Monday, January 4, 2010

பாவை 19ம் 20ம்

19. எளிய பாஷை, அரிய பொருள்

நப்பின்னையை முற்பட எழுந்திருக்கவொட்டாமல் கண்ணன் தடுக்கக் கூடும் என்று கருதும் பெண்கள் கண்ணனை மீண்டும் எழுப்ப முயல்கிறார்கள். நப்பின்னையோ கண்ணனிடம், 'கதவைத் திறக்கவேண்டாம்' என்று மட்டும் சொல்லவில்லையாம்; 'வாய் திறவாதே' என்றும் சொல்லுகிறாளாம். எனவே, கண்ணன் வாய் திறவாமல் இருக்கிறான் என்று கருதும் பெண்கள், கண்ணனை எழுப்புமாறு மீண்டும் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பப் பார்க்கிறார்கள்.

இப்படி மீண்டும் நப்பின்னைப் பிராட்டியை உணர்த்துவது கண்ணபிரானை உணர்த்துவதற்கேதான். பிராட்டியும் பெருமாளும் அன்பர்களுக்குக் கருணை புரிவதில் போட்டியிடுகிறார்கள் என்பது கருத்து. 'இந்த ஆய்ச்சிகள் மிகவும் நொந்தனர் போலும்; இதோ போய்க் கதவைத் திறப்போம்; அல்லது திறப்பதாக ஒரு வார்த்தை சொல்லுவோம்' என்ற முயற்சியில் நப்பின்னைப் பிராட்டியும் கண்ணபிரானும் போட்டியிடுவதாகக் குறிப்பிடுவது அம்மையப்பனாகிய இறைவன் நமக்கு இரங்கி அருள் புரியும் அதிசய வைபவத்தை வீட்டிலும் நாட்டிலுமுள்ள இல்லற அனுபவத்தைக்கொண்டு சுட்டிக் காட்ட முயல்வதுதான்.

'குத்துவிளக்குஎரிய' என்று தொடங்கும் இப்பாட்டில் லௌகிக அனுபவமும் சமய தத்துவமும் கலந்து பரிமளிக்கின்றன.

குத்து விளக்குஎரிய
    கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச
    சயனத்தின் மேல்ஏறி
கொத்தலர் பூங்குழல்
    நப்பின்னை .........

என்று வாசித்துக்கொண்டு வரும்போது 'இதில் என்ன தத்துவத்தைக் காணப் போகிறோம்?' என்றுதான் தோன்றும். ஆனால் 'அம்மையப்பன்' (லட்சுமி நாராயணமூர்த்தி) என்ற கொள்கையின் அடிப்படைத் தத்துவம் இனிது புலனாகின்றது; சிந்திக்கச் சிந்திக்கத் தெவிட்டாத இனிமையுடன் அந்தத் தத்துவம் இங்கே புலனாகக் காண்கிறோம்.

'மலர் மார்பா! வாய் திறவாய்' என்ற சாதாரண வாக்கிலேதான் எத்தகைய பேருண்மையைக் காண்கிறோம்! 'வாய் திறந்து, தத்துவத்தை --- இயற்கையின் மர்மமாகிய தனிப் பேருண்மையை – ஒரு வார்த்தை சொல்லி உணர்த்துவார் இல்லையே' என்று அந்தக் குரலை நாடி எத்தனை நல்லறிஞர்கள் அலைந்திருக்கிறார்கள்; வாய் திறந்து பேசவல்ல அந்த மெய்க் குரலைக் குருமூலமாகவும் கேட்டிருக்கிறார்கள். காந்தியடிகளைப் போல் இறைவன் அந்தராத்மாவாக இருந்து பேசுவதாகவும் உணர்ந்திருக்கிறார்கள்.

பிராட்டி அழகால் இறைவனை வசீகரித்து மக்களிடம் கருணை புரியுமாறு தூண்டுகிறாள். தூண்டிய வண்ணமாய் இருக்கிறாள் என்று கூறுவதுண்டு. இத்தகைய பிராட்டியின் பேரழகை இந்தப் பாசுரம் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை என்றும் மைத்தடங் கண்ணினாய் என்றும் குறிப்பிடுகிறது.

பிராட்டி கூந்தல் அழகுள்ளவள்; அந்தக் கூந்தலை மலர்கள் சூட்டி மேலும் அழகு செய்து கொண்டிருக்கிறாள். பிராட்டி மைத்தடங் கண்ணினாள் --- அதாவது, மை தீட்டிய விசாலமான கண்களை உடையவள். ஸ்தூலமாகப் பார்க்கும்போது இதுதான் இங்கே பொருள். ஆனால் பிராட்டி நிலையிலுள்ள சூட்சுமமான தத்துவத்தை வேறு எப்படித்தான் உணர்த்திவிட முடியும்?

சாதாரணப் பெண் ஒருத்தியின் இயற்கை அழகையும் செயற்கை அழகையும் நினைவூட்டித்தான் 'பிராட்டி' என்ற தத்துவத்தின் அழகையும் சுட்டிக் காட்டவேண்டியிருக்கிறது. இயற்கையாகவே கூந்தலழகி, கண்ணழகி, தன்னைச் செயற்கையாகவும் (கூந்தலில் மலர் சூட்டிக்கொண்டும், கண்களில் மை தீட்டிக்கொண்டும்) அழகு செய்துகொள்வதைச் சாதாரணமாய் நாடெங்கும் பார்க்கிறோம். அன்னையாகிய மகாலட்சுமியும் – உலக அன்னையல்லவா --- தன்னை இயற்கையாகவும் செயற்கையாகவும் அழகு செய்துகொண்டு அப்பனை மோகிப்பித்து மக்களுக்கு அருள் புரிய முற்படுகிறாளாம்.

இவர்களிடையே உள்ள காதல்தான் படைப்பிற்கு அடிப்படை என்று துணிந்து கூறுகிறது இந்து சமயம். இக்கொள்கை வைணவத்திற்கும் சைவத்திற்கும் பொதுவானது.

மைத்தடங் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயில்எழ ஒட்டாய்காண்!
எத்தனை ஏலும் பிரிவுஆற்ற கில்லாயால்
என்பதில் பெருமானுக்கும் பிராட்டிக்கும் உள்ள தெய்விகக் காதல் சாதாரண லௌகிக பாஷையில் சுட்டிக் காட்டப்படுகிறது.

'தத்துவம் அன்று தகவு' என்று ஒரு சூத்திரம் செய்து காட்டுவது போல் ஆய்ச்சியர் பேசி முடிக்கிறார்கள். உலக அன்னைக்கு உள்ள கிருபையே அவள் சுபாவம், தகவு. தந்தையின் அருளுக்கு மக்களை இலக்காக்குவது இவள் சொரூபம் அல்லது தத்துவம். இந்தப் பேருண்மை, சாதாரண லௌகிக அனுபவம்போல் அமைந்திருக்கும் இப்பாட்டின் தத்துவ சிகரம்.


கதவு திறக்காவிட்டாலும் வாய் திறக்கலாகாதா?


குத்து விளக்குஎரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயில்எழ ஒட்டாய்காண்!
எத்தனை ஏலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

விளக்கம்

'தத்துவம் அன்று தகவு' என்பதற்கு, 'தத்துவம் அன்று, தகவு அன்று' என்றும் பொருள் கொள்ளலாம். 'இப்படிச் செய்வது உன் தத்துவத்திற்கும் – அதாவது உன் சொரூபத்திற்கும் --- ஒத்ததில்லை; உன் தகவு அல்லது சுபாவத்திற்கும் ஒத்ததில்லை' என்பது உத்தமமான பொருள். வாயைத் திறந்து எங்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தையாவது சொல்லவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.20. இப்போதே அருள் புரிய வேண்டும்


முந்திய பாட்டிலே, ‘தத்துவம் அன்று தகவு’ என்ற சூத்திரம் ஒரு தத்துவ சிகரத்தைச் சுட்டிக் காட்டியபோதிலும், ஆயர் மங்கையர் தங்கள் வருத்தம் தோன்றச் சொன்ன வார்த்தைகள்தானே. எனவே நப்பின்னை பேசாமல் கிடக்கிறாளாம். ஆய்ச்சியர் வருந்தச் சொன்ன வார்த்தையால் நப்பின்னைக்கு வருத்தமோ கோபமோ ஏற்பட்டதாகக் கருதவேண்டியதில்லை. பெருமானுடைய திருவுள்ளம் அறிந்து ஆய்ச்சியர் குறைகளை விண்ணப்பித்துக்கொள்வோம் என்று நினைத்துப் பேசாமலே இருந்தாள் எனக் கருதலாம்.

ஆய்ச்சியரோ, ‘பிராட்டிக்கும் சீற்றமோ?’ என்று மயங்குகிறார்கள். கண்ணபிரானும் கோபமாய் இருக்கக் கூடுமோ என்று கலங்குகிறார்கள். இந்த நிலையை ‘அதிசங்கை’ என்று கூறுவதுண்டு.

இந்த நிலையில், கண்ணனையாவது எழுப்பிப் பார்ப்போம் என்று நினைக்கிறார்கள். கண்ணனுடைய அருமை பெருமைகளை விரிவாகப் பேசிப் பார்ப்போம் எனத் துணிகிறார்கள். முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! என்று கண்ணனை முதல் முதல் கூவி அழைக்கிறார்கள். தேவர்களின் நடுக்கத்தைத் தீர்ப்பவன் அடியவர்களின் கலக்கத்தைத் தீர்க்க முற்படவேண்டாமா என்பது குறிப்பு.

இப்படிப் புகழ்ந்தபின், ‘செப்பம் உடையாய்’ என்று அழைக்கிறார்கள். முதலில் கண்ணனைக் கலி(மிடுக்கன்) என்று சொன்னவர்கள், ‘நேர்மையுள்ளவன்’ என்று இப்போது கூறுகிறார்கள். மிடுக்கு நேர்மையான வழியில் போகாவிட்டால் துடுக்கு. இங்கே ‘திறல் உடையாய்’ என்று மறுபடியும் கூறி அடியவரைக் காக்க வல்லமை உள்ளவன் கண்ணன் என்பதை வற்புறுத்துகிறார்கள்.

அண்பர்களுக்கு இன்பம் கொடுக்கும் வல்லமை உள்ளவன் பகைவர்களுக்கு வெப்பம் கொடுப்பவனாகவும் இருக்கிறானாம். ‘செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா!’ என்கிறார்கள். கடவுளுக்கும் பகைவர் உண்டா? அடியவர்களின் பகைவர்களே ஆண்டவனுக்குப் பகைவர். அடியவரோ ஒருவரையும் தங்கள் பகைவர் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. ‘உலகைக் கெடுக்கிறார்களே ஆண்டவன் பகைவர்கள்’ என்றுதான் எண்ணுகிறார்கள். குளிர்ந்த அருளையுடைய கடவுள் இத்தகைய பகைவர்களுக்கு வெப்பம் கொடுக்கிறானாம். உண்மையில், வெப்பம் இங்கே இல்லை. பகைவனது பகைமை உள்ளத்திலிருந்து புகைந்தெழும் நெருப்பேதான்!

எனவே ‘வெப்பம் கொடுக்கும் விமலா’ என்று அழைக்கிறார்கள். பகைவர்கள் வெப்பத்தை அடைவதால் அன்புக் கடவுளுக்கு ஒரு குற்றமும் இல்லையாம்.இத்தகைய கண்ணன் துயில் எழுந்து அருள் புரிய வேணும் என்கிறார்கள். விமலா! துயில்எழாய் என்று கள்ளங் கவடற்ற நெஞ்சிலிருந்து வருகிறது வாக்கு.

இப்படியெல்லாம் புகழ்ந்து கண்ணனைத் துயில் எழுப்பியும் ‘அவன் வாய்திறந்து ஒரு பேச்சுப் பேசவும் வல்லமையற்றுக் கிடக்கிறானே,இதுஎன்ன அதிசயம்!’ என்று எண்ணமிடுகிறார்கள் ஆய்ச்சியர். ‘நப்பின்னையை நாம் வெறுத்துக் கூறவே அதற்காகக் கண்ணன் ஒருகால் ரோஷம் கொண்டு சும்மாக் கிடக்கிறானோ?’ என்று ஐயுறுகின்றனர். இந்த நிலையில், ‘பிராட்டியைப் புகழ்ந்து கோபம் தணிவித்து அவள் மூலமாகவே நம் இஷ்டத்தைப் பெறுவோம்’ என்று தீர்மானிக்கிறார்கள்.

இந்தத் தீர்மானத்தின் விளைவாகப் பிராட்டியைத் துயில் எழுப்புவது இப்பாசுரத்தின் பிற்பகுதியாக அமைந்திருக்கிறது. பிராட்டியின் பேரழகை வருணிக்கிறார்கள். பெருமானிடம் ‘சிபாரிசு’ செய்யக் கூடிய இவள் வாயைச் ‘செவ்வாய்’ (சிவந்த வாய்) என்று குறிப்பிடுகிறார்கள். அன்பர்களின் குறைகளை அப்பனிடம் விண்ணப்பம் செய்துகொள்ளத் துடித்துக் கொண்டிருக்கும் வாயல்லவா?

‘பெண்களில் சிறந்தவள் நீயே; மகாலட்சுமியும் நீயே!’ என்கிறார்கள் இந்த ஆய்ச்சியர் நப்பின்னையை நோக்கி, நப்பின்னை நங்காய்! திருவே துயிலெழாய் என்று பள்ளியெழுச்சி பாடுகிறார்கள்.

இப்போது நப்பின்னை சொல்லுகிறாளாம். ‘சிறுமியர்களே! நான் உறங்குகிறேனா, என்ன? கண்ணபிரானால் நீங்கள் அடையவேண்டிய பாக்கியத்தைக் குறித்தல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்? நான் எழுந்து செய்யவேண்டியது என்ன? உங்கள் வாயால் சொல்லுங்கள்’ இப்படி நப்பின்னை கேட்டதாக வைத்துக்கொண்டு சிறுமியர்கள் ‘நோன்பிற்கு வேண்டிய உபகரணங்களை யெல்லாம் தரவேணும்’ என்கிறார்கள். விசிறி, கண்ணாடி முதலான நோன்பிற்கு உரிய கருவிகளை (சாதனங்களை)த் தந்தால் போதுமா? ‘உன் மணாளனையும், எங்களையும் மார்கழி நீர் ஆட்டுவிக்க வேணும்’ என்கிறார்கள். இப்போதே எம்மைநீர் ஆட்டேலோர் எம்பாவாய் என்று முடிகிறது பாட்டு.

‘இப்போதே’ என்று இவர்கள் கூறுவது கவனிக்கத் தக்கது. நன்றே செய்யவும் வேண்டும், அதுவும் இன்றே, இப்போதே, செய்யவும் வேண்டுமல்லவா?உன் தத்துவமும் தகவுமே எங்களுக்கு அரண்!


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்
செப்பம் உடையாய்! திறல்உடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயில்எழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மைநீர் ஆட்டேலோர் எம்பாவாய்

விளக்கம்

‘தத்துவம் அன்று தகவு’ என்று முந்திய பாட்டில் சற்றுக் கடுமையாகக் கூறிவிட்டோமே என்று கருதியவர்களைப்போல், நின்று கொண்டிருக்கும் சிறுமியர்கள் கண்ணனையே எழுப்பிப் பார்ப்போம் என்று தீர்மானிக்கிறார்கள். தாங்கள் தங்கள் வருத்தம் தோன்றப் பேசியது நப்பின்னைப் பிராட்டிக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்குமோ என்று நினைக்கிறார்கள். அதனால்தான் கதவைத் திறவாமலும் வாய் திறவாமலும் இருக்கிறாள் என்றுகூட எண்ணமிடுகிறார்கள்.

இந்த நினைப்புடன் கண்ணனை எழுப்பிப் பார்த்தும், அவனும் வாய்திறக்கவில்லை. நப்பின்னையைப் பற்றி இவர்கள் வருந்திக் கூறியது கண்ணனுக்கும் வருத்தம் கொடுத்திருக்கலாமோ என்று நினைக்கிறார்கள். எனவே மறுபடியும் நப்பின்னைப் பிராட்டியைப் புகழ்ந்து தோத்திரம் செய்கிறார்கள். இவள் அழகையும் ஆத்ம குணங்களையும் பாராட்டுகிறார்கள். ;அம்மா! நீயே எங்கள் விருப்பத்தை நிறைவேற்றி யருளவேண்டும்’ என்று வேண்டிக்கொள்கிறார்கள் இந்தப் பாசுரத்திலே.