தத்துவம்: உபாயம்: புருஷார்த்தம்:
இம்மஹாதேசிகர் அருளிச்செய்த முத்தமிழ் சேர்ந்த மொழித்திரு நூலாகிய ரஹஸ்யத்ரயஸாரம் என்னும் உத்தமப்ரபந்தம் சாரீரக சித்தாந்தப் பொருளை விளக்கிக் காட்டும் உபயவேதாந்தரஹஸ்ய நூல் என்றது மேலே கூறப்பட்டது. இம்மாலைப்ரபந்தங்கள் பிறவும் அப்பொருளைப் பின்னும் நன்கு விளக்கி இனிது உணர்விக்கும் பண்புடையன1. அவைகள் விளக்கிக்காட்டும் தத்துவம், உபாயம், புருஷார்த்தம் என்னும் சிறப்புத்துணி பொருள்களை இங்குச் சுருக்கி உரைப்பாம், வேறிடத்து விரிப்பாம். தத்துவம் என்றதால் சிறப்புற்ற பரதத்துவம் (இறைத்தத்துவம்) சொல்லப்படும். உபாயம் என்றதால், பரதத்துவத்தை அவரதத்துவமாகிய உயிர்ப்பொருள் அடையும் சரணாகதி என்னும் சிறப்பாறு கூறப்படும். புருஷார்த்தம் என்றதால், அவ்வாற்றால் உயிர்ப்பொருள் பெறும் வீடு என்னும் சிறப்புப்பேறு கூறப்படும். சடப்பற்றினின்று விடுபடுதல் வீடு. சடம் ‘ஹேயம்’ ஆதலால் அது உயிர்ப்பொருளுக்குக் கழிக்கப்படவேண்டியதாயிற்று. வ்யாஸர் ‘ஹேயம்’ என்று கூறியதை சடகோபர் ‘காயம்’ என்றார். “காயம் கழித்து அவன்தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்”2 என்றது அவர் திருவாக்கு. ஹேயத்தினின்று விடுபடுதலே வீடு. வல்வினையினின்று விடுபடுதலே வீடு. ஹேயப்பற்றே வல்வினைப்பற்று. அஃதே ‘தான்’ ‘தனது’ என்றபற்று. தான் என்றது அகப்பற்று, தனது என்றது புறப்பற்று. “நீர் நுமது என்றிவை வேர்முதல் மாய்த்து இறைசேர்மின்”3 என்று இருவகைப்பற்றையும் அறுத்து இறை சேர்தலைச் சடகோபர் உபதேசம் செய்தார். உணர்வுடைய உயிர்ப்பொருள் அவ்விருவகைப் பற்றையும் மாய்க்கும் கடமைப்பாடுடையது. அவற்றின் மாய்ப்பும் இறைசேர்தலும் உணர்வுடைய உயிர்ப்பொருளின் இயல்புக்கு வாய்ப்பும் ஏற்புமாம். இறைப்பொருளின் தாளைப்பற்றியே காயம் கழிக்கப்பட வேண்டும். தாள்பற்றார் வீடுபெறார். தாளின் பற்றே ஆறு. அது பயக்கும் பேறே வீடு. ஸர்வசரண்யதத்துவமே பரதத்துவம். சரண்ய தம்பதியார்களாகிய திருமாமகளாரும் திருமாலாரும் பரதத்துவம். அவர்கள் திருத்தாள்களைப் பற்றலே சரணாகதி என்னும் உபாயம். அஃதே ஆறு. அப்பற்றில் அவர்களால் அருளப்பெறுதலே வீடு. அஃதே பேறு. சடத்தைப் பற்றிய உணர்வு அதன்பற்றை ஒழித்தலையே பயனாக உடையது. இறைப்பொருளைப் பற்றிய உணர்வு அதைத் தாள் பற்றி அடைதலையே பயனாக உடையது. உணரும் உயிர்ப்பொருள் ‘ஞன்’ (உணர்பவன்). உயிர்ப்பொருளின் உணர்வுக்கும் இறைப்பொருள் ஒன்றே நோக்கு. ஆதலால் இறைப்பொருள் ‘ஞேயன்’. இறைப்பொருளின் ஒப்பற்ற தனித்தலைமையை உணர்த்த “மஹாஞேயன்”4 என்று உபநிடதம் ஓதிற்று. “ஒண்டாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு”5 என்று சரண்ய தம்பதிகளே ‘மஹாஞேய’ தத்துவம் என்று பொய்கைப்புனிதர் அருளிச் செய்தார். ஒண்டாமரையாள் கேள்வன் ஒருவன் என்றே உணரும் உயிர்ப்பொருளின் பேருணர்வே இறைநிலையுணர்வாகும். அஃதே மெய்யுணர்வு. ஒண்தாமரையாளும் அவள்கேள்வனும், தனித்ததென்னில் நிலை அற்றும், என்றுமே சித்தமாய் ஒன்றியதோர் ஒப்பற்ற பதிபத்தினியராய்த் திகழும் சரணிய திரீபுருட (சரண்ய தாம்பத்ய) ஒருமையில் நிலை நின்று விளங்கும் உலகமங்கல நிலையே இறைநிலை என்ற உணர்வு ஒன்றே மெய்யுணர்வு என்றபடி. அவ்வாறே பரதத்துவமாகிய இறைப்பொருளை அடைதற்கு அவரதத்துவமாகிய உயிர்ப்பொருள் புரியும் தவமே உபாயம் என்னப்படும். அது பெருந்தவம். அடையப்பெரும்பொருள் “மஹாஞேயன்” ஆதலால் அவனை அடையும் உபாயம் மஹாஞானம். அதை மஹாதபஸ்6 என்று உபநிடதம் ஓதிற்று. “மாதவம்”7 என்றார் இம்மஹாதேசிகர். உயிர்ப்பொருள் புரியும் இம்மாதவவேள்விக்கு இறைப்பொருளே உத்தேச்யம் ஆகும். அதாவது இறைப்பொருளின் பொருட்டே ஆகும் என்றபடி. இறைப்பொருளுக்கே உயிர்ப்பொருளை அவியாக இடும் ஞானப்பெருவேள்வியே உபாயம் என்னும் மாதவமாகும். அம்மாதவமே சரணாகதி என்னப்படும். அஃதே செய்தவம் என்னும் தனிப்பெருந்தவம். “இத்தவந்தம்மில் ந்யாஸம் சிறந்தது”8 என்று உபநிடதம் உரைத்தது. இந்த ‘ந்யாஸமே’ ப்ரபத்தி, சரணாகதி, அடைக்கலம் பரம்துடைத்தல், பரந்யாஸம், மறைபுகல், வையடை. இல்லடை, தஞ்சம், அஞ்சலி, என்று கூறப்படும். மாயையைக் கடத்தற்கு, காயத்தைக் கழித்தற்கு, இறைவன் பால் ப்ரபத்தி ஒன்றே ஆகும் என்ற உண்மையை “என்னையே சரணம் யாவர் பற்றுவார் அவர்களிந்த, மன்னிய மாயை தன்னை மாதவர் கடப்பார் மன்னோ”9 என்றும் “கெடுதொழிலாள ராயே எனைச் சரணடையார் மூடர், கடையர்மா யையிலி ழந்த மதியர்வல் லசுர ரொல்லார்”10 என்றும் பேரருளாளனாகிய இறைவன் தானே உபதேசித்தருளினான். ஆதலால் உயிர்கள் உய்தற்கு இறைவன்தானே வகுத்தருளிய பெருந்தவமே சரணாகதி. அஃதே அஞ்சலிப் பெருந்தவம். ஆதலால் இதை சடகோபர் “வணக்குடைத்தவநெறி”11 என்றார். அருள்மிகுந்த இறைவன் கருத்தால் தனது இன்னுயிர்ப் பொருள்களுக்கு ஈதொன்றே உய்யுமாறு என்று வகுக்கப்பட்டுள்ள தவநெறியாதலால், சிற்றுயிர்ப்பொருளானது தன் கருத்து என்னும் பிணக்கு அற இறைவன் பாற்புரியும் கற்பின் துணிபில் நிலை நின்று தான் தனது என்ற ஒன்றையுங் காணாதே இறைவன் தானே தந்தருளிய சரண உணர்வு கொண்டே அவன் பொருட்டே அவனுடைய உயிர்ப் பொருளை அவன் அமுது செய்வதற்கு அவன் திருவடிகளில் அவன் தானே அவியாக இட்டு உகக்குமாறே பேறாகப் “புறநெறிகளைகட்டு பசையற உணக்குமின்”12 என்ற சடகோபரருளிய இவ்வருந்திருவாய்மொழிக் கருத்தை ஆழ்ந்துணர்க. இத்திருவாய்மொழிக் கருத்தை “எனதென் பதுமியா னென்பது மின்றித், தனதென்று தன்னையுங் காணாது – உனதென்று, மாதவத்தான் மாதவற்கே வன்பரமாய் மாய்ப்பதனில், கைதவத்தான் கைவளரான் காண்”13 என்று இம்மஹாதேசிகர் விளக்கியிருத்தல் காண்க. “நீர்நும தென்றிவை வேர் முதல் மாய்த்து”14 “எனதாவியுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு, என தாவி தந்தொழிந்தேன்”15 என்ற திருவாய்மொழியின் ரஹஸ்யப்பொருளை இவ்வெண்பா இனிது உணர்த்தும் சீர்மையை நன்கு நோக்குக.
1 அமிர்தரஞ்சனி 10; பரமதபங்கம் 4; அத்திகிரி மான்மியம் 19; ( முதலியன) . 2 திருவாய் 3.9.8;
3 ௸ 1.2.3; 4 தைத்திரீயம்; 5 முதல் திருவந்தாதி 67; 6 தைத்திரீயம் இது ‘ந்யாஸம்’ என்னப் பட்டது;
7 அமிர்தரஞ்சனி 25; 8 தைத்திரீயம் 1; 9 கீதை 7.14; 10 கீதை 7.15; 11 திருவாய் 1.3.5; இது பக்திக்குமாம்;
12 திருவாய் 1.3.5; 13 அமிர்தரஞ்சனி 25; 14 திருவாய் 2.3.4; 15 திருவாய் 5.10.8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக