வெள்ளி, 10 டிசம்பர், 2010

வைணவ ஆசாரியர்கள்

2. யமுனைத்துறைவர்

1.அவதாரம்.

நாத யாமுன ராய நாயிறு
போத மாஞ்சுடர் பொங்க நல்கிய
மாத வன்வரன் மன்ன னாரடி
ஆத ரத்துட னண்டி வாழ்குவம்.
                         1.

வீரநாராயணபுரத்து மன்னனாரை வாழ்த்துவது. இப்பெருமான் உலகினுக்கு நாதமுனி, யாமுனமுனி என்ற இரண்டு ஞாயிறுகளை உலகிற்கு அளித்தவர். இவர்கள் போதமாகிய சுடரினைப் பரப்பினர்.

செய்ய னீச்சுர முனிவன் செல்வனாய்த்
துய்ய தாதுவி லாடி தோன்றினன்
பெய்யு முத்திரா டத்தொ டுற்றநாள்
வெய்ய மேனிவாய் குட்டன் மேலவனே.             .2.

ஈச்வர முனிவருக்கு ஆளவந்தார் அவதரித்தமை. தாது வருடம், ஆடி மாத உத்திராடத்தில் அவதாரம். செய்யன் – நேர்மையுள்ளவன். பெய்யும் – (நலம்) பொழியும். பெய்யும் – அணியும். ஆடி பெய்யும் உத்திராடத்தொடு உற்ற நாள் என்று இயைக்க. ஈச்வர முனிவன் (முனிவனுக்கு) செல்வனாய் வெய்ய மேனி வாய் குட்டன் மேலவன் தோன்றினன் --- வெய்ய – சுடர் பொருந்திய.

தந்தை யாணையி னகைதல் தானுறாச்
சிந்தை வாயுமிவ் வையன் செல்வமாய்
வந்த வன்யமு னைத்து றைவனென்
றுந்து வாரமொ டோது முத்தமன்.                           .3.    

தந்தையின் ஆணைப்படி இம்மகவிற்கு யமுனைத்துறைவன் என நாமம் சூட்டியமை. அகைத்தல் – முறித்தல், மாறு செய்தல். ஐயன் – பெரியோன், ஈச்வரமுனிவன். உந்து வாரம் – பெருகும் அன்பு. ஓதும் – ஓதினான்.

மன்ன னாருளம் மகிழ வந்தவன்
தன்ன தருளினால் தளிர்த்த தர்சனம்
தன்னை யுய்க்குமுய் யக்கொண் டான்கழல்
மன்னு மாணுடை மணக்கால் நம்பிகள்.                 .4.

குரவ னேவலை நினைந்து குட்டனின்
பரவு சோதியும் பார்பு ரக்கவாம்
விரவி லக்கணம் யாவுங் கண்”டிவன்
உரவ னாகுவன்” என்று ரைத்தனன்.                       .5.

நாதமுனியின் சீடராகிய உய்யக்கொண்டாருக்கு சீடராகிய மணக்கால் நம்போ இக்குழந்தையை வாழ்த்தியமை. தளிர்த்த – பரவிவரும். தர்சனம் – அறநெறி (மேலோர் காட்டியது). மணக்கால் நம்பி குழந்தையிடம் கண்டவை : சோதி, உலகத்தை ஆளக்கூடிய முக இலக்கணம். உரவன் – அறிவுடையோன்.

வாயு மன்பினில் மெய்யர் முன்னவன்
சேயின் சென்னியிற் தன்கை சேர்த்தரோ
தூய துவாதசாட் சரத்தை யோதினன்
மாய வன்திரு வெட்டெ ழுத்துடன்.                          .6.

மணக்கால் நம்பி இக்குழந்தைக்கு காப்பாக த்வாதசாக்ஷரீ, அஷ்டாக்ஷரீ ஆகிய மந்திரங்களை ஓதினர். மெய்யர் முன்னவன் – அந்தணர் தலைவன். சேயின் சென்னியில் தன் கை சேர்த்து …. ஓதினன் -----. அரோ – அசை.

மனுவி ரத்தின மாகும் வண்டுயம்
தனைய வன்செவி தன்னி லோதி,”இத்
தனிவ னப்பினன் தரணி யுய்த்திடும்
முனிவ னாகுவன்” எனமொ ழிந்தனன்.                    .7.

குழந்தையின் செவியில் மந்திர ரத்னம் என்னும் த்வயத்தை மணக்கால் நம்பி ஓதினர். குழந்தை தாம் நினைக்குமாறு மேன்மையுற. மனு – மந்திரம். வண் துயம் – பெருமை வாய்ந்த த்வயம் (சொற்றொடர்கள் இரண்டு கொண்ட மந்திரம்). இ தனி வனப்பினன் – ஒப்பற்ற அழகு வாய்ந்தவன் இவன்.

பிராய மைந்திலிப் பிள்ளை விஞ்சையும்
பராப ரந்தனைப் பரவு வேதமும்
உராவு நற்கலை பலவு மோதினன்
முராரி தன்கழற் பத்தி முன்னிட.                         .8.

ஐந்து பிராயத்துள் கற்றவை. விஞ்சை – வித்தை. கல்வி. பராபரம் – இறைவன். உராவு நல்கலை – பரந்த கலைகள். முராரி – முரனைக் கொன்ற இறைவன். முராரி ……..பத்தி முன்னிட ஓதினன்.

ஒருமு றைகுரு ஓது விப்பதை
மறுமு றைகடிந் தகத்து வைக்குமிச்
சிறுவ னாற்றலைச் சிறுவ ரேனையர்
பெருவி யப்பினிற் பேசி னாரரோ.                       .9.

சிறுவனது ஆற்றல். ஒருமுறை குரு ஓதுவிப்பதை --- மறுமுறை கடிந்து --- இரண்டாவது முறை வேண்டாம் என அகற்றி. அகத்து – நினைவினில்

சாத்தி ரங்களிற் சதுரன் மேதையர்
ஏத்து பாடிய பட்ட னேற்றிட
ஆத்த னிளையவன் சீட னாயினன்
மாத்து மட்டிலாக் கல்வி மாந்திட.                       .10.

பாடிய பட்டனின் சிஷ்யனானமை. குருவின் பெயர் பாஷ்ய பட்டர். சதுரன் – கற்றவன். மேதையர் ஏத்து பாடியபட்டன்---- மேதையரால் பாராட்டப்பெறும் பாடியபட்டன். ஆத்தன் – ஆப்தன், அன்பிற்குரியவன். மாத்து—பெருமை. மா—பெருமை. ஏற்றிட – சீடனாக ஏற்க.

விண்ணுளா ராசிரியன் வியாழன்றா னிவனென்று
மண்ணுளார் வியந்திடவே வந்ததனிப் பிள்ளைதனை
அண்ணலா சிரியன்றன் னருகிருத்திப் பரிவாற்றன்
கண்ணிகர்க் கலையெல்லாங் கதிருறவே கற்பித்தான்.   .11.

இச்சிறுவனுக்குக் குரவர் கலைகளை ஊக்கமுடன் கற்பித்தமை. விண் உளார் ஆசிரியன் வியாழன்தான் இவன் என்று – வானவர்க்குக் குருவாகிய பிருஹஸ்பதி இவன் என்று. அண்ணல் – சிறந்தவன். (குரு) தன் அருகு இருத்தி . பரிவால் …. கற்பித்தான் -----------. கண் நிகர் – தனக்குக் கண்போல் வளர்த்து வந்த . கதிர் உற – இந்த இளைஞன் ஓதிய கலைகள் நிறம்பெறுமாறு.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக