முத்தமிழ்: மாறனலங்காரம்: விருத்தியுரை:
இச்சிறப்புப் பொருளைத் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் மாறனலங்காரநூலிலும், காரிரத்நகவிராயர் அதன் விருத்தியுரையிலும் கூறியிருத்தலை இங்கு எடுத்துக்காட்டுவாம். “முத்தமிழ்மாறன் ஞானமுத்திரைக்கை கண்டு தொழும், உத்தமராய் வாழ்வாருளம்”1 என்றும் “புத்திக்கு வித்தென்பர் முத்தமிழ் வாய்மைப் புலவர் மண்மேல் எத்திக்கும் போற்றும் திருமகிழ்மாலை யிறைவனையே”2 என்றும், ஓதாதோதும் திருஞான முத்திரைக்கராம்புயனாகிய திருமகிழ்மாலையிறைவன் பாடியருளிய திருவாய்மொழி “முத்தமிழ்” என்று அலங்காரநூலார் கூறியுள்ளதும், “முத்தமிழ்: சித்த சித்தீச்சுரமூன்றுங் கூறுந்தமிழ்: அது திருவாய்மொழி” 3என்றும், “முத்தமிழ் வாய்மை” என்ற இடத்து “முத்தமிழ்: சித்த சித்தீச்சுரமூன்றுங் கூறுந்தமிழ்: அது திருவாய்மொழி, எழுத்தும் சொல்லும் பொருளுந் தேரும் வாய்மையுமாம்”4 என்றும் விருத்தியுரைகாரர் கூறியுள்ளதும் கண்டு, முத்தமிழ் என்பது சடகோபர் திருவாய்மொழி ஆயிரம் என்றது நன்கு காணலாம்.
ரஹஸ்யத்ரயஸாரநூல் ஞானப்பெருந்தகவோர் சம்பிரதாயம் நல்கிய “முத்தமிழ்சேர்ந்த மொழித்திரு” என்ற பொருண்மெய்ம்மை இவ்வாறு விளக்கப்பட்டது. இனி இச்சமயத்துக்கு அச்சுருவாணியாய் நிலைத்துள்ள தத்துவமும்மையைச் சிறது விளக்குவாம்.
தத்துவமும்மை: இறைநிலை: ஸர்வசரீரித்தன்மை.
சித்து, அசித்து. இறை எனத் தத்துவங்கள் மூன்று என்று மேலே கூறப்பட்டது. அசித்தை “ஒழித்தாற்பாலது” (ஹேயம்),5 என்றும் சித்தை “உணர்பவன்” (ஞன்)6 என்றும், இறையை “உணரற்பாலன்” (ஞேயன்)7 என்றும், “முக்தர்களால் அடையற்பாலன்” “முக்தர்களால் தொழற்பாலன்” (முக்தோபஸ்ருப்யன்)8 என்றும் தத்துவமும்மையை அவற்றின் தன்மையைக் கொண்டு வ்யாஸர் சாரீரக நூலில் (ப்ரஹ்மசூத்திரத்தில்) காட்டி அருளினார். வ்யாஸர் பணித்த சாரீரக நூலே சடகோபரது சமயநூல். “சமயநீதி நூலென்கோ”9 என்ற திருவாய்மொழிக்கு, “ஸர்வவேதார்த்தநிர்ணாயகமாய், ஹேதுமத்தாயிருந்த ப்ரஹ்மஸூத்ரபதங்களாலும் பரமபுருஷார்த்ததயா, ப்ரதிபாத்யமாநனென்று சொல்லுவேனோ”9 என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவாறாயிரப்படியில் பாஷ்யம் அருளியிருத்தல் கண்டு, வ்யாஸர் பணித்த சாரீரகநூல் சடகோபருடைய “சமயநீதிநூல்” என்ற உண்மை தெளிக. இறைப்பொருளாகிய பார்த்தன் தேர்முன் நின்ற பரஞ்சோதி தானுமே தான் அருளிய “அருண்மொழியாகிய கீதைதனக்கும் வ்யாஸபகவான் அருளிய “ப்ரஹ்மஸூத்ரத்தை” சான்றாகக் காட்டியுள்ள10 அருமை கண்ட சடகோபர்க்கு அந்த ப்ரஹ்மசூத்திரம் சமயநீதிநூலாய்த் திகழ்ந்த பண்பைப் பிள்ளான் விளக்கியுள்ள நயம் காண்க. கீதைச்லோகத்தையும், உடையவர் ஸ்ரீபாஷ்யஸமந்வயாதிகரண ரஸத்தையும் இங்குப் பிள்ளான் சேரத்திரட்டி விளக்கியுள்ள நலம் ஓர்க. ப்ரஹ்மஸூத்ரம் சடகோபருடைய சமயநீதி நூல் என்ற இப்பொருளை “வேதாந்த ஸம்ப்ரதாயத்திற்கு இந்த யுகாரம்பத்திலே ப்ரஹ்மநந்தியாதிகளுக்குப் பின்பு நம்மாழ்வார் ப்ரவர்த்தகரானார்”11 என்று வேதாந்ததேசிகர் காட்டினார். “திருமால்பெருமை பார்த்தற்கருளிய பாரதத்தைப் பணித்தானும், நின்றவார்த்தைக் குருகைப்பிரானுங் கண்டானம்மறைப் பொருளே”12 என்ற கம்பர் பாடலையும் காண்க. இதனால் சித்த சித்திறைத்தத்துவமும்மையை அடியாகக் கொண்டுள்ள வ்யாஸருடைய சாரீரகநூல் சடகோபருடைய சமயநீதி நூல் என்றும், அதன் விளக்கமே சடகோபர் திருவாய்மொழி என்றும் கண்டுணர்க. மேலே கூறியபடி இத்தத்துவமும்மையை வ்யாஸர் காட்டியதற்குத்தக “ஆக்கைநிலையாமை” “உயிர்நிலை” “இறைநிலை” என்று ஆன்றோர்கள் பகுத்துள்ளார்கள். அசித்து என்பது உணர்வற்ற சடப்பொருள். சித்து என்பது உணர்வுற்ற உயிர்ப்பொருள். இறை என்பது அசித்தையும் சித்தையும் தன்கருத்தால், தன் பொருட்டு, தன்வயத்தவாய், தானே உள்ளுயிராய் நின்று நடத்திப்போரும் தனிக்கோலுடைய காரணப்பரம்பொருள். அசித்து சித்துக்கு உடம்பு. உடம்பாகிய அசித்து உயிராகிய சித்துக்கு அடை. அடைகொண்ட சித்து இறையாகிய பரம்பொருளுக்கு அடை. சித்துக்கு அசித்து அடை. அசித்துக்கு சித்து அரு. சித்துப்பொருளை அத்திகிரிமான் மியத்தில் “அருக்குலம்”13 என்றது காண்க. இறைக்கு சித்து அடை. சித்துக்கு இறை அரு. சித்துக்கு அசித்தாகிய அடை உரு. இறைக்கு சித்தாகிய அடை உரு. அடக்கப்படுதலால் அடை. அடக்குதலால் அரு. அருவால் அடக்கப்படுதலாலும் அருவில் அடங்குதலாலும் அருவுக்கு உரு அடையாகும். உயிர்ப்பொருளாகிய அருவின் வினைவயத்தால் அது உருத்தரிக்கின்றது. அவ்வயம் ஒழிய அவ்வுரு ஒழிகின்றது. மற்றோர் வினைவயத்தால் மற்றோர் உருத்தரிக்கின்றது. அவ்வயம் ஒழிய அவ்வுரு ஒழிகின்றது. அஃதே அருவின் உருக்கலைவு. அதுவரை அந்த அரு அந்த உருவைப் பற்றியே நிற்கின்றது. அருவின் பற்றில் உருவாயும் அதன்பற்று ஒழியச் சவமாயும் சடம் ஒழிகின்றது. அருவின் பற்று உள்ளவரையில். அருவின் உயிர்த்தன்மையால் அதன் உருவாயும், பற்று ஒழிய அடைமை நீங்கி அழனமாயும் சடம் ஒழிதலால் உரு என்பது அருவின் பிரியா அடை ஆயிற்று. உயிர்ப்பொருளாகிய அருவின் வினைவயமாய் அடைத்துள்ளதால் உரு என்பது அதனோடு ஒன்றிப் பிரிக்கவொண்ணாது அதன் தற்கிழமைப் பொருளாய் நின்றுள்ளது. கோல், குண்டலம், முதலிய பிறிதின் கிழமைப் பொருள் போலன்றி உரு என்பது அருவின் பற்றில் அருவோடு ஒன்றி அருவால் காக்கப்பட்டு அருவின் கண் அடங்கி அருவோடு ஒருமை பெற்றுள்ளது. அவ்வொருமை விசிட்ட ஒருமை ஆகும். அது போல் இறையாகிய பரம்பொருள் தன் கருத்தினடியாக உயிர்ப்பொருளாகிய அருவை அதன் வினைக்கு ஏற்றதோர் உருவோடு உளவாக்கி, உளவாக்கிய அவ்வருவைத் தனக்கு உருவாக்கித் தானே அதற்க அருவாய் நின்று அதைத் தற்கிழமைப் பொருளாய்க் கொண்டுள்ளது. வினைவயமாய் உயிர்க்கடைத்த உருப்பற்றுப் போலன்றி இறைவன் தன்கருத்தாலேயே தன்பொருட்டே தனது அருளின் திருவிளையாடலாக உயிர்ப் பொருள்களைத் தனக்கு உருவாகப் பற்றி நிலை கொள்ளாநின்றான். ஆக்கையாகிய உருவை உயிராகிய அரு. வினைவயத்திற் பற்றியுள்ளது போலன்றி, அருவாகிய உயிரைத் தனக்கு உருவாக இறைவன் தரித்துள்ளபற்று, தனது பேரருளிற் கொண்டுள்ள விடாப்பற்றாகும். அருளின் பற்றாதலின் அது விடாப்பற்று. உயிர்களெல்லாம் தனக்கு ஒத்த நாயகிகளாதற்கு, உலகநாயகனான தான், தனது இன்னருளில் செய்துள்ள கைப்பற்றாதலின், அப்பற்றிற் கொண்ட உயிர்களாகிய இறைவனது உரு என்றுமே கலையாததொன்றாயிற்று. தன்னருளிற் கைப்பற்றிய தனது தற்கிழமைக் காதற்பொருள்களாகிய உயிர்களைப் பரம்பொருள் என்றுமே கைவிடான். அஃதே இறைவனது “மெய்க்கருத்து” “மெய்க்காதல்”. உயிர்ப்பொருள்கள் தன்னைத்தாள் பற்றித் தன்னடிக் கீழமர்ந்து புகுந்து புக்ககமாகிய தன்னடிக்கீழ் என்றுமே சடம்பற்றாப் பெருவாழ்வில் நிலைபெற்று உய்தற்கே இறைவன் உயிர்களை உருவாகப்பற்றி அவற்றுக்குத் தான் அருவாக நிலைத்துள்ளான். உயிர்களுக்கு அருவாக நிற்றலோடு, கருவாகவும் நிற்கின்றான். அதாவது உலகுக்கெல்லாம் காரணப் பொருளாய் விளங்குகின்றான் என்றபடி. அருவாகிய உயிர்களுக்கு அவற்றின் வினைப்பயனாய் அசித்தை உருவாகப்பூட்டி அப்பூட்டுக்கு ஏற்கப் பெயரிட்டு, செய்தொழில் வகுத்து, அவை அனைத்துள்ளும் தன் கருத்தினடியாகத் தானே அருவாயும் கருவாயும் நின்று படைப்பனைத்தையும் தன்கோலில் தடையற நடாத்தும் காரணப்பரம்பொருளே இறைவன் என்றது திரண்டபொருள். ஈதே உபநிடதம் உணர்த்தும் தத்துவமும்மையுண்மை, இறைமையிலக்கணம். இறைவன் அருளிச் செய்யும் பேருரு இலக்கணம் (நாமரூபவ்யாகரணம்). சடப்பொருள் உருவாயும், உயிர்ப்பொருள் சடத்தை நோக்க அருவாயும், இறைப்பொருள் எப்பொருளுக்கும் தானே ஓர் அருவாயும் கருவாயும் ஒன்றிய ஒருமையில் நிற்கும் தனிநிலையே இறை நிலை என்றவாறு. அஃதே இறைப்பொருளின் ஸர்வசரீரித்தன்மை. சாரீரனே இறைவன். ஆதலால் சாரீரன் விஷயமாய்ப் பணிக்கப்பட்ட வ்யாஸரது ப்ரஹ்மஸூத்ரத்தை ஆன்றோர். ‘சாரீரகம்’ என்பர் என்று உடையவர் ஸ்ரீபாஷ்யத்தில் (ஆநந்தமயாதிகரணத்தில்) அருளிச் செய்தார். சாரீரகசித்தாந்த விளக்கமே சடகோபர் திருவாய்மொழி என்று மேலே கூறப்பட்டது. “திரவிசும் பெரிவளி நீர்நில மிவை மிசைப் படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும், உடன்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியு ளிவையுண்ட சுரனே”14 “தெளிதரு நிலைமைய தொழிவிலன் முழுவதுமிறையோன். அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே”15 “அமைவுடை அறநெறி முழுவதும் உயர்வற உயர்ந்து அமைவுடை அமரரும் யாவையும் யாவரும்தானாம், அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே?”16 “யாவையும் யவருந்தானா யவரவர் சமயந்தோறும், தோய்விலன் புலனைந்துக்கும் சொலப்படா னுணர்வின் மூர்த்தி, ஆவிசே ருயிரினுள்ளால் ஆதுமோர் பற்றிலாத, பாவனையதனைக்கூடில் அவனையுங்கூடலாமே”17 “எல்லாப்பொருட்கும், அருவாகிய ஆதியைத் தேவர்கட்கெல்லாம். கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே”18 என்று சடகோபர் சாரீராகப் பொருளை விளக்கியருளியபடிகள் கண்டுணர்க. அரு என்றதால் உள்ளுயிராய் அடக்கி ஆளும் இறைமையையும் கரு என்றதால் காரணமாய் நிற்கும் இறைமையையும் ஓதியருளினார். காரணப்பொருளாகிய இறைப் பொருள் தானே முதலாயும், தனியாயும், வித்தாயும் விளங்குகின்றது என்று அதன் காரண இறைமையை “முனிமாப்பிரமமுதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த தனிமாத் தெய்வம்”19 என்றும் “என் முதல் தனிவித்தேயோ?”20 என்றும் தேற விளக்கி அருளினார். முதல் ஆதலால் கருதும் காரணமாயும், தனி ஆதலால் கருவிக்காரணமாயும், வித்து ஆதலால் கருக்காரணமாயும், இறைவன் விளங்குகின்றான் என்ற சாரீரக உண்மை காட்டப்பட்டது. இதனை சாரீரக நூலார் முறையே நிமித்தகாரணம். ஸஹகாரிகாரணம், உபாதாநகாரணம் என்பர். கருத்தாவாயும் கருவாயும் விளங்கும் காரணப்பரம்பொருளின் கண்ணே கருத்து கிரிசை கருமம் முதலிய காரகத்தொழில்களும் கருமபலன்கள் யாவுமே ஒன்றியுள்ளன என்றும், ஆதலால் இறைவனை ஆக்குமுதல்வன் என்றும் ஆமுதல்வனென்றும் சாரீரகப்ரதாநப்ரதிதந்த்ர உண்மையை சடகோபர் ஐயமறத் தெளிவித்தார். “நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன் வேதமயன், காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன்”21 என்றும் “கருமமும் கருமபலனமாகிய காரணன்”22 என்றும் “எவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும், அவையுள் தனி முதல் எம்மான் கண்ணன்”23 என்றும், “ஆமுதல்வன் இவனென்று தற்றேற்றி என், நாமுதல்வந்து புகுந்து நல்லின்கவி, தூமுதல்பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்வாய்முதலப்பனை என்று மறப்பனோ?”24 என்றும், இறைவன்தானே தனது ஆமுதன்மையையும் (உபாதாநகாரணத்தையும்) ஆக்கும் முதன்மையையும் (நிமித்தகாரணத்தையும்) சடகோபர்க்குத் தற்றேற்றுமாற்றானே அவரது நாமுதல்வந்துபுகுந்து தனது இறைநிலை உண்மையை (சாரீரகசித்தாந்தத்தை)ச் சொன்னவாய் முதலப்பன் (திருவாய்மொழி பாடிய அப்பன்) என்னும் உண்மையைச் சடகோபர் காட்டும் அருமை காண்க. இதன்விளக்கமும் ஸாரமும் “தேற இயம்பினார்..... மறைநூல்தந்த ஆதியரே” “நான்மறையுள்ளக் கருத்திலுரைத்துரைத்த முப்பத்திரண்டிவை முத்தமிழ்சேர்ந்த மொழித்திருவே” என்ற இம்மஹாதேசிகரது பாடல்கள் என்றதை உற்று நோக்கிக் காண்க.
1&3மாறனலங்காரம்; பொருளணியியல் 128; 2 ௸ 293; 4. ௸ 293; 5. ப்ரஹ்மசூத்ரம் 1.1.8; 6.௸ 2.3.19;
7.௸ 1.4.4.; 8 ௸1.3.2; 9. திருவாய்மொழி 3.4.6.10 கீதை 13.4; 11 ஸம்ப்ரதாய பரிசுத்தி; 12 சடகோப 41;
13 அத்திகிரிமான்மியம் 19; திருவாய் 1-5-10; 14 ௸ 1.1.7. 15 ௸ 1.3.2; 16 ௸ 1.3.3; 17 ௸ 3.4.10;
18 ௸ 9.4.8; 19 ௸ 9.1.7; 20 ௸ 10.10.8; 21 ௸ 2.7.2; 22 ௸ 3.5.10; 23 ௸ 1.9.1; 24 ௸ 7.9.3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக