திங்கள், 6 பிப்ரவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.
சுலோக‌த்தின்
த‌மிழாக்க‌ம்
"ஸ்ரீ ஆண்டாள் மாலை"
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)




கோதா ஸ்துதி

சுலோகம் 13
நாகேஶயஸ் ஸுதநு பக்ஷிரத: கதம் தே
         ஜாத: ஸ்வயம்வரபதி: புருஷ: புராண: |
ஏவம்விதாஸ்ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா:
         ஸந்தர்ஶயந்தி பரிஹாஸகிரஸ் ஸகீனாம் ||   .13.

பணியிற் படுத்தான் பறவைதனை யூர்ந்தான்
அணியிற் றிகழ்கிழவ னன்பன் -- மணியிற்பூஞ்
சேடுலவுங் கோதையெனச் சேடியர்கண் மெல்ல நகைத்
தாடுமொழிக் குள்ளமகிழ் வாய்.             .12.

பதவுரை

         ஸுதநு -- அழகிய மேனியமைந்தவளே!; நாகேஶய: -- பாம்பணையிற் பள்ளி கொண்டவனும்; பக்ஷிரத: -- பக்ஷியின் மேல் சவாரி செய்கிறவனுமான; புராண: புருஷ: -- கிழவர்; கதம் -- எப்படி; தே -- உனக்கு (உனக்கிஷ்டமான); ஸ்வயம்வரபதி -- ஸ்வேச்சையால் வரிக்கப்பட்ட பதியாக; ஜாத: -- ஆனார். ஸகீநாம் -- (உன்னுடைய தோழிமாருடைய; ஏவம்விதா -- இப்படிக்கொத்த; பரிஹாஸகிர: -- பரிஹாஸப் பேச்சுக்கள்; பவத்யா: -- உன்னுடைய; ப்ரணயம் -- நாயகன் விஷயமான ராகத்தை,(விருப்பத்தை); ஸமுச்சித: -- தகுதியுள்ளதாக; ஸந்தர்ஶயந்தி -- நன்றாய் விளக்குகின்றன.
         அழகிற் சிறந்தவளே! பாம்பின்மேல் படுப்பவரும், பக்ஷியின் மேலேறிப் பறப்பவரும், தனக்கு மேல்பட்ட மூத்தோரில்லாத கிழவருமானவர் எப்படி நீ ஆசைப்பட்டு வரித்தவரானார்? என்றிம்மாதிரியான தோழிகளின் பரிஹாஸமொழிகள் (உண்மையில்) உன்னுடைய பதிவிஷய ப்ரணயம் மிகவும் உசிதம் என்று நன்கு காட்டுகின்றன.

         அவதாரிகை

         (1) ஆண்டாள் பிறப்பையும், அவள் பிறப்பு முதலிய ஸம்பந்தலேசங்களாலும் வரும் லோகோத்தரமான ஏற்றங்களையும் ஸாதித்தார். ஆண்டாள் கல்யாணம் ப்ரஸ்துதம். வதூவின் பிறப்பின் சிறப்பை ஸாதித்தார். வரனின் சிறப்பைப்பற்றி என்ன பேசுவது? பிறவாதவனுக்குப் பிறப்பேது? இந்த வரனுக்கு ஜாதகமென்ன? ஜாதனானாலல்லவோ ஜாதகமிருக்கும்!
         (2) கல்யாண விஷயத்தில் 'சீலம், வயசு, வ்ருத்தம்' முதலியதெல்லாம் துல்யமாக அநுரூபமாக இருக்கிறது. ஆகையால் ராகவனும் ஸீதைக்குத் தக்கவர், ஸீதையும் ராகவனுக்கேற்றவள் என்பரே! இங்கே சேர்க்கை ஔசித்யங்கள் எப்படி?
         (3) கல்யாண ஸந்தர்ப்பத்தில் தோழிமார் மாப்பிள்ளையப் பற்றிப் பரிஹாஸங்கள் பேச வேண்டுமே! கோதை நர்த பரிஹாஸோக்திகளில் மிகக் கெட்டிக்காரியான நர்மதையல்லவோ! அவளுக்கு இன்பமான பரிஹாஸ வசனங்களைப் பேசவேண்டுமே! அந்தத் தாயார் கல்யாண விஷயத்தில் மேல்பார்வைக்கேனும் பழிப்புகள் போன்ற நர்ம ஹாஸங்களை நாம் பேசக்கூடாது. அடியோடு ஏசல் இல்லாமையும் கல்யாணத்திற்கு ஒவ்வாது. தோழிகள் மூலமாகத் துளியே பேசுவோம். பாதி ச்லோகத்தோடு பேசி நிறுத்துவோம். அரைகுறையாகவே பேசுவோம்.
         (4) பரிஹாஸம் பேசிப் பழிப்பது துதியாகுமோ? துதியல்லவோ இங்கே ப்ரஸ்துதம்! இந்த க்ரந்தம் கோதை நிந்தை க்ரந்தமல்லவே! அல்ல. துதிதான். நிந்நையே துதியாகும். இது வ்யாஜஸ்துதி அணி.
         (5) ரங்கத்தில் ஹாஸ்யம் ப்ரதானமே. அரங்கர் கல்யாணத்தில் ஹாஸ்யம் வேணுமே!
         நாகேஶய: -- பாம்பின் மேற்படுப்பவர். ஸஹசயன மனோரதம்தானே முதன்மையானது? 'பாம்போடு ஒரு கூரையில் வசிப்பதே துன்ப'மென்பர். படங்களை விரித்திருக்கும் ஆயிரம் தலை பாம்பின்மேல் என்றும் சயனிப்பவராயிற்றே! நாகேசயன் என்று அலுக்ஸமாஸத்தினால் இப்படுக்கைதான் நித்யம், இதற்கு லோபமேயில்லை என்று வேடிக்கை. பத்னியோடு சேர்க்கைபோல படுக்கைக்கும் நித்ய யோகம். பாம்பின் விரித்த படங்களே படுக்கைக்குமேல் அஸமானகிரி. இந்த விதானத்திற்கு ஸமானமில்லையாம். அஸமானமாம். பாம்பின் சிரோரத்னங்களே படுக்கையறை தீபங்கள். இது என்ன படுக்கை ஜோடிப்பு? பெருமாள் நித்ராளுவானாலும், இப்பாம்புக்குத் தூக்கமேயில்லை. பாம்பு தூங்கினாலும், அக்காலத்திலாவது பயமற்றிருக்கலாம். நீர் ஜாக்ரதையாயிருந்தாலும், தூங்கினாலும், நான் தூங்காமல் கண்ணைக் கொட்டாமல் விழித்திருந்து காவல் ஊழியம் செய்வேன் என்று வ்ரதம் அனுஷ்டிக்கும் படுக்கை. கல்யாணத்தில் பரதேசம் போவதற்குக் குடை பிடித்துக்கொள்ள வேணுமே! நான்தான் குடை என்று பாம்பே குடையாக முன்வருமே! வேறு குடைக்கு இடம்கொடாமல் சீறுமே! பரதேசம் போம பாதுகை வேணுமே! அதற்கும் நானே என்று முன்வருமே! நிவாஸமும் தானாகுமே! ரஹஸ்யம் தெரியாதோ? இப்பாம்புதானே உன் வேங்கடவர் வசிக்கும் வேங்கடம்! மனைப் பலகையில் உட்கார வேண்டுமே மாப்பிள்ளை! வேறு ஆசனத்திற்கு இடம் கொடாதே! பூம் பட்டு வேண்டுமே! அதுவும் தானே என்று முன்வருமே! அம்மா! இந்த ரஹஸ்யமெல்லாம் உன் தாதைகளான ஆழ்வார்களுக்குத் தெரியுமே! "சென்றாற் குடையா மிருந்தாற் சிங்காதனமாம் நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும் புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கு மணையாம் திருமாற்கரவு" என்று அவர்கள் பாடுகிறார்களே! அவர்கள் எப்படி இந்த வரனுக்கு வாழ்க்கைப்பட சம்மதித்தார்கள்? "பையரவினணைப் பள்ளியானொடு கைவைத்தின் வருமே" என்றாரே விஷ்ணுசித்தரும்!
         பக்ஷிரத: -- படுக்கையிருக்கட்டும். ஊரெல்லாம் கூடவந்து வாத்ய கோஷங்களோடு ரதத்தில் ஊர்வலம் மெள்ள மெள்ள விடியும்வரையில் வரவேண்டுமென்று ஒரு பெண் ஆசைப்படமாட்டாளோ? ஆகாயத்தில் பறக்கும் பக்ஷியல்லவோ இந்த மாப்பிள்ளைக்கு வாஹனம்! ரதம்! ஒருத்தர் கூடவர முடியுமோ? நீதான் அந்தப் பக்ஷியின் முதுகிலேறிப் பறப்பாயோ! சிறு பெண்ணுக்கு ஆகாயத்தில் பறக்க பயமிராதோ? பயமிருந்தால் ஸுகமிருக்குமோ? ஸந்தோஷமிருக்குமோ? ஊர்வலம் மெள்ள மெள்ள ஊர்ந்தல்லவோ வரவேண்டும்? மெள்ள அடியடியாக ஊர்வது ஊர்வலத்திற்கு அழகு. பக்ஷி பூமியில் நடக்குமோ? வேறு வாஹனம் இவருக்கு ஆகாதே! 'பெருமாளும் நல்ல பெருமாள், திருநாளும் நல்ல திருநாள், ஆயினும் இப்பெருமாளைப் பருந்து தூக்கிப் போவதே' என்று காளமேகக்கவி பாடினார். 'பறவையேறு பரம்புருடா' என்றார் உன் தந்தை.
         ஸுதநு -- அழகிற் சிறந்தவளே! இதைப் 'பாம்பணையோன்' என்பதற்கும் 'பக்ஷிரதர்' என்பதற்கும் தடுவில் வைத்தது ரஸம். இரண்டும் உன் அழகிய மேனிக்கு மிகவும் அநுசிதம். உன் ஆத்மா ஒத்துக்கொண்டாலும், உன் காத்திரமொவ்வாதே! நாகமும் பக்ஷியும் ஸஹஜசத்ருக்களல்லவோ!நடுவே ஈச்வரதத்துவம் நின்று விரோதமே மனதிலுதிக்காமல் தடுக்கிறது என்று வேடிக்கை. 'பையுடை நாகப்பகைக் கொடியோனுக்குப் பல்லாண்டு கூறுதுமே' உன் பூந்தோட்ட புஷ்பமய சய்யை உனக்கேற்றது. 'தஸ்யா:புஷ்பமயீ சய்யா' என்றார் காளிதாஸர் சகுந்தலை விஷயத்தில். 'குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ன பஞ்சசயனத்தின் மேலேறி' என்றல்லவோ படுக்கை மனோரதம் ஸஹஜம்!
         கதம் ஜாத: ஸ்வயம்வரபதி: -- எப்படி அவர் உனக்கு வரனானார்? இவரையா நீ ஸ்வயம்வர பதியாக வரித்தாய்?எப்படி இவரைப் பதியாக்க ஸ்வயம்வரம் கோடித்தாய்? உனக்குத் தெரியாமல் உன் தாதை இதை கடிப்பிக்கவில்லையே! இவர் பிறப்பு எப்படி? யார் அறிவார்? கதம் ஜாத: -- என்ன ஜாதி? என்ன குலம்? ஜனன காலம் எது? ஒன்றும் தெரியாதே! இவர் ப்ரவரமென்ன? "நமேவது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய:' (என் பிறப்பை தேவருமறியார், மஹர்ஷிகளுமறியார்) என்கிறார் கீதையில். எந்த ருஷி ப்ரவரம் இவருக்குச் சொல்லக்கூடும்? ப்ரவரம் சொல்லாமல் கல்யாணமுண்டோ?
         புருஷ: புராண: -- வயதுதான் ஏற்குமோ? இவரிலும் கிழவருண்டோ?
         பவத்யா: ஸகீநாம் -- உன் தோழிகளுடைய. அம்மா இந்த ஏசல் பேச்சு என்னதல்ல. உன் தோழிகளின் பேச்சின் அநுவாத மாத்திரம்.
         ஏவம் விதா: -- இப்படிக்கொத்த. இரண்டொன்றே மாதிரிக்காக எடுத்தேன். எத்தனையோ பேசினர்ரஃ.
         பரிஹாஸகிர: -- பரிஹாஸப் பேச்சுகள். பவத்யா: -- உன்னுடைய. ப்ரணயம் -- பர்த்ரு விஷமான ராகம்.
         ஸமுச்சிதம் -- மிகவும் உசிதமானது. ஆநுரூப்யமுடையது என்று. இது ஸந்தர்ஶயந்தி என்னும் கிரியைக்கு விசேஷணம். 'அடியோடு அநுசிதம்' என்று பரிஹாஸம் பண்ணினது 'இதுதான் அத்யந்தம் உசிதம்' என்று ஸமர்த்திப்பதாகிறது. அவர்கள் பரிஹாஸப் பேச்சே அவர்கள் பரிஹாஆத்திற்கு விரோதம். அதுவே அத்யந்தம் ஔசித்யத்தை நிரூபிக்கிறது. நீ இந்த வரனை வரித்தது மிகவும் உசிதமென்று முடிவான நோக்கு.

         ஸந்தர்ஶயந்தி -- நன்றாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றன. அவர்கள் பரிஹாஸமாக எண்ணிப் பேசியதே உயர்ந்த ஸ்துதியாகி, இச்சேர்த்தியின் முழு ஆநுரூப்யத்தை மிகவும் அழகாக, தெளிவாகக் காட்டுகிறது. உசிதத்திலும் 'தர்ஶயந்தி' என்பதிலும் ஸம் என்பதைச் சேர்த்தார். அநுசிதமா? இல்லவேயில்லை. அத்யந்தமுசிதம். அவர்கள் பரிஹாஸம்போல் பேசியது நிந்தையா? இல்லவேயில்லை. நீ இந்த வரனையே வரிப்பது மிக உசிதம் என்று அழகாக, ஹேதுபூர்வமாய் நன்றாய் நிரூபிக்கிறேன். அவர்கள் ஏசலும் உண்மையில் துதியே. எப்படித் துதியாகும்? பெருமாளுக்கும் தேவிமாருக்கும் எப்படி எப்படி ஸுதமோ, எப்படியெப்படி உசிதமோ, (யதோசிதம்) அப்படிக்கெல்லாம் பணி செய்யும் சேஷனல்லவோ அநந்தனென்னும் நாகன். சேஷிகளுக்கு அமிர்தமயமானவன், பணிபதி உனக்கு சயனம் ஆசனம் என்று ஆளவந்தார் பெரியபிராட்டியார் துதியை ஆரம்பித்தார். நாகேசனாயிருப்பதிலும் ஆசைப்படும்படி ரஞ்ஜிப்பிக்கும் ஸுகஸாமக்ரீ வேறுண்டோ? ஸுகந்தம் கமழ்வதில் இந்நாகத்திற்கு நிகருண்டோ? மென்மையிலும் இதற்கு ஸமமுண்டோ? என்ன ஸுகசீதனம்? பூமியைத் தாங்கும் அநந்தனைத்தவிர எந்தப் படுக்கை ப்ரஹ்மத்தையும் ஈச்வரிகளையும் தாங்கமுடியும்? பாரம் தாங்க மாட்டாமல் மளமளவென்று முறியும் கட்டிலில் படுப்பரோ? "ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலைகதாம" என்று ஆளவந்தார் இந்நாகப் படுக்கையின் மேன்மையைப் புகழ்ந்தார். அசேதனப் படுக்கை தம்பதிகள் ஸுகத்துக்குத் தக்கபடி அறிந்து தன்னை சரிப்படுத்திக்கொள்ள வல்லதோ? ஆனால் ஆசேதனமான ஆசனம் அல்லது கட்டிலில் ஓர் குணமுண்டு. மேல்பாரம் அதிகமாயிருந்தால் அதனால் வலியுண்டாகி வருந்தாது; பெருமூச்சு விடாது.; வலியினால் கத்தாது. இரும்புக் கட்டிலானால், பாரத்தால் வருந்தாது. அது பலமாய் கெட்டியாய் இருக்கும். இந்த பலரென்னும் குணமும் இப்பாம்பினிடம் ப்ரக்ருஷ்டமாயுள்ளது. ஞானமும் ப்ரக்ருஷ்டமாயுள்ளது. பலம் அநந்தமாயிருப்பதால் சைதன்யம் இருந்தாலும் நோவே உண்டாகாது. லகுவாய்த் தூக்கும்படி அநந்த பலமிருக்கிறது. சேஷிகளுக்குற்ற சேஷர்களில் இவர் முதல்வர். பக்ஷிரதராயிருப்பவர் வேதாத்மா. அண்டத்தைத் தூக்கிக்கொண்டு பறக்கக்கூடியவர். அநந்தநாகர் தூக்கிக்கொண்டு ஆகாயத்தில் பறக்க மாட்டார். இவர் அநாயாஸமாக திவ்யதம்பதிகளையும் தூக்கிக் கொண்டு பறப்பார். பெரிய ஆகாயக் கப்பல் போலிருப்பார். ஆகாயரதத்திலும் ஆசைப்படக்கூடிய ரதமுண்டோ? வேதங்கள் அநந்தம். வேதாத்மாவான இவரும் அநந்தரே. அவர் பெரிய புஷ்பக விமானம். பரம மங்களமானவர். பெருமாள் 'புராணம்' என்பதால் எத்தனை மூதோராயினும் என்றைக்கும் நவமானவர். அப்பொழுதுக்கப்பொழுது ஆராவமுதமாயிருப்பவர். புராபி நவ: -- பிரதிக்ஷணமும் அபூர்வமாயிருப்பவர். பிறப்பருக்கு இறப்புமுண்டு. பிறவாத இவர் அமரர்களதிபதி. பெரிய பெருமாளாக இவருக்கு ஸ்வேச்சையினால் ஆவிர்பாவமுண்டு. இவருடைய ஜந்மம் திவ்யம். தன்னிச்சையாலே ஜந்மம். திவ்ய ஜந்மங்கள் இவருக்குமுண்டு. ஜந்மம் பலபல. 'ஸகிகள்' என்பவர் ஸமானமான க்யா(ख्या)நமுடையவர். ஒரேவிதமான சித்தவ்ருத்தியுடையவர். ஸமான சித்தவ்ருத்தியை உடைமைதான் ஸகித்வத்திற்கு லக்ஷணமென்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ஸாதிக்கப் பட்டது. வேதபாஷ்யங்களில் அப்படியே 'ஸகி' பதத்திற்குப் பொருளுரைக்கப் பட்டிருக்கிறது. "என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே" என்று இந்த ஸகிகளைப் பற்றிப் பேசவேண்டியதில்லை. மேலுக்கு ஏசல் போலிருந்தாலும் இந்த ஸகிகள் பேச்சு உண்மையில் துதியானது என்று அறிந்தே பேசினார்களென்று 'ஸகி' பதத்தால் வ்யஞ்ஜநம். பார்வதீபதி அகேசயர். இவர் நாகேசயர். அவர் புங்கவரதர்;புங்கத்வஜர். இவர் விபுங்க வரதர், விபுங்கத்வஜர். ஓர் கவி கூறும் இந்த வேற்றுமைகளும் கவி திருவுள்ளத்திலுள்ளன. 13.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக