24. போற்றிப் பாட்டு
ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு பெண்கள் எல்லோரும் திரண்டு வந்தார்கள். வாசல் காப்பவனை எழுப்பி, நந்தகோபனை எழுப்பி, யசோதையை எழுப்பினார்கள். கண்ணனை எழுப்ப முயன்று அண்ணனையும் எழுப்பினார்கள். மீண்டும் கண்ணனை எழுப்பினார்கள். இப்போது கண்ணன் பெண்களின் பிரார்த்தனைக்கு இணங்கி, 'இதோ புறப்பட்டு வருகிறேன்' என்று சொல்லிப் பள்ளியறையிலிருந்து சிங்காசனம் இருக்குமிடத்திற்கு வரத் தொடங்குகிறான்.
கண்ணனது வடிவழகையும் நடையழகையும் கண்டதும் பெண்கள் தங்கள் மனோரதங்களையெல்லாம் மறந்துவிட்டதுபோல், 'இந்த அடிமலர்களைக் கொண்டா இவனை நாம் நடக்கச் சொல்லி விட்டோம்?' என்று பரிந்து வருந்தினார்களாம். பிறகு 'அந்த அடிமலர்களைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாமா? முடிமேல் சூட்டிக் கொள்ளலாமா?' என்றெல்லாம் பித்தம் கொண்டதுபோல் எண்ணமிடுகிறார்கள். 'ஐயோ! இந்த அடிகளா உலகம் அளந்தன? இந்த அடிகளா சகடம் உதைத்து அசுரனை அழித்தன?' என்று பரிந்து வருந்துகிறார்கள். இந்தத் திருவடிகளைப் போற்றி, 'இந்த அடிமலர்களுக்கு ஒரு தீங்கும் நேராதொழிய வேணும்' என்று வாழ்த்துகிறார்கள்.
வாழ்வு பெற வந்தவர்களால் வாழ்த்தப் பெறுகின்றான் கண்ணன். இந்த அதிசயத்தைச் சொல்லுகிறது இந்தப் போற்றிப் பாட்டு. 'மங்களம், மங்களம், ஜயமங்களம்' என்று கண்ணனுடைய திருவடிகளுக்கும் கைத்திறனுக்கும் கைவேலுக்கும் வீரத்திற்கும் மங்களம் பாடுகிறது இந்தப் பாசுரம்.
கண்ணனைக் கண்டு தங்களுக்கு மங்களங்களைப் பிரார்த்தித்துப் பெற்றுக்கொள்ள வந்தவர்கள் இவர்கள். இப்பொழுது வந்த காரியத்தை மறந்துவிட்டவர்கள்போல் 'போற்றி, போற்றி, பொன்னடிக்குப் போற்றி' என்றெல்லாம் கண்ணனுக்கே மங்களம் வழங்கத் தொடங்கிவிட்டார்களே, இது தகுமா? தங்கள் இரட்சகனையா இவர்கள் இரட்சிக்கப் போகிறார்கள்? இது கண்ணனது வடிவழகு படுத்தும் பாடு. சௌந்தர்யத்திலே சக்தி மறைந்திருப்பதால், பக்தி பரவசமாக இருக்கும் இவர்கள் இந்தப் பாடுபடுகிறார்கள்! இப்படிப் பொங்கும் பரிவை ஆண்டாள் தன் தந்தையான பெரியாழ்வாரிடத்திலே கண்டிருக்க வேண்டும்.
பெரியாழ்வார் தம் அன்புக் கடவுளைத் தரிசித்ததும், தாம் வாழ்வு பெற நினைக்கவில்லை; எம்பெருமான் தீங்கின்றி வாழவேணுமென்று வாழ்த்திப் பல்லாண்டு பாடினார். இது சாதாரண பக்தியன்று; பரம பக்தி. இத்தகைய பரம பக்தியைத் தம் தந்தையாரிடம் புற உலகில் கண்டு கொண்டதுபோல், அக உலகிலும் – பாவனை முதிர்ச்சியால் தான் படைத்துக் கொண்ட ஆய்ப்பாடியிலும் – கண்டு கொண்டாள்.
இந்த ஆய்ச்சியர் கண்ணனைக் கண்டதும், அந்த நடையழகைப் பார்த்ததும், அன்றுஇவ் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி என்று வாழ்த்துகிறார்கள். கண்ணனுடைய மென்மையான அழகினைப் பார்த்து 'இந்த அடிகளைக்கொண்டு எப்படித்தான் காடு மேடுகள் நிறைந்த மண்ணையும் விண்ணையும் அளந்தானோ இவன்!' என்று இவர்கள் ஆச்சரியப்படவில்லை; வயிறு எரிந்து வேதனைப்பட்டு அந்தத் திருவடிகளை வாயார வாழ்த்துகிறார்கள்!
கண்ணனுடைய கையழகைக் கண்டதும் 'இந்தக் கைத்திறன்தானோ ராட்சச பூமியாகிய இலங்கையை அழித்தது? எப்படித்தான் அழித்ததோ?' என்று பரிந்து இந்தக் கைகளையும் வாழ்த்துகிறார்கள். அந்த ராட்சச பூமியில் நடந்துபோன அந்த அடிகளைமட்டும் வாழ்த்தியதுடன் திருப்தி அடையவில்லை. சென்றுஅங்குத் தென்இலங்கை செற்றாய்! திறம்போற்றி.
சகடாசுரனை உதைத்து வதைத்த திருவடிக்குத் திருப்புகழ் பாடிய பின்பும், கண்ணனுடைய கைத்திறனைப் பாடுகிறார்கள். கம்சனால் ஏவப்பட்ட அசுரர்களில் ஒருவன் விளாமரத்தின் வடிவமாய்க் கண்ணன் வரும்போது மேலே விழுந்து கொல்ல விரும்பி நின்று கொண்டிருந்தான். வேறொரு அசுரன் கன்றின் வடிவம் கொண்டு குழந்தைக் கண்ணனை முட்டிக் கொல்ல வந்தான். கண்ணன் கன்றால் விளாமரத்தை அடித்து வீழ்த்த, இரண்டு அசுரர்களும் மாண்டு ஒழிந்தனர். அப்படி முள்ளைக் கொண்டு முள்ளைக் களைவதுபோல் துஷ்ட நிக்கிரகம் செய்த கைத்திறனையும் ஆய்ச்சியர் போற்றினார்கள். அப்படிக் கன்றை எறி கருவியாக (குணிலாக) வீசும்போது அந்த இடத்திற்கு நடந்து சென்றான் அல்லவா? அந்த அடிகளை வாழ்த்தினார்கள் ஆய்ச்சியர் என்றும் கூறுவதுண்டு. கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி என்ற வாக்கின் போக்கிலே திருவடியைப் போற்றும் பொருள்தான் சிறப்பாகக் குறிக்கப்படுகிறது.
கண்ணனுடைய கைத்திறன் கோவர்த்தன கிரியைக் குடையாக எடுத்து உலகத்திற்கு அருள் புரிந்தது என்பதையும் அறிந்திருக்கிறார்கள் ஆய்ச்சியர்கள். குன்று குடையாக எடுத்த அந்தப் பெருங் குணத்தையும் போற்றுகிறார்கள். குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி என்கிறார்கள்.
வெற்றி தரும் கைவேலையும் போற்றுகிறார்கள். கண்ணன் கையில் வேல் பிடித்திருக்கும் அழகும் இவர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. 'அடிபோற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி' என்று இவர்கள் தங்கள் நாக்குக்கு அறுசுவை உண்டி அளித்து மகிழ்கிறார்கள்.
வடிவழகும் நடை அழகும் கண்டு போற்றுவது
அன்றுஇவ் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி
சென்றுஅங்குத் தென்இலங்கை செற்றாய்! திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுமுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
விளக்கம்
இப்பெண்களின் வேண்டுகோளுக் கிணங்கிக் கண்ணபிரான் படுக்கையைவிட்டு எழுந்து வெளிப்பட்டு வருகிறான்; வெளி மண்டபத்திற்கு வந்து விடுகிறான். அந்த வடிவழகிற்கும் நடை அழகிற்கும் உள்ளத்தைப் பறிகொடுத்தவர்களால் வந்த காரியத்தைப் பளிச்சென்று விண்ணப்பம் செய்துகொள்ள முடியவில்லையாம். இந்த அழகிலே வந்த காரியத்தையும் சற்று மறந்து விடுகிறார்களாம்.
நடந்து வந்த அந்த அடிமலர்களின் அழகைப் போற்றுகிறார்கள். இலங்கையை வென்ற திறமையைப் போற்றுகிறார்கள். குழந்தைக் கண்ணனின் லீலைகள் நினைவிற்கு வர, அந்த அற்புதச் செயல்களையும் போற்றுகிறார்கள். அவற்றால் ஏற்பட்ட புகழையும் அந்தச் செயல்களில் வெளிப்பட்ட குணத்தையும் போற்றுகிறார்கள். வெற்றியையும் வீரத்தையும் இப்படியெல்லாம் போற்றியபின் கடைசியாக வந்த காரியத்தையும் நினைத்துக் கொள்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக