சனி, 10 மார்ச், 2012

வைத்தமாநிதி

பூதனையை மாய்த்து கள்ளச் சகடம் காலோட்டி கண்வளரத் துவங்கியிருக்கும் கண்ணன் ஓரிரு நாட்கள் ஆனந்தமாய்த் துயில் கொண்டு பின் தன் விளையாட்டுக்களினால் ஆயர்பாடியையும் நம்மையும் மகிழ்விக்க வருவான். காத்திருப்போம்!

வியாழன், 8 மார்ச், 2012

வைத்தமாநிதி 13

திரிசகடம் சாடியது

நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே,
ஏடுஅலர் கண்ணியினானை,
பொன்போல் மஞ்சனம் ஆட்டி,
கொந்தக்குழலைக் குறந்து புழுகு அட்டி
தந்தத்தின் சீப்பால் குழல் வாரி,
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூச்சூட்டி,
சங்கின் வலம்புரியும், சேவடிக் கிண்கிணியும்,
அங்கைச் சரிவளையும், நாணும், அரைத்தொடரும்,
அழகிய ஐம்படையும், ஓதக் கடலின்ஒளி முத்தின் ஆரமும்,
கான்ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்,
வான்ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்,
கச்சொடு பொற்சுரிகை, காம்பு கனகவளை,
உச்சி மணிச்சுட்டி, இணைக்காலில் வெள்ளித்தளை,
ஒண்தாள் நிரைப் பொற்பூவும்,
மெய்திமிரும் நாணப்பொடியோடு மஞ்சளும்,
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும், சிந்தூரமும்,
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
அணிவித்து, அமுது ஊட்டி,
மாணிக்கம் கட்டி, வயிரம் இடை கட்டி,
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்,
பேணி வஞ்சனையால் வந்த
பேய்ச்சி முலை உண்ட அஞ்சன வண்ணனை
ஆய்ச்சி வளர்த்தி,
”தாமரைக் கண்ணனே ! தாலேலோ!
சுந்தரத்தோளனே! தாலேலோ!
தூமணி வண்ணனே! தாலேலோ!
அழேல்! அழேல்! தாலேலோ!
அரவுஅணைத் துயில்வாய் தாலேலோ!”
என்று செஞ்சொல்லால் தாலாட்டி,

தடக்கையன் கண் துயில் கொள்ளக் கருதி கொட்டாவி கொள்ள,
மாதர்க்கு உயர்ந்த யசோதை யமுனை நீராடப்போக,
சேடன், திருமறுமார்பன்
கள்ளக் குழவியாய் தாளை நிமிர்த்து திருவடியால்,
முன் நண்ணாத வலிமிக்க கஞ்சன் புணர்ப்பினில்,
வேண்டும் சேப்பூண்ட சகட உருவம் கொண்டுவந்த,
கடிய சகட அசுரர் தளர்ந்தும் முறிந்தும்
உடல் வேறாப் பிளந்து வீய. திரிசகடம் பாறிவீழ,
தளர்ந்து உதிர, சாடி, பண்ணை கிழிய
திருக்கால் ஆண்டு உதைத்தான்.

அதுகண்டு அஞ்சிய
ஏர்ஆர் கிளிக்கிளவி அசோதைதான் வந்து,
”உள்ளவாறு ஒன்றும் அறியேன்” என்று,
எம்பிரான் தன்மேனி சொல்ஆர வாழ்த்தி,
”என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்
அங்ஙனம் ஆவார்களே” என்று சொல்லி,
நின்று ஏத்தி, சீர்ஆர் செழும்புழுதிக் காப்பிட்டு,
செறிகுறிஞ்சித் தார்ஆர் நறுமாலைச் சாத்தற்குத் தான்
பின்னும் நேராதன ஒன்று நேர்ந்தான்.

புதன், 7 மார்ச், 2012

வைத்தமாநிதி 12

கோகுலத்தில் மங்கள விழா!

சீதக்கடலுள் அமுது அன்ன தேவகி, கோதைக்குழலாள்,
அசோதைக்குப் போத்தந்த பேதைக்குழவி,
கண்ணன், கேசவன், நம்பி, திருவோணத்தன்
பிறந்தினில் முற்றம் கலந்து அளறு ஆக,
எண்ணெய் சுண்ணம் எதிர்எதிர் தூவிட,
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார், நாடுவார்;
உறியை முற்றத்து உருட்டி
பல்பறை கொட்டநின்று ஆடுவார் ஆயரே;
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
அண்டர் மிண்டி புகுந்து நெய்யாடினார்;
செறிமென் கூந்தல் அவிழத்திளைத்து
எங்கும் அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே;
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
உத்தானம் செய்து உகந்தனர்;
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய ஆட்டிப்
பசுஞ்சிறு மஞ்சளால் ஐயநாவழித்த
மைத்தடங்கண்ணி அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே!
வாயுள் வையகம் கண்ட மடநல்லாரும்
ஆயர்புத்திரன் அல்லன் அருந்தெய்வம் என்று மகிழ்ந்தனர்.
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை உறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்,
மிடுக்கு இலாமையால் மெலிந்தாள்
வார்மலிகொங்கை யசோதை;
பணைத்தோள் இள ஆய்ச்சிபால் பயந்த
கொங்கை அணைத்து, ஆர உண்டு,
வந்த மழலைக்குழாத்தை வலி செய்து,
அன்னநடை மடவாள் அசோதை
தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்து, அழுது, ஏங்கி,
தந்தக் களிறுபோல் தாயர்மகிழத்தானே விளையாடி,
கொண்டு வளர்க்க குழவியாய்த்தான்
வளர்ந்தான் கோபாலக் கோளரி.

பூதனை மோட்சம்

தீமனத்தான் கஞ்சன் கறுக்கொண்டு மாய்த்தல் எண்ணி
நின்மேல் கருநிறச்செம்மயிர்ப் பேயை வஞ்சிப்பதற்கு விடுக்க
கஞ்சனது வஞ்சனையால் திரியும்
கலை உடுத்த அகல்அல்குல் வன்பேய் மகள் அழக்கொடி,
யாயும் பிறரும் அறியாத யாமத்து வஞ்சனை செய்ய,
பொற்றொடித் தோள் மடமகள் தன்வடிவு கொண்டுவந்த
பொல்லாத வன்மாய வலவைப் பெண் பூதனை
பெற்று எடுத்த தாய்போல் ஒக்கலை வைத்து
“செக்கர் இளம்பிறைதன்னை வாங்கி நின்கையில் தருவன்!
கோவலக்குட்டா! ஒக்கலைமேல் இருந்து அம்மம் உவந்து
அகம்குளிர இனிது உண்ண வாராய்”
என்று தன் மகன்ஆய்,
வன்பேய்ச்சிதான் முலை உண்ணக் கொடுக்க,
தூயகுழவிஆய், இடைக்கு இருந்து,
ஒளிநிறம்கொள் கொங்கை வாங்கி,
நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கை வாய்வைத்து,
விடநஞ்ச முலை சுவைத்து,
விடப்பால் அமுதா அமுது செய்து,

வெந்தழல்போல் கூந்தல் வஞ்சப் பகுவாய்க்கழுதுக்கு இரங்காது,
வன்மகன்ஆய் அவள் நாளை உண்டு ஆவி வாங்கி,
தாய் உருவாகி பெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப்
பெரிய பேயினது உருவுகொடு மாள, கண் சோர,
வெம்குருதி வந்து இழிய, அலறி மண் சேர
செக்கம்செக அன்று அவள்பால் உயிர்செக முனிந்து
உண்டிட்டு உறங்குவான் போல் கிடந்தான்
கருமாமுகில்வண்ணன் கண்ணன்;
பேய்ச்சி முலை உண்ணக்கண்டு பின்னையும் நில்லாது,
நெஞ்சம் அஞ்சாதே, ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும்
அசோதை முலை தந்தாள்.
இந்நீர்மைக்கு அன்று வரன்முறையால்
நீ அளந்த மாகடல்சூழ் ஞாலம்
பெருமுறையால் எய்துமோ பேர்த்து.


செவ்வாய், 6 மார்ச், 2012

Ramanuja Daya Pathram

From a book titled as "Pothu Thaniankal"
 (My sincere thanks to Sri S.R. Mukundan swami for directing me to this book at DLI) Ramanuja daya pathram

திங்கள், 5 மார்ச், 2012

குரு பரம்பரை வைபவம் 5-3-2012

தனது இன்றைய “குரு பரம்பரை வைபவம்” டெலி உபந்யாஸத்தில் நாட்டேரி ஸ்வாமி, திருக்குடந்தை தேசிகன், திருவணையிலிருந்து கிளம்பி திருக்குடந்தைக்குத் திரும்புகையில் மங்களாசாஸனம் செய்து வந்த திவ்ய தேசங்களைப் பற்றிச் சொல்லி, அதன்பின் திருக்குடந்தையில் ஆசார்யன் எழுந்தருளியிருந்து அனுக்ரஹித்து வந்த வரலாற்றை மிகவும் அத்புதமாக  அனுபவித்துச் சொல்வதைக் கேட்டு மகிழ
To download from Mediafire
To listen online