்கூடிய மாற்றம் குடியிருப்புப் பகுதிகள் வேகமாக வணிகப் பகுதியாக மாறுவதே. டி. நகர் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடும்பொழுது அது டிரேட் நகர் என்று மாறக்கூடிய அளவுக்கு இங்கே வணிகம் வளர்ந்து வருகிறது.

---------------------------------------------------------------------------------------------------

உலகிலேயே நீளமான கடற்கரை மெரினாதான் என்பதெல்லாம் பொய். 12 கிலோ மீட்டர் நீளமுள்ள மெரினா கடற்கரையின் வளர்ச்சிக்கு முழு முதற் காரணமாக அமைந்தவர் சென்னையில் 1881 முதல் 1886 வரை கவர்னராக இருந்த மெலின் ஸ்டுவார்ட் எல்ஃபின்ஸ்டன் கிராண்ட்-டஃப் என்பவர்தான்.

1870-ல் ஒரு சுற்றுலாப் பயணியாக சென்னைக்கு வந்த கிராண்ட்-டஃப், புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிரே கடலையும், கடற்கரையையும் பார்த்து அசந்து விட்டார். கடற்கரையில் கண்ணெட்டிய தூரம் காலாற நடந்து நடந்து மகிழ்ந்தாராம் அவர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தானே சென்னைக்கு கவர்னராக வரப்போகிறோம் என்று அப்போது அவர் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.

சென்னையில் கவர்னராக ஐந்து ஆண்டுகள் இருந்த கிராண்ட்-டஃபின் ஒரே சாதனை, கடற்கரையை ஒட்டி சாலை அமைத்து, அந்தக் கடற்கரைக்கு மெரினா என்று பெயரையும் சூட்டியதுதான். மெரினா என்று ஏன் பெயர் வைத்தார்? யாருக்குத் தெரியும் -அவரைத்தான் கேட்க வேண்டும்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மெரினா கடற்கரை பெரும் பங்கு வகித்தது. திருவல்லிக்கேணியை அடுத்த கடற்கரையில் பால கங்காதரத் திலகர் சொற்பொழிவு நடத்தியது முதல் அந்த இடம் திலகர் கட்டம் என்று அழைக்கப்பட்டது. அங்கே, காந்திஜி, பாரதியார், ஜவஹர்லால் நேரு என்று சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் பலரும் உரையாற்றி இருக்கிறார்கள். சரித்திரப் பிரசித்தி பெற்ற "திலகர் கட்டம்' ஏன் பாதுகாக்கப்படவில்லை என்று அரசைத்தான் கேட்க வேண்டும்.

மெரினா கடற்கரைச் சாலையின் மறுபுறம், இந்திய ஐரோப்பியக் கட்டடக் கலையின் எடுத்துக்காட்டாகத் திகழும் மாநிலக் கல்லூரி, பொதுப்பணித்துறை அலுவலகம், சென்னை பல்கலைக்கழகம் என்று வரிசையாக பல ஆங்கிலேயர் காலத்துக் கட்டடங்கள்.

117 ஏக்கர் நிலப்பரப்பில் 1770-ல், அன்றைய கர்னாடிக் நவாபான முகமது அலி வாலாஜாவுக்காக பால் பென்பீஸ்ட் என்கிற பொறியியல் நிபுணரால் கட்டப்பட்டதுதான் சேப்பாக்கம் அரண்மனை. கடற்கரைச் சாலையிலிருந்து இன்றைய அண்ணா சாலை வரை உள்ள நிலப்பரப்பு அந்த அரண்மனைக்கு சொந்தமாக இருந்தது. நவாபுக்குக் கடன் கொடுத்துக் கடன் கொடுத்து அவரைக் கடனாளியாக்கி, வெறும் ரூ. 5,80,000-க்கு 1855-ல் பிரிட்டிஷ் அரசே அந்த இடத்தை ஏலத்தில் எடுத்துக் கொண்டுவிட்டது!

இன்னும் காலனி ஆட்சியின், காலடிச் சுவடுகளாகக் கடலின் சீற்றங்களை எல்லாம் மீறித் தொடர்கின்றன இந்தக் கட்டடங்கள்! மெரினா மகத்துவமும்தான்.....!

~ ஆசிரியர்

























22.8.2009 ஸ்ரீமத் ஆண்டவன் மைஸூர் ஆண்டவன் சதமான திருநக்ஷத்ர தினத்தன்று ஸ்ரீமத் ஆண்டவன் திருக்கரங்களால் வெளியிடப் பெற்ற புத்தகங்கள் இவை. ஸம்ப்ரதாய விஷயங்கள் பற்றி பல அருமையான கட்டுரைகள் அடங்கிய ஒரு சிறப்பு மலரும் (விலை ரூ.250) வெளியிடப் பட்டது. ஸ்ரீமத் ஆண்டவன் இயற்றிய "கமலா தண்டகம்" ஸ்தோத்திரம் திருமதி ஜானகி ராமானுஜம் அவர்கள் பாடி இசைக் குறுந்தகடாக வெளியிடப் பட்டது.