திங்கள், 6 மார்ச், 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம் --- உத்தர காண்டம் 39

 

எழுபத்தியைந்தாவது ஸர்க்கம்

(சத்ருக்னன் முன்னதாகச் சேனையை யனுப்பிப் பிறகு தான் பிரயாணப்படுதல்.)

                இப்படிக் கூறிய ஸ்ரீராமன், மறுபடியும் சத்ருக்னனைப் புகழ்ந்து பின்வருமாறு கூறினான்.- “ஹே சத்ருக்ன! உன்னுடன், நாலாயிரம் குதிரை வீரர்களும், இரண்டாயிரம் ரதிகர்களும், உயர்ந்த யானை வீரர்கள் நூறு பேரும், உடன் வரட்டும். அதற்கனுகுணமாக ஸம்பாரங்களும் கூடவே செல்லட்டும். அவர்கள் ஒவ்வொருவரும் உத்ஸாஹப் படுத்தப்பட்டவர்களாகவே எப்பொழுதும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களால் தலைவனுக்கு நன்மை யுண்டாகும். மேலும் நீ அவ்வீரர்களை முன்னாடியே ரிஷிகளுடன் அனுப்பி வைக்கவும். அவர்கள் கங்கையைக் கடந்து அக்கரை சேர்ந்து விடவேண்டும். அவர்கள் யுத்தத்திற்காக வருகிறார் களென்பதை அவ்வஸுரன் அறிந்து கொள்ளக் கூடாது. பிறகு நீ தனியாகச் சென்று அவர்களுடன் கூடவேண்டும். மழை காலம் வந்தவுடனே அரசர்கள் யுத்தத்திற்குப் புறப்பட மாட்டார்கள் என்று எண்ணிய அவன் அநவதானமாகயிருப்பான். அது ஸமயம் படைகளை அவனறியாவண்ணம் அம் மதுவனத்தில் புகவிட்டு, அவன் ஆயுதமின்றி, இரைதேட வெளிச் சென்று திரும்பும் பொழுது, அவனது கோட்டை வாயிலில் நீ தனுஷ்பாணியாக நின்று கொண்டு, போருக் கழைத்து வெல்லவும்- என்று.

                இதைக் கேட்ட சத்ருக்னன் அவ்வாறே படைகளை. ஒரு மாதம் முன்பாகவே அனுப்பி வைத்து, ரிஷிகளின் ஆலோசனைப்படியே படைகளை தங்கி வஸிக்குமாறு கூறினான்.

                பிறகு சத்ருக்னன், கௌஸல்யை, சுமித்திரை, கைகேயி இவர்களையும் வணங்கினான். ஸ்ரீராமன், பாதன், லக்ஷ்மணன். வளிஷ்டர் முதலியவர்களையும் வலம் வந்து வணங்கி, 'ஒரு மாத காலம் கழிந்த பின்பே தானும் புறப்பட்டான்.

எழுபத்தியாறாவது ஸர்க்கம்

(சத்ருக்னன் மதுவனம் செல்லப் பிரயாணப்படுவது.]

                இவ்வாறு புறப்பட்ட சத்ருக்னன். வேகமாகச் சென்று வழியில் இரண்டு இராத்ரி சுழித்து, மூன்றவது தினம் மிகப் பரிசுத்தமான வால்மீகி முனிவரது ஆச்ரமம் சேர்ந்தான். அங்கு சென்று அவரை வணங்கி, கூப்பிய கைகளை யுடையவனாய்ப் பின்வருமாறு விண்பை்பித்தான் - முளிவரரே! அடியேன், ஸ்ரீராமபிரானது கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டு வந்துள்ளேன். எனவே இன்றிரவு இங்கு தங்கி நாளைக் காலையில் புறப்பட்டுச் செல்ல விரும்புகிறேன். அனுமதி யளிக்க வேண்டும், என்று.

                இதைக் கேட்ட வால்மீகி முனிவர். சத்ருக்னனைப் பார்த்து- "சத்ருக்ன, உனக்கு நல்வரவு. இந்த ஆச்ரமமும் அதன் பூமியும் ராகவர்களுடையதே, எனதன்று. நீ இங்கு தங்கி எனது ஆதியத்தைப் பெற்றுக் கொள்ளவும்" என்று கூறி, நாநாவித பலோபசாரங்களால் உபசரித்தார். அவ்வுபசாரங்களை ஸந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டான் சத்ருக்னன்.

                பிறகு அவன் வால்மீகி முனிவரைப் பார்த்து- “மஹர்ஷே! இதோ இவ்வாச்ரமத்திற்கருகே, யாகசாலை யொன்று காணப்படுகிறதே,  இஃது எவருடையது? என்று கேழ்க்க வால்மீகி (கல்மாஷ பாதன் கதையை) கூறுகிறார்.

“சத்ருக்ன! உங்கள் முன்னோர்களில் ஒருவர் சுதாஸர் என்னுமரசர். அவருக்கொரு புதல்வர் வீரஸஹர் என்பவர். அவர் மிக்க பராக்ரமசாலி. அவர் சிறு வயதினராயிருக்கும்பொழுது, வேட்டையாடுவதற்குக் கானகம் சென்றார். அவர் அந்தக் கானகத்தில் வேட்டையாடி வருகையில், இரண்டு ராக்ஷஸர்கள் வேங்கை வடிவம் பூண்டு அவ்வனமெங்கும் ஓடியாடி, அங்குள்ள மிருகங்களை ஆயிரமாயிரமாய் அடித்துக் கொன்று தின்று, அழிப்பதைக் கண்டார். அதனாலவர் கோபங் கொண்டு தனது அற்புதமான பாணத்தால் அவ்வரக்கர்களில் ஒருவனைக் கொன்றார். அது கண்டு மற்றவன், அவ்வரசனை நோக்கி, "ஹே! பாபியே! உனக்கு விரோதம் செய்யாத எனது தோழனை நீ கொன்றபடியால், உனக்குத் தக்க ஸமயத்தில், இதற்குப் பிரதி செய்வேன்” எனக் கூறி மறைந்து விட்டான்.

                சில காலம் சென்றது. இவ்வீரஸஹன் மித்ரஸஹன் எனப் பெயர் பெற்று ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான். அவ்வரசன், இங்கு இந்த யஜ்ஞ பூமியில், வஸிஷ்டரைப் புரோஹிதராகக் கொண்டு மிகப் பெரியதான அச்வமேத யாகத்தைச் செய்ய ஆரம்பித்தான். அந்த யாகமானது மிகவும் விசேஷமாக நடைபெற்று வந்தது. அது முடிவடையும் தருணம். இதுவே அரசனுக்குப் பிரதி செய்வதற்கு (பழி வாங்குவதற்கு) ஏற்ற தருணம் என்று கருதிய, முன்பு வைரங்கொண்ட அரக்கன், புரோஹிதரான வஸிஷ்டருடைய உருவங் கொண்டு, அரசன் முன் நின்று, 'அரசனே! எனக்கு, மாம்ஸத்துடன் கூடின உணவை யளிக்கவும்' என்று கூறினான். உண்மையாகவே ஆசாரியர் கேழ்க்கிறார் என்று நினைத்த அரசன், பாசகர்களை யழைத்து, மாம்ஸ உணவு தயார் செய்யும்படி கூறினான். பாசகர்களின் உருவத்தையும் அவ்வரக்கனே கொண்டு நரமாம்ஸ உணவை ஸித்தப்படுத்தினான். அரச தம்பதிகள் உண்மையான வஸிஷ்டரை யழைத்து உணவு பரிமாறினார்கள். நரமாம்ஸ உணவென அறிந்த வஸிஷ்டர், அவ்வரசனை நோக்கி மிகுந்த கோபத்துடன்-"ஹே மூடனே! நீ எனக்கு நரமாம்ஸ உணவை யளித்தபடியால், நீ என்றென்றும், நர மாம்ஸமுண்ணும் புலைஞனாகக் கடவாய்” என்று சபித்தார். அப்பொழுது அரசன், தன்னைச் சபித்ததால் கோபங் கொண்டு, தானும் வஸிஷ்டரைச் சபிக்க வெண்ணித் தீர்த்தத்தைக் கையிலெடுத்தான். இதைக் கண்ட அரசனது மனைவியானவள், குருவைச் சபிப்பது பாபம் என்று கூறித் தடுத்தாள். அதனால் கோபம் தணிந்த அரசன், க்ரோதத்துடன் சாபமிட வெடுத்த தண்ணீரைத் தனது காலின் மீது பொழிந்தான். சூடான அத் தண்ணீரினால் அவனது பாதம், வெம்பிப் போக. அது முதல் அவன் கல்மாஷ பாதனென்று பெயர்  பெற்றான்.

                பிறகு அவ்வரசன் தனது மனைவியுடன் வஸிஷ்டரைப் பல தரம் வணங்கி, அவருடைய கட்டளைப்படியேதான், தான் மாம்ஸ உணவு தயார் செய்யச் சொன்னதாகக் கூறினான். அதைக் கேட்ட வஸிஷ்டர், தனது ஜ்ஞான திருஷ்டியினால் நடந்ததை (ராக்ஷஸனின் கெட்ட செயலை) அறிந்தார். அரசனிடம் நடந்ததைக் கூறி, ஆயினும் தனது சாபம் பன்னிரண்டு ஆண்டு காலம் கழிந்த பின்னரே நிவ்ருத்தமாகும் என்று கூறினார். அதன்படியே அவ்வரசன் பன்னிரண்டாண்டு கழிந்த பின்னரே சாபமொழியப் பெற்றவனாய் மறுபடியும் ராஜ்ய பாரமேற்றுப் பிரஜைகளை மகிழ்வித்தான்.

                அந்த கல்மாஷ பாதனுடைய யஜ்ஞ பூமியே இஃது, என்று கூறினார். இதைக் கேட்ட சத்ருக்னன் ஆச்சரியமடைந்தாள்.

எழுபத்தேழாவது ஸர்க்கம்
[குச லவர்களின் ஜனனம்.]

                எந்த இரவில் சத்ருக்னன் வால்மீகி முனிவரது ஆச்ரமத்தில் தங்கியிருந்தானோ, அதே இரவில்,ஸீதா பிராட்டி இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தனள். அந்த நடு இரவில், முனி குமாரர்கள் இச் சுப செய்தியை வால்மீகி முனிவரிடம் சென்று கூறினார்கள். அவரும் மிகவும் அகம் மகிழ்ந்தவராய், அங்கு சென்று, பாலசந்திரன் உதயமானது போல் விளங்கும் அக் குழந்தைகளைக் கண்டு களிப்புற்று, துஷ்ட தேவதைகளாலும், கொடிய ராக்ஷஸ்ஸுக்களாலும் அவைகளுக்கு, தீங்கு நேரிடாமலிருக்கும் பொருட்டு, குசம் என்கிற தர்பப் புல் ஒரு பிடி எடுத்து, அதை இரண்டாக இடையே தரித்து, அவை யிரண்டிலும், ரக்ஷாமந்திரம் ஜபித்து, அதன் நுனியாகிய குசத்தினால் மூத்த குமாரனையும், அடியாகிய லவத்தினால் இளைய குமாரனையும், துடைத்து புனிதமாக்குமாறு, வயது முதிர்ந்த தவசிகளிடம் அதைக் கொடுத்தார். அந்த ஸ்த்ரீகள் அவற்றைப் பெற்றுக் கொண்டு சென்று, அவர் கூறியபடியே செய்து, குழந்தைகளுக்குக் காப்புச் செய்தனர். இதுவே அவர்களுக்கு ஜாதகர்மாவாகியது. அக் குழந்தைகளில் மூத்தவன், குசத்தினால் புனிதம் செய்யப்பட்டமையால் ‘குசன்” என்றும், இளையவன் லவத்தினால் புனிதம் செய்யப்பட்டமையால் ‘லவன்” என்றும் அழைக் கப்பட்டனர்.

                இந்தச் செய்தியைக் கேழ்விப்பட்ட சத்ருக்னன், மிகவும் ஸந்தோஷத்துடன், ஸீதை பிரஸவித்த இடமான பர்ணசாலைக்குச் சென்று, ஸீதாதேவியை நோக்கி, 'தாயே! தெய்வாதீனமாக இச்சமயத்தில் அடியேன் தாங்களை ஸேவிக்க நேரிட்டது அடியேனது பாக்யமே யாகும்' என்று கூறி ஸந்தோஷப்படுத்தினான். இவ்வாறு அவன் மனம் மகிழ்ந்திருக்கையில், மாரிகாலத்தைச் சேர்ந்த அந்த ஆவணி மாதத்து இரவு இனிதாகக் கழிந்தது.

                பிறகு, மறுநாள் காலை சத்ருக்னன் எழுந்து தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, வால்மீகி முனிவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு மேற்கு திசை நோக்கிப் புறப்பட்டு, அங்கு கங்கைக் கரையில் காத்திருந்த பார்கவர் முதலான ரிஷிகளுடன் கூடி ஏழு இரவுகள் விசேஷமாக வழி நடந்து, எட்டாவது நாள், யமுனா நதிக்கரையை யடைந்தனன். பிறகு அவ்வரசிளங் குமரன் அங்குள்ள முனிவர்களது ஆச்ரமத்தில் அன்றிரவு தங்கினன்.

எழுபத்தியெட்டாவது ஸர்க்கம்

[ச்யவனர் கூறிய லவணன் பிராபவம்]

                அன்றிரவு, சத்ருக்னன் லவணனின் பலத்தைப் பற்றி கேட்க முனிச்ரேஷ்டரான ச்யவனர், சத்ருக்னனை நோக்கி, 'வத்ஸ! முன்னொரு காலத்தில், அயோத்யா நகரில், யுவனாச்வன், என்று ஒரு அரசனிருந்தான். அவனது குமாரனான மாந்தாதாவென்பவன், கீர்த்திப் பிரதாபங்களில் இணையற்றவனாகி, மூவுலகங்களிலும் புகழ்பெற்று விளங்கினான். அவ்வரசன் பூமி முழுவதையும் தனது ஆதிக்யத்திற்கு உட்படுத்தி, இங்கிருந்து தெய்வலோகத்தையும் வெற்றி கொள்ள முயன்றான். இதையறிந்த தேவ ராஜனும் மற்றுமுள்ள தேவர்களும் பயந்து நடுங்கினார்கள்.

                அப்பொழுது தேவலோகத்தின்மீது படையெடுத்து வந்த மாந்தாதாவை, இந்திரன் பார்த்து, “ஹே! வீர! பூலோகத்திலேயே உனது ஆட்சி முழுமையும் செல்லாதிருக்க அதனை வசம் செய்து கொள்ளாது நீ தேவலோகத்தைக் கைக் கொள்ளக் கருதுவது நேராகத் தோன்றவில்லையே. பூமி முழுவதையும் வசப்படுத்திக் கொண்ட பின் நீ தேவலோகத்தை வெற்றி கொள்ள விரும்புவது அழகாகும்”, என உரைத்தான்.

                அது கேட்டு மாந்தாதா இந்திரனை நோக்கி, “தேவ ராஜனே! இப்பூமியில் எனது ஆணை செல்லாதவிடம் எங்குள்ளது?” என வினவ விண்ணவர்கோன் அரசனைப் பார்த்து- “மதுவனத்திலுள்ள லவணாசுர னென்பவன், ஸ்வதந்த்ரமாக அரசாக்ஷி செய்கின்றனன். அவன் உனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனல்லன்” என விளம்பினான்.

                அது கேட்டு மாந்தாதா வெட்கித் தலை குனிந்து, பதிலேதும் சொல்லத் தோன்றமல் இந்திரனை வணங்கி விடை பெற்று மிகுந்த கோபத்துடன் மீண்டும் பூலோகம் வந்து சேர்ந்தான்.

                பிறகு அவன் பெருஞ் சேனைகளைத் திரட்டிக் கொண்டு மதுவனம் சென்று லவணனிடம் ஒரு தூதனையனுப்பினான். அவன் லவணனிடம் சென்று சொன்னதும் அவனது விருப்பமற்ற பேச்சைக் கேழ்க்கப் பொறாத லவணாசுரன் அத்தூதனைக் கொன்று புசித்து விட்டான் . சென்ற தூதன் நெடு நேரமளவும் திரும்பி வராமை கண்டு மாந்தாதா லவணாசுரனைச் சுற்றி நாற்புறமும் அம்பு மாரி பொழியலாயினன். அது கண்டு அவ்வசுரன் நகைத்துத் தனது சூலாயுதத்தைப் பிரயோகஞ் செய்து விட, அந்த ஆயுதம், ஜ்வலித்துக் கொண்டு சென்று, ஸகல ஸேனைகளுடனும் மாந்தாதாவை யெரித்து மறுபடி லவணாசுரனது ஸன்னிதானம் வந்து சேர்ந்தது.

                “சத்ருக்ன! லவணாசுரனது சூலத்தின் பலமானது, இப்படிப்பட்டதென்று அளவிடக் கூடாததாகும். ஆயினும், நீ நாளைக் காலையில் அந்த அசுரனை வதம் செய்வது உறுதி. அவன் கையில் ஆயுதமற்றிருப்பானாகில் அழிந்து போவான். நீயும் வெற்றி பெறுவாய் சூலம் அவன் கையிலிருக்குமாயின், அவனை வதம் செய்வது அஸாத்யமானதாகும். இக் காரியத்தை நீ செய்து முடிப்பாயாயின் ஸகல உலகங்களுக்கும் நன்மை விளைவித்ததாகும், என்று கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக