ஞாயிறு, 27 டிசம்பர், 2009

கண்ணழகி ! கள்ளம் தவிர்ந்து கலந்து கொள்!

13. கள்ளந் தவிர்ந்து கலந்து கொள்வாய்

இவளைக் கண்ணழகி என்று ஆய்ப்பாடி முழுவதும் அறிந்திருந்தது. மான்போல் மருண்டு நோக்குவாள்; தாமரைபோல் மலர விழித்தும் பார்ப்பாள். இந்தக் கண்ணழகைக் குறிப்பிட்டுப் பெண்கள் போதுஅரிக் கண்ணினாய்! என்று இவளைக் கூப்பிடுகிறார்கள். பொழுது புலர்ந்தது; ‘புள்ளும் சிலம்பின காண்!’ என்கிறார்கள்.

புள்ளும் சிலம்பினகாண் போதுஅரிக் கண்ணினாய்! என்று இவர்கள் கூவி அழைத்தும் உள்ளே இருப்பவள் வெளியே வந்து சேரவில்லை. ‘என் கண்ணழகின் சிறப்பை நினைத்துக் கண்ணனே நான் இருக்கும் இடம் நோக்கி வந்து சேரவேண்டியதுதான்!’ என்று கருதியவள்போல் சும்மா இருக்கிறாள். கண்ணனுடைய குணாதிசயங்களையும் திவ்ய சரித்திரங்களையும் தியானித்தபடியே படுத்திருக்கிறாள்.

இவர்கள் கண்ணனுடைய வீர சரித்திரம் ஒன்றை முதல் முதல் நினைப்பூட்டுகிறார்கள். பறவையின் உருவம் கொண்டு வந்த அசுரனுடைய வாயைப் பிளந்தவன் கண்ணன் என்பதை நினைப்பூட்டி, புள்ளின் வாய் கீண்டானை என்று பாடத் தொடங்குகிறார்கள்.

பொல்லா அரக்கனை அநாயாசமாகக் கிள்ளிக் களைந்த இராம வீரத்தையும் நினைவூட்டிப் பாடுகிறார்கள். இத்தகைய வீர சரித்திரங்களைப் பாடிக்கொண்டு பெண்கள் எல்லாரும் நோன்புக்கு என்று ஏற்பட்டிருக்கும் சங்கேத ஸ்தலமாகிய பாவைக்களம் போய்ச் சேர்ந்தார்கள் என்று செய்தி சொல்லுகிறார்கள்.

‘நாங்கள் போய் எழுப்பிக்கொண்டு போகவேண்டிய சிறுமியராக இருப்பவர்களும் தாமே துயில் உணர்ந்து போகும்போது, நீ இப்படிக் கிடந்து உறங்குவது மிகவும் அழகாயிருக்கிறது!’ என்ற குறிப்புடன், பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் என்கிறார்கள்.

இதற்கு உள்ளே இருப்பவள், ‘அவர்கள் சிறு பெண்கள் ஆனதால் காலம் அறியாமல் போயிருக்கக் கூடும்’ என்று சொல்லக்கூடுமல்லவா? எனவே இவர்கள் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்று உறுதி கூறுகிறார்கள்.

வெள்ளி எழுதல் – அதாவது சுக்கிர உதயம் – பொழுது விடிந்த தற்கு அறிகுறி. ‘சுக்கிர உதயம் ஆயிற்று’ என்று மட்டும் இவர்கள் சொன்னால் போதும். ஆனால் கோதை வாழ்ந்த காலத்தில் வெள்ளி எழுந்தவுடன் வியாழனது அஸ்தமனமும் நிகழ்ந்தது என்றும் , அதையும் சேர்த்து இவர்கள் கூறுகிறார்கள் – அதாவது, ஆண்டாள் இவர்கள் வாயிலாகக் கூறுகிறாள் – என்றும் ஆராய்ச்சிக்கார்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.

உள்ளே இருப்பவள் இதற்கும் கற்பனையாக ஒரு சமாதானம் சொல்வதாகக் கருதலாம். ‘பொழுது விடிந்ததென்று கருதிக் காலமறியாமலே பாவைக்களம் புகுந்த சிறுமியர் போல் நீங்களும் போக வேணுமென்ற ஆத்திரத்தால் சுக்கிரன் எழுந்ததாகக் கற்பனை செய்து பேசுகிறீர்கள் ‘ என்று உள்ளே இருப்பவள் சொல்லக் கூடுமல்லவா?

அதற்கும் சமாதானமாக பேசுகிறார்கள் இப்பெண்கள். இந்த நிலையில்தான் ‘புள்ளும் சிலம்பின காண், போதுஅரிக் கண்ணினாய்!’ என்கிறார்கள். ஏற்கனவே ஒரு பெண்ணை எழுப்பும்போது சொன்ன அடையாளம் தான் இது. அங்கே கூட்டிலிருந்து புள் சிலம்பியதைக் குறிப்பிட்டதாகவும் இங்கே இரை தேடப்போன இடங்களிலெல்லாம் சிதறி ஒலிப்பதைக் குறிப்பிடுவதாகவும் ஊகித்துக் கொள்ளலாம்.

இவ்வளவு சொல்லியும் கண்ணழகி எழுந்து வந்தபாடில்லை. எனவே இவர்கள் நீராட்டத்தை வருணித்து இவளை வசீகரிக்கப் பார்க்கிறார்கள்.

குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
  பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ?
என்று கூறுவதைக் கேளுங்கள்.

‘உடம்பு ஜில் என்று குளிர்ந்து போகும்படி குளத்தில் படிந்து ஆனந்தமாக நீராடுவதை விட்டு இப்படிப் படுக்கையில் கிடந்து வீண்பொழுது போக்குகிறாயோ? இது என்ன ஆச்சரியம்!’ என்கிறார்கள். ‘இது நன்னாள்’ என்பதையும் நினைவூட்டுகிறார்கள். இந்த நல்ல நாளில் கண்ணழகி கள்ளம் தவிர்ந்து தங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

இவள் கள்ளம்தான் என்ன? கிருஷ்ண சரிதத்தை நினைத்துக் கொண்டு ‘அவன்தான் என் கண்ணழகிற்கு ஆசைப்பட்டு நான் இருக்கும் இடம் நோக்கி வரட்டும்’ என்று தனியே கிடக்கிறாளே, அதைத்தான் இவர்கள் கள்ளம் என்று குறிப்பிடுகிறார்கள். தனியே பக்தி யனுபவம் பண்ணித் திருப்தி அடைவதைக் காட்டிலும் பிறருடன் கூடி நெஞ்சு குளிர இறைவனுடைய அன்பு நெறியைப் பற்றி நிற்பதே மேலானது என்பது குறிப்பு.

கண்ணழகியும் கள்ளந் தவிர்ந்து இவர்களுடன் கலந்து கொண்டாள் எனலாம்.

கண்ணழகியின் கள்ளத்தனம்

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதுஅரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்!நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்

கிருஷ்ணனுடைய வீர சரித்திரத்தையும் இராமனுடைய வீர சரித்திரத்தையும் பாடிக்கொண்டு வருகிறவர்கள் ஒப்பற்ற கண்ணழகு வாய்ந்த தங்கள் தோழி ஒருத்தியை எழுப்புகிறார்கள். கள்ளத்தனத்தை விட்டுத் தங்களுடன் கலந்து கொள்ளவேண்டுமென்று சொல்லுகிறார்கள். இவளுடைய கள்ளத்தனம்தான் எது? கண்ணனையும் அவனுடைய கல்யாண குணங்களையும் நினைத்துக் கொண்டிருப்பதுதான் இவள் கள்ளம்! ஏன்? எப்படி? பக்தியைப் பொதுவுடமை ஆக்கிக் கொள்ளாமல் தனியே கிடந்து தியானம் செய்து கொண்டிருப்பதுதான் கள்ளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக