Monday, June 29, 2009

ந்யாஸதசகம் 4


ஸ்ரீமந் அபீஷ்டவரத
த்வாம் அஸ்மி சரணம் கத:
ஏதத் தேஹாவஸாநே மாம்
த்வத்பாதம் ப்ராப்ய ஸ்வயம். (4)

[ஸ்ரீமந் -- திருமாமகளுடன் கூடிய ஸ்ரீமந்நாராயணனே ! இறையும் அகலகில்லாத பெரியபிராட்டியார் உறை மார்ப ! அபீஷ்டவரத ! -- ஆச்ரிதர்களுக்கு இஷ்டமான பலன்களை அளித்துக் காக்கின்றதனால் வரதன் என்று அஸாதாரமான திருநாமத்தையுடைய பேரருளாளரே ! த்வம் -- தேவரீரை சரணம் -- உபாயமாக கத;அஸ்மி -- (அடியேன்) அடைந்தவனாக இருக்கின்றேன், ஆகின்றேன் ; ஏதத் தேஹா வஸாநே -- சரீரத்தின் இறுதிக் காலத்திலே; த்வத் பாதம் -- தேவரீருடைய திருவடிகளை, வைகுந்தநாதனான தேவரீர் திருவடிகளை ; ஸ்வயம் -- தேவரீரே; ப்ராப்ய -- (வேறோர் உதவியின்றி) அடைவிக்க வேண்டும் ]

பெருந்தேவிநாதனே ! கருதவரந்தருந் தெய்வப் பெருமாளே ! தேவரீரை அடைக்கலமாக அடைந்திருக்கிறேன். இச்சரீரம் விழும்பொழுது அடியேனுக்குத் தேவரீர் திருவடிகளைத் தேவரீரே சேர்ப்பிக்க வேண்டும்.

வேண்டுவார் வேண்டுவன நல்கி அளிக்கும் திருநாரணனே ! அடியேன் தேவரீரையே சரணமாகப் பற்றினேன். தேவரீர் வேறொரு உதவியை எதிர்பாராமல் இந்தச் சரீரத்தின் முடிவிலே தேவரீர் திருவடிகளை அடைவிக்க வேண்டும்.

ஸ்ரீய: பதியான நாராயணனே உபாயமாகவும் உபேயமாகவும் இருக்கின்றான் என்பது இதனால் அறிவிக்கப் பெற்றதாயிற்று.

ஏதத் தேஹா வஸாநே -- என்பதனால் ஆர்த்தனாய் இப்பொழுதே மோக்ஷம் தந்து அருள வேண்டும் என்று கோரிப் பிரபத்தி பண்ணினாலும் உடனே சரீரத்தின் முடிவைச் செய்து மோக்ஷத்தைக் கொடுப்பன் என்று ஏற்படும். பிரபத்தி இருவகைப் படும். அவையாவன :-- (1)த்ருப்த ப்ரபத்தி (2) ஆர்த்தப் ப்ரபத்தி. இச்சரீரம் உள்ள வரையில் கர்ம பலன்களை அனுபவித்து, இறுதியில் மோக்ஷத்தைப் பெற விரும்பிச் செய்யும் சரணாகதி த்ருப்த ப்ரபத்தி. இச்சரீரம் உள்ளவரையிலும் கூடப் பொறுக்காது இந்த க்ஷணமே மோக்ஷம் பெறவேண்டும் என்று விரும்பிச் செய்யும் சரணாகதி ஆர்த்தப்ரபத்தி.

புகலுலகி லில்லாது பொன்னருள்கண் டுற்றவர்க்கு
மகலகிலா வன்பர்க்கு மன்றேதன் னருள்கொடுத்துப்
பகலதனாற் பழங்கங்குல் விடிவிக்கும் பங்கயத்தா
னகலகிலே னென்றுறையு மத்திகிரி யருண்முகிலே.
(தேசிகமாலை, அருத்தபஞ்சகம் 8.)

[திருமகள் க்ஷணகாலமும் பிரியமாட்டேன் என்று நித்யவாஸம் செய்யப் பெற்றவனும், திருவத்திமாமலையில் நின்று கருணையாகிய நீரைப் பொழியும் மேகம் போன்றவனுமான பேரருளாளன், உலகத்தில் வேறு உபாயம் அநுட்டிக்க முடியாமல், பெரிய பிராட்டியின் திருவருளைப் புருஷகாரப் பிரபத்தியாகப் பெற்று, தன்னைச் சரணம் அடைந்தவருக்கும், தனது அநுபவத்தை விட்டு ஒரு கணப்பொழுதும் பிரிந்து இருக்கமுடியாத காதல் உள்ள பாகவதர்கட்கும் அவர்கள் பிரார்த்தித்த காலத்திலே தன் பரமகிருபையை வைத்து மோக்ஷாநுபவம் ஆகிய பகலால் அநாதியான ஸம்ஸாரம் ஆகிய காளராத்திரியை நீக்கி பொழுது விடியச் செய்வான்] என்று இவ்வேதாந்தவாரியனே விளம்புதல் காண்க.

நம்மாழ்வார்

சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்.
(திருவாய்மொழி 9-10-5)

[ஈடு - அஞ்சாம் பாட்டு . இப்படி பக்தியோகத்தால் ஆச்ரயிக்க க்ஷமரமன்றிக்கே தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினார் திறத்து அவன் செய்தருளும்படியை அருளிச் செய்கிறார்.]

(சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்) ஜந்ம்வ்ருத்தஜ்ஞாநங்களால் குறைய நின்றேராயாகிலும், தன் திருவடிகளையே உஉபாயமாகப் பற்றினார்க்கெல்லாம் ரக்ஷகனாம். கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன ப்தி யோகம் அதிக்ருதாதிகாரம், இதில் சொல்லுகிற ப்ரபத்தி ஸர்வாதிகாரம் என்கிறது; "ஸமோஹம் ஸர்வபூதேஷு" என்னக்கடவதிறே. பகவத் விஷயந்தான் ஸ்பர்ச வேதியாயிருக்குமிறே; கைசிகத்தில் பகவத் ஸம்பந்தம் உடையான் ஒரு சண்டாளனோட்டை ஸம்பாஷணம் ப்ராஹ்மணனுடைய ஆசாரவைகல்யத்துக்குப் பரிஹாரமாய்த்து; அவ்விடத்திலெல்லாம் சொல்லுகிற அர்த்தம் இதுவே யாய்த்து.

(மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்) -- இவன் தன் பக்கலிலே பரந்யாஸம் பண்ணின அன்று தொடங்கி இவனையொழியத் தனக்குச் செல்லாமை யுண்டாயிருக்கச் செய்தேயும் , இவனுடைய ருசியை அநுவர்த்தித்து, சரீரவிச்லேஷத்தளவும்அவரைப்ரதீக்ஷனாய் நின்று, பிள்ளையதுண்டானால் பரமபதத்தைக் கொடுக்கும் உபகாரகன். தன் திருவடிகளைப் பற்றினவன்றே தானிருக்கிற விடத்திலே இவனைக் கொடுபோய்ச் சேரவைத்துக் கொள்ளவேண்டியிருக்கச் செய்தேயும், நடுவு இவனிருக்கும் நாலு நாளும் அவனுக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழியாயிருக்கையாலே, "மரணமானால்" என்கிறது. "மரணமானால்" என்கிறது -- தனக்கு அசக்தியில்லை, இவனுக்குக் கர்த்தவ்யமில்லை, இவன் ருசியைக் கடாக்ஷித்து நிற்கிற வித்தனை. இப்பாட்டில் "மரணமானால்" என்றத்தைக் கொண்டிறே கீழ்ச்சொன்ன நிரூபரணமெல்லாம் என்றிறே அருளிச் செய்தார்.

இன்னும் வரும்