Friday, August 18, 2017

நம்மாழ்வார் வைபவம்

இப்படி முதல் மூன்று பாட்டுக்களில் முதல் அத்யாயத்தில் உபபாதிக்கப்பட்ட பகவானுடைய. ஐகத்காரணத்வம் விவரிக்கப்பட்டது. இந்த சரீராத்மபாவத்தை நமது ஸித்தாந்தத்திற்கு ப்ரதான ப்ரதிதந்த்ரமாக பூர்வாசார்யர்கள் நிரூபித்துப் போந்ததற்குக் காரணம் இந்த ஸித்தாந்தத்திற்கு இந்தக் கலியுகாரம்பத்தில் ப்ரவர்த்தகரான ஆழ்வார் நான்கு பாட்டுக்களில் இந்த அம்சத்தை விசதமாக உபபாதித்திருப்பதே. அதாவது ’நாமவன்’, ’அவரவர்’, ‘நின்றனர்’ ’திடவிசும்பு’ என்றாரம்பிக்கும் நாலு ஐந்து ஆறு ஏழா வது பாட்டுக்களில் இவ்வர்த்தம் நன்றாக உபபாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் ’உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்’ என்று இந்த ஸம்பந்தம் ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டிருக்கிறது.

எம்பெருமானார் தாம் ஸ்ரீஆளவந்தார் சரம திருமேனி முன்பே செய்தருளிய திருவாய் மொழிக்கு வ்யாக்யானம் செய்தருளுவதாகிற மூன்றாவது ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றத் திருவுள்ளம்பற்றி ஆழ்வாருடைய க்ருபைக்குப் பூர்ணபாத்திரமான ஸ்ரீமந்நாதமுனிகள்

வம்சத்தில் பிறந்த திருக்குருகைப் பிரான் பிள்ளானை வ்யாக்யானம் எழுதும்படி நியமித்தார் என்பதும், அவரும் தாம் எம்பெருமானார் திருவடிகளில் க்ரஹித்த அர்த்தவிசேஷங்களையே ஸங்க்ரஹித்துத் திருவாறாயிரப்படி எனப்படும் வ்யாக்யானத்தை எழுதி எம்பெருமானார் திருமுன்பே வைக்க, அவரும் அதைக் கடாக்ஷித்து, போரஉகந்து, அதைத் தாமே தம் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபம் ஸாதித்தருளினார் என்பதும், தமக்குப் பிறகு திருவாய்மொழியின் அர்த்தத்தை ப்ரவசனம் செய்யும் அதிகாரத்தை அந்தப் பிள்ளானுக்கே கொடுத்தருளினார் என்பதும் ஸுப்ரஸித்தம். அந்த வ்யாக்யானத்தில் ’மனனகம்’ என்கிற பாட்டின் அவதாரிகையில் “இந்தக் குணங்களுக்கு ஆச்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தினுடைய ஹேயப்ரத்யநீகதயா கல்யாணைகதாநதயாவுள்ள விஸஜாதீயத்வம் சொல்லுகிறது" என்றும் , ’இலனது’ என்கிற பாட்டின் அவதாரிகையில் ‘இப்படி ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப குண விபூதிகனான எம்பெருமானுடைய ஜகதைச்வர்யம் சொல்லுகிறது’ என்றும், ‘திடவிசும்பு’ என்கிற பாட்டின் அவதாரிகையில் “கீழ் மூன்று பாட்டாலும் ஜகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் பகவததீநம் என்னும் இடத்தை ஸாமாநாதிகரண்யத்தாலே சொல்லிற்று, இனி இந்த ஸாமானாதிகரண்யமானது ஜகதீச்வரயோ: சரீராத்மத்வ நிபந்தனம் என்று சொல்லுகிறது" என்றும், நடுவில் ‘அகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலா விநோதனாய் ஸர்வ ஜகதாத்மாவாய், ஸர்வ ஜகச்சரீரனாய் ஸ்வத ஏவ அகர்மவச்ய னாகையாலே ஸ்வசரீரபூத சேதனா சேதனாத்மக ஸமஸ்தவஸ்துகத ஸுக துக்க விகாராதி ஸர்வ தோஷை : அஸம்ஸ்ப்ருஷ்டனாயிருந்த பரமபுருஷன்’ என்றும் வ்யாக்யானம் செய்திருப்பதினால் எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் உபபாதித்திருப்பதற்கு மூலம் இத் திருவாய்மொழிப் பாசுரங்களே என்பது ஸூசிப்பிக்கப்பட்டதாகிறது.

‘அபாஸ்தபாத:’ என்கிற இரண்டாம் அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம் ’சுடர்மிகு சுருதியுள்’ என்று காட்டப்பட்டது. அதாவது ’சுடர்மிகு' என்பதினால் ச்ருதி உத்தம ப்ரமாணமாகையாலே அவற்றில் ப்ரதிபாதிக்கப்பட்டிருப்பதற்கு விருத்தமாகச் சொல்லுகிற ஸாங்க்ய ஸ்ம்ருதி, யோக சாஸ்திரம், முதலியவைகளினுலும் யுக்திகளினாலும் பாதிக்கப்படாதாகையினால் அவை நிரஸிக்கப்பட்டனவாயின என்று காட்டியபடி. மேல் ’உளன்எனில்’ என்கிற பாட்டில் சூந்யவாதியை நிரஸித்திருப்பதும் இந்த அபாஸ்த பாதத்வத்தையே விவரிப்பதாகும்.

“ச்ரிதாப்த” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட இரண்டாம் அத்யாயத்தின் இரண்டாம் பாதத்தின் க்ரமம் ‘சுரரறிவரு நிலை’, ‘ உளன் எனில் உளன்’ என்கிற இரண்டு பாட்டுக்களில் காணப்படும். ‘காத் மாதேரிந்த்ரியாதே ருசிதஜனனக்ருத்* என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாவது நான்காவது பாதங்களின் க்ரமம் ஆகாசாதிகளின் ஸ்ருஷ்டியைக் குறிப்பிட்டு அதற்கு ப்ரஹ்மாதிகள் காரணமாக இருக்கமுடியாது என்று கூறும் ‘சுரரறிருவரு’ என்கிற பாட்டிலும் ‘சுடர் மிகு’ என்கிற பாட்டிலும் காணலாம்.

திருவாறாயிரப்படியில் ‘அபௌஷேயமாகையாலே நிர்த்தோஷமாய், அபாதித ப்ராமாண்ய ரூபதேஜ: ப்ரசுரமாயிருந்த சுருதிகளில் உளன் என்கிறார். ஆதலால் லோகாயத, மாயாவாத, பாஸ்கரீய யாதவப்ரகாசாதி வேதவிருத்த ஸமயங்கள் எல்லாம் நிரஸ்தமாய்த்தன’ என்று வ்யாக்யாதம். ஆக இப்படி முதல் திருவாய்மொழி பத்துப் பாட்டுக்களில் நிரூபிக்கப்பட்டிருக்கும் க்ரமமும் சாரீரக சாஸ்திரத்தில் முதல் இரண்டு அத்யாயங்களின் ரீதியும் ஒன்றாயிருக்கும் என்றறியவும்,

‘ஸம்ஸ்ருதெள தந்த்ரவாஹீ ’ என்று நிரூபிக்கப்பட்ட மூன்றாம் அத்யாயத்தின் முதல்பாதத்தின் க்ரமம் ‘வீடுமின் முற்றவும்’ என்கிற இரண்டாம் திருவாய்மொழியில் காணலாம். உபாயத்தை நிரூபிப்பதற்கு முன்பு இதர விஷயங்களினுடைய அஸ்திரத்வாதி தோஷங்களையும், ஆச்ரயணீய பகவானுடைய ஹேய ப்ரத்யநீகத்வ கல்யாணை கதாநத்வத்தையும் அறிய வேண்டும் என்பதற்காக இதர விஷயங்களில் ஸங்கத்தை விட்டு அவனை ஆச்ரயிக்க வேண்டும் என்று முதல் பாட்டிலும், ஜீவாத்மா ஸ்திரன் என்றும், சரீரங்கள் அஸ்திரங்கள் என்றும் இரண்டாம் பாட்டிலும் இதற்கு மூல காரணங்களான அஹங்கார மகாரங்களை விடவேண்டும் என்று மூன்றாம் பாட்டிலும் நிரூபிக்கப்பட்டது.

Friday, August 11, 2017

நம்மாழ்வார் வைபவம்

கீழ் நிரூபிக்கப்பட்ட சாரீரகார்த்த க்ரமப்படியே இந்தத் திருவாய் மொழியாகிற ப்ரபந்தத்தில் இறுதியிலுள்ள ஏழு திருவாய்மொழிகளுடன் கூடிய முதல் இரண்டு திருவாய்மொழிகளிலும் தத்துவாதி நிரூபணம் விசதமாகச் செய்யப்படுகிறது என்றருளிச் செய்யப்பட்டதாயிற்று. வ்யாஸமஹர்ஷி பரப்ரஹ்ம ஸ்வரூபாதிகளை நிரூபிக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்துடன் ஸூத்திரங்களை வ‌குத்தார். ஆகையினால் அது ஒரு க்ரமமாக நடுவில் விச்சேதாதிகள் இல்லாமல் செய்யப்பட்டது,
ஆழ்வாரோ அப்படி ஒருவித ஸ‌ங்கல்பத்துடன் இப்ரபந்தத்தைச் செய்ய முன் வரவில்லை. ஸமஸ்த‌ கல்யாண குணாத்மகன் என்கிற ப்ரஸ்ஸித்தியையுடைய ப‌க‌வானால் க‌டாக்ஷிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ராய்  அவனை உள்ளபடியே அனுபவித்து, அவ்வனுபவ ஜநிதமான நிரவதிக ப்ரீதியாலே அவனை அனுபவித்த‌படியே பேசும் பாசுரங்களன்றோ இத்திருவாய்மொழி ! பகவ‌த்ஸ்வரூபாதி தத்துவ நிரூபணத்தின் பேதமிருக்கமுடியாதாகையினால், ஆழ்வாருடைய அனுபவ க்ர‌மமும் அந்த சாரீரகார்த்த க்ரமமும் ஒன்றாய்நின்றது.  பகவான் “ப‌த்துடை அடியவர்க்கு எளியவன்” என்கிற‌ ஆகாரத்தை அனுஸ‌ந்திக்கப் புக்கு, ஒரு குணத்திலிருந்து மற்றொரு குணத்திற்குத் தாண்டி, பகவானுடைய கல்யாண குணங்களைப் பலபடியாக அனுபவித்துப் பேசி, இறுதியில் அவனைக்கிட்டும் ப்ரகாரம் முதலியவற்றை நிரூபித்தாராகையினால் ' பத்துடையடியவர்'  முதல் (1-3) சார்வே த‌வ‌நெறி'க்கு முன் (--1,4) வேய் ம‌ருதோளிணை வ‌ரையில் கீதாசார்ய‌ன் ப்ர‌ஸ‌ங்காத் ஸ்வ‌ஸ்வ‌பாவ‌த்தை கீதையில் அருளிச் செய்தாற்போலே ஆழ்வாரும் ப்ர‌ஸ‌க்தானுப்ர‌ஸ‌க்த‌மாக‌ப் ப‌க‌வானுடைய‌ ப‌ல‌ குண‌ங்க‌ளை அனுப‌வித்த‌ ப்ர‌கார‌ம் ந‌டுவிலுள்ள‌ 91 திருவாய்மொழிக‌ளாய் இருக்கும்.
இங்கு சாரீரகஸூத்ரார்த்த க்ரமம் என்று நிரூபிக்காமல் சாரீரகார்த்த க்ரமம் ' என்று அருளிச் செய்திருப்பதினால் ஆழ்வார் ஸூத்திரங்களைப் பார்த்து அந்த க்ரமத்தைப் பின்பற்றித் தம் ப்ரபந் தத்தில் அவற்றை நிருபித்தருளவில்லை என்பதும், வேதங்கள் பகவானை ஒருவாறு ப்ரத்யக்ஷீகரித்து அவனுடைய ஸ்வரூபாதிகளை ப்ரதிபாதிக்கும் க்ரமம் ப்ரஹ்மஸூத்திரங்களில் எப்படி ஸங்க்ரஹிக்கப் பட்டதோ, ஆழ்வாரும் அப்படியே தாமே எம்பெருமானை ப்ரத்யக்ஷீகரித்த ப்ரகாரத்தை இந்த ப்ரபந்தத்தில் வெளியிட்டபடியினால் அதே க்ரமம் இதிலும் காணப்படுகிறது என்பதும் தெரிவிக்கப் பட்டதாயிற்று. விசதம் என்கிற பதத்தால் இப்படி ப்ரதிபாதிக்கும் விஷயத்தில் ஸூத்திரங்களை விட ஆழ்வாருடைய ப்ரபந்தம் மிகவும் தெளிவாக இருக்கும் என்பதும் காட்டப்படுகிறது. ஸூத்திரங்கள் வேதங்களுக்கு உபப்ரும்ஹண ஸ்தானத்தில் நிற்கும். ஆழ்வாருடைய பிரபந்தமோ வேதங்களைப் போல ஸ்வதந்திர ப்ரமாணமாய்  நிற்கும் என்று அறிய வேண்டும்.  எப்படிப் பதினாறு பாதங்களில் கூறப்படும் அர்த்த க்ரமம் நிரூபிக்கப்ப்ட்டிருக்கிறது என்பது மேலே விவரிக்கப் படுகிறது. பகவானுடைய ஸ்ருஷ்டி கர்த்ருத்வத்தை நிரூபிப்பதற்கு முன்பு, முதல் நாலு அதிகரணங்களில் (நாலு ஸூத்திரங்களில்) சாரீரக சாஸ்திரம் ஆரம்பணீயம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
        முதல் ஸூத்திரத்தில் ஸித்தபரமான உபநிஷத்வாக்யங்களுக்கு அர்த்தபோதகத்வம்  உண்டு என்கிற அர்த்தம் உபபாதிக்கப் பட்டது.  யவன் அவன்என்று அவனுடைய ப்ரஸித்தியைக் கூறிக் கொண்டு உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் மயர்வற மதி நலம் அருளினன் யவன் மயர்வற மதிநலம் அருளினன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி, யவன் அய‌ர்வறும் அமரர்கள் அதிபதி, அவன் துய‌ர‌று சுட‌ர‌டி தொழுதுஎழு  என்ம‌னனேஎன்று ஸித்தபரங்களான உபநிஷத்து வாக்யங்களுக்கு அர்த்த போதகத்வத்தை வெளியிட்டருளினார்.. ஜன்மாத்யதிகரத்தில் நிரூபிக்கப்பட்ட ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபயுக்தமான ஸர்வஜ்ஞத் வாதி கல்யாண குணங்களையுடையன் என்பது உயர்வற உயர் லமுடையவன் என்னப்பட்டது. உயர்வற உயர்நலம் உடையன் என்பதினால் வெளியாகும் இந்த ஏற்றத்தை சாஸ்திரம் கொண்டே தெளியவேண்டும் என்றேற்படுகிறபடியினால் சாஸ்த்ரயோநித்வாதி கரணார்த்த க்ரமம் கூறப்பட்டது. "மயர்வற மதிநலம் அருளினன்  என்று அவனைப் பற்றிய ஜ்ஞானம் புருஷார்த்தம் இவற்றை அளித்தவன் என்பதினால் ஸமந்வயாதிகரணார்த்த க்ரமம் நிரூபிக்கப்பட்டது.
ஸ்ரஷ்டா - பகவான் ஜகத்தை ஸ்ருஷ்டிப்பவன் என்றதினால் அப்படிச் செய்வதற்கு யோக்யதையில்லாத சேதனா சேதனங்களை விட அவன் வேறுபட்டவன் என்பது ஸூசிதம் என்று ஈக்ஷத்யாதி கரணம், ஆகாசாதிகரணம், ப்ராணாதிகரணம் ஜ்யோதிரதிகரணம் என்கிற அதிகரணங்களில் நிரூபிக்கப்பட்ட அசேதனங்களைவிட வேறுபட்டவன்என்பது  இங்கு பொறி உணர்வு அவையிலன்என்னப்பட்டது. ஆநந்த மயாதிகரணம் முதவியவைகளில் உபபாதிக்கப்பட்ட சேதனங்களை விட வேறுபட்டவன் என்பது, ‘மனனுணர் அளவிலன்என்னப்பட்டது.
இரண்டாவது பாதத்தில் கூறப்பட்ட பகவான் எல்லா வஸ்துக்களையும் தனக்குச் சரீரமாகவுடையவன் என்பது தேஹீ" என்னப் பட்டது. இது இலனது உடையன் இது என நினைவரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலனலன்; என்று மூன்றாம் பாட்டில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்வநிஷ்ட:’ என்று மூன்றாம் பாதத்திலும், நிரவதிமஹிமா  என்று நான்காம் பாதத்திலும் உபபாதிக்கப்பட்ட க்ரமத்தை அந்நலனுடை ஒருவனைஎன்கிற பாட்டில் காணலாம்.

Tuesday, August 8, 2017

ந‌ம்மாழ்வார் வைப‌வ‌ம்‌‌

आदौ शारीरकार्थक्रममिह विशदं विंशतिर्वक्ति साग्रा
संक्षेपोऽसौ विभागं प्रतयति च ऋचां चारुपाठोपपन्नम् |
सम्यग्गीतानुबद्धं सकलमनुगतं सामशाखासहस्रं
संलक्ष्यं सामिधेयै: यजुरपि दशकै: भात्यथर्वा रसैश्च ||


ஆதௌ ஶாரீரகார்தக்ரமமிஹ விஶதம் விம்ஶதிர்வக்தி ஸாக்ரா
       
ஸங்க்ஷேபோsஸௌ விபாம் ப்ரதயதி ரு̆சாம் சாருபாடோபபந்நம் |
ஸம்யக்கீதாநுபத்ம் ஸகலமநுகதம் ஸாமஶாகாஸஹஸ்ரம்
       
ஸம்லக்ஷ்யம் ஸாமிதேயை: யஜுரபி ஶகை: பாத்யதர்வா ரஸைஶ்ச ||

இத்திருவாய்மொழியில் நுனியுட‌ன்கூடிய‌ முத‌ல் இருப‌து பாசுர‌ங் க‌ளும், அதாவ‌து ப‌த்தாம் ப‌த்தில் “சார்வே த‌வ‌நெறி” என்றார‌ம் பிக்கும் திருவாய்மொழி தொட‌க்க‌மாக‌ ஏழு திருவாய்மொழி க‌ளும் முத‌ல் இருப‌து பாசுர‌ங்க‌ளும் சாரீர‌கார்த்த‌ க்ர‌ம‌த்தைத் தெளிவாகக் கூறுகின்ற‌ன‌. அதாவ‌து நான்கு அத்யாய‌ங்க‌ளாய்ப் ப‌தினாறு பாத‌ங்க‌ளாய்ப் பிரிக்க‌ப்ப‌ட்டிருக்கும் சாரீர‌க‌ சாஸ்திர‌த் தில் தத்துவ‌ ஹித‌ புருஷார்த்த‌ங்க‌ள் எந்த‌ க்ர‌ம‌த்தில் நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வோ, அதே க்ர‌ம‌த்தில் இங்கும் இந்த‌ தொண்ணூறு பாசுர‌ங்க‌ளும் ப்ர‌திபாதியா நிற்கும் என்ற‌ப‌டி.
ஆதெள‌. சாரீரகார்த்த க்ரமம் இஹ‌ விசதம் விம்சதி: வக்தி ஸாக்ரா
தத்துவ ஹித புருஷார்த்தம் எனப்படுகிற பரப்ரஹ்ம ஸ்வரூபாதி கள், அதை அடைவதற்கு உபாயம் அந்த ப்ரஹ்மத்தை அனுபவிப்பதாகிற பலன், இவ்வனைத்தையும் வ்யாஸ மஹர்ஷி 345 ஸூத்திரங்களில் நிரூபித்திருக்கிறார். வேதங்களுக்கு அடுத்த படியான ப்ரமாண‌மாக இஸ்ஸூத்திரங்கள் கருதப்படுகின்றன, ஹிந்து மதத்தைப் பரவச் செய்ய முன்வந்தவர்க‌ள் இந்த ஸூத்திரங்களுக்கு விஸ்தரமான வ்யாக்யானம் செய்திருக்கிறார் கள். நம்முடைய மதமாகிய விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ப்ரவர்த்தகராகிய எம்பெருமானாரும் ஸ்ரீபாஷ்யம் என்னும் க்ரந்தத்தில் இவற்றின் அர்த்தத்தை விவரித்துள்ளார். அதன் அவதாரிகா வாக்யத்திலிருந்து இந்த ஸூத்திரங்களுக்கு போதாயனர் மிகவும் பெரியதான வ்ருத்தி க்ரந்தம் என்னும் ஒரு வ்யாக்யானம் செய்திருப்பதாயும், (டங்க த்ரமிட குஹதேவ ப்ரப்ருதிகளான)  பூர்வாசார்யர்கள் சுருக்கமாக வ்யாக்யானமிட் டிருப்பதாயும், அவற்றைத் தழுவி ஸூத்திரங்களின் அக்ஷரங் களுக்கு அர்த்தம் தாம் எழுதியதாயும் எற்படுகிறது.
இந்த ஸ்ரீபாஷ்யத்தில் ஸூத்திரங்கள் பல அதிகரணங்களாக‌வும், பதினாறு பாதங்களாகவும் நாலு அத்யாயங்களாகவும் பிரிக்கப் பட்டிருக்கின்றன, அதிகரணங்கள் 158. ஒவ்வொரு பாதத்திலும் முறையே உள்ள அதிகரணங்கள் 11, 6, 10, 8-10, 8, 7, 8-6, 8, 28, 15- 11, 11, 5, 6 எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. (அதிகர‌ண‌ ஸாராவளி - 16). இந்தப் பதினாறுபாதங்களுள் ஒவ்வொன்றிலும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும் அம்சத்தை ஸ்ங்க்ரஹித்து ஒரு சுலோகம் ஆசார்ய ஸார்வ பெளமனால் ஸ்ரீஅதிகரண ஸாராவளி யில் அருளிச்செய்யப்பட்டிருக்கிறது. அது பின்வ‌ருமாறு:-
स्रष्टा देही स्वनिष्ठे निरवधिमहिमापास्तवाधः श्रिताप्तः
खात्मादेरिन्द्रियादेरुचितजननकृत् संसृतौ तन्त्रवाही ।

निर्दोषत्वादिरम्यो बहुभजनपदं खार्हकर्मप्रसाद्यः
पापच्छिद्रह्मनाडीगतिकृदतिवहन् साम्यदइचात्र वेद्यः ।

(1) பகவானே சேதனா சேதனங்களின் ஸ்ருஷ்டி கர்த்தா (2) இவைகளைச் சரீரமாக உடையவன், (3) த‌ன‌க்கு வேறு ஆதாரம் இல்லாதவன், (4) எல்லையில்லாத மஹிமையையுடையவன், (5)இதற்கு ஒருவிதமான விரோதமும் சொல்லும் ப்ரமாண‌ங்கள் இல்லாதவன் (8) தன்னை அடைந்தவர்களுக்குத் தான் ஆப்தன், (7) ஆகாசம் ஜீவாத்மா இவைகளை அததற்குத் தக்கபடி ஸ்ருஷ்டி செய்பவன், (3) அப்படியே இந்திரியங்களை ஸ்ருஷ்டி செய்பவன், (9) ஸம்ஸாரத்தை நடத்துகிறவன், (10) தான் ஒருவித தோஷத்தினாலும் தொட‌ப்ப‌டாதவனாகையினால் போக்யமானவன், (11) அனேக விதமான பக்தியோகங்களுக்கு விஷயமாயிருப்பவன், {12} பக்தர் களினால் அவரவர்களுக்குத் தகுந்ததான வர்ணாச்ரம தர்மங் களினால் ப்ரீதியுடையவனாகச் செய்யப்படக் கூடியவன், (13} ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன், {14) ப்ரஹ்ம நாடி வழியாக நிர்யாண‌த்தைச் செய்துவைப்பவன், (15) ப‌ல‌வித‌ங்க‌ளான‌ ஸத்காரங்கள் செய்யப்படும் அர்ச்சிராதி மார்க்கத்தினால் மோக்ஷ‌த் திற்கு அழைத்துக் கொண்டு போகுமவன், (16) தன்னுடைய ஸாம்ய‌த்தைக் கொடுப்பவன், என்கிற அம்சங்கள் முறையே ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கின்றன. இதைத்தான் சாரீரகார்த்த க்ரமம் என்கிறது. சரீரத்தையுடையவன் சாரீரன், சேதனாசேதனங்களைத் தன‌க்கு சரீரமாகவுடையவன் ப‌கவனாகையினால் அவன் சாரீரன் என்னப்படுகிறான். அவனைப் பற்றிய சாஸ்திரம் சாரீரகம் என்றும், இந்த அர்த்தத்தை நிரூபிக்கும் க்ரமம் சாரீர‌கார்த்த‌ க்ரமம் என்றும் கூறப்படுகிறது.


Sunday, August 6, 2017

நம்மாழ்வார் வைபவம்

पाञ्चालीगात्रशोभाहृतहृदयवधूवर्गपुंमावनित्या

पत्यौ पद्मासहाये प्रणयिनि भजत: प्रयसीपारतन्त्र्यम् |

भक्ति: शृङ्गारवृत्त्या परिणमति मुनेर्भावबन्धप्रथिम्ना

योगात् प्रागुत्तरावस्थितिरिह विरहो देशिकास्तत्र दूता: ||

பாஞ்சாலீகா₃த்ரஶோபா₄ஹ்ரு̆தஹ்ரு̆த₃யவதூ₄வர்க₃பும்மாவநித்யா

பத்யௌ பத்₃மாஸஹாயே ப்ரணயிநி ப₄ஜத: ப்ரயஸீபாரதந்த்ர்யம் |

ப₄க்தி: ஶ்ரு̆ங்கா₃ரவ்ரு̆த்த்யா பரிணமதி முநேர்பா₄வப₃ந்த₄ப்ரதி₂ம்நா

யோகா₃த் ப்ராகு₃த்தராவஸ்தி₂திரிஹ விரஹோ தே₃ஶிகாஸ்தத்ர தூ₃தா: ||


பாஞ்சாலியின் அவ‌ய‌த்தின் அழ‌கைக் க‌ண்டு, அத்தால் அப‌ஹ‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ன‌த்தையுடைய‌ ஸ்திரீக‌ள் அந்த‌ அழ‌கைத் தாங்க‌ள் புருஷ‌ர்க‌ளாயிருந்து அனுப‌விக்க‌ வேண்டும் என்கிற‌ ஆசையின் மிகுதியினால் த‌ங்க‌ளைப் புருஷ‌ர்க‌ளாக‌வே பாவித்துக்கொண்டாற் போலே ச்ரிய‌:ப‌தியான‌ ப‌க‌வான் இட‌த்தில் ஸ்திரீக‌ளைப் போல‌வே பார‌த‌ந்த்ர்ய‌த்தை வ‌ஹித்த‌ ஆழ்வாருக்கு உண்டான‌ ப‌க்தியான‌து ச்ருங்கார‌மாக‌ப் ப‌ரிண‌மியா நின்ற‌து. இப்ப‌டி உண்டான‌ ஆசை பாஹ்ய‌ ஸ‌ம்ச்லேஷ‌ம் கிடைக்க‌வேண்டும் என்று வ்ருத்தி அடைந்து அது கைகூடாமையாலே விர‌ஹ‌த‌சை உண்டாயிற்று. இத்த‌சையில் எம்பெருமானைக் கிட்டுமாறு செய்வ‌த‌ற்கு ஆசார்ய‌ர்க‌ள் தூத‌ர்க‌ளாய் ப்ரார்த்திக்க‌ப் ப‌டுகிறார்க‌ள். இதுதான் திருவாய்மொழியில் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌ட்டிருக்கும் தூத‌ப்ரேஷ‌ணாதிக‌ளுக்கு உட்பொருள் என்று தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌தாயிற்று. “பாஞ்சாலியிட‌த்தில் உண்டான‌ காத‌லை நிரூபித்த‌ ம‌ஹ‌ரிஷியின் வ‌ர்ண‌ன‌ம் மிக‌வும் க்ராம்ய‌மாயிரா நின்ற‌து. ஆசார்ய‌னோ அதை மிக‌வும் அழ‌காய் இங்கு ஸ‌ங்க்ர‌ஹித்திருப்ப‌தைப் பாரும்” என்று அஸ்ம‌த் ஸ்வாமி ஓர் உருவிலே ஈடுப‌டும்ப‌டியாய் இருந்தது.

ஆகிலும் வேத‌ங்க‌ள் போலே ஸ‌ம்ஸ்க்ருதத்தில் இல்லாமையினால் பாஷையினால் தாழ்ச்சி ஏற்ப‌டாதோ? கான‌ப்ர‌தான‌மாயிருப்ப‌தினால் நிஷேதிக்க‌ப்ப‌ட்ட‌தாயிற்றே? வேத‌ங்க‌ளைப் போல‌த் தத்வார்த்த‌ங்க‌ளைத் தெரிவிக்கும் ஏற்ற‌ம் இத‌ற்கு உண்டோ? என்கிற‌ ச‌ங்கைக‌ளைப் ப‌ரிஹ‌ரித்த‌ருளுகிறார்.

भाषागीति: प्रशस्ता भगवति वचनात् राजवच्चोपचारात्
सा जगस्त्यप्रसूतात्विह परिजगृहे भूमिकाभेदयोग्या |
यत्तत्कृत्यं श्रुतीनां मुनिगणविहितै: सेतिहासै: पुराणै:
तत्रासौ सत्त्वसीम्न: शठमथनमुने: संहिता सार्वभौमी ||

பா₄ஷாகீ₃தி: ப்ரஶஸ்தா ப₄க₃வதி வசநாத் ராஜவச்சோபசாராத்
ஸா ஜக₃ஸ்த்யப்ரஸூதாத்விஹ பரிஜக்₃ரு̆ஹே பூ₄மிகாபே₄த₃யோக்₃யா |
யத்தத்க்ரு̆த்யம் ஶ்ருதீநாம் முநிக₃ணவிஹிதை: ஸேதிஹாஸை: புராணை:
தத்ராஸௌ ஸத்த்வஸீம்ந: ஶட₂மத₂நமுநே: ஸம்ஹிதா ஸார்வபௌ₄மீ ||

பாஷா கீதி: ப்ரசஸ்தா

பாஷையும் ப்ரசஸ்தம், கீதியும் ப்ரசஸ்தம், பாஷா கீதியும் ப்ரசஸ்தம்.

பாஷா ப்ரசஸ்தா

ஸம்ஸ்க்ருதம் எப்படி ருத்திரனுடைய உடுக்கின் சப்தத்திலிருந்து உண்டாகி, பாணிணியினால் வ்யாகரணம் செய்யப்பட்ட ஏற்றம் பெற்றபடியினால் ஸுஷ்டுவான பாஷை என்கிற பிரஸித்தி பெற்றதோ, அதைப்போலவே, தமிழ் பாஷையும் அதே ருத்திரனுடைய உடுக்கிஃ சப்தத்தில் இருந்து உண்டாகி அகஸ்த்ய மஹர்ஷியினால் இலக்கணம் இயக்கம் பட்டிருப்பதினால் ஸுஷ்டு பாஷையாயிருக்கும்.

கீதி: ப்ரசஸ்த:

ஸாமாந்ய கானத்தையும் அதை அப்யஸிக்கிறவர்களையுமிறே சாஸ்திரங்கள் நிஷேதிக்கின்றன. ஸாம வேதம் முழுமையும் கான ப்ரதானமாயிற்றே. பகவத் விஷயமா கானம் ஆசாஸ்த்ரீயமன்று. மாத்ஸ்ய புராணத்தில் பகவத்விஷய கானம் பாடியவரைத் தண்டித்த அரசன் யமலோகம் கொட்னுபோகப்பட்ட வ்ருத்தாந்தம் சொல்லப் பட்டிருக்கிறது. அப்படியே வராக புராணத்தில் கைசீகாதசி மாஹாத்ம்யத்தில் நம்பாடுவான் விருத்தாந்தத்தில் பகவத்கானத்தின் பெருமை சொல்லப் பட்டிருக்கின்றது. எப்பொழுதும் வீணாகானம் செய்துகொண்டிருக்கும் நாரத மஹர்ஷி பாகவதோத்தமர் என்று கொண்டாடப் படுகிறாரல்லவோ! ஆகையினால் பகவத்கானம் நிஷித்தமன்று, ப்ரசஸ்தமே என்றபடி.

பாஷாகீதி: ப்ரசஸ்தா

த்ராமிட ப்ரஹ்மோபநிஷத்திலும், ப்ருஹத் ப்ரஹ்ம ஸம்ஹிதையிலும், பராசர ஸம்ஹிதையிலும், பவிஷ்யத் புராணம் முதலியவைகளிலும் திவ்யப்ரபந்த பாராயணம் பகவத் ஸந்நிதியில் செய்யப்படவேண்டும் என்பதோடு அதற்கு இடம் காலம் எல்லாம் விஸ்தாரமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் பாஷா கீதியும் ப்ரசஸ்தம்.

பகவதி வசநாத்

பகவானிடத்தில் பாஷாகீதி செய்வது ப்ரமாணங்களில் விதிக்கப்பட்டது என்றபடி.

ராஜவச்சோபசாராத்

இது லௌகிக யுக்தி. ராஜாக்களைப் பலர் பல பாஷைகளாலே ஸ்தோத்ரம் செய்கிறாப் போலே ராஜாதிராஜனான பகவானைப் பல பாஷைகளில் ஸ்தோத்ரம் செய்வது உசிதமே என்றபடி.

ஸாச அகஸ்த்ய ப்ரஸூதாது

தமிழ்ப்பாஷையும் அகஸ்த்ய மஹர்ஷியினால் இயற்றப்பட்ட பேரகத்தியம் என்கிற இலக்கணத்தையுடையதாகையாலும்,

ஆனாலும் மஹர்ஷியினால் வ்யாகரணம் செய்யப்படாத மற்ற பாஷைகள் அபப்ரம்சங்க ளாகையினால் அவைகளைக்கொண்டு பகவானை ஸ்தோத்ரிப்பது உசிதமன்று என்பது கருத்து.

இஹ‌ ப‌ரிஜ‌க்ருஹே பூமிகாபேத‌யோக்யா

இந்த‌க் கார‌ண‌ங்க‌ளைக் கொண்டு ந‌ம் பூர்வ‌ர்க‌ள் இந்த‌ ப்ர‌ப‌ன்ன‌ வேஷ‌த்திற்கு இவைக‌ள் மிக‌வும் உசித‌ம் என்று இவ‌ற்றை அங்கீக‌ரித்திருக்கிறார்க‌ள் என்று ஆசார்ய‌ர்க‌ளின் அப்யுப‌க‌மும் காட்ட‌ப்ப‌ட்ட‌து.

ய‌த்தத் க்ருத்ய‌ம் ச்ருதீநாம் இத்யாதி

உத்த‌ரார்த்தத்தில் முனிக‌ண‌ங்க‌ளினால் வ‌குக்க‌ப்ப‌ட்ட‌ இதிஹாஸ‌ புராண‌ங்க‌ளுட‌ன் சேர்ந்த‌ வேத‌ங்க‌ள் எந்தெந்த‌ கார்ய‌ங்க‌ளைச் செய்வ‌த‌ற்காக‌ ஏற்ப‌ட்ட‌வைக‌ளோ, அவ‌ற்றை எல்லாம் ஆழ்வாருடைய‌ ஸார்வ‌பௌமியான‌ ச்ருதியாகிற‌ உப‌நிஷ‌த்துச் செய்யாநிற்கும் என்று ஆழ்வாரின் ப்ர‌ப‌ந்தத்தின் வைல‌க்ஷ‌ண்ய‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று. அங்கு ச்ருதிக‌ளின் க‌ருத்தை அறிய‌ உபப்ரும்ஹ‌ண‌ங்க‌ளான‌ இதிஹாஸ‌ புராண‌ங்க‌ள் தேவையாயிருந்த‌ன‌. இங்கு ஆழ்வார் ஸ்ரீஸூக்தியோ அப்ப‌டிப்ப‌ட்ட‌ உபப்ரும்ஹ‌ண‌ங்க‌ளை எதிர்பாராம‌லே அவ்வ‌ர்த்த‌ங்க‌ளை ச‌ந்தேக‌ம‌ற‌ நிரூபிக்கின்ற‌ன‌ என்கிற‌ விசேஷ‌மும் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.

இங்கு ச்ருதிக‌ளும் சேர்த்துக் கூற‌ப்ப‌ட்டிருப்ப‌தினாலும், “ஸார்வ‌பௌமீ ஸ‌ம்ஹிதா” என்று ஆழ்வாருடைய‌ ப்ர‌ப‌ந்தத்தூ நிர்தேசித்தருளியிருப்ப‌தினாலும் திருவாய்மொழி ஒரு உபப்ரும்ஹ‌ண‌ம‌ன்று, வேத‌ங்க‌ளைப் போல‌வே துல்ய‌மான‌ ப்ர‌மாண‌ம் என்ற‌தாயிற்று.

இந்த‌ ஏற்ற‌த்தையே வேதாந்தாசார்ய‌ரான‌ ஸ்வாமியும், “மாசில் ம‌ன‌ம் தெளி முனிவ‌ர் வ‌குத்ததெல்லாம் ந‌ம் மாலுக‌ந்த‌ ஆசிரிய‌ர் வார்த்தைக்கொவ்வா” என்று உத்கோஷித்துள்ளார்.

ஆகிலும் வேத‌ங்க‌ள் ருக், ய‌ஜுஸ், ஸாம‌, அத‌ர்வ‌ என்று நாலு பாக‌ங்க‌ளாக‌ப் பிரிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வே? அவ‌ற்றின் அர்த்த‌ங்க‌ள் ப்ர‌ஹ்ம‌ ஸூத்திர‌ங்க‌ளில் 4 அத்யாய‌ம் 16 பாத‌ங்க‌ளில் விஸ்தார‌மாக‌ நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வே? அந்த‌ ஏற்ற‌ம் இப்பிர‌ப‌ந்தத்திற்கு எங்ங‌னே உண்டாகும் ? என்கிற‌ ஆக்ஷேப‌த்திற்கு ஸ‌மாதான‌ம் அருளிச் செய்துகொண்டு, கீழ் சுலோக‌த்தில் “ய‌த்தத் க்ருத்ய‌ம் ச்ருதீநாம்” இத்யாதியாக‌ அருளிச் செய்ததை, அதாவ‌து இதிஐஆஸ‌ புராணாதிக‌ளுட‌ன் கூடிய‌ ச்ருதிக‌ள் எந்த‌க் கார்ய‌த்தைச் செய்கின்ற‌ன‌வோ – எந்தெந்த‌ அர்த்த‌ங்க‌ளை ப்ர‌திபாதிக்கின்ற‌ன‌வோ – அவைக‌ளெல்லாம் திருவாய்மொழியிலும் இருக்கின்ற‌ன‌ என்ப‌தையும் உபபாதித்த‌ருளுகிறார் – “ஆதௌ சாரீர‌கார்த்த‌ க்ர‌மம்” என்றார‌ம்பித்து.

Friday, August 4, 2017

நம்மாழ்வார் வைபவம்

எம்பெருமான் தொடக்கமாக ஓராண் வழியாய் அவிச்சின்னமாய்த் தமக்குக் கிடைத்த இந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்குக் கூடஸ்தர் என்றும், குலபதி என்றும், கலியுகத்தின் ஆரம்பத்தில் ப்ரவர்த்தனம் செய்தவர் என்றும், த்ரமிடோபநிஷத் த்ரஷ்டா என்றும், போற்றப்பட்ட நம்மாழ்வாரால் ஓரவஸரத்திலே யோகதசையில் இந்த ஸம்ப்ரதாயத்தை உபதேசிக்கப் பெற்றவரும், தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளலுமான ஸ்ரீமந் நாதமுனிகளால் ப்ரவர்த்தனம் செய்யப்பட்ட சிறப்பையுடையதாய்; ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களை அனுஸந்தானம் செய்ததினால் பெற்ற அனுபவத்தின் பரீவாஹமாக ஸ்தோத்திர ரத்தினம் முதலிய நூல்களை அருளிச் செய்த ஸ்ரீமத் யாமுன முனியினால் பாலூட்டி வளர்க்கப் பட்டதாய், இதத்தாய் எனப்பட்ட பகவத் ராமானுஜ முனியினால் நன்றாக ஸம்ரக்ஷிக்கப்பட்டதாய், அவரால் உபய வேதாந்த ப்ரவர்த்தத்தினாலே முடிசூட்டப்பட்ட திருக்குருகைப்பிரான் பிள்ளான் முதலான ஆசார்யர்களினால் அவரவர்கள் சக்திக்கு அனுகுணமாகப் போஷிக்கப்பட்டு வந்ததாய்த் தமக்குக் கிடைத்த ஸம்ப்ரதாயத்தை அஸுர ப்ரக்ருதிகள் வாயில் அகப்படாமல் காத்து, அதாவது இந்த ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகரான ஆழ்வாருடைய அவதார ப்ரபாவத்தையும், அவருக்கு அர்ச்சா ப்ரதிஷ்டாதிகள் செய்வது சாஸ்த்ரீயம் என்பதையும், அவருடைய ப்ரபந்தம் தமிழ் பாஷையிலிருந்தாலும் கான ப்ரதானமாயிருந்தாலும் பாஷையும் ப்ரசஸ்தமானது, பகவத் விஷயமான கானமும் ப்ரசஸ்தமானது என்கிற காரணத்தால் எம்பெருமானுக்கு மிகவும் உகப்பானது என்பதையும், அவன் முன்னால் கானம் செய்யத்தக்கது என்பதையும், ஆழ்வாருடைய அனுக்ரஹமின்றி எம்பெருமானின் திருத்தாள்களில் தலைவைக்கமுடியாது என்பதையும் நிரூபித்து, ‘அகில தம: கர்சனம் தர்சனம் ந:’ என்றும், ‘ஆபாதசூடமநபாயிநி தர்சநேஸ்மிந் ஆசாஸநீயம்பரம் ந விபக்ஷஹேதோ:’ என்றும் தாமே உத்கோஷிக்கும்படியான ஏற்றத்தை உண்டாக்கி, அது இனித்தானே தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்படியாகச் செய்திருந்த ஸம்ப்ரதாயத்தைக் கடைகயிறாகச் சுற்றி,

இத்தால் இந்த க்ரந்தத்தின் விச்வஸநீயதமத்வம் தெரிவிக்கப் பட்டதாகிறது.

விமத்நந்

கடைந்தருளி என்றபடி.

அந்த க்ஷீராப்தியைக் கடைவதற்கு தேவர்களும் அஸுரர்களும் இருபக்கங்களிலும் நின்று இழுத்தார்கள். இங்கு ஸ்வாமி தேசிகன் ஒருவராகவே கடைந்தமை காட்டப்பட்டதாகிறது.

ஸ்வாதுகாதா லஹரி தச சதீ நிர்கதம் ரத்நஜாதம்

முரமதன குண ஸ்தோம கர்ப்பங்களாய், செவிக்கினிய செஞ்சொற்களாய், தொண்டர்க்கதுதுண்ணச் சொன்ன சொல்மாலைகளாய், நாநா கல்லோல நாதானுபவ ரஸ பரீவாஹங்களாய் இருக்குமவைகளான திருவாய்மொழி ஆயிரம் பாட்டுக்களாகிற அலைகளிலிருந்து பகவத் குணங்களாகிற அநர்க்கங்களான ஆயிரத்தி நூற்றுப் பதினொரு ரத்தினங்கள் வெளிப்பட அவற்றில் முக்கியமான 111 குணங்களை (ரத்தினங்களை)

த்ரமிடோபநிஷத் என்னப்படும் திருவாய்மொழி 1102 பாட்டுக்கள் அடங்கியது. பத்துப் பகவத் குணங்களை ப்ரதிபாதிக்கும் பத்துப் பாட்டுக்களும் பலச்ருதியாக ஒரு பாட்டுமாகப் பதினோரு பாட்டுக்கள் கொண்ட பாகத்தை ஒரு திருவாய்மொழி என்றும், இப்படிப் பத்துத் திருவாய்மொழிகள் கொண்ட 110 பாட்டுக்கள் அடங்கிய பாகத்தை ஒரு பத்து என்றும், இப்படிப் பத்துப் பத்துக்கள் சேர்ந்த 1102 (கேசவன் தமரில் மட்டும் 12 குணங்கள்) பாட்டுக்கள் கொண்டது திருவாய்மொழி என்றும் சொல்லுவர்கள். முதல் திருவாய்மொழியிலுள்ள பத்துப் பாட்டுக்கள் ஒவ்வொன்றிலும் ப்ரதிபாதிதமான நிஸ்ஸீமோத்யத் குணத்வம் முதலிய பத்துக் குணங்களால் பரத்வம் என்கிற ஒரு பெரிய குணம் கூறப்படுகிறது. இப்படியே முதல் பத்து திருவாய்மொழிகளினால் சொல்லப்படுகிற பத்து ப்ரதான குணங்களினால் ஸேவ்யத்வமாகிற ஒரு முக்ய குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது. இப்படிப் பத்துப் பத்துக்களினால் ஏற்பட்ட பத்துக் குணங்களும் சேர்ந்து ஸாரதமமான ஓர் அர்த்தத்தைக் குறிக்கிறது. இதுதான்

ச்ரிய:பதியான எம்பெருமான்

தன்னை அடைவதற்குத் தானே காரணம்

என்பது.

இப்படிக் குணப்ரதானமான ஆயிரம் ரத்தினங்களையும் பகவத் நாம ஸஹஸ்ரமாய் வைத்துக்கொண்டு பகவானை ஆராதிக்கவேண்டும் என்பது ஸ்வாமியின் திருவுள்ளம் என்று தோன்றுகிறது.

க்ஷீராப்தியோ பக்குவம் செய்யப்படாத பாலாகையினால் அதிலிருந்து உண்டான அம்ருதத்திற்கு மொச்சை வாஸனை இருந்திருக்கலாம். ஆழ்வாருடைய ஸ்ரீஸூக்தியோ ‘தேனும் பாலும் அமுதம் ஒத்தே’ என்கிறபடியே ஸ்வாதுதமங்களான வஸ்துக்கள் கலந்தாற்போல் இருக்கிறபடியால் இதிலிருந்து உண்டானவை மிகவும் போக்யமாயிருக்கும் என்பது கைமுதிக ந்யாய ஸித்தம்.

ஆக இப்படித் திருவாய்மொழியிலிருந்து 113 குணங்களாகிற ரத்தினங்களை எடுத்து, அவற்றில் நூறு திருவாய்மொழிகளினால் ப்ரதிபாதிக்கப்பட்டவைகளான நூறு பெரிய ரத்தினங்களையும் ஒவ்வொரு பத்தினால் ஏற்பட்ட முக்ய குணங்களான பத்து ரத்தினங்களையும், ப்ரபந்தம் முழுவதினாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட ஸாரதமமாய் நடுநாயகம் போன்ற ஒரு ரத்தினத்தையும் கொண்டு,

க்ரத்நாதி

ஒரு மாலையாகத் தொடுத்தருள்கிறார்.

ஆழ்வார் ‘கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே என்று நியமித்தருளியதை இப்படி ஆழ்வார் திருவாய்மொழியில் பாட்டுக்கள் தோறும் அனுபவித்த குணங்களையே ரத்தினங்களாக்கி அவற்றை மாலையாக்கி அந்வர்த்தமாக்கிய பாக்யம் ஸ்வாமி தேசிகனுக்கே கிட்டிற்று. இந்த ஹாரத்தை எப்பொழுதும் பாகவதோத்தமர்கள் எவ்வித பயமும் உண்டாகாமல் இருப்பதற்காகத் தரித்துக்கொள்ள வேண்டும் என்று மேலே பத்தாம் சுலோகத்தில் அருளிச் செய்திருப்பதை இங்கனுஸந்திக்கவும். இந்த சுலோகத்தின் பாவத்தை ஒரு சித்திர ரூபமாகவும், இன்னம் பல விசேஷார்த்தங்களுடனும் திருவாய்மொழியாகிற ஆராவமுதக் கடைதல் என்னும் ஒரு புஸ்தகமாக நம்மால் வெளியிடப் பட்டிருக்கிறது.

இப்பிரபந்தத்தில் காமுகர்களின் நூநப்ரேக்ஷண விரஹ க்லேசாதிகள் அனுஸந்திக்கப் பட்டிருப்பது எப்படிப் பொருந்தும்? என்கிற ஸாமாந்ய ஜனங்களுடைய ஆக்ஷேபத்திற்கு ஸமாதானம் அருளிச் செய்துகொண்டு இப்பிரபந்தத்தின் ஏற்றத்தை நிரூபித்தருளுகிறார்.

Tuesday, July 25, 2017

ந‌ம்மாழ்வார் வைப‌வ‌ம்

வேங்கடேச:

வேங்கடேசன் என்கிற திருநாமத்தையுடையவர். இத்தால் வேதாந்தாசார்யர், ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர், கவிதார்க்கிக ஸிம்ஹம் என்று தாம் பிறந்து படைத்த திருநாமங்களில் காட்டிலும் தம் திருத்தகப்பனாரால் சூட்டப்பட்ட திருநாமத்தில் ஸ்வாமி தேசிகனுக்குள்ள கௌரவாதிசயம் தெரிவிக்கப் பட்டதாகிறது. அன்றிக்கே அன்று க்ஷீரஸமுத்திரத்தைக் கடைந்த தண் நீள் புகழ் வேங்கடமாமலை மேவியவனே இன்று திருவேங்கடநாதன் என்னும் குருவாய் அவதரித்துநின்று, அதாவது தன்னை அடைந்த‌வர்களுக்குப் பரகதியைத் தந்தருளுவதற்காகத் திருத்தண்கா என்னும் திவ்ய தேசத்தில் குருவரராய் நின்றருளியவரே திருவாய்மொழியாகிற ஆராவமுதக் கடலைக் கடைந்தருளியவர் என்பதைக் குறிக்கிறதாகவுமாம்.

கல்பாந்தயூந: தல்பம் சடஜிதுபநிஷத் துக்த ஸிந்தும்

ஆழ்வார் ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளினபடியால் சடஜிதுபநிஷத் என்னப்படுகிறது திருவாய்மொழி என்றபடி. ‘பனிக்கடலில் ப‌ள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்து என் மனக்கடலில் வாழவல்ல’என்கிறபடியே அடிக்கடி ப்ரஹ்மாதி தேவதைகள் வந்து தங்கள் துயரங்களை வெளியிடும் இடமான க்ஷீராப்தியில் எம்பெருமான் ஸுகமாக நித்திரை செய்யமுடியாமல் போய்விடுகிறது. இங்கு அப்படியன்று என்பதைக் குறிக்கிறது ‘வாழவல்ல’ என்னும் பதம். இந்தத் திருவாய்மொழி ப்ரளயகாலத்திலும் நாசம் அடையாமல் யுவாவாக நிற்கும் பகவானுக்குத் திருப்பள்ளியாயிருக்கிறபடியினால் ப்ரளய காலத்தில் நாசமடையும் க்ஷீராப்தியினின்று வ்யாவ்ருத்தியைக் காட்டுகிறது ‘கல்பாந்தயூந: தல்பம்’ என்கிற பதம். இத்தால் திருவாய்மொழி நித்யம் என்னப்பட்டதாகிறது. ஒருகாலத்திலும் மாறுதலில்லாத ஸ்ரீவைகுண்டத்திலும் திவ்ய‌ ப்ரபந்தங்கள் அனுஸந்திக்கப் படுகின்றன என்று ஸ்ரீபரமபத ஸோபானத்தில் அருளிச் செய்திருப்பதும் இந்த நித்யத்வத்தையே காட்டாநிற்கும்.

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதித குணருசிம் ஸம்ப்ரதாயம் நேத்ரயந்

தம்முடைய ஜ்ஞானத்தை மத்தாகவும் ப்ரஸித்த குணவிசேஷங்களை யுடைய ஸம்ப்ரதாயத்தைக் கடைகயிறாகவும் கொண்டு

இதன் கருத்து:--

இதுவரையில் வேறு ஒருவருக்கும் கிட்டாத வேதாந்தாசார்யர், ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர், கவிதார்க்கிக ஸிம்ஹம் என்கிற பிருதுகளைப் பெறுவதற்கு மூல காரணமாயிருந்த ஜ்ஞான விசேஷம் குறிப்பிடப்படுகிறது. இப்படிப்பட்ட ஜ்ஞானத்தை மந்த்ரபர்வதமாக நிரூபித்தபடியினால் ஒருவித யுக்தி முதலியவற்றாலும் சலிப்பிக்க முடியாதது என்பது குறிப்பிடப்படுகிறது.

தம்முடைய உத்தமமான ஜ்ஞானமாகிற மந்தரமலையிலே அதாவது:-- ‘இந்த ஸம்ப்ரதாயத்தை விசேஷித்து ப்ரவசனம் செய்யக்கடவாய்’ என்னும் அம்மாளுடைய அனுக்ரஹத்தினால் உண்டானதாய்; கிடாம்பிக்குலபதி அப்புளார் தம் தேமலர் சேவடி சேர்ந்து பணிந்து, அவர் தம்மருளால் நாவலரும் தென்வடமொழி நற்பொருள் பெறுவதற்கு உற்றதாய்; அவரால் உபதேசிக்கப்பட்ட யதிவரனார் மடைப்பள்ளி வந்த மணமான ரஹஸ்யார்த்தங்களைப் பற்றியதாய்; பன்னுகலை நால்வேதப் பொருளையெல்லாம் பரிமுகமாயருளிய பகவானுடைய திவ்ய லாலாம்ருதத்தினால் பெற்ற பதினெட்டு வித்யா ஸ்தானங்களிலே தாம் ப்ரதானமாய் அங்கீகரித்த வேதாந்த வித்யையை விஷயமாகக் கொண்டதாய்; அந்தமில்சீர் அயிந்தை நகர் அமர்ந்த நாதனுடைய முந்தைமறை மொய்யவழி மொழி நீ என்று பெற்ற நியமனத்தினாலும், ஸ்ரீரங்கநாதனால் அநிதர ஸாதாரணமாகக் கொடுக்கப்பட்ட வேதாந்தாசார்யத்வத்தினாலும், ஸ்ரீரங்கநாய்ச்சியாரால் கொடுக்கப்பட்ட ஸர்வதநத்ர ஸ்வதந்த்ரவத்தினாலும், அயிந்தை மாநகரில் முன்னாள் புணராத பரமதப்போர் பூரித்ததின் பலனாக ஸ்ரீதேவநாதனால் சாற்றப்பட்ட கவிதார்க்கிக ஸிம்ஹத்வத்தினாலும் மெய்ப்பிக்கப் பெற்றதாய்; செய்ய தமிழ்மாலைகள் தாம் ஓதித் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளியப் பெற்றதற்கு ஏற்றதுமான ஜ்ஞானமாகிற மந்தர பர்வதத்திலே,

(தொட‌ரும்)

Monday, July 24, 2017

ந‌ம்மாழ்வார் வைப‌வ‌ம்

இப்படிப் பொதுவில் இப்பிரபந்தத்தின் ஏற்றத்தைக் குறிப்பிட்டு மேலே இதின் மேன்மையைத் தாம் அறிந்துகொண்ட ப்ரகாரத்தை ஒரு ச்லோகத்தாலே நிரூபித்தருளுகிறார் – ‘ப்ரஜ்ஞாக்யே ­­--- என்றாரம்பித்து.

प्रज्ञाख्ये मन्थशैले प्रथितगुणरुचिं नेत्रयन् सम्प्रदायं

तत्तल्लब्धिप्रसक्तैरनुपधिविबुधैरर्थितो वे‍‍ङ्कटेश: |

तल्पं कल्पान्तयून: शठजिदुपनिषद्दुग्धसिन्धुं विमथ्नन्

ग्रथ्नाति स्वादुगाथालहरिदशशतीनिर्गतिं रत्नजातम् ||

ப்ரஜ்ஞாக்யே மந்தஶைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்

தத்தல்லப்திப்ரஸக்தைரநுபதிவிபுதைரர்த்திதோ வே‍‍ங்கடேஶ: |

தல்பம் கல்பாந்தயூந: ஶடஜிதுபநிஷத்துக்ஸிந்தும் விமத்நந்

க்ரத்நாதி ஸ்வாதுகாதாலஹரிதஶஶதீநிர்கதிம் ரத்நஜாதம் ||

தத்தல்லப்தி ப்ரஸக்தை: அனுபதிவிபுதை: அர்த்தித:

அந்தந்தப் பலனை அடைவதில் ஈடுபட்டவர்களாய் அந்தப் பகவானைத் தவிர வேறு பலனை நாடாத பாகவதர்களினால் ப்ரார்த்திக்கப்பட்டவரான

ஆழ்வார் தம்முடைய பரம க்ருபையாலே தொண்டர்க்கமுதுண்ண ப்ரந்யக்ஷீகரித்து வெளியிட்ட திருவாய்மொழி என்னும் ப்ரபந்தத்தில் ஓரொரு குணங்களில் விசேஷித்து ஈடுபட்ட பாகவதோத்தமர்களினால் – ஸ்ரீவைகுண்டத்தில் ஸர்வகுணாபேதனான பகவானையே அனுபவிக்கும் ஸூரிகளும் முக்தர்களும் ஒரு திவ்ய குணத்திலோ ஒரு திவ்ய அவய சோபையிலோ ஈடுபட்டு, அந்த அனுபவத்தையே சூழ்ந்திருந்து பல்லாண்டு ஏத்துகிறாப்போலேயும், ;பிணங்கி அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையினான்’ (திருவாய்மொழி 1-6-4) என்கிறபடியே தான் அனுபவித்த குணத்தின் முக்யத்வத்தை நிர்வஹிக்கிறாப் போலேயும் இந்த த்ரமிடோபநிஷத்தில் பகவானுடை\ எல்லாக் குணங்களுமே ப்ரதிபாதிக்கப்பட்டிருந்தபோதிலும் ஒருவருக்கு அவனுடைய ஸௌலப்யத்தில் ஈடுபாடு அதிகமாயும், மற்றொருவருக்கு அவனுடைய திருமேனியின் அனுபவத்தில் ஈடுபாடு அதிகமாயும் இருக்கும். அப்படித் தாங்கள் அனுபவித்த ப்ரகாரத்தை இன்னும் விசேஷமாக அனுபவிப்பதில் ஆசையையுடைய பாகவதர்களினால் அப்படிப்பட்ட அம்சங்களைத் தங்களுக்கு அருளிச் செய்யும்படி ப்ரார்த்திக்கப் பட்டவரான என்றபடி.

விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமையெல்லாம் இம்மண்ணுலகத்திலேயே மகிழ்ந்து அடையும்படியான பாக்கியம் பெற்ற பண்ணமரும் தமிழ்வேதம் அறிந்தவர்களாயும், ப்ரயோஜனாந்தரங்களை அபேக்ஷியாதவர்களாயும் பகவத் பாகவத குணானுபவத்தையே ஸ்வயம் ப்ரயோஜனமாகக் கொண்டவர்களாயும் ஷோடச வர்ணத்தோடு கூடிய ஸ்வர்ணம் போன்ற பாரமை காந்த்யத்தை யுடையவர்களாயும் ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே என்கிறபடியே எம்பெருமான் பேற்றையே தங்கள் பேறாகக் கொண்டவர்களாயுமிருக்கும் பாகவதோத்தமர்களினால் ப்ரார்த்திக்கப்பட்டார் என்றதாயிற்று.

இங்கு உத்தரக்ருத்யாதிகாரத்தில் ‘நித்யம் ப்ரூதே நிசமயதிச ஸ்வாது ஸுவ்யாஹ்ருதாநி என்று அருளிச் செய்திருக்கிறபடியே ப்ரபன்னனுக்குக் கால யாபனம் திவ்ய ப்ரபந்தானுஸந்தானத் தினாலேயாகையினால் அதற்காக அதில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கும் குண விசேஷங்களைத் தங்களுக்குத் தெரிவிக்கும்படி ப்ரார்த்தித்தார்கள் என்று அறியவும்.

முன்பு ஒரு காலத்தில் ஸ்வகார்யப்புலிகளான தேவதைகள் தங்களுக்குச் சாகா மருந்து கிடைப்பதற்காகத் திருப்பாற்கடலைக் கடையும்படி பகவானை வேண்டிக்கொள்ள, அதற்கு இணங்கிய அந்தப் பகவான் மந்தர பர்வதத்தை மத்தாகவும், வாஸுகியைக் கடைகயிறாகவும் கொண்டு, தான் கூர்மரூபியாய் அந்த மந்தர பர்வதத்தைத் தன் முதுகில் தாங்கி, தேவதைகள் ஒரு பக்கமும் அஸுரர்கள் ஒரு பக்கமுமாக நின்று கடையும்பொழுது உண்டாகிய அம்ருதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தானேயாகிலும், அவ்வமுதில் ஆவிர்ப்பவித்த பெண் அமுதாகிய பிராட்டியைத் தன் பேறாகக் கொண்டான் என்பது ப்ரஸித்தம். ஆனால் இங்கு ஸ்வாமி தேசிகன் தன் பேறாக ஒன்றையும் கோரவில்லை என்பது ஏற்றம்.

Sunday, July 23, 2017

நம்மாழ்வார் வைபவம்

1.திருவிருத்தம்.

இது க‌ட்ட‌ளைக் க‌லித்துறை என்கிற‌ வ்ருத்தத்தில் 100 பாட்டுக்க‌ள் அட‌ங்கிய‌தாயிருக்கும். “இவ‌ர் த‌ம் வ்ருத்தாத்த‌ங்க‌ளை முன்னிடுகையாலே திருவிருத்த‌ம் என்று பேர்பெற்ற‌ ப்ர‌ப‌ந்தத்தின்” என்று ஸ்ரீ உப‌கார‌ ஸ‌ங்க்ர‌ஹ‌ம் என்னும் ர‌ஹ‌ஸ்ய‌த்தில் ஸ்ரீ தேசிக‌ன் இத‌ன் திருநாம‌த்திற்குக் கார‌ண‌த்தை நிரூபித்திருக்கிறார். அதாவது விருத்தம் – வ்ருத்தம், முன்னால் நடந்தபடிகளை இதில் வெளியிடுகிறபடியினால் இத்திருநாமம் என்றபடி. அதாவது’பொய்நின்ற ஞானமும்’ என்று தொடங்கி, ’இன்னின்ற நீர்மை’ என்னுமளவாகத் தமக்கு நடந்த படிகளை அருளிச் செய்து, ’உயிரளிப்பான் என்னின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா’ என்று எம்பெருமான் தன்திறத்தில் இதற்குமுன் செய்தருளின உபகார பரம்பரைகளையும் ஸங்க்ரஹேண காட்டியருளி, இனிச் செய்யவேண்டிய உபகாரங்களை ’மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்று ப்ரார்த்தித்திருப்பதினால் இது வ்ருத்த கீர்த்தனமாய் நின்றது என்றதாய்யிற்று. விருத்தம் என்றது விரோதி என்பதைக் குறிக்குமாகையினால்இந்த ஸம்ஸாரம் விரோதி என்கிற ஆகாரம் இதில் நிரூபிக்கப்படுகிறபடியினால் இத்திருநாமம் என்றபடியாகவுமாம். திரு என்கிற விசேஷணம் பூஜ்யோக்தி. இதில் 100 பாட்டுக்களிலும் நூறுவிதங்களான இலக்கியத் துறைகள் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன என்பர்கள். இதிலுள்ள நூறு பாட்டுக்களும் திருவாய்மொழியின் 100 திருவாய்மொழிகளினுடைய அனுபவத்தைக் குறிக்கும் என்றும் சிலர் கூறுவர்கள். இதுமேலே திருவிருத்த ப்ரபந்தத்தில் குறிப்பிடப் படுகிறது. இதுவும் ஆழ்வாருடைய மற்றைய மூன்று ப்ரபந்தங்களும் அந்தாதித்தொடரில் அருளிச் செய்யப்பட்டவைகளாயிருக்கும்.

இதில், ’ஈனச்சொல்லாயினுமாக ..... மற்றெல்லாயவர்க்கும் ஞானப்பிரானையல்லால் இல்லை நான் கண்ட நல்லவே’ என்கிற பாட்டின் அர்த்தத்தை அருளிச் செய்யும்பொழுது அஸ்மத் ஸ்வாமி – ‘இது பாரீர்! பராங்கசாவதாரத்தில் ஸ்வமதத்தை வெளியிட்டபடி. ஸ்ரீகீதோபநிஷதாசார்யன் தன்னுடைய மதத்தை "ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம்" என்று உத்கோஷித்தான். அவனே பின்பு குருவரராய் அவதரித்து இதன் உட்கருத்தை ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் "ஜ்ஞாநீ து மே ஆத்மைவ இதி மதம் – வேதாந்தத்தில் ஏற்பட்ட ஸித்தாந்தமாயிருந்தாலும் இருக்கட்டும், இல்லாமல் போனாலும் போகட்டும், க்ருஷ்ணனுடைய ஸித்தாந்தமிது" என்றல்லவோ வெளியிட்டது. அதைப்போலே ஆழ்வாரும் ஸ்வமதத்தை "மற்றெல்லாயவர்க்கும் ஞானப்பிரானையல்லால் இல்லை நான் கண்டதுவே" என ஸ்ரீபராங்குசா சார்யனான காலத்தில் வெளியிட்டருளினார். ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்யசந்த்ரிகா வாக்யத்தை இங்கும் அனுஷங்கித்துக்கொள்ளவும். அதாவது ‘திருத்தம் பெரியவர்சேரும் துறையில் செறிவிலர்க்கு, வருத்தம் கழிந்த வழி அருள் என்ற நம் மண்மகளார், கருத்தொன்ற ஆதி வராகம் உரைத்த கதி’யன்றோ இது. இந்த சரணாகதியாகிற உபாயம் வேதாந்தங்களில் நிரூபிக்கப் பட்டிருக்கட்டும், நிரூபிக்கப்படாமல் இருக்கட்டும், இதுவே பராங்குசனுடைய மதம் என்றறியவும் என்றபடி. இந்த இரண்டிடங்களுக்கும் இது வேதாந்தங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டதே ஆயினும் உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிற நீ சொல்லுகிறபடி வேதாந்தங்களில் இவ்வர்த்தம் சொல்லப்படவில்லை என்றாலும் பாதகம் இல்லை, ஏனெனில் அந்த வேதாந்தங்களை ப்ரவர்த்தனம் செய்தருளிய பகவானே இதை ப்ரவசனம் செய்தபடியினால் நீ அத்யயனம் செய்யாத வேதாந்தத்தில் இது கூறப்பட்டிருக்கிறது என்றறிக என்று கூறுவதில் கருத்து, இதுவேதான் ஸ்ரீராமாவதாரத்திலும், ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்திலும் உத்கோஷிக்கப்பட்டது.

இதில்,

நானிலம்வாய்க்கொண் நன்னீரறமென்று கோதுகொண்ட

வேனிலம் செல்வன் சுவைத்துமிழ்பாலை கடந்த பொன்னே!

கானிலதோய்ந்து விண்ணோர்தொழும் கண்ணன் வெஃகாவுது, அம்பூந்

தேனிளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே.

என்கிற பாட்டில் திருத்தண்காவில் ஸ்ரீதேசிகன் அவதரிக்கப்போகிறார் என்பதை ஸூசிப்பிக்கிறார் என்று அஸ்மத் ஸ்வாமி நிர்வஹித்தருளும். இப்பாட்டில் தலைமகன் உகந்தருளின நிலங்களைக் காட்டித் தேற்றும் துறை கூறப்படுகிறது. பாலைவனத்தைக் கடந்துவிட்டோம், இதோ அருகில் தோன்றுவது என்பதை "வெஃகாவுது" என்றும், "அம்பூந்தேனிளம்சோலை அப்பாலது" என்று கொஞ்சம் தூரத்தில் தோன்றும் திருத்தண்காவைக் காட்டி, அது "எப்பாலைக்கும் சேமத்ததே" என்றுமல்லவா இப்பாட்டில் அனுஸந்தானம்! திவ்யதேசங்களுக்குள் ஏற்றத்தாழ்வு சொல்ல முடியாதாகையினால் "எப்பாலைக்கும் சேமத்ததே" என்பதற்கு ஒரு விசேஷம் திருத்தண்காவிற்குச் சொல்லவேண்டும். இதுதான் ஆசார்ய ஸார்வபௌமனுடைய திருவவதாரம். வாழித்திருநாமத்தில் திருமலைமால் திருமணியாய் அவதரித்து, செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்துரைத்தாராய் நின்றார். சந்தப்பொழிலாகிய திருத்தண்காவில் அவதரித்தருளி தஞ்சப் பரகதியைத் தந்தருளுவன் என்றார்கள். அதாவது பகவான் அவதரித்து ஹிதோபதேசம் செய்ததையே இவ்வாசார்யன் திவ்ய ப்ரபந்தங்களிலும் உத்கோஷிக்கப்பட்டவை என்று பல க்ரந்தங்களில் அருளிச் செய்தார். அத்துடன் நின்றுவிடாமல் ஆசார்ய ஸமாச்ரயணம் செய்தால்தான் மோக்ஷம் அடையலாம் என்றும் நிரூபித்தபடியினாலே அப்படி ஆச்ரயிப்பவர்கள் எக்காலத்தியவரேயாகிலும் மோக்ஷம் அடைவார்கள் என்று ஸ்தாபித்தபடியினாலே அப்படிப்பட்ட ஆசார்யன் திருவவதரித்தருளிய திருத்தண்கா எப்பாலைக்கும் சேமத்தையுடையதாயிற்று என்றபடி.

Friday, July 21, 2017

ஸ்வாமி தேசிகன் காட்டிய நம்மாழ்வார் வைபவம்

சேட்லூர் ஸ்ரீ நரசிம்மாசாரியாரின் அத்யந்த சிஷ்யராக விளங்கிய கோமடம் ஸ்ரீ எஸ்.எஸ். அய்யங்கார் ஸ்வாமி ஸ்வாமி தேசிகனின் திருவுள்ளக் கருத்தை முற்றிலும் அனுஸரித்து சந்தமிகு தமிழ்மறையாம் நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களை நாலு தொகுதியாக 1962ல் திருவஹீந்த்ரபுரத்தில் தேசிக சம்ப்ரதாயஸ்தர்களில் தலைசிறந்து விளங்கிய அறிஞர்கள் முன்னிலையில் வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு தொகுதிக்கும் முன்னுரையாக அவர் எழுதியிருப்பவை பொன்னே போல் பாதுகாத்து ரசிக்க வேண்டியவை. அவற்றில் மூன்றாம் பாகமான திருவாய்மொழிக்கு முன்னுரையாக நம்மாழ்வார் வைபவத்தை ஸ்வாமி தேசிகனின் த்ரமிடோபநிஷத் ஸாரத்தைக் கொண்டு அவர் விளக்கியுள்ளது மிக அருமையான ஒன்று. இன்றுமுதல் அந்த நம்மாழ்வார் வைபவத்தைத் தட்டச்சிட்டு இங்கு பகிர ஆரம்பிக்கிறேன். கூடுமான மட்டும் தினமும் அந்த 75 பக்க வைபவம் சிறிது சிறிதாக இங்கு வளரும்.

|| ஸ்ரீ: ||
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
நம்மாழ்வார் வைபவம்.

1. திருவவதார க்ரமம்.

       இவ்வாழ்வார்  ஆழ்வார் திருநகரி  எனப்படும் திருக்குருகூரில் கலி முதல் வருஷமான ப்ரமாதி ௵ வைகாசி ௴ பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில் ஸ்ரீ ஸேநேசருடைய அம்சமாய்க் காரி என்பவருக்குத் திருக்குமார்ராகத் திருவவதரித்து அருளினார். இவர் வேளாளர் குலத்தில் திருவவதரித்தருளியவர்.

2. திவ்ய சரித்திர விசேஷங்கள்.

        முன் ஜென்மத்தில் செய்த கர்மம் முதலியவற்றை மறக்கும்படி செய்கிற சடவாயுவைத் தம்முடைய திருவவதார காலத்திலேயே நிராகரித்துவிட்ட பெருமையுடையவர் இவர். ஆனாலும் லோகத்திலுள்ள மற்றைக் குழந்தைகள் போல வெளித் தோற்றத்தில் காணப்பட்டாலும் தாயின் பால் முதலிய ஆஹாரம் ஒன்றும் உட்கொள்ளாமலேயே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டு வந்தார். பேசவேண்டிய பருவத்தில் பேசவே இல்லை. இதைக்கண்ட இவருடைய பெற்றோர்கள் இவரை அந்த திவ்ய தேசத்து எம்பெருமான் திருமுன்பே கொண்டுபோய் விட்டு, குழந்தை பேசும்படி அனுக்ரஹம் செய்தருளும்படி ப்ரார்த்தித்தார்கள். ஆனால் அக்குழந்தை எம்பெருமான் ஸந்நிதி ப்ராகாரத்தின் வழியாக ப்ரதக்ஷிணமாகச் சென்று, அங்கிருந்த ஒரு திருப்புளி மரத்தின் கீழே படுத்துக்கொண்டு அங்கேயே யோகத்தில் ஆழ்ந்திருந்தார். மதுரகவியாழ்வார் இவரை ஆச்ரயிக்க, அவரைக் கடாக்ஷித்தருளி, மீண்டும் யோகத்தில் நம்மாழ்வார் ஈடுபட்டிருந்தார். தம்முடைய பகவதனுபவத்தின் போக்குவீடாக இவரனுஸந்தித்தருளிய பாட்டுக்களை அவர் (மதுரகவியாழ்வார்) பட்டோலை கொண்டருளினார். இவர் திருநாட்டை அலங்கரித்தருளிய பிறகு, ஸ்ரீமதுரகவிகள் இவருடைய அர்ச்சா விக்ரஹத்தை ப்ரதிஷ்டை செய்தருளி வருஷந்தோறும் உத்ஸவாதிகளை நடத்திவந்தார். இதுவிஷயமான மற்ற அம்சங்களை குருபரம்பரா ப்ரபவாதிகளில் காணலாம்.

3. இவர் வெளியிட்டருளிய ப்ரபந்தங்கள்
1.  திருவிருத்தம்          பாட்டுக்கள்        100
2. திருவாசிரியம்   பாட்டுக்கள்                 7
3. பெரிய திருவந்தாதி    பாட்டுக்கள        87
4. திருவாய்மொழி பாட்டுக்கள்              1102
       ஆக மொத்தம் பாட்டுக்கள்           1296

4. தத்துவ ஹித புருஷார்த்த நிரூபண ப்ரகாரம்

   திருவாய்மொழியின் முதலடியிலேயே 'உயர்வற உயர்நலமுடையவன்' என்றாரம்பித்து ஸமஸ்த கல்யாண குணகண பரிபூர்ணனான பகவான்தான் பரதத்துவம் என்றும், அவனுடைய 'துயரறு சுடரடி தொழுகை'யே உபாயம் என்றும், அப்படி 'எழுகையே' புருஷார்த்தம் என்றும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

5. ப்ரபந்தார்த்த ஸங்க்ரஹம்.

நான்கு ப்ரபந்தங்களினுடைய பொது ஸங்க்ரஹம்.
        ஆழ்வாருடைய நான்கு ப்ரபந்தங்களிலும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும் அர்த்த விசேஷங்கள் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் 126-ம் சுலோகத்தில் ஆசார்யனால் அனுஸந்திக்கப் பட்டிருக்கின்றன. இதன் கருத்து:-

        தம்முடைய முதல் ப்ரபந்தமாகிய திருவிருத்தத்தில் ஸம்ஸாரத்தினுடைய பொறுக்க முடியாமையை அருளிச் செய்தார். இரண்டாவது ப்ரபந்தமாகிய திருவாசிரியத்தில் பகவானுடைய ஸ்வரூப ஸ்வபாவாதிகளை ப்ரத்யக்ஷத்தில் போலே கண்டு அனுபவித்தார். மூன்றாவது ப்ரபந்தமான பெரிய திருவந்தாதியில் பகவானை விசேஷித்து அனுபவிக்கும் விஷயத்தில் தமக்குண்டாயிருக்கும் மிகவும் அதிகமான த்வரையை நிரூபித்தார். நான்காவது ப்ரபந்தமாகிய திருவாய்மொழியில் பரம புருஷனை உள்ளபடியே ஆழ்வார் தாம் தம்முடைய திருவுள்ளத்தாலே அனுபவித்து, அவ்வனுபவஜனிதமான நிரவதிக ப்ரீதியாலே அவனை அனுபவித்தபடியே பேசி, தம்முடைய விடாயெல்லாம் தீரும்படி பகவான் வந்து சூழ, நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தகராய் அவனைப் பெற்றபடியை அருளிச் செய்தார்என்பது.

        பகவானை அனுபவிக்கப்புகும் பாகவதர்களுக்கு உண்டாகும் க்ரமம் இதுவே என்பது பகவத் பக்தர்களின் முன்னணியில் நிற்கும் ஸ்ரீபரதாழ்வான் விஷயத்திலும் கூறப் பட்டிருக்கிறது. எங்ஙனே என்னில்

        அயோத்திக்குத் திரும்பி வந்ததும் ஸ்ரீராமன் பிராட்டியுடனும் இளையபெருமாளுடனும் காட்டுக்கு எழுந்தருளினதையும், சக்கரவர்த்தி இறந்துவிட்டதையும், தம்முடைய தாயார் தனக்காக ராஜ்யத்தை வாங்கி வைத்திருக்கிறாள் என்பதையும் கேட்டவுடன் ஸ்ரீபரதாழ்வானுக்கு உண்டாகிய துக்கத்தால் பகவானைவிட்டுப் பிரிந்து அயோத்தியில் இருப்பது அதிதுஸ்ஸஹமாயிருந்த நிலைமை திருவிருத்தத்தில் ஆழ்வாருடைய நிலைமைக்கு ஸமமாக இருக்கும்.

        பகவானை நேரில் ஸேவித்து அவனை ராஜ்யத்திற்கு எழுந்தருளும்படி ப்ரார்த்தித்துத் தம்முடைய துக்கத்தைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று அவர் பாரித்த நிலைமை திருவாசிரியத்தில் குறிப்பிடப்பட்ட நிலைமையாகும்.  

        இந்த ஆசை வ்ருத்தி அடைந்து ஸ்ரீராமனை உடனே சென்று ஸேவிக்கவேண்டுமென்று பாரித்தபடி பெரிய திருவந்தாதியில் ஆழ்வாருக்கு உண்டாகிய நிலைமையாயிருக்கும்.

        அப்படியே சித்திரகூடம் சென்று ஸ்ரீராமனை ஸேவித்துத் தம்முடைய பாரதந்த்ரியத்தை விண்ணப்பம் செய்து, அவனை விட்டுப் பிரிந்து இருக்க முடியாமையைப் பலபடிகளாலும் வற்புறுத்தியபோதிலும் பகவான் தன்னுடைய ப்ரதிஜ்ஞையை மாற்றமுடியாதென விளக்க, அவனுடைய திருவுள்ளப்படி மீண்டும் ராஜ்ய பரிபாலனம் செய்தருளியதை ஒத்திருக்கும் திருவாய்மொழியில் ஏற்பட்ட நிலைமை. ஆழ்வார் ப்ரபத்தி செய்து பகவானை அடைய த்வரித்தருளிய போதிலும் இவரைக்கொண்டு ஸம்ஸாரி சேதனர்களைத் திருத்த வேண்டுமென்கிற பகவானுடைய திருவுள்ளத்தை அனுஸரித்திறே அவர் இந்த ஸம்ஸாரத்தில் இருக்க இசைந்து அருளியது!

        இஸ்ஸம்ஸாரத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு பகவானை அடைவதற்கு மார்க்கங்களான பரபக்தி, பரஜ்ஞாநம், பரமபக்தி, ப்ரபத்தி என்கிற நான்கு படிகளும் முறையே நான்கு ப்ரபந்தங்களிலும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும் என்றும் கூறலாம்.

        சிலர் இந்த நான்கு ப்ரபந்தங்களும் முறையே ரிக், யஜுஸ், ஸாம அதர்வண வேதார்த்தங்களை ப்ரதிபாதிக்கின்றன என்பர்கள். இந்த ப்ரபந்தங்கள் ஒவ்வொன்றும் ஓரொரு வேத்த்தின் அர்த்தத்தை மட்டும் ப்ரதிபாதிக்கின்றன என்பது வேதங்கள் ஒவ்வொன்றுமே அறியப்படவேண்டிய எல்லா அர்த்தங்களையும் சொல்லுகின்றன என்றும், அவைகள் எல்லாம் பகவானே அடையத் தகுந்தவன் என்கிற ப்ரதானார்த்தத்தைக் கூறுகின்றன என்றுமுள்ள ப்ரஸித்தியுடன் முரண்படுமாகையாலும், அப்படிப் பூர்வர்கள் ஒருவரும் வ்யாக்யானத்தில் உபபாதிக்கவில்லை யாகையாலும், மேலே நிரூபிக்கப்படப் போகிறபடியே சில எண்ணிக்கைகளின் ஸாம்யத்தைக்கொண்டு திருவாய்மொழி நான்கு வேதங்களுக்கு ஸமமாயிருக்கும் என்கிறாப் போலே நான்கு என்ற எண்ணிக்கை வேதங்களுக்கும் ஆழ்வார் ப்ரபந்தங்களுக்கும் ஸமமா யிருப்பதைக்கொண்டு இப்படி நிரூபிக்கப்பட்டிருக்கிறது எனக் கொள்ளுவது உசிதமெனத் தோன்றுகிறது.  

தொடரும்.  

Monday, April 3, 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 5

களம் 5

ஐந்தாங் களம்

----XXX----

இடம்: நந்திக்கிராமத்தில் புதிதாய் ஏற்படுத்தப்பெற்ற அரசிருக்கை மண்டபம்.

காலம்: காலை.

பாத்திரங்கள்; பரதர், சத்ருக்நர், சுமந்திரர் முதலிய மந்திரிகள், வசிஷ்டர் முதலிய முனிவர்கள், குடிஜனங்கள், வாயில் காப்போர் முதலியோர்.

[நந்திக்கிராமத்தில் அரசிருக்கை மண்டபத்தில் சிம்மாசனமிட்டு, அச்சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் பரதர் தலையிற் பாதுகைகளைத் தாங்கி நிற்கிறார். இடது புறத்தில் சத்ருக்நர், கையிற் சாமரை பிடித்து வீசிக் கொண்டிருக்கிறார். மற்றையோர் தத்தம் ஆசனங்களில் அமர்ந்திருக்கின்றனர். ]

பரதர்:-- (சபையிலுள்ளோர்களைப் பார்த்து,) ஓ, தவசிரேஷ்டர்களே! மதிமந்திரிமார்களே! குடிஜனங்களே!

தீயூட்டித் தாமுண்ணுஞ் செய்தவத்தோ ரானினங்கள்

நோயூட்டு காய மிகழ்ந்தியற்று நோன்பினோர்

வேயூட்டு தோளார் விருத்தர் சிறு பாலர்தமைத்

தாயூட்டிப் போற்றுதல் போற்றார் வேந்தன் காக்குமால்.

என்றபடி, விதிப்படி வேள்வியாற்றிவரும் வேதியர், மாதவர், நோய்க்கிடமாகிய உடலை நொய்தென வெறுத்து இறைவனடிக்கன்பு பூண்டு நோன்பியற்றும் துறவிகள், யாக்கை தளர்வுற்ற முதியோர், அபலைகளான ஸ்திரீகள், குழந்தைகள், பசுக்கள் முதலாயினோரைத் தாய்போலக் காத்து வருதல் வேந்தன் கடமை. அக்கடமையை மேற்கொண்டு கடல் புடை சூழ்ந்த இந்நிலவுலகத்தை, சூரியகுலத்து வந்த என் முன்னோர்கள் நெடுங்காலமாக நெறிமுறை தவறாது அரசாண்டு வந்தனர். வாழையடி வாழையாகக் குலமுந் தழைத்து வளர்ந்தோங்கி வந்தது. என் தந்தையாகிய தசரத சக்கரவர்த்தியும் அவ்வாறே சத்தியந்தவறாது நெடுங்காலம் செங்கோல் செலுத்தி வந்தனரென்பதை நீங்கள் அறிவீர்கள்.

யார் செய்த பாவமோ, இந்நிலஞ்செய்த நலக்கேடோ, என் வினை செய்த தீப்பயனோ, இக்காலத்தில் என் தந்தை மாய முணராது வஞ்சம் அறியாது சத்தியத்திற் கட்டுண்டு தலைமகனைத் தவிர்த்து ஒன்றுக்கும் பற்றாத என்னை இவ்வரசுரிமைக்கு ஆக்கினர். அவர் இட்ட கட்டளைப்படி சீமந்த புத்திரராகிய ஸ்ரீராமர் காட்டிற்குப் போனார். நான் காட்டிற்குச் சென்று அவரை இரந்து வேண்டியும் அவர் அரசாட்சிக்கு இசைந்திலர். பதினான்கு வருஷமும் என்னையே ஆளும்படி ஆணை தந்தனர். அவ்வாணையை மறுத்தற்கஞ்சியும், வஞ்சனையால் வந்த்தும் மரபல்லாததுமான அவ்வரசுரிமையைத் தாங்கி நடத்த என் மனம் இசைந்திலது. சர்வ உரிமையும் சகல குணங்களும் வாய்ந்த புருஷோத்தமராகிய அவர், தர்மபத்தினியுடனும், தம்பியுடனும் பரதேசியாகிக் காட்டில் காய்கனிகளையுண்டு காலம் கழித்துத் திரிய, பாதகனாகிய நான் சகலவித போக சல்லாபங்களுடன் சிம்மாசனத்திலிருந்து நாடாள்வதா? யானும் அவர் திரும்பி வருமளவும் அவரைப்போலவே தவக்கோலம் கொண்டு காலங்கழிப்பேன். அவரிடமிருந்து பெற்று வந்திருக்கும் அவருடைய திவ்விய திருப்பாதுகைகளை இந்தச் சிம்மாசனத்தில் ஏற்றி, பாதுகைகளின் திருவாணை தாங்கி எவ்விதக் கடமைகளையும் நிறைவேற்றத் தீர்மானித்திருக்கிறேன். நீங்களும் அரசருக்குச் செய்யவேண்டிய எல்லா மரியாதைகளையும் இவைகளுக்கே செய்து உங்கள் கடமைகளை நிறைவேற்றும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நான் இனி இராகவர் திரும்பி வருமளவும் அயோத்தியில் அடியெடுத்து வைக்கமாட்டேன். அங்கு வசிஷ்ட பகவான் முன்னிலையில் மந்திரிகளால் நடத்தப்படும் நியாய வழக்கு விசாரணைகளும் இந்த திவ்விய பாதுகைகளின் தீர்மானத்திற்கு வரும்.

[பாதுகைகளைச் சிம்மாசனத்தில் வைக்கிறார். சத்ருக்நர் அவைகளுக்கு வெண்கொற்றக்குடை பிடிக்கிறார். வசிஷ்டர் முதலிய பிராமணச் சிரேஷ்டர்கள் ஆசீர்வாத மந்திரங்கள் கூறிப் பாதுகைகளின்மீது அக்ஷதை யிறைக்கின்றனர். வாத்யங்கள் முழங்குகின்றன. பட்டாபிஷேகம் நிறைவேறுகிறது.]

இராம நாடகம்

பாதுகா பட்டாபிஷேகம்

நிறைவுற்றது.

Sunday, April 2, 2017

திருப்புல்லாணி துர்முகி பங்குனி ப்ரும்மோத்ஸவம்

திருப்புல்லாணி துர்முகி பங்குனி ப்ரும்மோத்ஸவத்தின் முதல் நாளில் சில காட்சிகள்.

DSC06968DSC06969DSC06970DSC06971DSC06972DSC06973DSC06974DSC06976DSC06977DSC06978DSC06979DSC06980DSC06981DSC06982DSC06983DSC06984DSC06985DSC06986DSC06987DSC06988DSC06989DSC06990DSC06991DSC06992DSC06993DSC06994DSC06995DSC06996DSC06997DSC06998DSC06999DSC07000DSC07001DSC07002DSC07003DSC07004DSC07005DSC07006DSC07007DSC07008DSC07009DSC07010DSC07011DSC07012DSC07013DSC07014DSC07015DSC07016DSC07017DSC07019DSC07020DSC07021DSC07022DSC07023DSC07024DSC07025