Wednesday, January 6, 2010

அன்பிற்கு அடி பணிந்தார்கள்! சிங்கம் தோன்றியது!

22. குறைகளுக்கு மூடிக் கூக்குரலுக்குத் திறவாய் !


  'வேறு போக்கு இல்லாது வந்து சேர்ந்தோம்' என்று ஆய்ச்சியர் முந்திய பாட்டில் கூறினார்கள். கண்ணன் 'இன்னமும் இவர்களைச் சோதிப்போம்' என்று பேசாமல் கிடக்கிறானாம். அது கண்ட ஆய்ச்சியர், 'எம்பெருமானே! எங்களுக்கு நீ புகல் ஆகாது இருந்து விட்டாலும் நாங்கள் வேறொரு புகலைத் தேடி ஓடப் போவதில்லை; அடிபணிந்த எங்களைக் கடாட்சிக்க வேணும்' என்று பிரார்த்திக்கிறார்கள் இப்பாசுரத்திலே.

            நாம் சாதாரணமாக 'என் வீடு, என் பொருள், என் பூமி' என்றெல்லாம் அபிமானம் கொண்டு பேசுகிறோம். இத்தகைய அபிமானம் அரசர்களுக்கு அதிகமாகத்தானே இருக்கும்? 'என் இராச்சியம், என் பூமி' என்ற அகங்காரத்தால் பெரிய பெரிய போர்கள் எல்லாம் அரசர்களால் நடத்தப்பட்டிருக்கின்றன. பெருங் கொடை வள்ளலான மகாபலியும் 'வாமனன் மண் இது' என்று தெரிந்து கொள்ளாமல் வாமனனுக்கே நிலத்தைத் தானம் கொடுப்பதாக நினைத்துவிட்டான் அல்லவா?

                   இத்தகைய அபிமானம் போய் அரசர்களுக்கு அபிமான பங்கம் (அகப்பற்று, புறப்பற்றுக்களின் நீக்கம்) வந்துவிட்டால் அவர்கள் எப்படி நடந்துகொள்ளக்கூடும்? 'ஒரு நாயகமாய் உலகை ஆண்டோம்!' என்று இருந்தவர்கள் நாடு காணப் பிச்சை எடுப்பதும் உண்டு என்றார் நம்மாழ்வார். அவர்களும் அபிமான பங்கம் ஆனவர்கள். அத்தகைய அரசர்கள் வைராக்கியம் உற்றுக் கடவுளையே சரணமாக அடையவும் கூடுமல்லவா?

வறுமையும் கஷ்டமும் செல்வ நஷ்டமும் தத்துவ ஞானம் தலையெடுப்பதற்குக் காரணமாகவும் கூடும்; 'ஆண்டவனே நமக்குப் புகல்; செல்வமல்ல, பதவி அல்ல, புகழ் அல்ல' என்று மனம் திருந்துவதற்கும் திரும்புவதற்கும் காரணமாவதையும் கண்டு கொள்ளலாம். இந்த நிலையை அடைந்த அரசர்கள் அபிமான பங்கமாகி வந்து, கண்ணன் ஏகாந்தமாக எழுந்தருளியிருக்கும் இடத்திலும் வந்து கிடப்பார்களாம். இதை ஆய்ச்சியர் கேள்விப் பட்டிருக்க வேண்டும்; பார்த்தும் இருக்கலாம்.

'எவ்வளவு அழகான, விஸ்தாரமான, பூமியை ஆண்டு கொண்டு வணங்காமுடியராக இருந்தார்கள்! அத்தகைய அரசர் அபிமான பங்கமாய் வந்து கண்ணன் பள்ளிகொண்டிருக்கிற கட்டிலண்டை உட்கார்ந்திருக்கிறார்களே; கீழே உட்கார்ந்திருக்கிறார்களே; திரள் திரளாக உட்கார்ந்திருக்கிறார்களே!' என்று கண்ணாரக் கண்டு அதிசயிப்பதுபோல் ஆய்ச்சியர்கள் பேசுகிறார்கள்.

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

'அந்த அரசர்களைப் போல் நாங்களும் தோற்று வந்தவர்கள்!' என்கிறார்கள். 'இராச்சியத்தையும் இழந்து வந்தவர்கள் நாங்கள்!' என்கிறார்கள். 'அவர்கள் எதிரிகளுக்குத் தோற்று வந்தார்கள்; நாங்களோ உன் குணங்களுக்கே தோற்று வந்தோம்; எங்களுடைய அகங்கார இராச்சியத்தை இழந்து வந்தோம்!' என்கிறார்கள். 'இந்த நிலையில் நாங்களும் உன்னைக் கிட்டப் பெற்றோம்' என்கிறார்கள்.

அது கேட்ட கண்ணபிரான், 'பெண்களே! இனி ஒரு குறையும் இல்லையே!' என்று கேட்கக்கூடுமல்லவா? அதற்கும் இவர்கள் பதில் சொல்லுகிறார்கள். 'உன்னுடைய கடாட்சம் பெறவேண்டாமா? அதற்குத் தானே வந்திருக்கிறோம்' என்கிறார்கள்.

இந்தக் கடாட்சத்தைக் குறித்துப் பேசுவதுதான் இந்தப் பாசுரத்தின் பெரும்பகுதியும். கண்ணனுடைய கண்கள் உள்ளே இருக்கும் அன்பு தோன்றுமாறு சிறிது சிறிதாகத் தங்கள் மேல் விழித்துப் பார்க்கவேணும் என்கிறார்கள். இப்படி ஏன் பார்க்கவேணும்? பூரண கடாட்சம் வேண்டும் என்று உடனே தெரிவித்துக் கொள்ளாததற்குக் காரணம்தான் என்ன?

முதல் முதல் இருட்டிலிருந்து வந்தவன்முன்னே பேரொளியை வீசினால் கண்கூசிப் போகுமல்லவா? இப்பெண்களும், 'முதலிலேயே பூரண கடாட்சம் செய்துவிட்டால் தாங்க முடியாதே!' என்கிறார்கள். நாங்கள் பொறுக்கப் பொறுக்கக் கடாட்சித்து அருளவேணும்' என்கிறார்கள். 'சிறுச் சிறிதே' என்று இவர்கள் கூறுவது கூர்ந்து கவனிக்கத் தக்கது.

குற்றங் குறைகளை நினைத்துப் பாதி மூடியிருக்க வேணுமாம் கண்கள்; கூக்குரலைக் கேட்டுப் பாதி திறந்தும் இருக்க வேணுமாம். செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? என்கிறார்கள்.

இப்படிக் கடாட்சிக்க வேணும் என்பதற்கு ஓர் உபமானமும் காட்டுகிறார்கள். 'கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல' என்பது இவர்கள் வாக்கு. வாய்ப்பக்கம் கொஞ்சம் திறந்த ஒரு வகைச் சதங்கை இங்கே கிங்கிணி என்று குறிக்கப்படுகிறது.

இரண்டு கண்களுக்கும் சந்திர சூரியர்களை உபமானமாகவும் காட்டுகிறார்கள். சூரியன் உதிக்கத் தாமரை மலரத் தொடங்குமல்லவா? சந்திரன் உதித்தால் மூடிக்கொள்ளுமல்லவா? ஏககாலத்தில் இரண்டும் உதித்தால் தாமரை மலர் பாதி மூடியும் பாதி திறந்தும் இருக்குமென்று கற்பனை செய்து கொள்கிறார்கள். அப்படி இரண்டு கண்களாலும் கண்ணன் கடாட்சிக்க வேணும் என்கிறார்கள்.


அன்பிற்குத் தோற்று அன்பனுக்குப் பணி புரிவது


அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின்பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போல
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்


விளக்கம்

எதிரிகளுக்குத் தோற்று 'இராச்சியம் நம்முடையது' என்ற புறப்பற்று நீங்கி இறைவனைச் சரணமாக அடையவும் கூடும்; 'அப்படியே நாங்களும் உன் அன்பு முதலான குணங்களுக்குத் தோற்று எங்கள் அபிமானம் தொலைந்து உன்னிடம் அந்தரங்கமாக வந்து விட்டோம்' என்கிறார்கள். கண்ணனோடு எதிர்த்துத் தோற்ற எதிரிகளில் சரணமாக அடைந்தவர்களை இந்தப் பாட்டின் முற்பகுதி குறிப்பிடுகிறது என்றும் கருதலாம்.

அம்புக்குத் தோற்றவர்கள் வேறு போக்கு இல்லாமல் சரணமடைவதுபோல், அன்பிற்குத் தோற்றவர்கள் அன்பனுக்குப் பணி செய்யச் சித்தமாகிறார்கள்.


23. சிங்கப் பாட்டு.

மழைக்காலம். மலைக் குகையிலே படுத்துக் கிடக்கிறது சிங்கம். உறங்கிக் கிடக்கிறது. சிங்கம் இருக்கும் குகை என்றால் எந்தப் பிராணிதான் அங்கே வரத் துணியும்? ஆனால் சிங்கமோ யானைகள் வந்து பிளிறினாலும் அந்த ஒலியையும் கேட்க இயலாத நிலையில் கிடந்து உறங்குகிறதாம். மழைக் காலமானதால் வழிகளும் சேறாகி, திரிவதற்கும் வசதியாக இல்லை. அரசன் போர் புரிவதை விட்டு அரண்மனையில் கிடப்பதுபோல் சிங்கமும் தன் குகையில் பொருந்திக் கிடக்கிறதாம், பேடையும் தானுமாக.

மழை ஓய்ந்துவிட்டது. வழிகளெல்லாம் வெள்ளம் வடிந்து நடக்க இசைவாகி விட்டன. சிங்கம் உறக்கத்தை விட்டு எழுகின்றது. 'நம் எல்லைக்குள் புகுந்தவர் யார்?' என்று சீறி நோக்குவதுபோல் தீப்பொறி பறக்க நாலுபுறமும் நோக்குகிறது. பிடரி மயிர் சிலும்பும்படி அங்கும் இங்கும் உடம்பை அசைத்துக் கொடுக்கிறது. முடங்கிக் கிடந்த அவயவங்களை உதறுகிறது. பெருமை தோன்ற --- தன் மாட்சி தோன்ற --- சோம்பல் முறித்து நிமிர்ந்து நிற்கிறது. இடிபோல் கர்ச்சிக்கிறது. இப்படி நிமிர்ந்து முழங்கிக்கொண்டே தன் குகையை விட்டு வெளிப்படுகிறது.

இப்படிக் கண்ணபிரானும் கம்பீரமாகப் புறப்பட்டு வந்து சிங்காசனத்தில் ராஜசிங்கம் வீற்றிருப்பதுபோல எழுந்தருளிக் காட்சி தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள் ஆய்ச்சியர்கள். தங்கள் தலைவனின் காம்பீர்யம் நிறைந்த அழகு – மாட்சியைக் காண ஆசைப் படுகிறார்கள். அப்படி மாட்சியுடன் அமர்ந்து தாங்கள் வந்த காரியத்தை ஆலோசித்து முடிவு செய்யவேண்டும் என்கிறார்கள்.

* * * * *

'வேறு புகல் அற்று உன்னை நோக்கி வந்து விழுந்தோம்; சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்' என்று சொன்னவர்களை நோக்கிக் கண்ணன், 'பெண்களே! உங்கள் இருப்பிடம் தேடி வந்து உங்களை நோக்குவதன்றோ என் கடமை? அதுதானே என் சொருபம்?' என்கிறானாம். இப்படித் தன்னுடைய தத்துவத்தையும் தகவையும் (சொரூபத்தையும் சுபாவத்தையும்) கண்ணன் தெரிவித்து, 'இனி நான் உங்களுக்குச் செய்யவேண்டியது என்ன?' என்று கேட்பதாகக் கருதலாம். அதுகேட்ட ஆய்ச்சியர், 'இப்படி இரகசியமாக விண்ணப்பம் செய்யக்கூடியதன்று எங்கள் காரியம்' என்கிறார்கள். 'யசோதை இளஞ்சிங்கமாகிய நீ உறங்கும் இடத்தை விட்டு வரவேணும்; திருமேனி நிமிர்ந்து கம்பீரமாக விழித்துப் புறப்பட்டு வரவேணும். அப்படி வந்து வீர சிங்காசனத்தில் மாட்சி பொருந்த வீற்றிருந்து நாங்கள் வந்த காரியத்தை ஆராய்ந்து பார்க்க வேணும்' என்கிறார்கள்.

இந்தப் பாசுரத்திலே முற்பகுதி சிங்கத்தை வருணிக்கிறது. எவ்வளவு கம்பீரமாக வருணிக்கிறார்கள் சிங்கத்தை இந்த ஆய்ச்சியர்கள்!

மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்த்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போல

என்பதை உணர்ச்சியுடன் ஓத ஓதச் சொற்கள் மறைந்து, சிங்கமே அனல் பறக்கக் கண் திறந்து பிடரி ரோமம் சிலிர்க்க உதறிக் கொண்டு நிமிர்ந்து கர்ச்சித்துப் பாய்ந்து வருவது போன்ற உயிர்ச் சித்திரம் அப்படியே நம் அகக்கண் முன் தோன்றக் காண்கிறோம்.

இப்படி வரவேணுமாம் பூவைப் பூவண்ணனாகிய கண்ணனும். இவனது காயாம்பூ மேனி சௌந்தர்யத்திற்கு அறிகுறி. 'கண்ணா, உன் சக்தியை மறைத்திருக்கிறது சௌந்தர்யம். நாங்கள் உன் சௌந்தர்யத்தை மட்டுமா காதலிக்கிறோம்? நீறுபூத்த நெருப்பைப் போலிருக்கும் உன் சக்தியையும் காண ஆசைப் படுகிறோம்' என்கிறார்கள் ஆய்ச்சியர்கள்.

'பூவைப் பூவண்ணா, உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி' – அதாவது உன் இருப்பிடத்திலிருந்து நாங்கள் இருக்கிற இங்கே ராஜசிங்கம் போல் வந்தருளவேணும் – என்கிறார்கள். வேலைப்பாடுகள் அமைந்த சிறந்த சிங்காசனத்தில் வீற்றிருக்கவேணும் என்கிறார்கள்.

சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
என்கிறார்கள்.

வந்த காரியம் இன்னதென்று இப்போதே இவர்கள் சொல்லி விட விரும்பவில்லை. 'கேட்கும் முறைப்படி சிங்காசனத்திலிருந்து கேள்; நாங்கள் விண்ணப்பம் செய்வோம்' என்கிறார்கள். இந்த விண்ணப்பத்தைத் திருப்பாவையின் இறுதிப் பாட்டிற்கு முந்தைய பாட்டில்தான் வெளியிடுகிறார்கள்.

இந்த விண்ணப்பத்தைக் கண்ணனும் பொறுத்திருந்து கேட்பான். நாமும் பொறுத்திருந்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.


சிங்கமும் சிங்காசனமும்

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்த்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளி கோப்புஉடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

விளக்கம்

கண்ணன் பெண்களின் வேண்டுகோளைக் காதில் போட்டுக் கொண்டு,'நீங்கள் என்னைத் துயிலுணர்த்துவது ஏன்?' என்று ஒரு கேள்வி கேட்டதாக வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஆய்க்குலச் சிறுமியர் சொல்லும் பதிலாக அமைந்திருக்கிறது இச்செய்யுள்.

சிங்கம் கம்பீரமாகப் புறப்பட்டு வருவதுபோல் யசோதை இளஞ்சிங்கமும் புறப்பட்டு வரவேண்டும் என்கிறார்கள். படுத்தபடியே 'ஏன் வந்தீர்கள்?' என்று கேட்டால் போதாது. ராஜசிங்கமாக நிமிர்ந்து 'வந்தீர்களா? வாருங்கள், வாருங்கள்' என்று வினவிக்கொண்டே புறப்பட்டு வரவேண்டும் என்கிறார்கள். அப்படி வந்து சிங்காசனத்தில் ஒரு சிங்கமாக வீற்றிருந்து வந்த காரியத்தை விசாரிக்க வேண்டுமாம்.