Thursday, May 31, 2018

அன்பில் ஸ்ரீ கோபாலாசார்யார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவங்கள்2. உவர்ந்த வுளத்த னாயுல கமளந் தண்டமுற
 நிவர்ந்த நீண்முடி யனன்று நேர்ந்த நிசாரரைக்
 கவர்ந்த வெங்கணைக் காகுத் தன்கடி யார்பொழி
                                                                   லரங்கத் தம்மானரைச்
 சிவந்த வாடையின் மேற்சென்ற தாமென் சிந்தனையே.

உவந்த உள்ளத்தன் ஆய்மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை உடையவனாய்க்கொண்டு; உலகம் அளந்துமூவுலகங்களையும் அளந்து; அண்டம் உறஅண்டகடாஹத்தளவும் சென்று முட்டும்படி; நிவர்ந்தஉயர்த்தியை உடைய; நீள்முடியன்பெரிய திருமுடியை உடையனாய்; அன்றுமுற்காலத்தில்; நேர்ந்தஎதிர்ந்து வந்த; நிசாரரைராக்ஷஸர்களை; கவர்ந்தஉயிர்வாங்கின; வெம்கணைகொடிய அம்புகளை உடைய; காகுத்தன்இராமபிரானாய்; கடி ஆர்மணம் மிக்க; பொழில்சோலைகளை உடைய; அரங்கத்துஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான; அம்மான்எம்பிரானுடைய; அரைகுருவரையில் (சாத்திய); சிவந்த ஆடையின் மேல்பீதாம்பரத்தின் மேல்; என் சிந்தனைஎன்னுடைய நினைவானது; சென்றது ஆம்பதிந்ததாம்.

உவந்த உள்ளத்தனாய்
(1) ‘செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில்என்றும்,प्रणवाकारं रंगम् (ப்ரணவாகாரம் ரங்கம்)  என்றும் சொல்லுகிறபடி, முதல் மூன்று பாசுரங்களும் ப்ரணவாவயத்வாக்ஷரங்களோடு தொடங்குகின்றன.

2) பாதம் நீண்டுவந்ததற்குக் காரணம் உள்ள முவந்ததே என்கிறார். திருவடியின் ஸ்வபாவம்ஓரெண்டானுமின்றியே வந்தியலுமாறு உண்டானை உலகேழும் ஓர் மூவடி கொண்டானைஎன்றபடி நாம் எண்ணாமலும் அனுக்ரஹிப்பதாம். திருவடியின் ஸ்பர்ஸத்தை எல்லாருடைய சிரஸ்ஸுக்கும் அளித்தது உலகு அளந்த திரிவிக்ரமர். ‘என் கண்ணினிடம் நீண்டு வந்தது பெரிதோ அந்த த்ரிவிக்ரமப் பெருமானுக்குஎன்று திருவுல களந்தருளின வ்ருத்தாந்தத்தை நினைத்து ஈடுபடுகிறார். வேதம் டிண்டிமமாக அந்த யசஸ்ஸைப் பரப்பியதென்பர். வேதம் பாடி உத்கோஷிக்கும் அந்த யசஸ்ஸைத் தாமும் பாடுகிறார். ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிஎன்று கும்மியடித்துப் பிராட்டிமாரும் ஆசைப்பட்டுப் பாடும் யசஸ்ஸு.

3) ‘கண்ணுளே நிற்கும்என்றபொருமா நீள்படைத்திருவாய்மொழிப் பாசுரம் மனதிற்கு வந்தது. அதை முதல் பாசுரத்தில் பேசுகிறார். ‘திருமா நீள்கழலேழுலகும் தொழ ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமேஎன்ற முன் பாசுரமும் சேர்ந்து இங்கே திருவுள்ளத்தி லோடுகிறது. मुदितान्तरात्मा (முதிதாந்தராத்மா) என்று தனியனிற் கூறிய இவர் உவப்பைப் பிள்ளைலோகம் ஜீயர்உவந்த உள்ளத்தரானார்என்று இந்த சப்தங்களால் வர்ணித்தார். பெருமாள் உள்ள முவந்ததிலும் மேற்பட்ட ஹர்ஷமுண்டோ இவருக்கு? பெருமாள் உவப்பு இவர் நெஞ்சில் ப்ரதிபிம்பிதமாகும்.  प्रीतःप्रिणाति (ப்ரீத:ப்ரிணாதி)

உலகமளந்து

1)
இப்பொழுது பள்ளிகொண்ட பெருமாளே அன்று த்ரிவிக்ரமனாய் ஓங்கி உலகளந்தவன் என்கிறார். ‘அன்றுஎன்பதை இங்கும் சேர்த்துக் கொள்ளவேணும். काले दूत्य दृततरगतिम् (காலேதூத்ய த்ருததரகதிம்) என்றதும், இன்று தூங்கும் பெருமாளும் காலம் வந்தால் தூத்யம் செய்யவும் ஓடுபவர் என்றதைக் காட்டிற்று. ‘வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராதே எல்லார் தலையிலு மொக்கத் திருவடிகளை வைத்தபடிஎன்று நாயனார். நீசனாகிய என்னிடம் திருவடி நீண்டது த்ரிவிக்ரம சுபாவம். த்ரிவிக்ரமர் தாளின் நீதி. வானாட்டு நீதிமட்டுமல்ல.

அண்டமுற நிவந்த நீண்முடியன்:--
(1) திருவடி நீண்டு பரவி உயர வோங்கி நிமிர்ந்தது. திருமுடியும் நிவந்து நீண்டு அண்டமுற ஓங்கிற்று. आपादचूडमनुभूय हरिं शयअनअम् (ஆபாதசூடமநுபூய ஹரிம் சயானம்) என்றபடி பள்ளிகொண்ட பெருமாளைத் திருவடி முதல் திருமுடி பர்யந்தம் நின்ற திருக்கோலமாக அனுபவிக்கிறார். (2) ‘நிவந்த --- பூவலர்ந்தாப்போலேஎன்று பிள்ளை. (3) ‘அண்டம் மோழையெழஎன்பதைப் பிள்ளை உதாஹரித்தார்.

அன்று நேர்ந்த நிசாரரை:-- உடனே ராமாவதாரமாகப் பெருமாளை அனுபவிக்கிறார். ‘த்ரிவிக்ரமாவதாரத்தில் நிசாசரனாகிய மாவலியை வெங்கணையால் கொல்லவில்லை. ராமாவதாரத்தில்தான் அது உண்டுஎன்று வேற்றுமையைக் காட்டஅன்றுஎன்ற ராமாவதார காலத்தைப் பேசுகிறார். (2) நேர்ந்தஅவர்களாக வந்து எதிர்த்தார்கள். (3) அவர்களையும் காப்பாற்ற வேண்டுமென்று கூடியவரையில் ஸாமோபாயத்தை நாடினார். அவர்கள் இணங்கவில்லை.

               கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்:-- கணை வெங்கணை; அது பொல்லாதது. அவருள்ளம் உவந்ததே. அருள் நிரம்பியதே. ‘உவந்த உள்ளத்தனாய்என்பது காகுத்தனோடும் அந்வயிக்கும். ராவண கும்பகர்ணரை மாளச் செய்ததும் கருணயே. உள்ளத்தின் உவப்பே. சாபத்தால தீரவேண்டிய மூன்று ஜன்மங்களில் இரண்டு கழிவது அவர்களுக்கு ஹிதமே. ‘பொருமா நீள்படை ஆழி சங்கத்தொடுஎன்றபடி திருவாயுதங்களுக்கும் கருணையும் ராகமும் உண்டு. வெங்கணையும் ராகத்தால் அவர்களைக் கவர்ந்தது என்கிறார். ‘கவர்ந்ததுஎன்னும் பதம் ராகத்தையும் கருணையையும் காட்டுகிறது.

               கடியார் பொழிலரங்கத்தம்மான்:-- (1) அரங்கத்தில் சோலைகளின் புஷ்பங்களைக் கந்தவஹ மென்னும் காற்று இவருக்கு என்றும் அநுபவிப்பித்தது. ‘கடிஎன்பது மணத்தைச் சொல்லுவதோடு, ‘’படிச்சோதியாடையோடும் பல்கலனாய் நின் பைம்பொற் கடிச்சோடி கலந்ததுவோஎன்கிற முடிச்சோதி அனுபவத்தின் நினைவையும் காட்டும். (2) ‘அரைச்சிவந்த ஆடைஎன்று அரை என்னும் பதமிருந்தாலும்  ‘கடிஎன்ற சப்த மாத்ரத்தால் அரை ஆடையின் அனுபவத்தால்முடிச்சோதியில் நம்மாழ்வாருடைய விசித்ரமான அனுபவத்தையும் நினைவையும் உட்கொள்ளும். (3) ‘திருவுலகளந்தருளின இடமே பிடித்து அடியொற்றி ராவணவதம் பண்ணித் தெற்குத் திருவாசலாலே புகுந்து சாய்ந்தருளினான். இன்னமும் வேர்ப்பு அடங்கவில்லை. திருச்சோலையில் பரிமளம் விடாய் ஒரு ஶிஶிரோபசாரமானபடிஎன்று பிள்ளை.

               அரைச் சிவந்த ஆடையின்மேல்:-- (1) ஆடையின் சிவப்பு இவரிடம் ராகத்தின் மிகுதியாலே வந்ததுபோலும. ஆடையத்தனை ராகத்தைக் காட்டுகையில் தன் சிந்தனை எப்படி அதன்மேல் செல்லாமலிருக்கு மென்கிறார். कृते प्रतिकर्तव्यमेष धर्मस्सनातनः (க்ருதே ப்ரதிகர்த்தவ்யமேஷ தர்மஸ்ஸநாதன:) என்பர். ஸ்நேகத்திற்கு ஸ்நேகரூபமான ப்ரதிக்ருதி இல்லாமற் போகலாமோ? कृतग्ने नास्ति निष्कृतिः (க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதி:) என்பரே. (2) तस्य यधा माहारजनं वास: (தஸ்ய யதா மாஹாரஜனம் வாச:) என்று நேதி நேதி ப்ரகரணத்தில் திவ்ய மங்கள விக்ரஹத்திலுள்ள பீதாம்பரத்தை ச்ருதி அனுபவித்தது. माहारजनं वास: (மாஹாரஜனம் வாச:) என்றதைச்சிவந்த ஆடைஎன்று வர்ணிக்கிறார். இது पीतांबरतरःस्रग्नी साक्षान्मन्मथमन्मथः (பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷான் மன்மதமன்மத:) என்ற கோவலன் நினைவையும் காட்டும். காகுத்தனுக்குப் பின்பு கோவலன் அனுபவம். क्षौमाश्लिष्टं किमपि (க்ஷௌமாச்லிஷ்டம் கிமபி) என்று ஸோபானத்தில் பட்டு ஆடை ராகத்தோடு திருத்துடைகளை யணைந்ததும் வர்ணிக்கப்பட்டது. (3) ‘செய்ய கார்முகில் திருமேனிக்குப் பரபாகமான திருப்பீதாம்பரம்என்று பிள்ளை. ‘ஸர்வகந்து வஸ்து கண்வளர்ந்தருளுகையாலே கடியார் பொழிலாயிருக்குமிறேஎன்று நாயனார்.

               சென்றதாம் என் சிந்தனையே:-- (1) எனக்கு என் நெஞ்சினால் ஸ்பர்சிக்கவும் அச்சமே. ஆயினும் என் மனசுஎன் சிந்தனைஎன்னை யறியாமலே பாய்ந்து சென்றுவிட்டது. சென்றபிறகுதான் எனக்குத் தெரிகிறதென்பதைசென்றதாம்என்பதால் காட்டுகிறார். (2) ‘என் சிந்தனை மட்டுமே சென்றது, நான் அணுகவில்லைஎன்று தன் அச்சத்தை (நைச்யத்தை) அனுசந்திக்கிறார். (3) இங்கும் ஒரு சந்தி ரஸத்தின் அனுபவம். சந்த்யாகாலம் அருளும் சந்த்யாராகச் சிவப்பும் கலந்ததாக இருக்கும். காரிருள் திருமேனியில் சிவந்த ஆடை பரவி இருப்பதும் ஒரு சந்த்யானுபவமாகும்

Thursday, May 24, 2018

ஸ்ரீஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவங்கள்


நிமலன் நின்மலன் திரும்பவும் திரும்பவும் தன்னுடைய சாமீப்யத்தால் என்ன மலம் வருமோ வென்கிற அச்சம் கிளம்புகிறது. உடனுக்குடன் ஹேயப்ரதிபடமான ஸ்வபாவத்தை அறுதியிட்டு மனதைத் தேற்றிக்கொள்ளுகிறார். இந்த ஸங்கை அரங்கத்தமலன் ' என்று மேலும் உதித்து நிவ்ருத்திக்கப் படுவதைக் காண்கிறோம். 'தம்முடைய ஜந்மாதிகளால் உண்டான நிகர்ஷாநுஸந்தாநத்தாலே அகல, அது தானே பற்றாசாகத் திருவுள்ளம் புண்பட்டு மேல் வீழ்ந்த இடத்திலும் அத்தனைக்கு அவத்யமின்றியிலே நிர்மலனாயிருக்கிற படியைக் கண்டு அமலன் என்கிறார்' என்று நாயனார்.
நீதி வானவன் -- விண்ணவர் கோனே நீண்மதிளரங்கத் தம்மானாக எழுந்தருளியிருப்பதால் வானாட்டு நீதியை இங்கும் செலுத்துகின்றான் போலும் ! எல்லாச் சேதநர்களுக்கும் ஸாம்யமே மேனாட்டு நீதி. அந்த நீதியைத் தாழ்ந்த என் விஷயத்திலும் செலுத்தி என்னை உத்தமரோடு அத்யந்த சமமாய் பாவிக்கிறானோ வென்று ரஸமாய்  உபபத்தி செய்யப் பார்க்கிறார்.
நீண்மதி ளரங்கத்தம்மான்- அரங்கத்தின் மதிள் நீண்டதுபோல் அரங்கத்தம்மான் பாதகமலமும் நீண்டதே என்று ரஸம். அரங்கத்தில் பத்ம ஸரஸ்ஸுக்களில் பத்மங்களிருப்பது ஸஹஜம். இவருக்கு முந்திய தொண்டரடிப்பொடியாழ்வார் திருநாமத்தை அநுசரித்து அடியார்க் கென்னை யாட் படுத்த விமலன்' என்று முதலடியிலேயே இவர் ஈடுபட்டது போல இப்பாசுரம் கேட்டுப்போலே காணும் (இவருக்கடுத்த) திருமங்கையாழ்வார் திருமதிள்கள் செய்தது. அழகிய வாயாலே இதருளிக் செய்த பின்பாகாதே திருமாளிகைகளும் திருக்கோபுரங்களும் கனத்தது ' என்று நாயனார். ॠषीणां पुनराद्यानां वाचमर्धोनुधावति (ரிஷீணாம் புனராத்யானாம் வாசமர்த்தாநுதோவதி) (பவபூதி உத்தரராம சரிதம்) என்பார்கள்.
திருக்கமல பாதம் வந்து - தாய் முலையில் போல் பெருமாள் திருவடிகளில் ஸ்நேஹம் என்பர். சஹஜ நிரவதிக ஸ்நேகத்தால் திருவடிக்கு நீண்டு நெருங்கும் ஸ்வபாவம். திருவடி நீளக் காரணம் திருவுள்ளம் உவந்து நீள்வது. சயனத்திருலிருந்த  திருவடிப்பூ ஸ்நேஹ பாரவச்யத்தால் நீண்டு என் கண்ணுள் வந்து நின்றது போலும். 'திரு' என்று இங்கு லஷ்மியைச் சொல்லுகிறது. இது பூமிப் பிராட்டியாருக்கும் உபலக்ஷணம். 'लक्ष्मीभूम्योः करसरसिजैर्लालितं रंगभर्तु: पादाम्भोजम्' (லஷ்மீ பூம்யோ : கரஸரஸிஜைர்லாலிதம் ரங்கபர்த்து: பாதாம்போஜம்) (ஸோபாநம்) என்ற அநுபவம். தாய்மார்கள் இந்தக் கமலத்தைப் பிடித்து லாளநம்செய்து என் கண்ணினுள் ஒத்துகிறார்கள் போலும் ' என்று அநுபவம்.. பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக்கண்களிலும் ஒற்றிக்கொள்ளும் திருவடிகள்' என்று பிள்ளை.
 என் கண்ணிலுள்ளன வொக்கின்றதே - தினமும் இவர் திருக்காவிரிக் கரையிலிருந்து யோகம் செய்கையில் தர்ஸந சமாநாகாரமான பிம்பதர்ஸந மேற்பட்டு வந்தது. 'கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்’ (திருவாய்மொழி 1,10,2) என்றது போல இவர் காதல் தொழுகையாகிய யோகத்தில் இவர் கண்ணுள்ளே திருவடி நின்றுகொண்டிருந்தது. பெரிய பெருமாள் திருவடிக்கமலம் இவர் கண்ணிற்கு யோக தசையிலே சேவை சாதித்துக் கொண்டிருந்தது. யோக தசையில் சேவை சாதித்து இவர் கண்ணுள்ளே நின்றுகொண்டிருந்த திருவடிக் கமலத்தோடு இப்பொழுது தன் கண் வரையில் நீண்டு வந்த அரங்கன் திருவடிக் கமலத்தை ஒத்துப் பார்க்கிறார். யோகாநுபவ உறுதியால் என் கண் ணுள்ளே நிற்கும் திருக்கமல பாதத்தோடு இப்பொழுது நேரில் ஸாக்ஷாத்தாக சேவிக்கும் திருக்கமலபாதம் மிகவும் ஒக்கின்றதே யென்று அத்புத ரஸம்.
(2) கண்ணினுள்ளே வந்து விட்டாலும் ஸாக்ஷாத் ஸ்பர்சத்தை நினைக்கவும் பச்சையாகச் சொல்லவும் மனமில்லாதவராய், கண்ணில் வந்து புகுந்தது போலிருக்கிறது என்று பேசுகிறார். இப்படியே மேலும் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே' என்று பேசுகிறார். தாமாகப் பெருமாள் பாத கமலங்களைத் தீண்ட அச்சமே; அவையே வலிய என்னிடம் வந்து என்னை ஸ்பர்சிக்கின்றன; நான் என்ன செய்வேன் ! திருமேனி அவயவங்களை எட்டு ச்லோகங்களால் அநுபவிக்கிறார். அஷ்டாங்க யோகக் கணக்கு. பகவத் த்யாந ஸோபாநமும் இதை அநுசரித்தது. அங்கும் அவயவங்களின் அநுபவம் எட்டு ச்லோகங்களால் செய்யப் படுகிறது. இங்கு, 1, 4, 5, 6, 7, 8-வது: பாசுரங்களில் அவயவங்களை தாமாக நெருங்குவதாக அநுபவமில்லை. 2-ம் பாசுரத்தில் சென்றதாம் என் சிந்தனை' என்கிறார். சிந்தனை தொடுவதால் தீட்டில்லை. 'உந்திமேல தன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே' என்று தன் ஆத்மா தொடுவதைப் பேசுகிறார். ஆத்மாவுக்கும் தீட்டில்லை.
(3) ஒன்பது பாட்டு வழியிலே அநுசந்தித்துப் பத்தாம் பாட்டிலே திருவடி தொழுதாரென்கிற ஐதிஹ்யத்தின்படியே மாநஸ ஸாக்ஷாத்காரம் தான் கண்ணிட்டுக் கண்டாப் போலே இருக்கை. அங்ஙனமன்றிக்கே மாநஸ ஸாக்ஷாத்காரத்தோடு சேர்ந்திருந்த தீசஷுர் விஷயமான திருப்புகழென்றுமாம்' என்று இரண்டுவிதமாகவும் நாயனார் அருளியது. மாநஸ ஸாக்ஷாத்கார மென்பது  யோக ஸாக்ஷாத்காரம் ; தர்சன ஸமாநாகாரம். கருமணியைக் கோமளத்தைக் கண்ணாரக் கண்டு, மனத்தூணே பற்றி நின்று வாயார வாழ்த்தும் ப்ரபந்தமாகை யாலே ' என்றும் அருளியுள்ளார்

Wednesday, May 9, 2018

அன்பில் ஸ்ரீ கோபாலாசார்யார் ஸ்வாமியின் அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம்


' அடியார்க் கென்னை யாட்படுத்த விமலன் '- அடியரான லோகஸாரங்கர் இவருக்கு ஆட்பட்டு இவரை தோளில் தூக்கிக் கொண்டு சென்றிருக்க, அவருக்கு இவரை ஆட்படுத்தினதாகப் பாடுவது எப்படி, பொருந்துமென்று சங்கை வரலாம். இவ்விஷயத்தை.  ஊன்றி ஆராய வேண்டும்..நடந்த வ்ருத்தாந்தத்திற்கு இந்த வார்த்தை முழுவதும் ரஸமாகப் பொருந்தும்படி பொருள் கொள்ளவேண்டும். ஸ்வாமியின் ஆஜ்ஞை தனக்கு எவ்வளவு அப்ரியமாயிருந்தாலும், இறாய்க்காமல் அதற்கு இணங்குவது தான் ஆட்பட்ட தாஸனுக்கு முக்ய லக்ஷணம். என் தோள் மேலேறு' என்றால், அது தனக்கு அத்யந்தம் அப்ரியமாயினும், அந்தச் சொல்லைக் கேட்கவேண்டும். தன்னிஷ்டம் என்பதை அடி யோடு தள்ளி, ஸ்வாமி இஷ்டத்தையே நிறைவேற்ற வேண்டும். ராமதாஸரான பரதர், கைகேயி  ராஜந்' என்று சொல்லுகையில் மிகவும் புண்பட்டார். அது அவருக்கு அருந் து தம். दासभूतोभविष्यामि (தாஸ பூதோபவிஷ்யாமி) [' நான் பூர்ண ஸந்தோஷத்தோடு ராமனுக்குத் தாஸனாகப் போகிறேன் '] என்று தாயாரிடம் சபதம் செய்தார் ; அப்படியே தாஸரானார். 'ராஜ்யத்தை நீ ஆளத்தான் வேண்டும்என்று இவரை ராமன் திருப்பி விடுகையில், அவருக்குத் தாஸரானபடியால் அதற்கு உடன்பட்டார். ராமனுக்கு ஆட்பட்ட தாஸராக இருந்ததேதான் அவர் ராஜ்யம் ஆண்டதற்குக் காரணம். திருப்பா ணாழ்வார் ஒருக்காலும் ஸ்ரீரங்கத்தை மிதிக்கத் - துணியாதவர். ஸ்ரீரங்கத்வீபத்தை மிதிக்க ஸம்மதியாதவரும், அம் மண்ணை மிதிக்க அஞ்சியவருமான அவர், விப்ரரான முனியின் தோளை மிதிக்க ஸம்மதிப்பரோ? அவருக்குத் தாம் ஆட்பட்ட தாஸ ரானதால் தான், அவர் சொல்வது இவருக்குக் - கடோரமாயிருந்தும், அதற்கு உடன்பட்டார். அவரிடத்தில் தாஸ்யகாஷ்டையைப் பற்றியது தான் அவர் அநுமதிப்படி உலகமறிய அவர் தோளிலே. 'அரங்கம் சென்றதற்குக் காரணம். 'உலகறிய....... உலோக சாரங்கமாமுனி தோள்தனிலே வந்து என்பது ப்ரபந்தஸாரம். அரங்கத்தில் ஸர்வ லோக ஸாக்ஷிகமாக இந்த விசித்ரக் காட்சி.

2) ப்ருகு  மஹர்ஷியின் அடிபதிந்தது திருமார்பில். ஸ்ரீவத்ஸரான இவ்வாழ்வார் நித்யஸ்தாநத்தில் ப்ருகு வென்னு மடியார் திருவடியை இவர் தாங்கி அவ்வடியாருக்காட்பட்டவர்.

 3) தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு அடுத்த அவதாரம் இவ்வாழ்வார். அரங்கனைத்தவிர மற்றுமோர்  தெய்வமுண்டோ ' என்று கேட்டவர் அரங்கன் தொண்டரே உத்தம தெய்வமென்று துணிந்து அவர் அடிப்பொடியானார். பக்தாங்க்ரி ரேணுவுக்கு அடுத்த அவதாரமான இவர், தாமும் அடியார்க் காட்பட்டு, தொண்டரடிப்பொடி யாகுமாசையை முதற் பாசுரம் முதலடியிலேயே காட்டுகிறார்.

4) அடியார்க்குத் தன்னை யாட்படுத்துவதில் ருசியுள்ள அரங்கனாகிய பித்தன் வரித்து க்ருபையால் பாகவத தாஸனாக்கினாரென்பதை நினைத்து விமலனென்று அவரைப் புகழ்கிறார். தனக்குத் தாஸராயிருப்பவர் பிறருக்கு ஸ்வாமியாவதை சாமாந்ய ப்ரபுக்கள். ஸஹியார்.  இவர் விலக்ஷணமான ப்ரபு வென்று ஆச்சரியப்படுகிறார்.

5) 'மலம்' என்பது சம்சயம். அச்யுதனை ஸேவிப்பவர்க்கு மோக்ஷம் கிடைத்தாலும் கிடைக்கும், கிடையாமற்போனாலும் போகும். அச்யுதன் பக்தர்களைப் பரிசர்யை செய்வதில் இன் புறுபவர்க்கு அதில் சம்சயமே கிடையாது. அடியார்க்கு ஆட்படுத்துவதால் தனக்கு மோக்ஷம் கிடைப்பதில் சம்சயத்தை நீக்குகிறார் என்று ஸூசகம்.


விண்ணவர் கோன் :- ' காண்பனவும் உரைப்பனவு மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய  காதல்' என்றும், 'கோவலனும் கோமானுமான வந்நாள் குரவைபுணர் கோவியர் தம் குறிப்பே கொண்டு சேவலுடன் பிரியாத பேடை போல் சேர்ந்து ' என்றும் முநிவாஹந போகப் பாசுரங்களின்படி, கண்ணனிடமே இவ்வாழ்வாருக்குக் காதல் மிகுதி. கொண்டல் வண்ணன் கோவலனாய்  வெண்ணெயுண்ட வாயன் இவருள்ளத்தைக் கவர்ந்ததால் இவர் கண்களும் மனமும் அங்கு லயித்து, இவருக்கு பூமவித்யையிற் கூறிய மோக்ஷலயம் கிடைத்தது. விண்ணவர் கோனும் இவருக்குக் கோவலக்கோன் என்று அநுபவம். அண்டர் கோன் என்று முடிவிலும் கோன் என்றே அநுபவம்.

விரையார் பொழில் வேங்கடவன் :- (1) ஆதிமூர்த்தி வானின்றிழிந்து மத்தியில் திருமலையில் அவதரித்து, அரங்கத்தில் பள்ளிகொண்டருளினார். சந்தி ரஸத்தில் இவ்வாழ்வார் முழுகுகிறார். வாநரருக்கும் நரருக்கும் எப்படி சந்தி சமாகமம் நேர்ந்தது என்று பிராட்டி ஆச்சரியப்பட்டாள். அரங்கத்தரவணையான் கர்ப்ப க்ருஹத்தில் ஸ்வப்நத்திலும் நேரக்கூடாததான ஒரு சந்தி இவருக்கு நேர்ந்ததில் இவருக்கு விஸ்மயம். ஸ்வப்நத்தை விழிப்புக்கும் தூக்கத்திற்கும் நடுவிலுள்ள ஓர் சந்தி, சந்த்யம் என்பர். சந்தியில் ஏற்படுவது 'சந்த்யம் . ஸ்வப்நத்தில் சேராததெல்லாம் சேர்வது போல் புலப்படும். தூக்கத்தில் ப்ரஹ்மத்திற்கும் ஜீவனுக்கும் ஓர் நெருங்கிய ஸம்ச்லேஷம் ச‌ந்தி). மனம் அஹங்காரம் முதலியன ஜீவனைத் தொடாமல் , ப்ரஹ்மத்தினிடம் ஜீவன் தாய்மார்பில் ப்ரஜை போல் வாத்ஸல்யத்தால் அணைக்கப்பட்டு, மெய்ம்மறந்து, சரமமற்று சுகப்படும் சமயம். ப்ரஹ்மத்தோடு நேரும் அந்த சந்தியில் ஜாதிபேதம், துஷ்டர் ஸாது முதலிய பேத மொன்றுமில்லை. ப்ரஹ்மத்தால் கெட்டியாய் அணைக்கப்பட்டு, மெய் மறந்திருக்கும் தூக்க சமயத்தில் 'திருடன் திருடனல்ல;' 'பாபி பாபியல்ல ; சண்டாளன் சண்டாளனல்ல ' என்று உபநிஷத்து கூறுகிறது. பெருமாள் தன்னைத் தருவித்துத் தனக்கு அவரோடு ஏற்படுத்திய சந்தி ரசத்தில் ஆச்சர்யப்படும் இவ்வாழ்வார் திரும்பவும் திரும்பவும் பலவாறாக சந்தி ரசத்தில் ஈடுபடுகிறார். வேங்கடம் ஓர் சந்தி ஸ்தானம். 'வானவர்கள் சந்தி செய்ய நின்றான்' என்று அங்கு மண்ணோரும் விண்ணோரும் வந்து ஒக்கத் தொழுது சந்தி செய்யுமிடம் ; அரங்கன் ஆடையும் அந்தி . போல் நிறம் ' - அந்தி ஓர் சந்தி. உந்தி நடு மேனி யிலிருந்து மேலும் கீழும் சந்தி செய்கிறது. 'तत्रारूढैर् मेहति मनुजैः स्वर्गिभिश्वावती सत्वोन्मेषात् व्यपगतपिंथस्तारतम्यादिभिः (தத்ராரூடைர்மஹதி மநுஜை: ஸ்வர்கிபிஸ்சாவ தீர்ணை: ஸத்வோமேஷாது வ்யபகதமிதஸ் தாரதம்யாதிபேதை :) என்று ஹம்ஸ சந்தேசத்தில் வடவேங்கடமாமலையில் வானவர் இறங்கி வந்தும், மண்ணோர் ஏறிவந்தும் சாந்தி செய்து சத்வம்  தலையெடுத்துத் தாரதம்ய மன்றியில் தொழுவது வர்ணிக்கப்பட்டது.

2) பெருமாள் திருவடி வாரத்தில் நிற்கையில் तं ब्रह्मगन्धःप्रविशति (தம் ப்ரம்மகந்த : ப்ரவிசதி (கௌஷீதகி உபநிஷத்து) என்றது போல ப்ரஹ்ம பரிமளம் வீசி இவருள் புகுகிறது. இங்கே திருக்கமலபாதத்தின் அநுபவம். ' वेलातीतश्रुति परिमळं पादाम्भोजम् (வேலாதீதச்ருதி பரிமளம் பாதாம்போஜம்)(பகவத்தியான ஸோபாநம்) என்றதுபோல ஸர்வ கந்தனுடைய கந்தம் அலைத்து வீசுகிற அநுபவம். பரம பதத்தி லிருந்த ப்ரஹ்மகந்தம் அவதரிக்கும் பெருமாளுடன் கூட வேங்கடப் பொழில்களில் அமர்ந்து கடியார் பொழிலரங்கத்தில் அமர்ந்தது. ஸர்வ கந்தனுடைய திருமேனியி லிருந்தும் ப்ரஹ்ம கந்தம் வீசுகிறது. ''துளபவிரையார் கமழ் நீண்முடி எம் ஐயனார் '' என்று திருமுடி வாசனை அ நு ப வ ம்.

3) वहते वासनां मौळिबन्धे (வஹதே வாஸா நாம் மௌளிபந்தே) யோகத்தில் சுபமான வாசனைகள் முக்யம்)

4) இவருக்கு அடுத்த அவதாரமான கலியன், 'விரையார் திருவேங்கடவா' என்று பாடியதும் இதையொத்தது. வேயேய் பூம்பொழில் - சூழ்.'