ஒரு பழைய நூலகத்தின் திறக்கப்படாத ஒரு பீரோவில் கிடைத்த சில புத்தகங்களில் இங்கு பக்கத்தில் காணும் “சுபஸம்ஸ்காராதி மந்த்ரார்த்த”மும் ஒன்று. படித்த பிறகு அதில் சில பக்கங்களை அமெரிக்கா ஸ்ரீ சடகோபன் ஸ்வாமியிடமும், சென்னை ஸ்ரீவைஷ்ணவ கேந்த்ரம் தீவாளூர் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமியிடமும் பகிர்ந்து கொண்டேன். முதலில் இதை வலையிடுவதாக அடியேனுக்கு உத்தேசமில்லை. ஆனால் பெரியவர்கள் இருவருமே இதிலுள்ள விஷயங்கள் அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்று அபிப்பிராயப்பட்டார்கள். நம்மில் பெரும்பாலோர் வைதிக கார்யங்களில் சிரத்தை காட்டத்தான் செய்கிறோம். ஆனால் கடந்த 30/40 ஆண்டுகளாக நம்மில் பெரும்பாலோருக்கு ஸம்ஸ்க்ருதம் அடியோடு தெரியாத மொழியாகப் போனதால், பிருஹஸ்பதி ஸ்வாமி சொல்கின்ற மந்த்ரங்களை அவற்றின் அர்த்தம் தெரியாததால் முழு ஈடுபாடு இல்லாமல் செய்து வருகிறோம். இந்நூல் சுப காரியங்களில் சொல்கின்ற மந்த்ரங்களுக்கு முழுமையாக இல்லாவிட்டாலும்கூட முக்கியமானவற்றிற்கு எளிய தமிழில் அர்த்தம் சொல்கிறது. இந்நூலைப் படிப்பாருக்கு இனி அகங்களில் வைதிக கார்யங்கள் நடைபெறும்போது இந்த மந்தரங்கள் மூலம் தாங்கள் என்ன ப்ரார்த்திக்கிறோம் என்பதை உணர்ந்து சொல்வதால் வெகு உற்சாகமாக, அவற்றை செய்ய உதவியாக இருக்கும் என்பது நிச்சயம்.
அடியேனுக்கு உள்ள சில சிரமங்களைக் கருத்தில் கொண்டு தீவாளூர் ஸ்வாமி தானே தட்டச்சிட்டுத் தர முன்வந்திருக்கிறார். இந்நூல் எளிய தமிழில் இருந்தாலும் 50/60 வருடங்களுக்கு முன் எழுதப் பட்டிருப்பதால், அக்கால வழக்கப் படி சில சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கும் தீவாளூர் ஸ்வாமி தேவையான இடங்களில் அடைப்புக் குறிகளுக்குள் இன்றைய தலைமுறைக்குப் புரியும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். விஷயங்களின் முக்கியத்துவம் கருதி ஸ்ரீ சடகோபன் ஸ்வாமி ஆங்கிலத்தில் இந்நூலில் கண்டுள்ளவைகளுக்கு விளக்கம் அளிக்கவும் முன் வந்திருக்கிறார். தொடர்ந்து படியுங்கள்! நமது மந்திரங்கள் எவ்வளவு அர்த்த புஷ்டியானவை! எவ்வளவு இன்றியமையாதவை! என்பதை அறியலாம்.
இனி நூலைப் படியுங்கள்! தினமும் சிறு சிறு பகுதியாக வரும். முதல் பகுதியான “ஆமுகம்” (introduction) மட்டும் ஒரே தடவையாக இங்கு இருக்கிறது. சற்று பெரிதாக இருந்தாலும் பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.
ஸ்ரீ:
கீழ்க்கண்ட புத்தகத்தில் கண்டுள்ள விஷயங்கள் மீண்டும் அப்படியே (சில பெரிய சொற்றொடர்களை படிப்பவர் வசதிக்காக பிரித்துத்) தட்டச்சு செய்யப்படுகிறது. சில கடின பதங்களுக்கு ஆங்காங்கே அடைப்புக் குறிகளுக்குள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. - என்.வி.எஸ்.
ஆமுகம்
வேதமே நம் தைவமாகும் அதில் ச்ரத்தை இல்லாதவனே நாஸ்திகன். வேதார்த்தங்கள் எளிதில் தெரியக்கூடியவை அல்ல. கூடார்த்தங்கள் (மறை பொருள்) பொருந்தப் பெற்றவை. மேலோடு படித்துவிட்டு அதில் ரஸமில்லை என்றோ, ஸந்தர்பத்திற்கு ஒட்டவில்லை என்றோ, அவச்யமில்லாததைச் சொல்வதாயோ (சொல்வதாகவோ) அதை அலக்ஷியம் செய்யக்கூடாது. ‘நாதன் வேதமயன்” என்னுமாப்போல பகவான் தம்மை, மந்த்ரம், ப்ரணவம், ரிக், ஸாமம், யஜுஸ், கர்மா என்று கூறுகிறார்.
இது ஒருவராலும் எழுதப்படாததென்று (அபௌருஷேயம்) மஹிமை பெற்றுள்ளது. ஸகுண ப்ரஹ்மத்திற்கு (குணங்களுடன் கூடிய ப்ரஹ்மத்திற்கு) ஒரு கால் காலம் கல்பிக்கலாமோ என்னமோ, இது பகவானின் உச்வாஸ (உள் ஸ்வாஸம்) நிச்வாஸமான (வெளி ஸ்வாஸம்) ப்ராண வாயுவாய், பகவானின் சரீரத்திற்கு ஆகிறது. அநாதி (தொடக்கம்-முடிவு அற்றது), நித்யம் (என்றும் நிலைத்திருப்பது). வேத சாஸ்த்ரார்த க்ரஹணத்தில் (அர்த்தம் கொள்வதில்) நம் புக்தி, யுக்திகளை (அல்ப அறிவாற்றலை) கலப்பவன் நாஸ்திகன்.
ஒரு பாலகன் சது:சாஸ்த்ர பண்டிதரிடம் அக்ஷரப்யாஸம் செய்யப்புகுங்கால், ‘அவர் சொல்வது பிசகு” என்று சொன்னால் - எப்படி அது அஸம்பாவிதமோ (ஏற்றுக்கொள்ள இயலாதது), அப்படித்தான் அஜ்ஞர்களான (ஒன்றும் அறியாதவர்களான) நாம், அதன் (வேதத்தின்) கௌரவம் தெரியாது, அது விஷயத்தைப் பற்றி குறை கூறுவதாகும்.
எப்படிப்பட்ட மேதாவியும், மஹரிஷியாக இருந்தாலும் சரி, அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களைப்போல் ஈஷத்தாவது (இம்மியாவது) தம் புத்தியைக்கொண்டு எழுதிவிட முடியாது என்பதே, அது அபௌருஷேயம் என்பதற்கு அத்தாக்ஷியாகும் (ப்ரமாணம்).
யஜூர்வேத இந்த 80 ப்ரச்னங்களும், கார்யபத்ய, ஆவஹநீய, தக்ஷிணாக்நிகளான மூன்று அக்நிகளில் செய்யவேண்டிய கர்மாக்களைக் கூறுகின்றன. இம் மந்த்ர ப்ரச்நத்திற்கும், ஆபஸ்தம்பர் ஸூத்ரங்கள் செய்துள்ளபடி, ஜாதகர்மாதி ஸம்ஸ்காரங்களிலும், இதில் வரும் ச்ராத்தாதிகளிலும், ஒரே அக்நியால் ஸாத்யமான (முடியக்கூடிய) கர்மாக்கள் ஆதலால் இதற்கு ‘ஏகாக்நி காண்டம்” என்ற பெயருமுண்டு. இந்த 80 ப்ரச்னங்களுக்கும் ஆபஸ்தம்பர், கல்ப (ச்ரௌத) ஸூத்ரம் எழுதியுள்ளார். இம் மந்த்ர ப்ரச்நத்திற்கும், அநுஸ்யூதமாக க்ருஹ்ய ஸூத்ரம் எழுதியிருக்கிறார். அது நம்மாலும் (நே.ஈ.வேங்கடேச சர்மா) மொழி பெயர்க்கப்பட்டு அச்சாகியிருக்கிறது. இந்நூலில் நாமும் சிற்சில இடங்களில் ஸூத்ரகாரர் விதித்துள்ளார் என்று வரைந்துள்ளோம். இது இந்த யஜுர் ஸாகையைச் சேர்ந்ததா என்று சங்கிப்பர் (ஸந்தேஹப்படுவர்) சிலர். „மநு… தம் ஸ்ம்ருதியில் ஸ்த்ரீதர்ம ப்ரகரணத்தில் ஸ்த்ரீகளுக்கு சுத்திக்குறைவு ஸ்வாபாவிகம் (இயற்கையானது) என்று சொல்லுமிடத்தில் ‘யந்மே மாதா ப்ரலுலோபசரதி” என்று இதில் வரும் வாக்யத்தை அநுவாதம் (தம் வாதத்திற்கு துணை) செய்கிறார். ஆகையால் ஸம்சயம் (ஸந்தேஹம்) நிவர்த்தியாகிறது.
வேத உச்சாரணத்தில் ஸ்வரம் பிசகினால் அர்த்தம் அநர்த்தமாகி விபரீத பலன் ஏற்பட்டுவிடும். த்வஷ்டா (எனும்) தேவன், இந்த்ரனை கொல்லக்கூடிய புத்ரகாமனாய் (புத்ரனை விரும்பியவனாய்) ‘இந்த்ர சத்ரு: வர்த்தஸ்வ ஸ்வாஹா” என்றதை அபஸ்வரமாய்ச் சொல்லி ஹோமம் செய்ய, (இந்த்ரனைக் கொல்லக்கூடிய புத்ரனுக்கு பதிலாக) இந்த்ரனால் கொல்லப்டக்கூடிய புத்ரன் ஜநித்ததாகச் வேதம் உத்கோஷிக்கிறது.
‘விப்ரன் (ப்ராஹ்மணன்) வீட்டிற்போய் தக்ரம் (மோர்) குடித்தான்” என்கிறான். பத அர்த்தம் தெரியாதவன் இவன் சொன்ன மாதிரியிலிருந்து (சொன்ன விதத்திலிருந்து) அபக்ஷ்ய போஜ்யம் (சாப்பிடக்கூடாத வஸ்துவை சாப்பிட்டதாக) செய்ததாக க்ரஹிக்கிறான் (நினைக்கிறான்).
‘வெள்ளியோஓஓஓஓஓஓஓடு வெள்ளி - தீபாலிக்கு தீபாலி” என்று முந்தையதை நீட்டியும் பிந்தையதை சீக்ரம் சொல்வதாலேயே தெலுங்கன் போன்ற தமிழ் தெரியாதவன் ப்லுதமாய்ச் சொன்ன வெள்ளி வெகு காலத்திற்கு ஒரு முறை வருவது போலவும், தீபாவலியை வேகமாய்ச் சொன்னதால் அதிசீக்ரத்தில் வருவது போலவும் த்வநிப்பது லோக வ்யவஹாரத்திலும் (அன்றாட நடைமுறையில்) கவனிக்கலாம்.
உபஸம்ஹாரத்தில் (116ம் பக்கம்) சில விஷயங்கள் எழுதலானோம். இப்பொழுது இக்ரந்த அர்த்த ரீதியைச் சற்று விளக்குவோம். ‘சுபாசுப மந்த்ரார்த்தமான” என்று புஸ்தகப் பெயருக்கு மேல் எழுதியுள்ளோம். அதன்படிக்குத்தான் கர்பாதானம் முதல் விவாஹ பர்யந்தமான ஸம்ஸ்கார மந்த்ரார்த்தம் எழுதியிருக்கிறோம். ஆனால் மூலத்தில் க்ரமம் மிகவும் பேதிக்கிறது. இதற்கு ‘மந்த்ரப்ரஸ்நம் பூர்ணபாஷ்யம்” என்று பெயர் வைத்திருப்பதால், இப்பொழுது நாம் மூலத்தை அநுஸரித்தே விஷயஸூசிகை எழுத ஆவச்யகமேற்பட்டுவிட்டது. இது இரு ப்ரச்நங்களைக் கொண்டதாகும். இதைச் சேர்ந்த மற்ற 80 ப்ரச்நங்களின் சிறு பிரிவுகளுக்கு அநுவாகங்கள் என்று பெயர். இதில் வருபவைகளுக்குக் கண்டங்களெனப் பெயரிருக்கிறது. அதில் முதல் ப்ரச்நம் 18ம், இரண்டாவது 22 கண்டமுமாக மொத்தம் 40 கண்டங்களிருக்கின்றன. முறையே 40 கண்டங்களுக்கும் அர்த்தம் இருக்கும் பக்கங்களை ப்ரதிகண்ட விஷயங்களையும் ஸூசித்தவாறு (தெரிவித்தவாறு) குறிப்போமாக.
கர்மாக்களில் சொல்லும் மந்த்ரங்களுக்கு அர்த்தம் தெரியவேண்டியதில்லை என்றாலும், தெரிந்து செய்தால் அதில் அதிக ச்ரத்தை உண்டாகிறது. சிசு ஜநித்ததும் செய்யவேண்டிய ஜாதகர்மா என்ன, புண்யாஹவாசன தினமான 11ம் நாளில் செய்யவேண்டிய நாமகரணமென்ன, இன்னும் அந்நப்ராசந, சௌள கர்மாக்களையும் உபநயன காலத்தில் சேர்த்து ஏதோ செய்தோமென்ற பேருக்கு அர்த்தம், நிமித்தங்கள் தெரியாது அதிசீக்கிரத்தில் செய்து முடிக்கின்றனர். இம் மந்த்ரார்த்தங்களை கவனித்தால் முழுவதும் சிசுவின் க்ஷேமமே நாநாப்ரகாரமாய் (பலவிதங்களில்) ப்ரார்த்திக்கப்படுகிறது. அதால் (அதனால்) பாலாரிஷ்டம் (குழந்தைக்கு ஏற்படும் தீங்கு), குழந்தைகளுக்கு வயிற்றுக் கட்டி முதலிய ப்ராணாபத்தான (உயிருக்கு ஆபத்தான) வ்யாதிகளையும், பாதைகளையும் (தொந்திரவுகளையும்) வராமல் தடுத்துக்கொள்ளலாம். அர்த்தம் தெரிந்திருந்தால் இவ்வித கஷ்டத்திற்கு ஆளாக வேண்டியதில்லை. யாகங்களில் யஜமானன் சொல்லவேண்டிய மந்த்ரங்களையும், செய்யவேண்டிய கார்யங்களையும் ரித்விக்குகளையே (யஜமானனுக்காக ஹோமம் செய்பவர் ருத்விக்) ப்ரயோகிக்க (கர்மாவைச் செய்ய) வேதவிதி இருப்பதுபோல், சிசுவின் க்ஷேமார்த்தம் ஆயுஷ்ய ஹோமம், உபநயனம் முடிய பிதாவும், கந்யையின் மந்த்ர தந்த்ரங்களை (பெண் சொல்லவேண்டிய செய்யவேண்டியவைகளை) அவளது பர்த்தாவும் செய்வதால், செய்யவேண்டியவர்கள் செய்தது போலவே ஆகிவிடுகிறது.
உதாரணமாக ‘விஷ்ணோ: ஹவ்யம் ரக்ஷஸ்வ” என்று கர்த்தா சொல்லுகிறான், அவன் என்ன கேட்கிறான் என்று அவனுக்குத் தெரியாவிட்டாலும், அந்த விஷ்ணு தேவதை இதை அறிந்துகொண்டு, ப்ரார்த்தனையைத் தலைக்கட்டி (பூர்த்திசெய்து) வைக்கிறார். லெளகிக வ்யவஹாரத்திலும் ‘பவதி பிக்ஷாந்தேஹி” என்னும் (எனக் கேட்கும்) புதிதாக உபநயனமான வடுவுக்கு (சிறுவனுக்கு) அர்த்தம் தெரியாவிடினும், இதைக் கேட்கும் ஸ்த்ரீ, அத்யயநம் செய்யும் ப்ரஹ்மச்சாரிப் பையன் ஆஹாரத்தை அபேக்ஷிக்கிறான் (விரும்புகிறான்), அவனுக்கு இல்லை என்று சொல்வதோ, அவனைக் காக்க வைப்பதோ மஹா தோஷம் எனக்கருதி, அவள் அவனுக்கு உடனே பிக்ஷையிட்டு அனுப்பிவிடுகிறாள். அதே மாதிரியே தநிகர் (செல்வந்தர்), ஆசார்யர், பகவான்களின் ஸ்துதி விஷயத்திலுமாம். இந்த நிர்தாரணத்தை (தீர்மானத்தை) „த்ரிகாண்டீ… முதலிய ப்ராசீன க்ரந்தகாரர்கள் செய்துள்ளனர். உபநயன விவாஹாதிகளில், வடுவுக்கும், தம்பதிகளுக்கும் மந்த்ரார்த்தம் போதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் அதை உற்சாகமாகச் செய்வார்கள்.
இன்னும் நம்மைப்போல் க்ருஸ்துவம், மஹம்மதியம், பௌத்தம், ஜைநம், சீக்கிய மதத்தினர் தெய்வத்தை நம்புகிறவர்களாய், தங்களுக்கு கஷ்டம் ஏற்படுங்கால் தங்கள் வேதம்போன்ற கௌரவமான மந்த்ரங்கள் மூலம் ப்ரார்த்திக்கின்றனர். ‘மந்த்ராதீநந்து தைவதம்” இத்யாதி நம் ப்ரமாணத்தால் தேவதைகள் மந்த்ரங்களுக்குக் கட்டுப்பட்டவை என்பது, அர்த்தம் தெரியாத - விஷபரிகாரம் (செய்யும்) மாந்த்ரீகன் ஏதோ சொல்லி விஷத்தை இறக்கிவிடுவது, சூந்யம், பில்லு போன்ற துர்மந்த்ரங்கள் பலிப்பதன் மூலமாகவும் ப்ரத்யக்ஷமாகின்றன (கண்கூடாகின்றன).
தேவதைகளுக்கும் நமக்கும் இடையில் மந்த்ரங்கள் (செயல்படுகின்றன). நாம் அக்நியில் சேர்க்கும் ஹவிஸ்ஸை அந்தந்த தேவதைகளுக்கு மற்றும் பித்ருக்களுக்கு அக்நி கொண்டுபோய் (கவய:, ஹவ்யவாஹந:) கொடுப்பதுபோல் (நவீன டெலிபோன் செல்போன் போன்ற) ஸாதனமாகும். இதர மதங்களில் ப்ரார்த்தனைகள் மட்டுமே உள்ளன. க்ரியை ஒன்றுமில்லை. நம் மதத்தில் இது (க்ரியை - செய்கை) சேர்ந்திருப்பது விசேஷமாகும். பால், தயிர், நெய், அந்நம், ஸமித் போன்ற ஹவிஸ்ஸுகளால் தேவதைகளைத் த்ருப்திசெய்து வைக்கும் க்ரியாகலாபங்களை ஸ்ரீபகவான் கீதையில் த்ரவ்ய யஜ்ஞம் என்கிறார். நமது ப்ராண தாரணத்திற்கு (உயிரைக் காப்பதற்கு) வேண்டிய அந்ந பாநாதிகளை பகவான் தான் அநுக்ரஹிக்கிறார். நாம் அவற்றை உபயோகிக்கும் முன்னர் அவருக்கு நிவேதனம் செய்யாதவனைத் ‘திருடன்” என்கிறார் கீதையில் (3-12). பலாபேக்ஷையின்றி (பலனில் பற்றில்லாமல்) செய்வதுதான் பகவத் ஸம்மதமான முறை. பலனில் விருப்பம் இல்லாதவனும் கர்மாவை விட்டால் தோஷமானதால் கர்மாவை செய்துதான் தீரவேண்டும்.
தத்காலத்தில் ஜீவிகைக்கு யாவரும் ச்ரமப்படுவதால் பலாபேக்ஷையின்றி இருக்கவும் முடியாது. ஆகையால் மந்த்ர ஸம்பந்தத்தோடு கூடிய கர்மாக்கள் இஹபர க்ஷேம ஸாதகமாகின்றன.
மாதாவுக்கும் சிசுவுக்கும் ப்ரஸவமான(திலிருந்து) பத்து திநங்களுமே பெருங் கண்டமான ஆபத்காலம். யக்ஷ, ரக்ஷஸ், பிசாசங்களான துர்தேவதா உபத்ரவங்கள் மிகவும் அதிகம். 2ம் ப்ரச்நம், 13ம் கண்டம், 7 முதல் 12ம், 14ம் கண்டம் 1முதல் 3 வரையுள்ள மந்த்ரங்கள் இதற்கு பரிஹாரம் கூறுவது கவனிக்கத்தக்கதாகும். அங்கு அவைகளின் (யக்ஷ, ரக்ஷ, பிசாசங்களின்) பயங்கர ரூப வர்ணனைகளும் உள்ளன.
அதே மாதிரி உபநயனமாகாத பாலகனையும் பிசாசங்கள் நெருங்குவதால் அவனை ‘அக்நயேத்வா பரிததாமி” முதலிய மந்த்ரங்களால் அக்நி, ஸோமன், யமன் முதலிய தேவர்களை பரிதாத்ருக்களாய் (பாதுகாவலர்களாய்) இருக்க ப்ரார்த்திக்கிறோம்.
ஜநித்த சிசுவைக் கொண்டுபோக ‘ஜாதஹாரிணீ” என்ற துர்தேவதை காத்துக்கொண்டிருக்கிறாள். அதற்காக ஸூதிகா க்ருஹத்தில் (ப்ரஸவ அறை) தீ, தீர்த்தம், தீபம், தூபம், உலக்கை, கத்தி, சாம்பல், கடுகு முதலியவைகள் ஸதா இருந்துகொண்டிருக்கவேண்டும். (2-14-3) ஆறாம் நாள் இரவு, புருஷர்கள் கையில் கத்தி வைத்துக்கொண்டும், ஸ்த்ரீகள் காநம் (பாட்டு பாடியபடி) செய்தவாறு விழித்திருக்கவேண்டும். 7-10 திநங்களும் ஆபத்தானவையே ஆகும். 7ம் நாள் ஸாயங்காலம் பகவானுக்கு பக்ஷ்ய (பட்சணம்) நைவேத்யம் செய்யச்சொல்லி நாரத மஹர்ஷி கூறுகிறார். இதை நாம் ‘காப்பரிசி” என்று அரிசியில் தித்திப்பைக் கலந்து நிவேதநம் செய்கிறோம். ஸுமங்கலிகள் ஸாயங்காலத்தில் பாடுகின்றனர். ஆபஸ்தம்பர் தம் க்ருஹ்ய ஸூத்ரத்தில் 1-15-6 ஸூத்ரத்தில் ஜாதகர்ம ஹோமத்தை 10 நாளும் செய்யவேண்டும் என்று விதித்திருக்கிறார்.
சிசுவை பிதா பார்த்து மோப்பதும் ஓர் ஆச்சர்யமான கர்மாவே. ‘ஆத்மாவை புத்ரநாமாஸி” என்கிறது ச்ருதி. பிதாவின் ஸகல அவயவங்களிலும் உள்ள இந்த்ரிய ஸாரம் திரண்டு உருண்டு பத்நீ கர்பத்தில் ப்ரவேசித்து புத்ரனென்ற நாமாந்தரத்துடன் பிதா(வே) ஜநிக்கிறான். (பிதாவே பிள்ளையாகப் பிறக்கிறான்). ஆகையால் புத்ரன் வேறல்ல, பிதா வேறல்ல. இருவரும் ஒருவரே. ரூபம், குணம், நடை, பேச்சு, இங்கிதம், குரல்கள் பிதாவினுடையதும் - புத்ரனுடையதும் ஒத்திருப்பது ப்ரத்யக்ஷம் (கண்கூடு).
‘பதிர் ஜாயாம் ஸம்ப்ரவிச்ய கர்போபூத்வேஹ ஜாயதேƒ
ஜாயாயாஸ்தத்தி ஜாயாத்வம் யதஸ்யாம் ஜாயதே புந:ƒƒ”
என்கிறார் மநுவும் தம் ச்ருமிதியில்.
ஆபஸ்தம்பரும் தம் ஸூத்ரத்தில் இதைக் கூறுகிறார். ‘ப்ரஜாமநு ப்ரஜாயஸே” என்கிறது ச்ருதி மறுபடியும். இதனால்தான் கார்ஹஸ்த்யம் (இல்லறம்) அம்ருதமாய் ரிஷிகளால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ப்ராஜாபிரக்நேரம்ருதத்வமஸ்யாம் ததுதேமர்த்யாம்ருதம்.
சிசுவின் நெய், தேன் ப்ராசநத்தில் நல்ல மேதையும் (மேதாவித்தனமும்), ப்ரதம ஸ்தந்யபாநத்தில் (முதல் முறை தாய்ப்பால் அருந்தக்கொடுப்பதில்) சிசுவின், ஆயுஸ், தேஜஸ், யசஸ் மற்றும் பலமும் ப்ரார்த்திக்கப்படுகிறது.
2-11ல் 14-17 சீக்ர ஸுகப்ரஸவத்திற்கு உபாய மந்த்ர ப்ரயோகம் (வழங்கப்பட்டுள்ளது).
‘அப்ஸு அந்தரம்ருதம் அப்ஸு பேஷஜம்” என்கிற ச்ருதிப்படி நீரில் அக்நியின் சக்தியும், விசேஷ ப்ராண வாயுவும் இருப்பதை நவீன வைத்ய விஜ்ஞானிகளும் கூறுகின்றனர். ‘தூர்யந்தி” பச்சிலையை அவளின் (கர்பிணியின்) காலில் கட்டி, விதிவத்தாய் (விதிப்படி) க்ரஹித்த நீரால் ப்ரோக்ஷணமாம். ‘யா அக்நிம் கர்பம் ததிரே” என்கிற ச்ருதிப்படி நீரில் வித்யுத் சக்தி (மின்சாரம்) நிரம்பியுள்ளது. ‘வித்யுதஸி வித்யமே பாப்மாநம்” என்று வித்யுத்சக்தி (மின்னல்) ஜலத்தில் இருப்பதைக் கூறுகிறது. ச்ரம ப்ரஸவத்தில் ஆயுர்வேத வைத்யர் ‘ஆயமநீ” என்ற கருவிகளைப் போட்டு சிசுவை இழுக்கின்றனர். இதனால் சிசு மாதாக்களுக்கு காயம், ப்ராண ஹாநீ (உயிருக்குக் கேடு) உண்டாகலாம். இதின்றி ஒரு லகு ப்ரோக்ஷணத்தை வேதம் உத்கோஷித்துவிட்டது.
நாம் நீசமாய் பாவிக்கும் வபநம், வஸ்த்ரதாரணம் யாவும் தைவாம்சம் பொருந்திய கர்மாகவாக விதிக்கப்பட்டுள்ளது. மந்த்ரம் இவைகளுக்கெல்லாம் க்ஷேமத்தை ப்ரார்த்திக்கிறது. 6ம் காண்டத்தில் ‘அக்நேஸ்தூஷா தாநம் வாயோர்வாதபாநம்” வஸ்த்ர நிர்மாணத்தில் நூல், தறிகளுக்கு அக்நி முதலிய தேவதா ஸம்பந்தம் சொல்லி முடிவில் ‘தத்வாஏதத்ஸர்வ தேவத்யாம் யத்வாஸ:” என்கிறது. இதனால் வஸ்த்ரம் ஸகல தேவதா ஸம்பந்தம் உள்ளதாகத் தெரிகிறது. இதன் விவரம் 2 2-3ல் அறியலாம். முஞ்ஜை (ப்ரமச்சாரியின் இடுப்பில் கட்டப்படும் தர்பக்கயிறு) ஆரோக்யகரியாக (ஆரோக்யத்திற்கு உதவியாக) ஆயுர்வேதம் மூலம் ஏற்படுகிறது(அறியப்படுகிறது). குருகுல வாஸத்தில் இது (முஞ்ஜை) ஓர் பெரிய ரக்ஷை(காப்பு). 2, 2, 9 யக்ஷ ரக்ஷஸ்களும் நெருங்கமுடியாதாம். இன்னும் உபநயன மந்த்ரம் மூலம் அவனது குருகுலவாஸத்தில், ஆயுஸ், மேதை, சரீர புஷ்டி முதலிய க்ஷமத்திற்கு ஸர்வ தேவதா ப்ரஸாதமும் ப்ரார்த்திக்கப் படுவது கவனிக்கத் தக்கது.
ச்ரோத்ரேந்த்ரிய (காது) சக்தி குருகுல வாஸத்தில் வ்ருத்தியடைய பலாச தண்ட தாரணம் (உதவி) ஆகும். அதன் வ்ருத்தாந்தமும் (கதையும்) தெரியவரும். காது ரோகத்தை பலாசத்தின் பால், கஷாயம் குணப்படுத்தும் என்பது அநுபவ வைத்ய முறையாகும்.
6ம் கண்ட முதல் ப்ரச்நத்தில் ‘வாக்வை தேவேப்ய: வாசமேவாவருந்தே” என்று இருக்கிறது. வாக் தேவதை தேவர்களிடமிருந்து மறைந்து மரங்களிற் புகுந்தது. துந்துபி, வீணை, தூணவம் முதலிய மர வாத்யங்களில் கேட்கப்படும் வாக்கு (சப்தம்) அதுதான். ஆகையால் பலாச மர தண்டத்தை அணிவதால் வாக் சக்தி அதிகரிக்கும் (என்பது பொருள்).
ஸமிதாதானம் செய்யாத இரவில் ம்ருத்யு (யமன்) மாணவனை (ப்ரஹ்மசாரியை) பிடிக்கலாம் என்ற ச்ருதி வரனை போதாயனர் தர்ம ஸூத்ரத்தில் ஸூசிப்பிக்கிறார். அதன் விபரமாவது: ஒரு கால விசேஷத்தில் ம்ருத்யு (யமன்) ப்ரஹ்மசாரிகளைப் பிடித்து ஹிம்ஸிக்க முயல, அக்நி அவனைத் துரத்தி அடித்து ப்ரஹ்மசாரிகளை ரக்ஷித்ததால் அக்நி பூஜையான ஸமிதான கர்மா ப்ரஹ்மசாரிகளுக்கு நித்யம் அவச்யமாகும்.
விவாஹ மந்த்ர விசேஷங்கள்: யாகங்கள், அக்நிஹோத்ரம், ஔபாஸனம், வைச்வதேவ பஞ்சயஜ்ஞாதிகள் போன்ற தர்மங்களை தம்பதிகள் சேர்ந்து செய்து, தேவர்களை ப்ரீதி செய்து ஆத்மஹிதம் (மன நிம்மதி) பெறுவதுடன், மழை, ஸஸ்ய(பயிர்) வ்ருத்தி, அந்ந ஸம்ருத்தி உலகில் ஏற்பட்டு, சராசர (அசையும், அசையா - அனைத்தும் அல்லது அனைத்துலக) ப்ராணிகள் யாவற்றுக்கும் க்ஷேமம் இந்த விவாஹ ஸம்பந்தம் மூலமாகக் காரணமாகிறது. தம்பதிகளின் ஐகமத்யம் (ஐக்யம் - ஒற்றுமை), ஸந்தானம், ஸம்பத், பசு, தாந்யம், தீர்காயுஸ், ஆரோக்யம் யாவும் இம்மந்த்ரங்களில் பதேபதே (ஆங்காங்கே) ப்ரார்த்திக்கப்படுவது அயல்நாட்டாரும் வியப்புறக் காரணமாகிறது. விவாஹ முதல் மந்த்ரமே - இந்த்ரன் தனக்கு ஸோமயாகத்தால் த்ருப்தி ஏற்படப்போகிறதென்பதை அறிந்தவனாய் இந்த ப்ரஹ்மசாரியின் கல்யாணத்தை அவன் ஸோமயாகம் வரும் வஸந்தத்தில் செய்யப்போகிறான் என்று நிச்சயித்து ஆமோதிப்பதால் எனக்கு தேவதா அநுக்ரஹமிருக்கிறது என்பதை வரப்ரேஷணை (வரனை வரிக்கும்) ப்ராஹ்மணர்களிடம் கூறுவதால், விவாஹம் தர்ம கார்யார்த்தம் என்பது விளங்குகிறது.
(அகோர சக்ஷு) என்கிற மந்திரத்தின் மூலம், கந்யையின் (திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணின்) பார்வையால் தனக்குக் கெடுதி உண்டாகாமலும், அவளால் க்ருஹத்தில் தேவபூஜை முதலியன ஸரிவர நடக்கவேண்டும் என்று ப்ரார்த்திப்பது தெரிகிறது.
மாடுபிடிக்கப்போகிறவன் மாட்டின் முதுகில் சில சுழிகள் இருந்தால் கெடுதல் ஏற்படுமென்று நல்ல அடையாளமுள்ளதைப் பார்த்தெடுக்கிறான். அதுபோல் வரும் (மணக்கவிருக்கும்) வதுவிடம் சில அவலக்ஷண சிஹ்நங்கள் (அடையாளங்கள்) இருக்கக்கூடும். அதனால் குடும்பத்தில் மாமனார், மாமியார், பர்தா, சிசு, தநம், தாந்யம் (மற்றும் வளர்ப்புப் ப்ராணிகளுக்கும்) ஹாநி (கெடுதல்) ஏற்படலாம். (பூராடம் நூலாடாது, மூலம் நிர்மூலம் என்று நக்ஷத்ரங்களுக்குச் சொல்லுவது போல்) இதற்கெல்லாம் விவாஹ மந்த்ரங்கள் பரிஹாரம் செய்கின்றன.
ருக் வேதத்தில் வரும் அபாலை என்பவளின் கதையால் நுகத்தடி அபிஷேக தத்துவம் விளங்குவதை அறியலாம்.
ஒருவனுக்கு பார்யை தேவதா ப்ரஸாதத்தால் ஏற்படுவதாய் (‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”) ச்ருதி (வேதம்) உத்கோஷிப்பது போல் மனுவும் கூறுகிறார். கைப் பிடித்தவளை கைவிடாமல் போஷித்து வருவதாய் ப்ரதிஜ்ஞை (ஸத்யப்ரமாணம்) செய்கிறான். இதுவே தேவ த்ருப்தி என்கிறார் மனு. ஸப்தபதியில் இவை கவனிக்கத் தக்கவை.
(குறிப்பு:- இப்புகத்தில் ‘மநு” என்று காணப்படுவது பிற பல புத்தகங்களில் ‘மனு” என்றே காணப்படுவதால் - படிப்பவருக்குப் புரியவேண்டும் என்பதற்காக புத்தக ஆசிரியர் ‘மநு” என்று குறிப்பிட்டிருப்பதை ‘மனு” என்று தட்டச்சு செய்துள்ள அபராதத்தை பொறுத்தருளவேண்டும். இன்னும் இதுபோல் பல அதிக ப்ரசங்கத்தனமான மாற்றங்களுக்கும் ஒரே முறையாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் - என்.வி.எஸ்)
வைதிக மதம் ஸ்த்ரீகளை அடிமையாக்கி ஸ்வதந்திரமின்றி வைத்திருப்பதாக ஆதுநிகர்களின் (முற்போக்குவாதி?) மூடப்பேச்சுக்கு ப்ரவிச்ய ஹோம மந்த்ரம் தகுந்த பதில் அளிக்கிறது.
¦முதன் முதலில் செய்யப்படுவது நிச்சயதார்த்தம். இதில் பெண்ணிற்கு புடவை கொடுத்து அவளை (மருமகளாக) நிச்சயித்துக்கொள்வதற்காக சொல்லப்படும் மந்திரதிதின் பொருளை ஆசிரியர் இங்கே குறிப்பிடுகிறார். மேலும் ஒரு சிறு குறிப்பு:- தற்போது ‘மாட்டுப்பெண்” என்று மருமகளை குறிப்பிடுவது - ‘மாற்றுப்பெண்” அதாவது பெண்ணாக மாறியவள் - (டாட்டர் இன் லா) என்பதிலிருந்து மருவி வந்ததாகும்!
§‘உதுத்தரம் ஆரோஹந்தி ..... மூர்தாநம் பத்யுராரோஹ ப்ரஜயாச விராட்பவ ..... ....ƒ”
‘பர்தாவின் தலைமீது ஏறு, வீட்டிலுள்ள மாமனார், மாமியார், நாத்தனார், மைத்துனர்களுக்கு யஜமாநியாக விளங்கு” என்கிறது வேதம். ‘பத்நீஹி பாரிணஹ்யஸ்யேசே” - ‘வீட்டிலுள்ள ஸர்வ சொத்துக்களுக்கும் பத்நியே யஜமாநி” என்று ச்ருதி பலவிடங்களில் உத்கோஷிக்கிறது. நம் வைதிக மதம் ஒன்றிலேயே புருஷனைவிட ஸ்த்ரீக்கு குடும்பத்தில் அதிக பாத்யதை காட்டும் மஹிமை உள்ளது. தம்பதிகளுக்குள் வைமநஸ்யம் (மநஸ்தாபம்) ஏற்பட்டுவிட்டால் புருஷன்தான் வீட்டைவிட்டு அகலவேண்டும். ப்ரவிச்ய ஹோமத்தில் குடும்ப ஸர்வாபிவ்ருத்திக்கும் (குடும்பதிலுள்ளோர் அனைவரின் அனைத்துவித நன்மைக்கும்) ப்ராத்தனை செய்யப்படுகிறது.
இதில் க்ருஹ நிர்மாணம், ப்ரவேசம், ஸர்பபலி, ஈசாநபலி, (மாஸி)ச்ராத்தம், அஷ்டகா ச்ராத்தம், அபசகுநங்கள் போன்றவைகளுக்கு சாந்தி கர்மா, ‘யரோச சாந்தி, வைமநஸ்ய தம்பதிகளுக்குப் பரிஹாரம், பத்நியிடம் பர்த்தா ப்ரீதியாய் நடக்க உபாயம் முதலிய இதர விஷயங்களும் இருக்கின்றன.
மந்த்ரங்களை அபச்வரமின்றி ஸரிவர உச்சரிப்பது ஓர் யோகமாகும். இப்படிப்பட்டவனுக்கு நினைத்ததெல்லாம் கைகூடும் என்று ஆபஸ்தம்ப போதாயநாதி மஹரிஷிகள் கூறுகிறார்கள். மனுவும் (இந்த இடத்தில் இப்புத்தக ஆசிரியரும் ‘மனு” என்றே குறிப்பிடுகிறார்.) வேதோச்சாரணம் தபஸ் என்று வேதத்தில் போல் பறை சாற்றுகிறார். ஆச்ரம (ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த போன்ற ஆச்ரம) ஸம்ஸ்காரங்களை மந்த்ர பூர்வமாக அடைந்துள்ளவன், நிக்ரஹ அநுக்ரஹ சக்தியுள்ள ஸித்தபுருஷனே.
ஹேவிலம்பி --- ச்ராவணம் நே.ஈ. வேங்கடேச சர்மா
thanks for another useful info.
பதிலளிநீக்குdasan
v.s.satagopan
very useful and every one should know.
பதிலளிநீக்கு