செவ்வாய், 15 நவம்பர், 2022

ஶ்ரீ மஹா பாரதம் வினா விடை 29

வினா 21.- அன்றிரவை திருதிராஷ்டிர மஹாராஜா எவ்வாறு கழித்தார்‌?

விடை... திருதிராஷ்டிரன்‌, எவ்வளவுதான்‌ தூங்க முயன்றும்‌, முடியாது அவன்‌ மனம்‌ குழம்பியது. தன்‌ பிள்ளைகள்‌ பாண்டவர்களால்‌ மாண்டுபோகப் போகிறார்களே என்ற ஏக்கத்தால்‌ அவனுக்குத்‌ தூக்கம்‌ பிடிக்கவில்லை. உடனே அவன்‌ விதுரரை அழைப்பித்துத்‌ தன்னிடம்‌ ஸஞ்சயர்‌ வந்து பாண்டவர்கள்‌ சொல்லியனுப்பிய விஷயத்தை மறுநாள்‌ ஸபையில்‌ சொல்லுவதாகச்‌ சொல்லித்‌ தன்னைப்‌ பலவாறாக நிந்தித்து பயமுறுத்திப்‌ போய்விட்டதாகவும்‌, அதனால்‌ தனக்கு தூக்கம்‌ வராது மனம்‌ குழம்புகிறதாகவும்‌, ஆதலால்‌ ஏதாவது விஷயத்தைப்பற்றிச்‌ சொல்லி அன்றிரவைக்‌ கழிக்கவேண்டும்‌ என்றான்‌. விதுரர்‌ யுதிஷ்டிரரது மேன்மையையும்‌, ஒற்றுமையின்மையால்‌ வரும்‌ கேட்டையும்‌, ஒரு முடிவை யடைவதற்கு ஏற்பட்ட நல்லது, மிச்சிரம்‌, கெட்டது ஆகிய மூன்று வழியையும்‌, ஸநேகிதர்கள்‌ ஸம்பத்‌ காலத்திலும்‌, ஆபத்காலத்திலும்‌ இவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்‌ என்பதையும்‌, சித்த நிரோத இந்திரிய நிரோதங்களால்‌ வரும்‌ பலன்களையும்‌, எந்தக்‌ கஷ்ட காலத்திலும்‌ பொய்‌ சொல்லக்‌ கூடாது என்பதையும்‌, மேலான குணங்களோடு கூடி இருத்தலே உயர்குடிப் பிறந்ததற்கு அடையாளம்‌, கெட்ட குணங்களோ மனிதனது ஆயுளைக்‌ குறைக்கும்‌ என்பதையும்‌, ஆசிரம தர்மங்களையும்பற்றி வெகு விஸ்தாரமாக எடுத்துரைத்துக்‌ கடைசியில்‌ பாண்டவர்களோடு எப்படியாவது ஸமாதானம்‌ செய்துகொள்ள வேண்டியது என்று வற்புறுத்தினார்‌. திருதிராஷ்டிரன்‌ 'விதியை எவ்வாறு மதியால்‌ வெல்லுவது' என்று சொல்லி சும்மா இருந்தான்‌. (இப்பாகத்திற்கு விதுரப்பிரஜாகரம்‌ என்று பெயர்‌.)

வினா 22.- இதன்‌ பின்பு யார்‌ திருதிராஷ்டிரனுக்கு எதைச்‌ சொன்னது? ஏன்‌ விதுரர் இதைப்பற்றிக்‌ கூறவில்லை?

விடை... திருதிராஷ்டிரன்‌, விதுரரை ஆத்மஞான விஷயத்தைப்பற்றிச்‌ சொல்லும்படி தூண்ட, தாம்‌ அதைப்பற்றிச்‌ சொல்லத்‌ தகுந்தவரல்லர்‌ என்று சொன்னார்‌. மேலும்‌ திருதிராஷ்டிரன்‌ இதைப்பற்றிக்‌ கேட்கவேண்டும்‌ என்று சொல்ல, விதுரர்‌ தமது தியான விசேஷத்தால்‌ அந்த நடூ இரவில்‌ அந்தப்புரத்திற்குப்‌ பிரம்மாவினது மானஸ புத்திரராகிய ஸனத்குமாரரை அழைப்பித்துத்‌ தமது தமயனுக்கு ஆத்மஞானத்தை உபதேசிக்கச்‌ சொன்னார்‌. ஸனத்குமாரர்‌ புண்ணிய பாப ரகஸியம்‌, லோகாந்தரங்‌களின்‌ ரகஸியம்‌, மெளனநிலையின்‌ ஸவரூபம்‌, வேதங்களின்‌ நோக்கம்‌, ஸந்நியாஸதர்ம விசேஷம்‌, ஸந்நியாஸத்திற்கு விரோதமாக இருக்கும்‌ குற்றங்கள்‌, பிரம்மசரியத்தின்‌ ஸ்வரூபம்‌, பிரம்மஸ்வரூப லக்ஷணம்‌ ஆகிய இவைகளை 'உள்ளங்கை நெல்லிக்கனிபோல' விளக்கி மறைந்தருளினர்‌. இதற்குள்‌ பொழுது விடியத்‌ திருதிராஷ்டிரனும்‌ விதுரரும்‌ தமது காலைக்கடனை முடிக்க வெளியிற்‌ சென்றனர்‌.

வினா 23.- மறுநாட்காலையிற்‌ ஸஞ்சயர்‌ இராஜ ஸபையில்‌ என்ன வெளியிட்டார்‌?

விடை.- நான்‌ ஒருவனே கெளரவ ஸேனையை யமலோகத்திற்கு அனுப்பி இராஜ்யத்தைக்‌ கைப்பற்றிக்‌ கொள்ளுவேன்‌. என்னிடத்தில்‌ அவ்வளவு சிறந்த அஸ்திரங்கள்‌ இருக்கின்றன. மேலும்‌ ஜோதிஷத்தில்‌ சிறந்தவர்கள்‌ எங்களுக்கு ஜயம்‌ வரும்‌ என்றும்‌, கெளரவருக்குத்‌ தோல்வி வரும்‌ என்றும்‌ சொல்லி இருக்கிறார்கள்‌. கிருஷ்ணபகவானும்‌ இதை உண்மை என்று ஒத்துக்கொள்ளுகிறார்‌. ஆகையால்‌ நாங்கள்‌ சண்டைக்குவரத்‌ தயார்தான்‌. எப்படி இருந்தபோதிலும்‌ நாங்கள்‌ இந்த விஷயத்தில்‌ பீஷ்மர், துரோணர்‌, கிருபர்‌ முதலிய மஹாத்மாக்கள்‌ என்ன சொல்லுகிறார்களோ அதன்படி நடக்கத்‌ தயாராய்க்‌ காத்திருக்கிறோம்‌, என்று அர்ஜுனன்‌ சொல்லிவிட்டதாக ஸஞ்சயர்‌ ஸபையில்‌ சொன்னார்‌.

வினா 24.- ஸஞ்சயர்‌ இவ்வாறு சொன்னதும்‌ ஸபையில்‌ இதைப்பற்றி என்ன ஆலோசனை நடந்தது?

விடை.- இதைக்‌ கேட்டதும்‌ பீஷ்மர்‌, அர்ஜுனன்‌, கிருஷ்ண பகவான்‌ ஆகிய இவர்கள்‌ நரநாராயணாள்‌ என்றும்‌, இவர்கள்‌ யுகங்கள்‌ தோறும்‌ துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனார்த்தம்‌ உலகத்தில்‌ அவதரிப்பவர்கள்‌ என்றும்‌, அவர்களோடு ஸமாதானமாக நடக்காவிட்டால்‌, துர்யோதனன்‌ முதலிய கொடியவர்களுக்கும்‌ கேடு இவர்களால்‌ விளையும்‌ என்றும்‌ விஸ்தாரமாக எடுத்துச்‌ சொன்னார்‌. துரோணரும்‌ பீஷ்மர்‌ சொல்லியதே நியாயம்‌ என்றார்‌. இதன்‌ பின்பு திருதிராஷ்டிரர்‌ பாண்டவர்கள்‌ எவ்வாறு யுத்தத்திற்குத்‌ தயாராய்‌ இருக்கிறார்கள்‌ என்று கேட்க, பாண்டவர்களது கஷ்டம்‌ ஸஞ்சயருக்கு ஞாபகம்‌ வந்தது. உடனே அவர்‌ மூர்ச்சையாய்‌ விழுந்தார்‌. சற்று நாழிகையான பின்பு ஸஞ்சயர்‌ எழுந்து அநேக பலமான ராஜாக்கள்‌ தர்மபுத்திரரது உத்தரவை எதிர்பார்த்திருக்கிறார்கள்‌ என்றும்‌, அவர்‌ யுத்தம்‌ செய்யலாம்‌ என்று சொல்லவேண்டியது தான்‌, கெளரவ ஸேனையைத்‌ சின்னா பின்னப்‌ படுத்துவார்கள்‌ என்றும்‌ எடுத்துரைத்தார்‌. திருதிராஷ்டிரனுக்கு பீமன்‌ முன்‌ சொக்கட்டானாடிய காலத்தில்‌ செய்த சபதம்‌ ஞாபகம்வர, வெகுவாக அவன்‌ துக்கப்‌ படத்தொடங்கினான்‌. இதுதான் ஸமயம்‌ என ஸஞ்சயர்‌ திருதிராஷ்டிர ராஜனை பாண்டவர்களிடம்‌ இதுகாறும்‌ அசட்டையாய்‌ இருந்ததைப்பற்றி மிகவும்‌ நிந்தித்துப்‌ பேசினார்‌.

வினா 25.- இவ்வாறு ஸமாதான விஷயமாய்‌ எல்லாம்‌ நடந்து வருகையில்‌ யார் இதை எவ்வாறு தடுத்தார்கள்‌?

விடை.- துர்யோதனனே ஸபையில்‌ வந்து, பீஷ்மர்‌, கர்ணன்‌ முதலிய யுத்தவீரர்கள்‌ தனது பக்கத்திலிருப்பதாகவும்‌, ஆகையால்‌ பாண்டவ பலத்தைக்‌ கண்டு மனமழிய வேண்டியதில்லை என்றும்‌, தன்‌ தகப்பனைத்‌ தேற்றினான்‌. இதன்‌ பின்பு துர்யோதனன்‌ தர்மபுத்திரரது செய்கைகளையும்‌, அர்ஜுனனது குதிரைகளையும்‌ பற்றி ஸஞ்சயரை விசாரித்தான்‌. தர்மபுத்திரருக்கு யுத்தம்‌ வரப்போகிறது என்று தெரிந்த போதிலும்‌, அவர்‌ வெகு உத்ஸாகத்தோடுதான்‌ இருக்கிறார்‌ என்றும்‌, அர்ஜுனனது குதிரைகளுக்கு ஈடு உலகில்‌ வேறு குதிரைகள்‌ இல்லை என்றும்‌ ஸஞ்சயர்‌ சொன்னார்‌.

வினா 26.- இதைக்‌ கேட்டதும்‌ திருதிராஷ்டிரன்‌ கதி என்னமாயிற்று? யார்‌ அவனை எவ்வாறு தேற்றியது? மேல்‌ என்ன நடந்தது?

விடை... திருதிராஷ்டிரனுக்குப்‌ பாண்டவர்களது பலத்தைக்‌ கேள்விப்பட்டதும்‌ பயம்‌ அதிகரிக்க, பித்துப்பிடித்தவன்‌ போலானான். அப்பொழுது துர்யோதனன்‌ மறுபடியும்‌ தனது பக்கத்திலிருந்து போர்செய்ய வந்திருக்கும்‌ அரசர்கள்‌ பலத்தை எடுத்துச்‌ சொல்லி தன்‌ தகப்பன்‌ மனதைத்‌ தேற்றினான்‌. உடனே தகப்பன்‌ பிள்ளையை நோக்கிப்‌ பாண்டவர்களுக்கு அவர்களது பாகத்தைக்கொடுக்கும்படி தன்னால்‌ கூடிய மட்டும்‌ சொல்லிப்பார்த்தான்‌. அப்பொழுதும்‌ துர்யோதனன்‌, தான்‌ பீஷ்மர்‌ முதலியவர்கள்‌ பலத்தை உத்தேசித்திருக்கவில்லை என்றும்‌, கர்ணனை ஸஹாயமாய்‌ வைத்துக்கொண்டு யுத்தத்தை நடத்துவதாகப்‌ பெருமை பேசினான்‌. அப்பொழுது திருதிராஷ்டிரன்‌, கிருஷ்ணார்ஜுனர்கள்‌ இருவரும்‌ என்ன சொன்னார்கள்‌ என்று ஸஞ்சயரைக்‌ கேட்டான்‌. அதற்கு ஸஞ்சயர்‌, அவர்கள்‌ இருந்தவிடம்‌, தான்‌ மஹா பயபக்தியோடு சென்ற பொழுது, அவர்கள்‌ ஸ்நேகிதர்கள்‌ போல வெகு ஸஹஜமாய்‌ உட்கார்ந்திருந்தார்கள்‌ என்றும்‌, அப்பொழுது அவர்கள்‌ தன்னை ஒரு தங்க ஆஸனத்தில்‌ உட்காரவைத்து, திருதிராஷ்டிரன்‌ முதலியவர்களை க்ஷேமம்‌ விசாரித்துவிட்டு, அவர்களிடம்‌ அர்ஜுனனை எதிர்க்க வல்லார்‌ ஒருவருமில்லை என்று சொல்லச்‌ சொன்னார்கள்‌ என்றும்‌ பதில்‌ சொன்னார்‌. அர்ஜுனனது பலத்தைக்‌ கேள்விப்பட்டதும்‌ திருதிராஷ்டிரனுக்குப்‌ பழையபடி மனோவியாகூலம்‌ வந்துவிட்டது.

வினா 27 .- இதைத்‌ துர்யோதனன்‌ தீர்க்க முயலுங்கால்‌ ஸபையில்‌ என்ன விபரீதம்‌ ஏற்பட்டது?

விடை... திருதிராஷ்டிரனைத்‌ தேற்றுவதற்காக துர்யோதனன்‌ தனது பெளருஷத்தை எடுத்துப்‌ பலர்‌ அறியய்‌ பேசினான்‌. அப்பொழுது கர்ணனும்‌ தனது பெளருஷத்தைச்‌ சொல்லி தன்னைத்தானே துதித்துக்கொண்டான்‌. இதைக்கேட்டதும்‌ பீஷ்மர்‌, இவர்கள்‌ விராட நகரத்தில்‌ மாடுபிடி சண்டையில்‌ அர்ஜுனன்‌ கையில்‌ அகப்பட்டு பட்டபாடுகளைச்‌ சொல்லி, இவர்களை நிந்தித்துப்‌ பரிஹாஸம்‌ செய்தார்‌. உடனே கர்ணனுக்கு அதிகக்‌ கோபம்‌ வர, அவன்‌ பீஷ்மர்‌ கீழே விழும்‌ வரை, தான்‌ யுத்தம்‌ செய்வதில்லை என்று சபதம்‌ செய்துகொண்டு அவன்‌ ஸபையைவிட்டு வெகு கோபத்தோடு வெளியே சென்றான்‌.

வினா 28.- இவ்வாறு கர்ணன்‌ கோபித்துக்கொண்டு சென்றதும்‌, திருதிராஷ்டிரறுக்கு யார்‌ எவ்வாறு புத்திமதி கூறியது?

விடை.- விதுரர்‌ இத்தருணத்தில்‌ முன்‌ வந்து, அரசனுக்குப்‌ புத்திமதி கூறினார்‌. ஒருவனுக்கு ஜயம்‌ முதலியவைகள்‌ வேண்டுமானால்‌, மனோ நிரோதம்‌, சாந்தம்‌, அடக்கம்‌ முதலிய நற்குணங்கள்‌ இருக்கவேண்டும்‌. மேலும்‌ ஒற்றுமை அவசியம்‌ வேண்டும்‌. ஒருவேடன்‌ பட்சிகளைப்‌ பிடிக்க வலையை வீசினான்‌. கொஞ்ச நாழிகையில்‌, அதில்‌ இரண்டு அந்நியோந்நியமான பறவைகள்‌ பிடிபட, அவைகள்‌ ஒற்றுமையாய்‌ வலையைத்‌ தூக்கிக்கொண்டு ஆகாயத்தில்‌ பறந்தன. அப்பொழுது வேடன்‌ அவைகளைப்‌ பின்தொடர்ந்து போனான்‌. கொஞ்ச தூரம்‌ போகையில்‌ பறவைகள்‌ தம்முள்‌ சண்டை வர, அவைகள்‌ வலையோடு கீழே விழுந்து, வேடன்கையில்‌ அகப்பட்டுக்‌ கொண்டன. ஆகையால்‌, துர்யோதனாதியர்‌ சண்டை போட்டுக்‌ கொள்ளுதல்‌ தகாது, கேடே நேரிடும்‌. மேலும்‌, நாங்கள்‌ கந்தமாதன மலைக்குப்‌ போயிருக்கையில்‌, அங்குக்‌ குபேரனுக்கு, பாம்புகளால்‌ காவல்‌ காக்கப்‌ பட்டும்‌, உண்போருக்கு யெளவனம்‌ உண்டாக்கும்‌ திறனுடையதாயும்‌ வைக்கப்‌ பட்டுள்ள தேன்‌ இருப்பதைக்‌ கண்டோம்‌. அது மலை உச்சியில்‌ இருந்தது. இதன்‌ மேன்மையைக்‌ கேள்விப்பட்டு, இதைக் குடிக்கவேண்டும்‌ என்ற ஆசையோடு, சில வேடர்‌ அங்கே போய்க்‌ கீழே விழுந்து பாம்புகளால்‌ மாண்டார்கள்‌. அதுபோல துர்யோதனன்‌, ஜயத்தை எண்ணுகிறானே ஒழிய, அர்ஜுனனது பலத்தால்‌ தனக்கு உண்டாகும்‌ அபாயத்தைக்‌ கவனியாதிருக்கிறான்‌. இவனுக்கும்‌ அந்த வேடர்கள்‌ கதிவரும்‌ என்று விதுரர்‌ திருதிராஷ்டிரனுக்கு நல்ல புத்திமதி கூறினார்‌.

வினா 29.- இவ்வாறு விதுரர்‌ புத்திமதி கூறியதும்‌, திருதிராஷ்டிரன்‌ என்ன செய்தான்‌? பின்‌ என்ன நடந்தது?

விடை.- இந்தக்‌ கதைகளைக்‌ கேட்டதும்‌, திருதிராஷ்டிரன்‌ துர்யோதனனை பாண்டவர்களோடு ஸமாதானம்‌ செய்து கொள்ளும்படி எவ்வளவோ சொல்லிப்‌ பார்த்தான்‌. இதன்‌ பின்பு ஸஞ்சயரை நோக்கி, "கிருஷ்ணபகவான்‌ அர்ஜுனனைப்‌ புகழ்ந்து பேசியதன்‌ பிறகு, உன்னிடம்‌ அர்ஜுனன்‌ என்ன சொல்லி அனுப்பினான்‌” என்று கேட்க அவர்‌ தம்மிடம்‌ “கெளரவர்‌ பக்கத்தில்‌ ஸகாயம்‌ செய்ய வந்திருக்கும்‌ அரசர்கள்‌ எல்லோருக்கும்‌ முடிவுகாலம்‌ வந்திருக்கிறது. அவர்கள்‌ எல்லோரையும்‌ யுத்தமாகிற அக்கினியில்‌, துர்யோதனனே சேர்த்து ஆகுதி செய்யப்போகிறான்‌” என்று சொன்ன வாக்கியத்தை ஒளியாது ஸபையோர்‌ அறியச்‌ சொன்னார்‌. இதைக்‌ கேட்டதும்‌ துர்யோதனன்‌, அசட்டையாய்‌ இருப்பதையும்‌, மற்றையவர்‌ பேசாதிருப்‌பதையும்‌ கண்டு, ஸபையிலிருந்த அரசர்கள்‌ யாவரும்‌ எழுந்திருக்க, ஸபை கலைந்தது.

வினா 30.- ஸபை கலைந்ததும்‌ திருதிராஷ்டிரன்‌ என்ன செய்தான்‌? பின்‌ என்ன நடந்தது?

விடை. ஸபை கலைந்ததும்‌ திருதிராஷ்டிரன்‌ ஸஞ்சயரை நோக்கி தன்‌ ஸேனைக்கும்‌ பாண்டவஸேனைக்கும்‌ உள்ள விசேஷபாகங்களைப்பற்றி வினவினான்‌. அதற்கு ஸஞ்சயர்‌, திருதிராஷ்டிரனிடம்‌ ரகஸியமாய்த்‌ தாம்‌ ஒன்றும்‌ சொல்வதில்லை; பலரறியத்தான்‌ எல்லாம்‌ சொல்லுவதாகச்‌ சொன்னார்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக