புதன், 30 டிசம்பர், 2009

இளங்கிளியே ! இன்னம் உறங்குதியோ!

திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தைப் பற்றி இங்கு அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறேன். 27-7-1941ல் அச்சங்கம் வெளியிட்ட "ஆண்டாள் மாலை" என்ற புத்தகம் கிடைத்தது. அதில் நான் படித்து ரசித்த ஆண்டாள் கல்யாணம் இங்கு pdf வடிவில் நீங்களும் அனுபவிக்க! திருப்பாவையும் தொடர்கிறது.



andalkalyanam

15. இளங்கிளியே ! எழுந்திரு

எல்லாப் பெண்களும் திரண்டு வந்துதான் தன்னை எழுப்ப வேண்டும், அந்தக் கூட்டத்தைத் தான் கண்ணாரக் காண வேண்டும் என்று துணிந்து படுக்கையை விட்டு எழுந்திராமல் கிடக்கிறாள் ஒருத்தி. இவள் வீட்டு வாசலில் பெண்கள் திரண்டு வந்து நிற்கிறார்கள்.
முந்திய பாட்டில் 'பங்கயக் கண்ணானைப் பாடு ஏலோர் எம்பாவாய்' என்ற கடைசி அடியை உச்சஸ்வரத்தில் பெண்கள் பாடியது இந்த வீட்டுக்காரியின் காதில் விழுந்தது. அசல் அகத்துப் பெண்ணை எழுப்பிய அந்த வாக்கின் இனிமையில் ஈடுபடுகிறாள் இவள். ஈடுபட்டு இவளும், பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் என்று தனக்குத்தானே பாடத் தொடங்கி விட்டாள். இனிமையாகப் பாடுகிறாள். இந்தக் குரலின் இனிமை வாசலில் நிற்பவர்களை வசீகரிக்கிறது. அதனால் அவர்கள் இவளை 'இளங்கிளியே!' என்று கூப்பிடுகிறார்கள்.
அசல் அகத்துப் பெண்ணை 'நாணாதாய்! நாவுடையாய்!' என்றெல்லாம் பரிகசித்தவர்கள் தன்னை 'இளங்கிளியே!' என்று அழைத்ததைக் கேட்டதும், 'இதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்' என்று எண்ணி இவள் சும்மா இருக்கிறாள்: பதில் ஒன்றும் சொல்லவில்லை. 'இவர்கள் கூறுவதைப் புகழ்ச்சியாக எப்படிக் கருதுவது? அந்த அசலகத்துப் பெண்ணையும் உறக்கத்தில் வென்று விட்டவள் போலல்லவா நான் இன்னும் எழுந்து வெளியே போகாமல் இருக்கிறேன்? அப்படி இருந்தும் என்னை இகழ்வதற்குப் பதிலாக புகழ்ச்சி தோன்றக் கூப்பிடுகிறார்களே, இந்தப் புகழ்ச்சியின் உட்பொருள் இகழ்ச்சியாகத்தான் இருக்கவேண்டும்! இந்த நிலையில் மௌனமே தக்க பதில்!' என்றெல்லாம் எண்ணமிட்டவண்ணம் வாய் பேசாமல் கிடக்கிறாள்.
அவர்களோ 'இன்னம் உறங்குதியோ?' என்று கேட்கிறார்கள் ஆச்சரியமாக. 'இப்போதுதானே பாடிக் கொண்டிருந்தாள் இந்தக் கிளிமொழியாள்? "இளங்கிளியே" என்று நாங்கள் கூப்பிட்டதும் உறக்கம் வந்து விடுமா, என்ன!' என்பது அதிசயத்திற்குக் காரணம். எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? என்று பெண்கள் கேட்டதும் கிளிமொழியாள் பதில் சொல்லுகிறாள்.
'இதோ எழுந்து வருகிறேன்; அதற்குள்ளே ஏன் சிலுசிலு வென்று கூச்சலிடுகிறீர்கள்?' என்பது இவள் பதில். இதைக் கேட்டதும் இக்கிளி மொழியாள் மீதும் இவர்களுக்கு ஆத்திரம் வந்துவிடுகிறது. வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும் என்கிறார்கள். இவளுடைய கட்டுரைத் திறனை – அதாவது கட்டிச் சொல்லும் பேச்சுத் திறனை – ஏற்கனவே தாங்கள் மெச்சியதாகவும், இப்போதும் மெச்சுவதாகவும் சொல்லுகிறார்கள். 'உன் வாயை முன்னமும் அறிவோம்; இப்போதும் அறிகிறோம்' என்கிறார்கள்.
இதற்குக் கிளிமொழியாள், 'நீங்கள் சாமர்த்தியசாலிகள்!' என்று சுடச்சுடப் பதில் சொல்லத் தொடங்கி விட்டாள். எனினும் பளிச்சென்று தன் வாயை அடக்கிக்கொண்டு, ' நானே சாமர்த்தியசாலி என்று நீங்கள் சொன்னபடியேதான் இருக்கட்டும்!' என்று பணிந்து பதில் சொல்லுகிறாள். வல்லீர்கள் நீங்களே! நானேதான் ஆயிடுக! என்ற பதிலில் முரண்பட்ட இருவகை உணர்ச்சிகள் தொனிக்கக் காண்கிறோம்.
வெளியே இருப்பவர்கள் இவளது விநய வார்த்தையைக் கேட்டதும் தாங்களும் பணிந்து பேசத் தொடங்கி, ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுஉடையை? என்று கேட்கிறார்கள். 'விரைவாக நீ எழுந்து வா; உனக்கு என்று தனியாக என்ன வேறுபாடு இருக்கிறது?' என்று சமாதானமாகவே பேசுவதைக் காண்கிறோம்.
இப்போது கிளி மொழியாள் மேலும் பணிவாகப் பேசுகிறாள். ;எனக்கு என்ன, கொம்பா முளைத்திருக்கிறது அசாதாரணமாக? அதிசயம் ஒன்றும் உங்களுக்கு இல்லாதது என்னிடம் இல்லைதான்; தோழிகளே! உங்களோடு கூடுவதைக் காட்டிலும் எனக்கென்று ஒரு தனிக் காரியமும் உண்டோ? சரி, பெண்கள் எல்லாரும் வந்து விட்டார்களா?' என்கிறாள். எல்லாரும் தன் வீட்டு வாசலில் வந்து கூடி நிற்கும் அந்தக் கூட்டத்தின் காட்சியைக் காணவேண்டும், கண்ணாரக் காணவேண்டும் என்பதுதானே இவள் மனப்பான்மை? எனவே, எல்லாரும் போந்தாரோ? என்று முடிவாக ஒரு கேள்வி போடுகிறாள்.
அதற்கு இவர்கள் 'போந்தார், போந்து எண்ணிக்கொள்' என்று பதில் சொல்லுகிறார்கள். பெண்கள் எல்லாரும் உன்னைக் காண்பதற்காக உன் வீட்டு வாசலில் வந்து காத்துக் கிடக்கிறார்களே!' என்று சொல்லிவிட்டு, 'உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கொள்' என்றும் சொல்லுகிறார்கள்.
முடிவில் எல்லாரும் கண்ணனது பிரதாபத்தைப் பாடத் தொடங்குகிறார்கள் ஒருமுகமாக.

குரல் காட்டி உறங்குதியோ!

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்!
வல்லீர்கள் நீங்களே! நானேதான் ஆயிடுக!
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுஉடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றுஅழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

விளக்கம்
'இளங்கிளியே!' என்று இவளை அழைப்பதற்குக் காரணம் இவளுடைய பேச்சினிமை என்பர். கிளிப்பிள்ளை போல் இனிய மழலை ததும்ப இவள் அவர்களிடம் உரையாடுவதுண்டு எனக் கருதலாம். உண்மையில் இவள் உறங்கிக் கொண்டிருக்கவில்லை. தன் குரலின் இனிமை தோன்ற மெல்லப் பாடிக் கொண்டிருந்தாள் என்றும், இந்தக் குரலின் இனிமையை அனுபவித்தே வெளியில் இருப்பவர்கள் 'இளங்கிளியே!' என அழைத்தனரென்றும் கருதலாம்.

இப்பாட்டில் ரசமான சம்பாஷணையைக் கேட்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக