சனி, 4 டிசம்பர், 2010

திருத்தாள் மாலை

தலைவனா நந்தன் மாளிகை யெங்குந்
       தவழ்ந் தெழிலூட்டிய திருத்தாள்
முலையினூ டுயிருண் டரக்கியை வீழ
      முடித்துமீ தாடிய திருத்தாள்
தலைநெறித் தோடித் தங்கிய கபட
      சகடிறத் தாக்கிய திருத்தாள்
நிலையிலா வெளியேன் நெஞ்சிலு நிலைத்து
     நின்றருள் பரப்பிய திருத்தாள்.                                   .11.

தயிர்கடை யொலிக்குத் தாளமிட்டது போற்
     சதிருட னாடிய திருத்தாள்
உயருர லுருட்டி நிறுத்திமீ தமுத
    முண்ணுவா னுயர்ந்தெழு திருத்தாள்
நயமுற மடுவிற் காளியன் முடிமேல்
    நடனமுற் றருளிய திருத்தாள்
மயலுறு மெனது மனதையு முகந்து
     மன்னிட மகிழ்ந்தருள் திருத்தாள்.                           .12.

வலம்புரி யாழிக் குறிகண்மண் படிய
      வனவிருந் தையிலுலாந் திருத்தாள்
சிலம்புகள் செய்யுஞ் சிஞ்சித மார்ப்பத்
     தெருவெலாந் திரிந்தருள் திருத்தாள்
நிலம்பெறு நித்ய போக்யமா யிலகும்
      நிதியென நிலவிடுந் திருத்தாள்
அலம்பெறு மடியே னகத்தையுந்
      தனதோ ராசனமாக்கிய திருத்தாள்.                    .13.

சுருதிபின் தொடரக் குழலிசை சுவைப்பச்
    சுரபிகள் பின்தொடர் திருத்தாள்
அரிவையர் துகிலை யபகரித் தாங்கோர்
    குருந்திடை யமர்ந்தருள் திருத்தாள்
இருமையு மெவர்க்கு மிணையிலாக் கதியா
      யிலகிடு மிண்டைநாண் மலர்த்தாள்
கருவினை கனிந்த கடையனே னகத்துங்
       கருணையோ டமர்ந்தருள் திருத்தாள்.              .14.

தன்னையா தரித்த தருமனாதி யர்க்காய்த்
       தூதுசென் றருளிய திருத்தாள்
சொன்னவா றிளையோன் தூய சிந்தனையினாற்
      சுருக்குறக் கட்டுணுந் திருத்தாள்.
மன்னவன் வகுத்த மல்ல ரீட்டத்தை
      மட்குழி யொத்திய திருத்தாள்
என்னையா தரிப்பா யென்னுளந் தங்கி
     யிலங்கிய பங்கயத் திருத்தாள்.                                .15.

              ……………………………….

இங்கு நிறைந்து இனி நம் மனங்களில்
                                திருத்தாள் நடமிடும்.                

************************************

13வது பாட்டின் ஈற்றடியில் 7 சீர்களுக்கு பதிலாக 6 சீர்களே இருப்பது அச்சுப் பிழையா அல்லது அதற்கு எதுவும் இலக்கணம் உண்டா என அடியேனுக்குத் தெரியாததால் நூலிலுள்ள படியே தட்டச்சிட்டிருக்கிறேன். அன்பில் முகுந்த மோகனரங்கனார்கள் சரி செய்வார்களாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக