செவ்வாய், 12 ஜனவரி, 2010

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க இயலாது


28. நீயே எங்கள் உபாயம்.
          நோன்பிற்கு உரிய உபகரணங்களையும், நோன்பு முடிந்தபின் சம்மானமாக ஆடை ஆபரணங்களையும், பால்-சோறு உண்ணக் கூடி இருப்பதையும் முந்திய இரண்டு பாடல்களிலும் பிரஸ்தாபித்தார்கள் ஆய்ச்சியர்கள். அது கேட்ட கண்ணன், ‘பெண்களே, உங்கள் நிலைமை அறிந்து தருவதே பொருத்தமாகும். என்னிடம் நீங்கள் வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் மேற்கொண்ட உபாயம் அல்லது சாதனம் ஏதாவது உண்டா?’ என்று ஒரு கேள்வி போடுகிறான். அதற்குப் பதில் சொல்லுகிறது இந்தப் பாட்டு.


          ‘கண்ணா, உன் கண்ணால் எப்போதும் நீயே எங்கள் நிலைமையைப் பார்த்துக்கொள்ளலாமே’ என்கிறார்கள் ஆய்ச்சியர்கள். “கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்” என்பதை ‘நாங்கள் சொல்லியா நீ தெரிந்துகொள்ள வேணும்?’ என்கிறார்கள்.


          ‘அறிவொன்றும் இல்லாதவர்கள் நாங்கள்!’ என்றும் தங்கள் அறியாமையை அறிவித்துக் கொள்கிறார்கள். எனவே இவர்கள் ஞானத்தைச் சாதனமாகத் தேடிக்கொள்ளவில்லை என்பது தெளிவு. ‘பசுக்களின் பின்னே போய்த் திரிந்து வயிறு வளர்த்துக்கொண்டிருக்கும் எங்களிடம் நற்கருமமும் இல்லை, விவேக வைராக்கியங்களும் இல்லை’ என்கிறார்கள்.


          பிறகு, ‘உன்தன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்’ என்கிறார்கள். ஆய்க்குலத்தில் கண்ணன் தோன்றுவதற்குத் தக்க புண்ணியம் உடையவர்கள் தாங்கள் என்றும் சொல்லுகிறார்கள். இப்படிப் பிறந்திருக்கும் கண்ணனை, குறைவுஒன்றும் இல்லாத கோவிந்தா! என்று அழைக்கிறார்கள். இதனால் இவர்கள் இறைவனுடைய குணபூர்த்தியில் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவு.


          இப்படிக் கண்ணனுடைய குணங்களில் ஈடுபடுகிறவர்கள் அவனுடைய உறவையும் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். உறவு என்றால், ஆய்க் குலத்தில் கண்ணன் பிறந்திருக்கும் அந்தச் சரீர உறவு அல்ல; ஆத்ம சம்பந்தத்தையே, ஆன்ம உறவையே வற்புறுத்துகிறார்கள்.


          தாங்கள் பிழைகள் செய்திருக்கக் கூடும், அதற்காக அவன் கோபித்துக் கொள்ளவேண்டாம் என்ற கருத்தை உள்ளிட்டு, சீறிஅரு ளாதே என்றும் விண்ணப்பித்துக் கொள்கிறார்கள்.


          கடைசியாகத் தங்கள் நோக்கத்தைக் குறிப்பிடும்போது ‘பறை’ என்றுதான் இப்போதும் மறைமுகமாகவே பேசுகிறார்கள். தங்கள் உள்ளத்தைக் கண்ணன் உய்த்துணர்ந்து கொள்ளும்படி,
இறைவா!நீ தாராய்
    பறையேலோர் எம்பாவாய்
என்றுதான் கூறி முடிக்கிறார்கள்.
          அறிவொன்றும் இல்லாத இவர்கள் குருகுல வாசம் செய்து ஒரு வகை ஞானத்தையும் அடையவில்லையாம். நிழலுக்காகவும் பள்ளியில் ஒதுங்கியதில்லை. கறவைகளின் பின்னேதான் இவர்கள் குருகுல வாசம்! மேய்ச்சல் காடுதான் இவர்கள் பாடசாலை! இப்படியெல்லாம் வாழ்க்கை நடத்தும் எங்களுக்குச் சாதனம் என்ற சம்பத்து ஏது? அந்தச் சம்பத்தைக்கொண்டு நாங்கள் உன் அருளைப் பெற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை என்கிறார்கள்.


          இவர்கள் பசுபாலனம் செய்கிறார்கள் அல்லவா? அதைத் தர்மமாகச் செய்யவில்லை. ‘வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டுத்தான் செய்கிறோம்’ என்று ஒப்புக் கொள்கிறார்கள். காட்டிலே முனிவர்களும் இருப்பார்கள். வேடர்களும் இருப்பார்கள். ‘நாங்கள் முனிவர்களுடன் பழகுவதில்லை; வேடர்களுடன்தான் பழகுகிறோம்’ என்பதையும் தைரியமாக ஒப்புக் கொள்கிறார்கள்.


          ‘கானம் சேர்ந்து உண்போம்’ என்று கூறுவதால், குளித்து உண்பதும் இல்லை என்ற குறிப்பையும் புலப்படுத்துகிறார்கள் எனலாம். ‘உண்போம்’ என்று கூறும் தோரணையிலிருந்து, அதிதி பூஜை என்ற முறையில் விருந்தினர்களை உபசரித்து அத்தகைய அற வழியில் நின்றவர்களும் இல்லை இவர்கள் எனலாம்.


          சுருங்கச் சொன்னால், தங்களிடம் கர்மம் ஞானம் பக்தி ஆகியவற்றுள் ஒரு சாதனமும் இல்லை என்று துணிந்து சொல்லுகிறார்கள். எனினும் கண்ணனைப் பெற்றெடுத்த குலத்திற் பிறந்து இவனுடன் ஆன்ம உறவு பெற்ற புண்ணியம் தங்கள் உடைமைதான் என்பதை மறுக்கத் துணியவில்லை. ஸாக்ஷாத் புண்ணியம் கண்ணன்தானே! வெண்ணெயும் பாலும் அன்பும் ஊட்டி அல்லவா இப்’புண்ணிய’த்தை வளர்த்து வருகிறார்கள்?


          இந்தப் ‘புண்ணிய’த்திற்கும் தங்களுக்கும் உள்ள ஆன்ம உறவைக் குறிப்பிடும்போது, உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறார்கள். இந்த உறவை இறைவனாகிய கண்ணனாலும் ஒழிக்க முடியாது என்கிறார்கள்.

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம்உடையோம்
குறைவுஒன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறிஅரு ளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

விளக்கம்
          இவர்கள் பிரார்த்தித்ததைக் கொடுப்பதற்கு இவர்கள் செய்த உபாயம்தான் என்ன? இப்படி ஒரு கேள்வியைக் கண்ணன் கேட்க, அதற்குப் பதிலாக வருகிறது இந்தப் பாசுரம். உபாயம் ஒன்றுமே நாங்கள் மேற்கொள்ளவில்லை என்றுதான் பதில் சொல்லுகிறார்கள்.


          பசுபாலனம் செய்கிறார்கள் என்பது உண்மைதான்; ஆனால் அது தருமம் என்று அப்படிச் செய்யவில்லையாம். கறவைகளை மேய்த்தால் வயிற்றுக்குச் சோறு கிடைக்கும் என்றுதான் அப்படிச் செய்கிறார்களாம். இப்படிப் பட்டவர்களுக்குக் கர்மானுஷ்டானம் முதலான நியமங்கள் எப்படிச் சித்திக்கும்?

             ‘அறிவொன்றும் இல்லாத இவர்களுக்குக் கிருஷ்ண பக்தி செய்யவேண்டுமென்ற ஒரே அறிவு இருக்கத்தான் செய்கிறது! ‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!’ என்று சொன்ன தாயுமானவரும் தமக்கு ஒரே அறிவு இருந்தால் போதும் என்றுதானே சொல்லுகிறார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக