சனி, 11 டிசம்பர், 2010

இன்று பிறந்தவன்

 இந்த நாளில் அன்று  பிறந்த இவனுக்கு இதைக் காட்டிலும் எப்படி ஒரு அஞ்சலி செலுத்திட முடியும்? மின்தமிழில் எல்லோரையும் கிறங்க வைக்கும் எங்கள் மோகனரங்கனார் கவிஞர் தலைவனுக்குச் செய்கிற பாராட்டு  இது.

கவிதையின் கடைசியில் குறிப்பிடப் படுகிற திருலோக சீதாராம் பாரதியின் துணைவியாரைக் கடைசி வரையில் தன் தாயாகவே ஆதரித்து வந்தவர். நிருச்சியிலிருந்து வெளியான "சிவாஜி" பத்திரிகை ஆசிரியர். முன்பின் தெரியாத நிலையில் 1971ல் அவரை அடியேன் சந்தித்தபோது அவருடைய பிள்ளைகளில் ஒருவராகவே கருதி அன்பு மழை பொழிந்தவர்.
இனிக் கவிதையை ரசியுங்கள்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் தவத்தில்
போயின பின்பு புதுத்தமிழ் பூத்தது
தோய்ந்த வானிருளில் துலங்கிய சோதி
வேய்ந்தது கவிதை விரிகதிர் உலகில்
பாய்ந்திட எழுந்தது பாரதிப் பரிதி
காலக் கருவின் சுமையில் அயர்ந்த
தமிழின் களிறு ஈன்றதோர் கன்று நன்று
கன்னித்தமிழ் காக்க காலம் கரு உயிர்க்க
கர்பத் திருவாகிக் கவியின் உருவாகி
சொர்க்கக் கதவாகித் திறந்ததும்
சுப்பையா வருகை 
தெய்வத்தின் கொல்லையிலே
கவிதையைக் கட்டிவைத்து
ஒட்டப் பால் கறந்து
உருவார அபிஷேகம்
திட்டக் கணக்காய் நடந்துவந்த திருநாளில்
கவிதையின் முற்றத்தில்
கடவுளரின் கண்பொத்தி விளையாட்டில்
ஞானரதமேறித் தான்
கடவுளர் உலகையெல்லாம்
வேடிக்கை பார்த்த விறல்மிடுக்கும்
தமிழ்க்கவியின் மாயங்கொல்?
தண்டமிழின் மந்திரங்கொல்? 
செய்யுளில் செங்கல் ஜல்லி
கொத்தனார் வித்தை யெல்லாம்
கச்சினில் கொங்கை மாதர்
கலாப காமப் பித்தையெல்லாம்
வீரமே சோரம் போக
வாகையோ சோகையாகி
வித்தையும் வெளிறிப் போக
விரசமே சரசமாக
கவுண்டதிருச் சபைக் கணக்கின்
சங்கடங்கள் சமிக்ஞை காட்டும்
சங்கரன் கதையும் என்ன? 
கூறுகெட்டு குடிகெட்டுக்
குமைச்சலில் கொள்ளையிட்டு
வேறுபட்ட விதிகளுக்குள்
வேர்விடவே சூழ்ச்சிகளை
வித்தகமாய் விதைத்து வைத்து
கொல்லையில் திருடிவந்து
வாசலில் விற்கின்ற விற்பன்னத்தை,
தொலைந்துவிட்டாய் எனக்கூறி
நம்மையே நமக்குத் தேடிக்
கொண்டுவந்து தந்திடுமோர்
பம்மாத்தைப் பொன்வால் ஒட்டவைத்து
பரியை நரியாக்கிப் பரிகாசச் சுவையாக்கி
பார்வைக்கு விட்ட பக்குவத்தை
பாரத ஞானத்தின் துணிவெனவோ?
பாரதி வேகத்தின் பண்பெனவோ? 
வேதத்தில் வேள்வியுண்டு
வேள்வியில் பலனுமுண்டு
பலனில் சொர்க்கமுண்டு
சொர்க்கத்தில் மீட்சியுண்டு
மீண்டிடில் பிறவியுண்டு
பிறந்திடில் மரணமுண்டு
அதுவரை வேள்வியுண்டு
வேள்விக்குயர் வேதமுண்டு
இதைத்தான் நாம் கேட்டதுண்டு 
ஆனால் 
வேதத்தில் கவிதையுண்டு
அதை விளக்கவோர் வழியுமுண்டு
என்றுரைத்த கவியுண்டென்றால்
வேறுயார் இங்கே உண்டு? 
காலப்பொன் சொல் பெய்து
குலையாத கற்பனையை
நிலையான நனவுலகை
நாட்டவல்ல நெடுங்கனவை
தமிழ் என்னும் காயகல்பத்
தாய்நிதியாய் நமக்களித்து
அமிழ்துண்ணச் சென்றிருக்கும்
அமரகவி பாரதியில்
ஐக்கியமாய் நின்றவன்தன்
அருமை பெருமை எல்லாம்
அறிந்துரைத்தான்
அகலிடம் எங்கெங்கும்
ஆன்றதமிழ் பாரதியின்
இசைபாடி நின்ற செம்மல்
தோன்றாத் துணையாகத்
தொல்லுலகக் கவிதைத் தொடுவானில்
நின்ற இளம்பரிதி நிலவும் குமிணகையில்
நிலைத்த திருலோக சீதாராம் திறம்பாடி
மலைத்த மனமடக்கி
மாகவிஞன் பிறந்த காலை
என்பங்காய் ஒரு கவிதை
இந்நாளில் மாகவிக்கு
நேர்ந்துவைத்தேன் நேருரைப்பேன்
நயமறியப் பெற்றிடுவீர்
நயக்குமுள முற்றிடுவீர்
நன்மைக்கும் உண்டே ஓர் அச்சு. 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக