செவ்வாய், 5 ஜனவரி, 2010

அடி பணிய வந்தோம்

21. தோற்றவர் பேறு.

நப்பின்னையைத் துயில் உணர்த்திய பின், அவள் எழுந்து வந்து ‘தோழிகளே’ என்று இவர்களைப் பேரன்புடன் அழைக்கிறாள். ‘நானும் உங்களில் ஒருத்தி அன்றோ!’ என்கிறாள். ‘நீங்கள் கொஞ்சமும் வருந்த வேண்டாம்; நான் உங்களுக்கு உதவி செய்ய எப்போதும் சித்தமாகவே இருக்கிறேன்’ என்கிறாள். கடைசியாக, ‘நாம் எல்லோரும் கூடிக் கண்ணபிரானை வேண்டிக் கொள்வோம், வாருங்கள்’ என்று சொல்லுகிறாள்.

பிறகு நப்பின்னைப் பிராட்டி உள்ளிட்ட அனைவரும் ஒரு முகமாய்க் கூடிக் கண்ணபிரானுடைய வீரம் பாடி அவனைத் துயில் உணர்த்துகிறார்கள் என்பது இப்பாசுரத்தின் அமைப்பு முறை.

கண்ணனுடைய வீரத்தைப் புகழ்வதற்கு முன் கண்ணன் தந்தையாகிய நந்தகோபனின் செல்வத்தைப் புகழ்கிறார்கள் --- பசுச்செல்வத்தைத்தான், பால்வளத்தைத்தான். ஏற்கனவே நந்தகோபனின் அறப் பற்றைப் பாராட்டிவிட்டார்கள், தோள்வலியையும் பேசி விட்டார்கள். இந்தப் பாசுரத்திலே அவனுடைய கறவைச் செல்வம்தான் எவ்வளவு வசீகரமாய் வருணிக்கப் படுகிறது பாருங்கள்!

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான்

கலம் இடுவார் குறையேயன்றி, பசுக்கள் இட்ட கலங்களை நிறைக்கத் தட்டில்லை என்கிறார்கள். சிறிய கலம் பெரிய கலம் என்ற வேற்றுமையின்றி எந்தக் கலத்தையும் நிறைத்து விடுகிறதாம் நந்தகோபனின் பசு. மாற்றாதே பால் சொரியும் பெரும் பசுக்கள் என்கிறார்கள். ‘இட்ட கலங்கள் நிரம்பின; இனிக் கலம் இடுவார் இல்லை’ என்பது குறிப்பு.

ஏற்கனவே, ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’ என்றார்கள். இப்போதோ, ‘எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்’ என்கிறார்கள். கலம் நிறைந்து எதிராகப் பொங்கி மேலே வழியும் படியாக இடைவிடாமல் பாலைச் சொரிகிற பசு இங்கே நல்லாசிரியருக்கு அறிகுறி. ஏற்ற கலங்கள் உபதேசத்திற்குப் பாத்திரமான உத்தம சீடர்களுக்கும் அறிகுறி. ஏற்ற கலங்கள் நிறைந்து எதிர் பொங்குவது போல், சீடர்களும் நிறைந்த ஞானம் பெற்று ஆசாரியனுக்கும் யுக்தி உபதேசம் செய்ய வல்லவர்கள் ஆகிறார்களாம்.

பெரும் பசுக்களாகிய செல்வத்தைச் சிறப்பாகப் படைத்திருக்கும் நந்தகோபன் மகன் கண்ணன் என்பதை முதல் பெருமையாகக் குறிப்பிட்ட பின்பே இந்த மகனுடைய பெருமையைப் பேசுகிறார்கள். மகனே! அறிவுறாய் என்று சொன்ன பின்பே அடியவரைக் காப்பதில் கண்ணனுக்கு உள்ள ஊற்றம் அல்லது சிரத்தையைப் பேசுகிறார்கள். ஊற்றம் உடையாய்! பெரியாய்! என்கிறார்கள். அன்பர்களைக் காக்கவல்ல ஆண்டவன்தானே உண்மையிற் பெரியவன்?

பிறகு கண்ணனை ‘உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே!’ என்று அழைக்கிறார்கள். ‘இருள் தரு மாஞாலம்’ என்று சொல்லப்படும் இந்த உலகத்திலே இறங்கி வந்திருக்கும் ஜோதி கண்ணன் என்பது குறிப்பு. தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய் என்று பள்ளியெழுச்சி பாடுகிறார்கள்.

கடைசியாக, தாங்கள் கண்ணபிரான் திருவடிகளைப் போற்ற வந்திருப்பதைத் தெரிவிக்கிறார்கள். எப்படி அடிபணிந்து போற்ற வந்திருக்கிறார்கள் என்பதையும் விரித்து உரைக்கிறார்கள். கதியற்றவர்களாக வந்திருக்கிறோம் என்கிறார்கள். ‘உன்னைத் தவிர வேறு கதி இல்லை எங்களுக்கு என்று சரணாகதி பண்ணிக் கிடக்க வந்திருக்கிறோம்’ என்கிறார்கள்.

தங்கள் சரணாகதிக்கு இவர்கள் இப்போது காட்டும் உபமானம் இங்கே கூர்ந்து சிந்திக்கத் தக்கது.

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து
என்கிறார்கள்.

பகைவர்கள் வலிமை ஒழிந்து – அதாவது, கண்ணனுக்குத் தோற்று --- கதியற்றவர்களாய்க் கண்ணனின் வாசலில் வந்து அடிபணிவதுபோல், இவர்களும் சரணாகதி செய்ய வந்திருக்கிறார்களாம். இராமனைக் காகாசுரன் சரணமடைந்த கதையை இங்கே நினைவூட்டிக் கொள்ளலாம். ’எத்திசையும் உழன்று ஓடி எங்கும் புகலற்று இளைத்து விழுந்த காகம்’ என்று காகாசுரனைக் குறிப்பிடுவதுண்டு. ‘அப்படி நாங்களும் சரணாகதி செய்யவந்தோம்’ என்கிறார்கள்.

மாற்றார் தோற்று வந்தார், இவர்களுக்கு என்ன தோல்வி? கண்ணனுடைய அழகிற்கும் அழகிய குணங்களுக்கும் தோற்றவர்களாய் ஆற்றாது வந்திருக்கிறார்களாம் இவர்கள்.


ஆற்றாது அடிபணிய வந்தோம்


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளற் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்



விளக்கம்

கண்ணனுடைய வலிமைக்குத் தோற்ற பகைவர்களும் உண்டு, குணங்களுக்குத் தோற்ற அன்பர்களும் உண்டு. வலிமைக்குத் தோற்றவர்கள் காலில் விழுவதுபோல் குணத்திற்குத் தோற்றவர்களும் காலில் விழுகிறார்கள்; சரணாகதி செய்கிறார்கள். எப்படியும் சரணாகதி செய்வது பாக்கியம்தான். குணத்திற்குத் தோற்றுச் சரணாகதி செய்வது பெரும் பேறு. இந்த நிலையில் வந்திருக்கிறார்கள் இப்பெண்கள்.

இப்பாட்டில் வரும் பெரும் பசுக்கள் ஞானாசிரியனை நினைவூட்டுகின்றன. ‘ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப’ என்பது உபதேசத்திற்குப் பாத்திரமாக வந்தவர்கள் குருவுக்கும் யுக்தி சொல்ல வல்லவர் ஆகிறார்கள் என்பதை நினைவூட்டி, மெய்யறிவின் தனிப் பெருஞ் சிறப்பை உணர்த்துகிறது.

‘உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்’ என்பதில் ‘பல பிறப்பாய் ஒளிவரு முழுநலம்’ கடவுளுக்கு உரியது என்ற பேருண்மையைக் காண்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக