வினா 45.- இதன் பின்பு யார் துர்யோதனனுக்கு இவ்விஷயத்தில் புத்திமதி எவ்வாறு கூறியது?
விடை.- நாரதர், நல்ல விஷயத்திலேயே முரட்டுத்தனம் அதிகமாயிருந்தால் கேடுவிளையும் என்பதைக் காலவரிஷி உபாக்கியானத்தால் வெளியிட்டு, துர்யோதனனை நோக்கி அவன் கெட்ட விஷயத்தில் முரட்டுத்தனமாய் இருந்தால் அதிகக்கேடு உண்டாகும் என்று பயமுறுத்தினார்.
வினா 46.- காலவ ரிஷி யார்? இவர் எந்த நல்லவிஷயத்தில் முரட்டுத்தனமாய் இருந்தார்? என்ன கெடுதி இவருக்கு உண்டாயிற்று?
விடை... விசுவாமித்திரர் முன்காலத்தில் பிராம்மண்யம் தமக்கு வரவேண்டும் என்று தபஸு செய்தார். இந்த தபஸு பலிக்குங்காலம் வந்தபொழுது இவருக்கு ஒரு கஷ்டம் வந்தது. இந்தக் கஷ்டகாலத்தில் காலவர் என்ற மஹாரிஷி விசுவாமித்திரர் அருகில் சிஷ்யராய் இருந்து, அவருக்கு வேண்டிய சிசுரூஷை செய்துவந்தார். இவரது பக்திக்கு மெச்சி, விசுவாமித்திரர், 'இனிமேல் உன் இஷ்டமான இடம் வெகு தாராளமாய்ப் போகலாம்' என்று உத்தரவு கொடுத்தார். அப்பொழுது காலவர் ஏதாவது குருதக்ஷிணை கொடுத்துவிட்டு தான் போவதாகச் சொல்ல, விசுவாமித்திரர் வேண்டியதில்லை என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தும், சிஷ்யன் பின்னும் பிடிவாதமாய் இருக்கக்கண்டு, அவருக்குக் கோபம் வர, 'எனக்கு வெளுப்பாகவும், ஒரு காதுமாத்திரம் கறுப்பாகவும் உள்ள 800 குதிரைகளைக் குருதக்ஷிணையாகக் கொடு, என்றார். அவைகளைக் கொண்டுவருவதில் காலவர் மிகுந்த கஷ்டப்பட்டுப் போனார்.
வினா 47.- விசுவாமித்திரருக்கு தபஸுபலிக்குங்காலத்தில் என்ன கஷ்டம் வந்தது?
விடை... விசுவாமித்திரர் தபஸு செய்யுங்கால் யமதர்மராஜன் இவரது குணத்தைப் பரீக்ஷித்தறிய எண்ணி, வஸிஷ்டர் உருக்கொண்டு இவரிடம் வந்து போஜனம் பண்ண வேண்டும் என, விசுவாமித்திரர் மனதில் விரோதமின்றி வஸிஷ்டரை இருக்கச் சொல்லிவிட்டு பயபக்தியுடன் போஜனம் தயார் செய்து வஸிஷ்டரைத் தேடிப் பார்த்தார். சோதிக்கவந்த தர்மராஜன் மறையவே, வஸிஷ்டரை எங்கே தேடியும் அகப்பட வில்லை. உடனே வஸிஷ்டருக்காகத் தயார் செய்த போஜனத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தூண்போல் அசைவற்றிருந்து வெகு காலம் இவர் வாயுபக்ஷணம் செய்துகொண்டிருந்தார். வெகு காலமான பின்பு தர்மராஜன் வஸிஷ்டர் உருவத்தோடு வந்து அந்த உணவை உண்டு விசுவாமித்திரரை வாழ்த்திச் சென்றான்.
வினா 48.- காலவரிஷி இக்குதிரைகளை ஸம்பாதிக்க முதலில் எப்படிக் கஷ்டப்பட்டார்?
விடை... காலவரிஷி முதலில் தாமே பரதகண்டம் முழுவதும் திரிந்து பார்த்தார். எங்கும் இம்மாதிரி ஒரு குதிரை கூட அகப்படவில்லை. அதன் பின்பு, இவர் மஹாவிஷ்ணுவைத் துதிக்க, அவர் இவரை நினைத்த இடத்திற்கெல்லாம் எடுத்துச் செல்லும்படி உத்திரவு செய்து, கருடனை அனுப்பினார். கருடனது ஸஹாயத்தால் காலவர் எல்லாதிக்கின் முடிவுவரையில் சென்று தேடிவருகையில் ஸமுத்திரங்களது அக்கரையில் ரிஷப மலையின் சிகரத்தில் வந்து இறங்கினார். அங்கு சாண்டிலி என்ற ஸந்நியாஸினியைக் கண்டார். அவளால் கொடுக்கப்பட்ட உணவை உண்டு இருவரும் தூங்கினார்கள். கருடன் தூங்கி விழித்து, பறக்க யத்தனிக்கையில் தனக்குச் சிறகுகளே இல்லாதிருப்பதைக் கண்டு மிகுந்த கஷ்டத்தை அடைந்தான். காலவரிஷி இதன் காரணம் என்ன வென்று கேட்க கருடன், 'இந்த ஸந்நியாஸினியைக் கண்டதும் இவளைத் தூக்கிப்போய் மகாவிஷ்ணுவினிடம் விடவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இதனால் தான் எனக்கு இந்தக் கஷ்டம் வந்திருக்கும். ஆகையால் நான் இப்பொழுது அந்தச் சிறந்தவளை மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன்' என்று பச்சாத்தாபத்துடன் மறுமொழி சொன்னான். இதைக் கேட்டதும் சாண்டிலி கருடனுக்கு இறகு உண்டாகும்படி செய்து, பறந்துபோகும்படி அனுப்பினாள். இவ்வளவு கஷ்டப்பட்டும் காலவருக்குக் குதிரைகள் அகப்படவில்லை, வேறு இடம் நோக்கிப்போகையில் வழியில் விசுவாமித்திரர் காலவரைக்கண்டு, 'குருதக்ஷணை கொடுக்கும் காலம் வந்துவிட்டது. ஆனாலும் நான் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்ளுகிறேன்' என்று காலவருக்கு குருதகூிணையை ஞாபகப் படுத்த, அவர் மிகுந்த கஷ்டத்தை அடைந்தார்.
வினா 49.- காலவரிஷி இதன்பின்பு எப்படி பிரயத்தனப்பட்டார்? இதன் பலன் என்ன?
விடை.- இவ்வளவு தேடியும் காணாதது கண்டு, கருடன் காலவரிஷியை எவ்விதத்திலாவது குதிரைகளை வாங்கப் பணம் முதலில் ஸம்பாதிக்கச் சொன்னான். இதன்படி கருடனும், காலவரும் சந்திர வம்சத்தில் பிறந்த யயாதி ராஜனிடம் செல்ல காலவர், தமது கோரிக்கையைத் தெரிவித்தார். கருடன் காலவருக்கு நல்ல சிபாரிசை செய்தான். அப்போழுது யயாதி நன்றாய் ஆலோசித்துப் பார்த்து காலவருக்கு அனுகூலமாக சீக்கிரத்தில் 800 குதிரை கிடைப்பதற்குத் தனது பெண் மாதவியை அவருக்குக் கொடுத்தான்.
வினா 50.- இதனால் காலவர் எண்ணம் எப்படி நிறைவேற இடமுண்டாயிற்று? விடை.- இந்த மாதவிக்கு நான்கு கல்யாணம் செய்துகொள்ளலாம் என்றும், ஒவ்வொரு கல்யாணத்தின் பிறகு மறுபடியும் இவளுக்குக் கன்யாப்பருவம் வந்து விடும் என்றும், ஒரு ரிஷியின் வரம் இருந்தது. இதை உத்தேசித்து இவளை நான்கு இராஜாக்களுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தால் காலவருக்கு 800 குதிரைகள் கிடைக்கலாம் என்று எண்ணியே யயாதி இவளை காலவருக்குக் கொடுத்தான். காலவரும் இந்தக் குறிப்பை நன்றாய் அறிந்து கொண்டு, திருப்தியோடு பெண்ணை வாங்கிக் கொண்டார்.
வினா 51.- இதன் பின்பு காலவர் எவ்வாறு 800 குதிரைகளை மாதவியின் மூலமாய் ஸம்பாதித்தார்?
விடை. இத்தருணத்தில் கருடன் காலவரிடம் விடைபெற்றுப்போக முதலில் இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்து அயோத்தியில் அரசாண்டு வந்து பிள்ளையில்லாது தவித்துக்கொண்டிருந்த ஹரியசுவராஜனுக்கு மாதவியைக் கல்யாணம் செய்விக்க, அதற்கு விலையாக 20௦ குதிரைகள், வேண்டிய மாதிரியில் காலவருக்கு அரசன் கொடுத்தான். இவ்வரசனுக்கு மாதவியினிடம் வஸுமனஸ என்ற பிள்ளை பிறந்தது. உடனே மாதவிக்குக் கன்யாப்பருவம் வந்துவிட்டது. காலவர் தாம் மாதவியை உபயோகப்படுத்தும் எண்ணத்தை இவ்வரசனுக்கு வெளியிட, அரசன் அதை ஒப்புக்கொண்டான். உடனே மாதவியை அழைத்துக் கொண்டும் காசி தேசத்தில் பிள்ளை வேண்டும் என்ற ஆவலோடிருந்த திவோதாஸ ராஜனிடம் செல்ல முன் போல மாதவியின் மூலமாய் 200 குதிரைகள் இவருக்குக் கிடைத்தன. இவ்வரசனுக்கு மாதவியிடம் பிரதர்த்தனன் என்ற பிள்ளை பிறந்ததும், முன்போல அவளுக்கு கன்யாப்பருவம் வந்தது. முன்போலவே காலவர் மாதவியைப் பெற்று அரசன் அனுமதியின் பேரில் போஜர்களுக்கு அரசரான உசீனரிடம் போய் இப்பெண்ணைக் கொடுக்க அங்கு அவருக்கு 200 குதிரைகள் அகப்பட்டன. உசீனருக்கு மாதவியிடம் சிபி என்ற மஹாத்மா பிறந்தார். இதன் பின்பு காலவர், கன்னிகையாகி யிருக்கும் மாதவியை அழைத்துக்கொண்டு, இன்னாரிடம் போவது என்று அறியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தார்.
வினா 52.- இவ்வாறு இன்னும் 200 குதிரைகள் கிடைக்காமல் வருந்தும் காலவரை யார் எவ்வாறு காப்பாற்றியது? குருதக்ஷிணையை காலவர் எவ்வாறு கொடுத்தார்?
விடை.- இப்படி காலவர் தத்தளித்துக்கொண்டிருக்கையில் வழியில் இவர் கருடனைச் சந்தித்தார். கருடன் 60 குதிரைகள் தான் அகப்படும் என்றும், இனிமேல் ஒன்றும் அகப்படாதென்றும் சொல்ல, காலவருக்கு மிகுந்த துக்கம் வந்துவிட்டது. அப்பொழுது கருடன் 'விசுவாமித்திரருக்கே இப்பெண்ணைக் கொடுத்து 200 குதிரைக்குப் பதிலாக இவளிடமிருந்து ஒரு பிள்ளையை அடைந்து கொள்ளும்படி செய்து உம்முடைய பிரதிக்கினையை நிறைவேற்றலாம்' என்று உபாயம் சொல்லிக் கொடுக்க, காலவர் அவ்வாறே செய்தார். விசுவாமித்திரருக்கு, தனது முரட்டுத்தனத்துக்காக சிஷ்யன் பட்டபாடு போதும் என்ற கருணைவர, மாதவியிடம் தனக்கு உண்டான அஷ்டகன் என்ற பிள்ளையை 200 குதிரைக்குப் பதிலாக வைத்துக்கொண்டு மற்ற 6௦0 குதிரைகளைப் பெற்று தனக்கு குருதக்ஷ்ணை பூர்த்தியாக கொடுத்து ஆய்விட்டதாக ஸந்தோஷத்துடன் சிஷ்யனை ஆசீர்வதித்தார்.
வினா 53.- 200 குதிரைகள் கிடைக்காமலே போகக்காரணம் என்ன?
விடை... முன்காலத்தில், யுசீகர் என்ற மஹாரிஷி விசுவாமித்திரரது பாட்டனாரான காசிராஜனது பெண்ணாகிய ஸத்யவதியை தனக்கு பெண்சாதியாய் வரிக்க, அரசன் கன்யா சுல்கமாக சந்திரனைப்போல் வெளுத்ததும், ஒரு காது மாத்திரம் கறுத்ததுமாக இருக்கும் 1000 குதிரைகள் வேண்டும் என்றார். உடனே ரிஷி வருணனிடம் இதைச் சொல்ல, அவன் தனது அசுவதீர்த்தத்திலிருந்து குதிரைகளை எழுப்பிக்கொடுத்தான். இதை அரசனிடம் ரிஷி கொண்டுவந்து கொடுத்து ஸத்தியவதியைக் கல்யாணம் செய்துகொண்டார். அந்த 1000 குதிரைகளில் 400 - ஐ ஒரு ஆற்றுவெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட, உலகில் 600 குதிரைகள் தான் மிஞ்சின. அதைக் காலவர் முதலில் ஸம்பாதித்துவிட்டார். இதனால் தான் கருடன் 200 குதிரைகள் அகப்படமாட்டாது என்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக