வெள்ளி, 30 டிசம்பர், 2022

ராமாயணம் -- உத்தர காண்டம் 17

இருபத்தெட்டாவது ஸர்க்கம்

[பிறகு ஒரு ஸமயம் ராவணன், மேற்கு ஸமுத்திரத்தில் ஒரு த்வீபத்தில் கபிலரைக் கண்டது. அவரை யுத்தத்திற்கு அழைப்பது,அவரால் அடிபட்டு விழுவது, பிறகு அவரைத்தேடி பாதாள லோகம் செல்வது முதலியன இதில் உள்ளன.]

பின்பொரு ஸமயம் ராவணன் தனது மந்திரிகளுடன் யுத்த மதம் கொண்டவனாய் மேற்கு ஸமுத்திரத்தின் பக்கமாகச் சென்றான்.  அங்குள்ள ஒரு தீவில் அக்கினிக்கொப்பான தேஜஸ்ஸை உடையவரும், உருக்கிய தங்கம் போன்ற நிறமுடையவரும், ஊழிக் காலத்தீயினுக்கு நிகரானவரும், தேவர்களில் இந்திரன் போன்றவரும். க்ரஹங்களில் சூர்யன் போலவும், காட்டு மிருகங்களுள் ஸிம்ஹம் போலவும், யானைகளுள் ஐராவதம் போலவும், மலைகளுள் மஹாமேரு போலவும் உள்ள ஒரு புருஷனைக் கண்டான்.

          மிகவும் கம்பீரமாகவும் மிகுந்த பாஹுபலமுள்ளவராகவும் காணப்பட்ட தன்னந்தனியரான அந்த மஹாபுருஷர் அருகில் சென்ற ராவணன், “ என்னுடன் போர் புரிய வருக" என்று கர்ஜித்தான். அவனுடைய இந்த வார்த்தையைக் கேட்ட அந்த மஹாபுருஷன் சிறிதும் கலக்கமின்றித் தமது கையினால் விளையாட்டாக ஓர் அடி அடித்தார்.  அந்த அடியைத் தாங்க முடியாத ராவணன் மூர்ச்சையுற்றுக் கீழே சாய்ந்தான். ராவணன் கீழே சாய்ந்ததும் மற்றவர்களை அதட்டி ஓடச் செய்து, பத்மமாலையை அணிந்த அந்த மஹாபுருஷர் மலைபோல அசைந்து சென்று பாதாளத்தை அடைந்தார்.

          சிறிது நேரம் கழிந்தவாறே ராவணன் தன்னிலையை அடைந்து மந்திரிகளைப் பார்த்து, "இங்கு நின்ற புருஷன் எவ்வழிச் சென்றான்?'" என வினவினான், அவர்கள் வாயிலாக அந்தப்புருஷன் பாதளலோம் சென்றதை அறிந்து, வேகத்துடன் உருவிய கத்தியைக் கைக்கொண்டவனாய், பிரம்மவரத்தினால் கர்வமுற்றவனாகிப் பாதாள லோகம் சென்றான். அங்கு அவன், நீலமலை போன்றவர்களும், தோள்வளைகளை அணிந்தவர்களும், செஞ்சந்தனம் பூசியவர்களும், அநேக வித பூஷணங்களை உடையவர்களும்; நான்கு கைகளை யுடையவர்களும், முன்பு கண்ட புருஷளைப் போன்ற உருவத்தை உடையவர்களுமான மூன்று கோடிப் புருஷர்களைக் கண்டான். அவர்களைக் கண்டதும் ராவணனுடைய மயிர்கள் குத்திட்டு நின்றன. அவர்கள் அனைவரும் ஆடிப் பாடி மகிழ்ந்திருந்தனர். அவர்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல், தான் தேடி வந்த புருஷன் எங்கு உள்ளான் என்று அறியும் பொருட்டு அங்கிருந்து மறுபுறம் சென்றான்.

          " அங்கோர் இடத்தில், பாம்பணையில் பள்ளி கொண்டவனும் உயர்ந்த கௌஸ்துபமணியை அணிந்தவனும், நெருப்பால் (ஜ்வாலையால்) சூழப் பட்டவனுமான ஒரு புருஷனைக் கண்டான். அவனருகில் உயர்ந்த மாலையை அணிந்தவனும், அநேக ஆபரணங்களால் அலங்க்ருதையாயும், மூவுலகங்களுக்கும் அணிகலம் போன்று விளங்குபவளும் விசிறியைக் கையிற்கொண்டு அந்தப் புருஷனுக்குப் பணிவிடை புரிகிறவளுமான ஸ்ரீமஹாலக்ஷ்மியையும் கண்டான்.

          மஹாலக்ஷ்மியைக் கண்டதும் ராவணன் மதிமயக்கம் கொண்டவனாகி, அந்தத் தேவியை அபஹரிக்க எண்ணி அருகிற் சென்றான். இவனது கெடுமதியை அறிந்த பரமபுருஷன், அவனை நோக்கிக் குலுங்க நகைத்தான். ராவணன் அந்தப் புருஷனது தேஜஸ்ஸினால் தஹிக்கப் பட்டு. அவனது மூச்சுக்காற்றினால் தூக்கியெறியப்பட்டு வேரற்ற மரமெனக் கீழே சாய்ந்தான். ஒரு முஹுர்த்த காலஞ் சென்றபின் தெளிந்தெழுந்த ராவணன், அந்தப் புருஷனிடம் பயந்து, அகங்குலைந்து, "ஹே புருஷ! இவ்வளவு உயர்ந்த சௌர்யமும் தேஜஸ்ஸும் உடையவரான தேவரீர் யாவர்? கருணை கூர்ந்து அருளுக" என வேண்டினான்.

          அந்த மஹாபுருஷன் அவனை நோக்கி, ராக்ஷஸனே! நீ இப்போதே என் கையால் கொல்லப்பட விரும்புகின்றனையா?"எனக் கேட்டான். ராவணன் அந்தப் புருஷனை நோக்கி, “ ஸ்வாமி! நான் பிரம்மதேவனிடம் பெற்ற வரத்தின் பெருமையால் மரணமடைந்தேன் அல்லேன், எனக்கு இணையான ஒருவன் தேவர்களிலும் இதுவரை பிறந்த வனல்லன். இனியும் பிறக்கப்போவதுமில்லை. ஆதலால் எனக்கு எவராலும் மரணம் உண்டாகாது. அப்படி ஒருகால் மரணம் ஏற்படினும், அது தேவரீராலேயே ஏற்படும்.. வேறொருவரால் நேரிடாது. தேவரீரால் எனக்கு மரணம் ஏற்படுமாயின் அது எனக்குப் புகழும் பெருமையுமாகும்" என்று மொழிந்தான். இப்படி அவன் கூறியபோது, ராவணன், அந்த மஹாபுருஷனது திருமேனியில் மூவுலகங்களும் ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், மருத்துக்கள்,அச்வினீ தேவர்கள், சித்தர்கள், யமன் குபேரன், கடல்கள் மலைகள் அக்னிகள் வேதங்கள், க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள் சூரிய சந்திரர்கள் முனிவர்கள், கருடன், தைத்யர்கள் தானவர்கள் இராக்கதர் முதலியவர்களும், சூக்ஷ்ம ரூபங்களாக இருப்பதைக் கண்டு, அந்தப்புருஷன் ஸாக்ஷாத், ஸ்ரீமந் நாராயண மூர்த்தியே என்றும், ஆங்கு அவன் கண்ட மூன்று கோடி புருஷர்களும் நித்யஸூரிகளே என்றும் தேர்ந்து உடனே இலங்கைக்குத் திரும்பினான் என்று அகஸ்திய முனிவர். கூறியதும், ராமன் அகஸ்த்யரைப் பார்த்து, ''ஸ்வாமி! உண்மையிலேயே அந்தப் புருஷன் எவன்? பாம்பணையான் யாவன்?" என வினவினார்.

          அதற்கு அகஸ்தியர், "ராம! பரம புருஷனான ஸ்ரீமந்நாராயணனே தீவில் நின்றவன். கபிலன் எனப் புகழ் பெற்றவன். அவனே பாம்பணையானாகவும் காணப்பட்டவன்" என்றார்.

          இதைக் கேட்ட ஸ்ரீராமனும் கூட இருந்தவர்களும், ஆச்சரியம், ஆச்சரியம் எனக் கொண்டாடினர். பக்கத்தில் அமர்ந்திருந்த விபீஷணன் இதைச் செவியுற்று, "முன்பு நடந்தவற்றை இப்போது மறுபடியும் சொல்லக் கேட்ட நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்" என்று கூறினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக