புதன், 8 டிசம்பர், 2010

கணக்கு தெரியுமோ கணக்கு

"காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணிமுக்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே"

பக்கத்து வீட்டில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் பையன், அழுதுகொண்டிருக்கிறான். அவன் தந்தை அடி பின்னிக் கொண்டிருக்கிறார். விலக்கிவிட்டுவிட்டு, விஷயம் என்ன என்று விசாரித்தேன். கணக்குப் போட கால்குலேட்டர் வேண்டுமாம், 4*4=16 என்று சொல்லத் தெரியவில்லை, படித்தால் என்ன என்று கேட்டால், இதெல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமா, கால்குலேட்டர் வாங்கிக் கொடு, பார்த்துச் சொல்கிறேன் என்கிறான். அடித்தேன் என்றார். ஐந்தாவது வகுப்பு வரை தினமும், ஓரோண் ஒண்ணு என ஆரம்பித்து இருபதாம் வாய்ப்பாடு வரை தினமும் பள்ளியில் ஒப்புவிப்பதும் ஒரு தப்புக்கு முட்டியில் ஒரு பிரம்படி என வாங்கியதும் நினைவுக்கு வந்தது. ஆனால் தப்பு முழுவதும் சிறுவனைச் சேருமா?
அடியேன் வயதுக்கு மூத்தவர்களுக்கு மாகாணி முந்திரி வாய்ப்பாடுகள் வாசித்தது ஞாபகமிருக்கலாம். ஆங்கில முறைக் கல்வியால் அன்றே நாம் இழந்தது நம்மிடம் இருந்த துல்லியமான கணக்கிடும் அலகுகள் பற்றிய அறிதல். முன்பே ஓரு முறை நம் இந்திய கணிதத்தில் எண்களுக்கு வழங்கி வந்த பெயர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்.அதையெல்லாம் மறந்து விட்டோம்.ஆனாலும் சிலர் அவற்றை பத்திரமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல அரும்பாடு படுகிறார்கள்.

   இன்று வழக்கம்போல் எதையோ தேட கிடைத்தவர் திரு ஜெயபாரதி. மலேஷியா நாட்டுத் தமிழறிஞர். அகத்தியர் என்னும் யாஹூ குழுமத்தில் எழுதுகிறார். அவருடைய சொந்த வலையுமுண்டு.அதிலே பழந்தமிழ்க் கணக்குகள் பற்றி எழுதுகிறார். அவருடைய வலையில் நுழைந்து மேலே உள்ள பாடலுக்கு விளக்கம் காணலாம். வெளிநாட்டில் வாழ்வோர் தமிழுக்காக உழைக்கிறார்கள். நாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ்நாட்டிலேயே வாழ்பவர்கள். தமிழ் வாழ்க என நியான் விளக்குகளை அரசு அலுவலகங்களில் (நல்ல கமிஷனாம்) எரிய வைப்போம். தமிழ் வாழ்க என மேடையில் முழங்குவோம். தமிழும், அதில் உள்ள பொக்கிஷங்களும் தானே வளராதா என்ன? கால், அரை என்றால் இப்போது அர்த்தமே வேறுதானே!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக