வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சுப மந்த்ரார்த்த ப்ரச்ந பாஷ்யம் 13

4ம் கண்டம்

16 விவாஹ ஹோம மந்த்ரங்கள்

1, 2, 3, 4 : ஸோமாய :- இந்த கந்யகையை முதலில் அடைந்த ஸோமதேவனுக்கு இந்த ஹோமம் செய்கிறேன். இரண்டாவதாக கந்தர்வனுக்கும், மூன்றாவதாக அக்நிக்கும் ஹோமம் செய்கிறேன். (இந்த மூவரும்தான் இவளைக் காப்பாற்றி இந்த வரனுக்குக் கொடுத்துள்ளார்கள்).

4. கந்யலா :- இவள் பிறந்த வீட்டை விட்டு கணவனின் இல்லத்தை அடைவதால் இவன் தன் கந்யை என்ற தீiக்ஷ அதாவது நியமத்திலிருந்து நீங்கிவிட்டாள்.

5. ப்ரேதோமுஞ்சாதி :- இஷ்டங்களை பூர்த்தி செய்து வைக்கும் ஓ இந்த்ர தேவனே! இவளுக்கு அவள் பித்ரு க்ருஹத்திலுள்ள அபிமானங்களை (பற்றுதலை) விடுவிக்கவேண்டும். கணவனாகிய என்னுடைய குலத்தில் பற்றுதல் மிகவேண்டும் (பற்றுதல் இல்லாமல் போய்விடக் கூடாது). இவளுக்கு நல்ல புத்திரர்களும், நல்ல ஸம்பத்துக்களும் வழங்கி இவளை இந்த புக்ககத்தில் மனம் லயித்துப்போகும்படியாகச் செய்வீராக.

6. இமாந்த்வம் :- வேண்டியவர்களின் அனைத்து வேண்டுதலையும் மழை போல் பொழிந்து நிறைவேற்றும் இந்த்ரனே! இவளுக்கு நிறை பிள்ளைச் செல்வங்களை ஆசீர்வதியும். பத்து குழந்தைகளை இவள் பெற்றாலும் 11வதாக (கடைசியாக)ப் பெற்ற குழந்தையிடத்தில் அன்பு செலுத்துவதுபோல் என்னிடம் எப்பொழுதும் இவள் அன்பு செலுத்தவேண்டும்.

7. அக்நிரைது :- ஓ அக்நி மற்றும் வருண தேவர்களே! இந்த பெண்ணிடம் பிறக்கவுள்ள புத்திரர்களுக்கு அபம்ருத்யு எனும் அகால மரணம், துர்மரணம் எதுவும் நேரிட்டுவிடாமல், இவள் எக்காரணம் கொண்டும் புத்ர சோகத்தினால் இவள் கண்ணீர்விட்டு அழும்படியான நிலை இவளுக்கு ஏற்படாமலிருக்க ஆசீர்வதிப்பீர்களாக.

8. இமாம் அக்நி: :- விவாஹ அக்னி இவளை ரக்ஷிக்கட்டும். இவளிடம் பிறக்கும் பிள்ளைகள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்காளக இருக்கட்டும். இவள் மடியில் எப்பொழுதும் ஒரு குழந்தை தவழந்த வண்ணம் இருந்து - அவள் மடியை ஒருபோதும் வெறுமையாக்காமல் இருக்கட்டும். நீண்ட ஆயுளை உடைய அந்தக் குழந்தைகளை தினமும் காலை உறங்கி எழுந்தும் கொஞ்சி உறவாடும்படியான பாக்யத்தைக் கொடும்.

9. மாதே க்ருஹே :- ஹே கல்யாணி! உன் வீட்டில் நள்ளிரவில் அழுகுரல் கேட்கவேண்டாம். அழச் செய்யும் அனைத்து துர்தேவதைகளும் உன்னிடமிருந்து விலகி வேறிடத்திற்குச் செல்லட்டும். தலைவிரி கோலமாய் மார்பிலடித்துக்கொண்டு அழவேண்டிய நிலை உனக்கு எப்போதும் வரவேண்டாம். உன் கணவன், குழந்தைகள் நீண்ட ஆயுளுள்ளவர்களாகவும் அவர்களுடன் காலமெல்லாம் சந்தோஷமாக இருப்பாயாக.

10. த்யௌஸ்தே ப்ருஷ்டம் :- உன் ப்ருஷ்டத்தை (முதுகு, ஆஸனம் ஆகிய பின் பகுதிகள்) ஆகாசம் ரக்ஷிக்கட்டும். உன் இரு துடைகளையும் வாயு ரக்ஷிக்கட்டும். அச்விநீ தேவர்கள் உன் ஸ்தனங்களை (மார்பகங்களை) ரக்ஷிக்கட்டும். உன் குழந்தையை ஸவிதா எனும் சூரிய தேவன் காப்பாற்றட்டும். பிறந்த குழந்தை துணி உடுத்தும் காலம் வரும் வரை ப்ருஹஸபதி தேவன், அச்விநீ தேவர்களும் காப்பாற்றட்டு;ம்.

11. அப்ரஜஸ்தாம் :- உன்னிடம் குழந்தை பெறமுடியாத மலட்டுத்தன்மை இருந்தாலும், உனக்கு பிறந்த குழந்தைக்கு கேடுவிளைவிக்கும் புத்ர தோஷம் இருந்தாலும் மற்ற எந்த பாபகரமான தோஷங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் வாடிய பூவை தலையிலிருந்து எடுத்து எறிவதுபோல் உன் சத்ருக்களாகிய பகைவர்களிடம் எறிகிறேன்.

12. இமம்மே வருண, 13. தத்வாயாமி, 14. தவன்னோ அக்நே, 15. ஸத்வந்நோ அக்நே, 16. துவமக்நே அயாஸி ஆகிய மந்த்ரங்களுக்கான விளக்ககங்கள் உபநயனத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.

12, 13. இமம்மே வருண, தத்வாயாமி... ‘வருண தேவனை ஸ்துதி செய்கிறேன், இதுவரை நான் ப்ரார்தித்த அனைத்தும் விரைவில் நிறைவேற அருள்புரியும் என்று, வருணன் குற்றங்களைப் பொறுத்து, கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றை அவற்றை அனுபவிக்க தீர்காயுளையும் கொடுப்பாராக.

14. த்வந்நோ, 15.ஸத்வந்நோ அக்நே, 16. த்வமக்நே .... ‘அக்நிதேவன் மற்ற தேவர்களுக்கு வழங்கப்படும் ஹவிஸ்ஸை சுமந்து செல்பவர், அதனால் அந்த அக்நிதேவன் வருண தேவனை நிர்பந்தித்து என் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்யவேண்டும். மேலும் அக்நி பகவாந் எப்போதும் நாங்கள் அளிக்கும் ஹவிசுகளைப் ஏற்றுக்கொண்டு எங்களுக்கு நல்லாசிகள் வழங்கிக்கொண்டிருக்கவேண்டும்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

சுப மந்த்ரார்த்த ப்ரச்நம் 12

பாணிக்ரஹணம்

பாணிக்கிரஹணம் என்பது பெண்ணின் கையைப் பிடித்தல் என்பது பொருளாகும். கைப்பற்றி உரிமையாக்கிக்கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம். பெண்ணின் வலது கையிலுள்ள ஐந்து விரலையும் குவித்த முறையில் சேர்த்து மணமகன் பிடிக்க வேண்டுமென்பது விதியாகும். மணமகனின் கை மேலேயும் பெண்ணின் கை அதில் அடங்கியும் இருக்க வேண்டும். இந்தப் பாணிக்கிரஹணம், நல்ல சத்புத்திரர்களைப் பெறுவதற்கும் அதனால் தேவர்களும், ரிஷிகளும், பித்ருகளும் சந்தோஷம் அடைவதற்கும் ஹேதுவாக விளங்குகிறதென்று சொல்லப்பட்டிருக்கிறது. சூரியன், சந்திரன், தேவேந்திரன் முதலான தேவர்கள் இந்தப் பாணிக்கிரஹணத்தால் சிறப்பு அடைந்திருக்கிறார்கள். ஸரஸ்வதி, லட்சுமி, இந்திராணி முதலான தேவதைகளும் பாணிக்கிரஹணத்தை ரக்ஷித்து, சகல சௌபாக்கியங்களையும் அளித்து இல்லற வாழ்க்கையை இனிது நடத்தி சத்புத்திரர்களைப் பெற உதவட்டும் என்று ப்ராத்திக்கப்படுகிறார்கள்.

மிகவும் போற்றி வணங்குகின்ற இராமாயணத்தில் சீதையின் கையை இராமன் கையால் சேர்த்துப் பிடிக்க வேண்டுமென்று வால்மீகி கூறுகிறார். ஜனகன் வம்சமும் - தசரதன் வம்சமும் தழைத்தோங்க இந்தப் பாணிக்கிரஹணம் உதவட்டும் என்ற கருத்தில் ‘இயம் சீதா மமசுதா" என்ற ஸ்லோகம் மூலம் குறிப்பிட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

மேலும், மாங்கல்யதாரணத்தைக் காட்டிலும் பலமடங்கு முக்கியமானது இந்த பாணிக்ரஹணமும், ஸப்தபதியும் என்பதைக் காண்போம்.

நாச்சியார் திருமொழி - வாரணமாயிரத்தில் ....

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் காளை புகுதக் கனாக்கண்டேன்

அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன்

அதிரப்புதக் கனாக்கண்டேன் கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன்

எந்தன் கைபற்றித் தீவலம்செய்யக் கனாக்கண்டேன் அம்மிமிதிக்கக் கனாக்கண்டேன்

பொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன் மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன்

என்று விவாஹ காரிகைகளை வரிசையாக எடுத்தியம்பும் ஆண்டாள் எங்கும்

‘மங்கல நாண் சூட்டவென்றோ" ‘மாங்கல்யம் சூட்டவென்றோ" தெரிவிக்காததால் மாங்கல்ய தாரணம் என்ற, க்ருஹ்ய சூத்திரத்தில் சொல்லப்படாத ஒரு நிகழ்ச்சி, அண்மைக் காலத்தில் ஏற்பட்ட ஒன்றே என்பது தெளிவாகிறது. மற்றும் இன்றும் திருமண பத்திரிகைகளில் பெண்வீட்டார் ‘கன்னிகாதானம் செய்துகொடுப்பதாய்" என்றும், பிள்ளை வீட்டார் ‘பாணிக்ரஹணம் செய்துகொள்வதாய்" என்றும்தான் ப்ராதான்யமாக தெரிவிக்கிறார்கள். அந்த பாணிக்ரஹணமாகிய நிகழ்ச்சியை அநுக்ரஹித்து ஆசீர்வதிக்க வேண்டும் என்றுதான் பத்திரிகை வாயிலாக விண்ணப்பித்துக்கொள்கிறார்கள். மேலும், இந்து திருமண சட்டப்படியும் ‘ஸப்தபதி" என்கின்ற நிகழ்ச்சி நடந்து முடிந்தால்தான் திருமணம் முடிவடைந்தாக சட்டப்படி செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அண்மையில் ஏற்பட்ட மாங்கல்யதாரணம் என்ற நிகழ்ச்சி வழங்கும் முக்கியத்துவத்தைப்போல் பலமடங்கு முக்கியத்துவத்தை ‘பாணிக்ரஹணம்", ‘ஸப்தபதி" ஆகிய அதிமுக்கியமான வேத முக்கியத்துவம், சாஸ்த்ர முக்கியத்துவம், சட்ட முக்கியத்துவம், ஸம்ப்ரதாய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளுக்கும் வழங்கி மேலும் ஒரு பத்து நிமிடங்களில் முடிந்துவிடக்கூடிய அந்த நிகழ்ச்சிகளும் முடியும்வரை அனைவரும் பொறுமை காத்து மணமக்களை மனமார ஆசீர்வதிப்பதே சாலச்சிறந்ததாகும்.

பாணிக்ரஹண 4 மந்த்ரங்கள்

க்ருப்ணாமி தே ஸுப்ரஜாஸ்த்வாய :- ஏ வதுவே! தர்மத்தின் வழி நடக்கும்படியான நல்ல குழந்தைகளைப் பெறுவதற்காக உன் திருக்கரங்களைப் பற்றுகிறேன். கணவனாகிய என்னுடன் கிழத்தன்மை அடையும்வரை சேர்ந்து வாழ்ந்து இல்லற சுகங்களைத் துய்ப்பாயாக. பகன், அர்யமா, ஸவிதா, இந்த்ரன் ஆகிய தேவர்கள் சிறந்த இல்லறத்தை நடத்தும் பொருட்டு உன்னை எனக்கு மனைவியாகவும், உற்ற தோழியாகவும் அளித்துள்ளார்கள்.

தேஹ பூர்வே ஜநாஸ: :- இந்த விவாஹ தர்மத்தை ஏற்படுத்தியவர்களான முன் சொன்ன தேவர்களும், முன்னோர்களும் அந்த தர்மத்தை அநுஷ்டித்து வந்தனர். தேவர்களில் தலையாயவனான அக்நியும், முன்னவனான ஸூர்யனும் இந்த விவாஹ தர்மங்களில் ஸம்பந்தம் உடையவர்களாவர்.

ஸரஸ்வதி :- சுபமான அழகுள்ளவளும், அன்னத்தைக் கொடுப்பவளுமான ஏ ஸரஸ்வதி தேவியே! நீயும் இந்த பாணிக்ரஹண வைபவத்தை ரக்ஷித்துக் காப்பாயாக. நாங்கள் இந்த ஸபையிலுள்ளோர் அனைவரின் முன்னிலையில் அனைத்து ஜீவராசிகள் சாட்சியாக உன்னைத் துதிக்கிறோம்.

ய ஏதி ப்ரதிஶ: எந்த வாயு தேவன், திக்குகள் - உப திக்குகள் என்று எல்லா திசைகளிலும் தடையின்றிச் ஸஞ்சரிக்கிறானோ, அன்னத்தைக் கொடுக்கும் அக்நியின் தோழனும், ஹிரண்யத்தை (தங்கத்தை) கையில் அணிந்திருப்பவனுமான அந்த வாயுதேவன் வதுவே! உன்னை என்னிடம் மாறாத, உறுதியான அன்புள்ளவளாகச் செய்யட்டும்.

ஸப்தபதி

பெண்ணின் வலது காலை மாப்பிள்ளை இடது கையால் பிடித்து ஒவ்வொரு அடியாக ஏழு அடி எடுத்து வைப்பதை ஸப்தபதி என்று குறிப்பிடப்படுகிறது. விவாஹ க்ரியைகளிலேயே இது மிகவும் பொருள்பொதிந்தது. ஒரு பெண்ணும், ஆணும் இல்லற வாழ்க்கையை எப்படிப் பகிர்ந்துகொள்ளவேண்டும் எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்கவேண்டும் என்பதுபற்றி வேதம் மிக உயர்ந்த உதாரணங்களைக் கொண்டு அழகாக விளக்கிக் கூறியுள்ளது. வரன் வதுவைப் பார்த்து ‘ஏ பெண்ணே, உன் கையை வேதமந்திர ப10ர்வமாகப் பற்றி என் சொத்தாக ஆக்கிக்கொண்டபின், என் தர்ம பத்திநியாக என்னுடன் முதன் முதலாக அடி எடுத்து நடந்து வரப்போகிறாய். உன்னை எனக்கு தர்மபத்தினியாக்கிக் கொடுத்த அந்த தேவர்களின் முன்னிலையில் நான் விஷ்ணு பகவானை, உன்னுடனான இல்லறத்திற்கு எனக்குத் தேவையான ஏழுவிதமான பாக்கியங்களை அருளும்படி கோரப்போகிறேன்" என்று அவளுடைய காலைப் பற்றி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் ஒவ்வொரு விண்ணப்பமாக வெளியிடுகிறான்....

7 மந்திரங்கள். பாணிக்ரஹணம்போல் இதுவும் முடிந்தால்தான் விவாஹம் முடிந்ததாகப் பொருள்.

‘ஏகம் இஷே விஷ்ணுத்வாந்வேது" ... முதலடியால் ‘அன்னங்கள் குறைவின்றி கிடைக்க விஷ்ணு உடன் வரட்டும்"

‘த்வே ஊர்ஜே ..." இரண்டாமடியால் ‘நம் தேஹத்தின் ஆரோக்யத்தை ரக்ஷிக்க விஷ்ணு தொடரட்டும்"

‘த்ரீணி வ்ரதாய..." மூன்றாமடியால் ‘வ்ரத கலாசாரங்களை காக்க விஷ்ணு உடன் வரட்டும்"

‘சத்வாரி மாயோபவாய" நான்காவதால் ‘ஸகல இன்பங்களும் கிட்ட விஷ்ணு உடன் வரட்டும்"

‘பஞ்ச பசுப்பய:" ஐந்தாவதால் ‘வளர்ப்பு ப்ராணிகளை நல்கி ரக்ஷிக்க விஷ்ணு உடன் வரட்டும்"

‘ஷட்ருதுப்ய:" ஆறாவதால் ‘ஆறு பருவ காலங்களும் நமக்குச் சாதகமாக விஷ்ணு உடன் வரட்டும்"

‘ஸப்தஸப்தப்ய:..." ஏழாவதால் ஏழுவிதமான யாகங்களும், அதன்பயன்கறும் நல்க விஷ்ணுவும் வரட்டும்" என்று விஷ்ணுவை ப்ரார்த்திக்கிறான். ஹோதா, ப்ரசாஸ்தா, ப்ராஹ்மணாச்சம்ஸீ, போதா, நேஷ்டா, அச்சாவாக, ஆக்நீத்ர என்ற 7விதமான ருத்விக்குகளை (யாகத்தில் பங்ககேற்போர்) கொண்டு செய்யப்படுகிற ஸோம யாகாதி ஸத்கர்மாக்களை அநுஷ்டிக்கும்படியான பாக்யம் ஏற்பட ஸ்ரீமந்நாராயணன் தொடர்ந்து வந்து அநுக்ரஹிக்கட்டும்.

7ம் அடி முடிந்ததும் தொடர்ந்து ஜபிக்கப்படவேண்டிய மிக உயர்ந்த கருத்துடைய மந்த்ரம்:

‘ஸகா ஸப்தபதாபவ..." என்கிற மந்திரத்தால் தன் புதிய இளம் மனைவியிடம் நாம் எப்படிஎப்படி இருக்கவேண்டும் என்பதை பகிர்ந்துகொள்கிறான்...

‘ஏ வதுவே, ஏழு காலடி வைத்து என்னுடன் தொடர்ந்த நீ, இன்றுமுதல் எனக்கு வேதப்ரமாணமான ஸகி (ஸம்ஸ்க்ருதத்தில் நண்பனுக்கு ‘ஸகா" என்றும் அதற்கு பெண்பால் ‘ஸகி" என்றும் பெயர்) ஆகிவிட்டாய். நாம் பரஸ்பரம் நண்பர்காளகிவிட்டோம். இந்த நட்பிலிருந்து நான் ஒருபோதும் நழுவமாட்டேன். நீயும் நம் நட்பில் இந்தப் பாராங்கல்லைப்போல் (அம்மி போல்) உறுதியுடன் இருப்பாயாக. நான் விஷ்ணுவிடம் வேண்டிப்பெற்ற அனைத்தையும் நாம் இருவரும் சேர்ந்து அனுபவிப்போம். இவ்வுலகில் ஒன்றைத் தவிர்த்து மற்றொன்று நிலைக்காததான பல்வேறு தத்துவங்கள் போல் நாம் இருவரும் இணை பிரியாதிருப்போம். நான் ஆகாயமானால் நீ பூமியாக இரு, நான் உயிரணுவானால் நீ உயிரைத் தாங்கும் கர்பக்ருஹமாய் இரு, நான் மனமானால் நீ வாக்கு எனும் சொல்லாக இரு (மனதால் நினைக்காத எதையும் வாயினால் பேச இயலாது), நான் ஸாம கானமானால் அந்த கானத்திற்கு கருப்பொருளான ருக்காக விளங்கு, இப்படி அநுஸரணையாய் இருவரும் இருந்து இன்பத்தின் சிகரங்களை எட்டுவோம், ஈடுஇணையில்லா புத்திரர்களையும், மஹாலக்ஷ;மிபோன்ற பெண் மகவையும் பெற்று கிழத்தன்மை அடையும்வரை சுகித்துக்கிடப்போம் வா என் ஸூந்ருதே"

குறிப்பு:- ப்ரியமானவளே, ஸுகம், சுபம், சௌக்யம், ஸுகந்தம், ஸுந்தரம், ஸுமங்களம், ஸுப்ரம், இன்பம், இனிமை என „ஸு… என்ற அடைமொழி பெறும் அனைத்து நற்றன்மைகளுக்கும் இலக்கணமானவள் என்ற பொருளுடைய ஒரே வார்த்தை „ஸூந்ருதே… என்பதாகும்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

101 Guru Paramparai Vaibhavam (13-08-2012)

ஸ்ரீமத் தேரழுந்தூர் ஆண்டவனின் திவ்ய சரிதத்தை நிறைவு செய்து கொண்டு இந்த வாரம் நாட்டேரி ஸ்வாமி ஸ்ரீமத் ஆக்கூர் ஆண்டவனின் அற்புதமான சரித்திரத்தை விவரிக்கிறார். ஸ்ரீமத் பெரியாண்டவனின் அனுக்ரஹ விசேஷத்தாலே அவதாரம் செய்தருளின ஸ்ரீமத் ஆக்கூர் ஆண்டவனின் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம கைங்கர்ய விசேஷங்களை வழக்கம் போல் MediaFireல் இருந்து நகலிறக்கிக் கொள்ள

http://www.mediafire.com/?digrtm2l1vp19h2 

அந்த உபந்யாஸத்தின்போதே ப்ரபத்தி விசேஷத்தை விவரிப்பதை நேரடியாகக் கேட்டு மகிழ