Saturday, January 2, 2010

கதவு திறவாய் ! நப்பின்னாய்!

18. இராமாநுஜர் உகந்த பாசுரம்
இராமாநுஜர் துறவி ஆனதால் பல இல்லங்களில் பிட்சை கொண்டு பசியை ஆற்றிக்கொள்வார். பெரியோர் பிட்சைக்குப் போகும்போது வடமொழிச் சுலோகங்களையோ, தமிழ்ப் பாசுரங்களையோ சொல்லிக் கொண்டு போவது வழக்கம். இராமாநுஜர் திருப்பாவைப் பாசுரங்களை ஓதிக்கொண்டு பிட்சைக்காக எழுந்தருளுவதுண்டு.

ஒருநாள் பெரிய நம்பி திருமாளிகையை நோக்கிப் போய், திருப்பாவையைப் பாடிக்கொண்டு வாசலில் நின்றார். அப்போது மாளிகையின் கதவு திறந்திருக்கவில்லை. இராமாநுஜர் பாசுரம் பாடிக் கொண்டே இருந்தார். அது கேட்டுப் பெரிய நம்பியின் அருமைத் திருமகளான அத்துழாய் உள்ளேயிருந்து வந்து கதவைத் திறந்தாள்.

அவளைக் கண்ட உடனே மூர்ச்சித்து விழுந்தார் இராமாநுஜர். அத்துழாய் உள்ளே ஓடிப் போய்த் தந்தையிடம், "ஐயா, கதவைத் திறந்து சென்றேன். ஜீயர் என்னைக் கண்டவுடன் காலில் விழுந்தார்! நான் பயந்து உடனே விரைந்து உள்ளே வந்து விட்டேன்" என்று செய்தி சொன்னாள். ஜீயர் என்று இராமாநுஜரைக் குறிப்பது வழக்கம்.

பெரிய நம்பியின் உள்ளத்திலே ஒரு கலக்கமும் ஏற்படவில்லை. அவர் அகமகிழ்ந்து தம் அருமை மகள் முகம் நோக்கி, "ஓஹோ! 'உந்து மதகளிறு' ஓதப் பெற்றிருக்க வேணும்" என்றார். 'உந்து மதகளிறு' என்றதும், 'உந்து மதகளிற்றன்' என்று தொடங்கும் திருப்பாவைப் பாசுரத்தைத்தான் குறிப்பிடுகிறார் தந்தையார் என்பதை உடனே தெரிந்து கொண்டாள் அத்துழாய்.

'எனக்கு நீங்கள் சொல்வது விளங்கவில்லையே; அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு அப்பா?' என்று கேட்டாள். பெரிய நம்பி சிரித்துக் கொண்டே 'உனக்குத்தான் பாசுரம் முழுவதும் வருமே' என்றார். அத்துழாய் பதில் சொல்லாமல் திகைத்து நின்றாள்; சற்று ஆலோசனையில் ஆழ்ந்தாள். பெரிய நம்பியோ,

உந்து மதகளிற்றன்
    ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன்
   மருமகளே! நப்பின்னாய்!

என்று மெல்லப் பாடத் தொடங்கினார்.

பளிச்சென்று இருட்டைக் கிழித்துக்கொண்டு மின்னல் எழுந்ததுபோல் உண்மை புலனாகிவிட்டது அத்துழாயின் உள்ளத்திற்குள்ளே. 'அப்பா! எனக்குத்தான் என்ன பேதமை! கண்ணை மறைத்திருந்த திரை விலகிவிட்டது. ஜீயருடைய பக்தி உள்ளத்தைக் கண்ணாடியில் காண்பதுபோல் காண்கிறேன்' என்று சொன்னாள்.

பிறகு பெரிய நம்பியும் அத்துழாயும் இராமாநுஜரின் அரும் பெருங் குணாதிசயங்களைக் குறித்தும் பேசத் தொடங்கினார்கள். அத்துழாய் தந்தையை நோக்கி,

செந்தா மரைக்கையால்

   சீரார் வளைஒலிப்ப

வந்து திறவாய்
   மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

என்று 'உந்து மதகளிற்றன்' பாசுரத்தின் இறுதிப் பகுதியைப் பாடிக் காட்டினாள். 'இதை அவர் பாடியதுதான் தாமதம், நான் பளிச்சென்று வளைகுலுங்கப் போய்க் கதவைத் திறந்துவிட்டேன்' என்று கூறி முடித்தாள்.

அதே சமயம் தம் குருவாகிய பெரிய நம்பியை வணங்குவதற்காக வந்து காத்திருந்த இராமாநுஜர் 'நப்பின்னையைச் சேவிக்கப் பெற்றேன்' என்று சொல்லிக் கொண்டே வந்து பெரிய நம்பி திருவடி வணங்கி நின்றார்.

__________________________________________________________________________________________________

வாசல் காப்பானையும் நந்தகோபனையும் பலதேவனையும் பற்றுவது போதுமா? கன்னிகை யின்றிக் கண்ணாலம் கோடிப்பதுண்டா? ஆய்க்குலப் பெண்கள் நப்பின்னையைத் துயிலுணர்த்துகிறார்கள் இந்தப் பாசுரத்திலும். பெருமானைப் பிராட்டி முன்னாகப் பற்றவேண்டுமல்லவா – தாயைக் கொண்டு தந்தையை அறியும் பிள்ளைபோல? கிருஷ்ணாவதாரத்தில் பிராட்டியின் நிலையில் இருப்பவள் நப்பின்னை. அவள் அருளால் அவன்தாள் வணங்கவேண்டுமென்று நப்பின்னையை உணர்த்துகிறார்கள் இவர்கள்.

கண்டிப்புள்ள தந்தையைக் கண்டு குழந்தை அஞ்சும்போது, 'அஞ்சவேண்டாம், அப்பாதானே!' என்று அணைத்துக் கொண்டு அபயம் அளிக்கிறது தாயின் கை. அந்த அன்புக் கையின் அணைப்பு ஒரு குழந்தைக்குப் பூவைத் தொடுவது போலத் தோன்றக் கூடுமல்லவா? எனவே தங்களுக்கு அபயமளிக்கும் நப்பின்னைப் பிராட்டியின் கையைச் 'செந்தாமரைக் கை' என்கிறார்கள். இவள் கை பார்த்திருக்கிறார்களல்லவா இப்பெண்கள்?

'அம்மா! உன் கையில் வளைகுலுங்க, அந்த ஒலியைக் கேட்டு எங்கள் நெஞ்சு குளிரவேணும்' என்கிறார்கள். தாயின் கையைப் போல் கையிலுள்ள வளைகளும் அவற்றின் ஓசையும் குழந்தைக்கு இனிமையானவை தாம். 'உன் வளைக் கையால் நீயே எழுந்து வந்து கதவைத் திறக்கவேணும்' என்கிறார்கள்.

'இந்த வளைகளின் ஓசை கேட்டு இவர்களுக்கும் திருப்தி ஏற்படும்; கண்ணனும் கண் விழித்துக் கொள்வான்' என்று எதிர்பார்க்கிறார்கள். 'கத்துகிறார்களே, கதவைத் திறப்போம்' என்று திறவாமல், திறந்த உள்ளத்துடன் மகிழ்ந்து திறக்கவேணும் என்கிறார்கள்.கைவளை குலுங்க வந்து கதவைத் திறஉந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயில்இனங்கள் கூவினகாண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்விளக்கம்

இந்தப் பாட்டில் கண்ணன் தேவியான நப்பின்னைப் பிராட்டியைத் துயில் எழுப்புகிறார்கள். பிராட்டியை முன்னிட்டு – அதாவது புருஷாகாரமாகக் கொண்டு – பகவானைச் சரணமடைய வேண்டும் என்பது வைணவர் கொள்கை. அம்மையின் அருள் பெற்று அப்பனைச் சரணடைய வேண்டும் என்று சிவநேசர்களும் சொல்வதுண்டு. எனவே, நப்பின்னைப் பிராட்டியைத் துயில் எழுப்பி இவளை முன்னிட்டுக் கண்ணனைச் சரணமடைய விரும்புகிறார்கள் இப் பெண்கள்.

அத்தை மகனை மைத்துனன் என்று கூறுவதுண்டு. மாமன் மகளைக் கலியாணம் செய்து கொள்ளும் முறைமை ஒன்று இருக்கிறதல்லவா? அந்த முறைமை பற்றி நப்பின்னைக்குக் கண்ணன் மைத்துனன் ஆவதாகக் கூறுகிறார்கள். தந்தைக்கு மகள் என்ற பெருமையைக் காட்டிலும் மாமனாருக்கு மருமகள் என்பதையே பெருமையாகக் கொள்ளும் நப்பின்னை, பிறந்தகத்தைக் காட்டிலும் புகுந்த அகத்தையே மதிக்கிறாள் என்பது குறிப்பு.

இது இராமாநுஜர் உகந்த பாசுரம்.