(நேற்றைய தொடர்ச்சி)
கோபியரின் விரகதாபம்
நீடுநின்ற நிறைபுகழ் ஆய்ச்சியர்,
அல்லல் விளைத்த அருமருந்தை, ஆயர்பாடிக்கு அணிவிளக்கை,
வேட்கை உற்று மிகவிரும்பிச் சொல்லும்;
காமவேள் மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்து எய்ய,
மழறு தேன்மொழியார் நின் அருள் சூடுவார் மனம் வாடிச் சொல்லும்;
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும்;
விண்ணைத்தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கைகாட்டும்;
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும்;
எறியும் தண்காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும்;
ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும்;
நின்ற குன்றத்தின் நோக்கி நெடுமாலே வா என்று கூவும்;
கோமளவான் கன்றைப் புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும்;
போம் இளநாகத்தின் பின்போய் அவன் கிடக்கை ஈது என்னும்;
கரும் பெரும் மேகங்கள் கண்டு கண்ணன் என்று ஏறப்பறக்கும்; அயர்க்கும்;
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து,
என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே என்னும்;
சுற்றும் பற்றிநோக்கி அகலவே நீள்நோக்கு கொள்ளும், வியர்க்கும்;
மழைக்கண் துளும்ப வெவ்வுயிர் கொள்ளும்; மெய் சோரும்;
அழல்வாய் மெழுகுபோல் நீராயஉருகும் என் ஆவி என்னும்;
பெயர்த்தும் கண்ணா என்று பேசும்;
பெருமானே என்று கூவும்;
ஏசுஅறும் ஊரவர்கவ்வை, தோழீ!
என்செய்யும்இனி நம்மை என்னும்;
“கடியன் கொடியன் நெடியமால் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
தோழிமீர் அகப்பட்டேன் வாசுதேவன் வலையுளே” என்னும்;
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்,
அஞ்சேல் என்பார் இலையே என்னும்;
அன்னை என்செய்யில் என்?
ஊர் என்சொல்லில் என்?
தூமுறுவல் தொண்டைவாய்ப் பிரானை
எந்நாள்கொலோ யாம் உறுகின்றது என்னும்;
பார் எல்லாம் உண்ட பாம்பு அணையான் வாரானால்
ஆர் எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே என்னும்;
காயும் கடுசிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன்
வல்வினையேன் பெண் பிறந்தே என்னும்;
இலைத்தடத்த குழல் ஊதி,
விமலன், எனக்கு உருக்காட்டான் என்னும்;
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்;
பண்ணின் இன்மொழி யாழ்நரம்பில் பெற்ற பாலை ஆகி
இங்கே புகுந்து என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்;
ஆயன் கைஆம்பல் வந்து என்ஆவி அளவும்
அணைந்து நிற்கும் என்னும்;
”உன் கைதவம் மண்ணும் விண்ணும் அறியும்;
வேண்டித் தேவர் இரக்க வந்து மனப்பரிப்போடு
அழுக்கு மானிட சாதியில் பிறந்ததும்,
வீங்கு இருள்வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப்போய்,
அங்குஓர் ஆய்க்குலம் புக்கதும்,
காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனை வஞ்சம் செய்ததும்,
வஞ்சப் பெண்ணைச் சாவ பால் உண்டதும்,
ஊர்ச்சகடம் இறச் சாடியதும்,
உயிரினாற் குறையில்லா உலகுஏழ் தன் உள்ளடக்கித்
தயிர் வெண்ணெய் உண்டதுவும் நிரை மேய்த்ததுவும்
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும்,
உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் மற்றும் கேய தீம்குழல் ஊதிற்றும்,
குன்றம் ஒன்று ஏந்தியதும்,
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்,
இகள்கொள் புள்ளை பிளந்ததும்,
இமில் ஏறுகள் செற்றதும், உயர்கொள் சோலைக்குருந்து ஒசித்ததும்,
உட்பட மற்றும் பிறவும் பலமாயங்கள் செய்ததும்,
சாற்றி மாயக்கோலப்பிரான் தன் செய்கை நினைந்து,
மனம் குழைந்து புலம்பி அலற்றி இருநிலம் கைதொழா இருக்கும்;
இட்டகால் இட்டகையளாய் இருக்கும்;
கைகூப்பும்; எழுந்து உலாய் மயங்கும்;
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்;
கடல் வண்ணா, கடியைக் காண் என்னும்;
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே என்றும்;
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்;
வட்டவாய்நேமி வலங்கையா வந்திடாய் என்றே மயங்கும்;
சிந்திக்கும் திசைக்கும்; தேறும் வந்திருக்கும்;
தாமரைக்கண் என்றே தளரும்;
மாமாயனே என்னும், அழும் தொழும்;
ஆவிஅனல் வெவ்வுயிர்க்கும்; அஞ்சன வண்ணனே என்னும்;
எழுந்து மேல்நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
எங்ஙனே நோக்குகேன் என்னும்;
பண்புஉடை வண்டாடு தும்பிகாள் பண் மிழற்றேல்மின்;
புண்புரை வேல்கொடு குத்தல் ஒக்கும் நும் இன்குரல்;
குயில் பைதல்காள்,
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்;
கண்ணனே என் தீர்த்தனே என்னும்;
மாமாயனே மையல்செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும்;
என்னுடைய ஆவியே திருமகள்சேர் மார்வனே,
நான்மறைகள் தேடி ஓடும் செல்வனே என்னும்;
தோழி நாம் இதற்கு என்செய்தும்;
நந்தன் மைந்தனும் வந்திலன்; துணை இல்லை;
கரிய நாழிகை ஊழின் பெரியன கழியும் ஆறு அறியேனே;
நங்கையும் ஓர் பெண்பெற்று நல்கினீர்
பெருமான் அரையிற் பீதகவண்ண ஆடை கொண்டு
புண்ணிற் புளிப்பெய்தாற்போல
கிடப்பேனை வாட்டம் தணிய வீசீரே!
ஏலமலர்க்குழல் தோழியர்காள்!
வனமாலை வஞ்சியாதே தருமாகில் மார்விற்கொணர்ந்து புரட்டீரே!
குழலின் துளைவாய் நீர்கொண்டு குளிரமுகத்துத் தடவீரே!
நங்கைமீர்! புறம் நின்று அழகு பேசாதே,
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீரே!
அன்பு உடையோரைப் பிரிவுஉறு நோயது நீயும் அறிதி,
குயிலே ! காதலியோடு உடன்வாழ் குயிலே!
என் கருமாணிக்கம் வரக்கூவாய்!
உன்னொடு தோழமை கொள்ளுவன், குயிலே!
பவளவாயன் வரக்கூவாய்!
புண்ணியனை வரக்கூவில் நீ சாலத் தருமம் பெறுதி;
தெய்வத்தண் அம்துழாய்த்தார் ஆயினும், தழை ஆயினும்,
தண்கொம்பு அது ஆயினும், கீழ்வேர் ஆயினும்,
நின்ற மண் ஆயினும், கொண்டு வீசுமினே!
இவ் ஆயன்வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும், இளமையே!
நாணி இனி ஒரு கருமம் இல்லை;
கோவலன் ஆய்ப்பாடிக் காவலன் வரில்
கூடிடு கூடலே!
இளவேய் மலை ஏந்தினன் யானே என்னும்;
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்;
இன ஆன்கன்றுகள் மேய்த்தேனும் யானே என்னும்;
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்;
இன ஆயர் தலைவனும் யானே என்னும்;
பொய்யும் பூங்குழல் பேய்முலை உண்ட பிள்ளைத்தோற்றமும்,
பேர்ந்து ஓர் சாடு இறச்செய்ய பாதம் ஒன்றால் செய்த சிறு சேவகமும்,
நெய்உண் வார்த்தையுள் அன்னை கோல்கொள்ள,
நீ உன் தாமரைக் கண்கள் நீர்மல்கவே பையவே நிலையும்,
வந்து என் நெஞ்சை உருக்குங்களே;
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்,
ஆழி அம்கண்ணா! உன் கோலப்பாதம்;
உண்ண வானவர்கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்,
வண்ணமால் வரையை எடுத்து மழை காத்ததும்,
எண்ணும்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும்;
அவை கேட்கும்தோறும் என் நெஞ்சம்
நின்று நெக்கு அருவிசோரும் கண்ணீர்;
எங்கும் மறைந்து உறைவாய், உருக்காட்டாதே ஒளிப்பாயோ!
சிறிசெய்து என்னை புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ!
ஓலம் இட என்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றும் உருவும் சுவடும் காட்டாயோ!
கொள்ளமாளா இன்பவெள்ளம் கோதுஇல தந்திடும் என் வள்ளலேயோ!
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே;
கோலமேனி காண வாராய்!
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு ஆவிதுவர்ந்து துவர்ந்து
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே;
என் செய்வான் எண்ணினாய்! கண்ணனே ஈது உரையாய்!
அடியேனைப் பண்டேபோல் கருதாது
உன் அடிக்கேக் கூய்ப்பணி கொள்ளே!
நாள் இராவும் நான் இருந்து, ஓலமிட்டால், கள்ளமாயா!
உன்னை என் கண்காண வந்து ஈயாயே!
வாராய் உன் திருப்பாத மலர்க்கீழ்ப் பேராதே
யாம் வந்து அடையும்படி;
தாமரைக் கண்பிறழ ஆணி செம்பொன் மேனி எந்தாய்!
காண வந்து என் கண் முகப்பே
வந்து தோன்றாய்! நின்று அருளாய்!”
என்று, வார்ஆர் வனமுலையார் எண் அருஞ்சீர் பிதற்ற
கண்ணனைக் கூவுமாறே!
(இப்படி விரகதாபத்தால் தவித்த பெண்களின் வாட்டம் போக்க கண்ணன் வாராமலிருப்பானோ! அவன் வந்தான்! எப்படி வந்தான்! வந்தவனைக் கண்டதும் பெண்கள் நிலை என்ன! நாளை பார்ப்போம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக