சனி, 3 மார்ச், 2012

வைத்தமாநிதி 11

ஜய ராதே!

ஸ்ரீ கிருஷ்ண லீலாமிர்தம்

(திவ்யப் ப்ரபந்தப் பாசுரப்படி ஸ்ரீ கிருஷ்ணன் சரிதம்)

(கௌஸ்துபமணி என்ற ஸ்ரீ பிரஹ்மானந்த தீர்த்த சுவாமிகள் தொகுத்தது)

03032012484

வாசமலர்ப் பொழில்சூழ் மல்லைமூதூர்
வடமதுரையில் கண்ணன் திருஅவதாரம்.

அல்லித்தாமரைமேல் மின் இடையாள் திருமகளும்,
காம்பு அணை தோள் தரணி மங்கையும்,
ஒருமதி முகத்துச் சேயிழை புலமங்கையும்,
நின் ஈர்அடி ஒன்றிய மனத்தால்
செம்பொன் கமலத் திருவடியின் இணை முப்பொழுதும் வருட,
வங்கம் வலிதடங் கடலுள் ஆயிரம்தோள் பரப்பி
முடி ஆயிரம் மின் இலக, ஆயிரம் பைந்தலைய, இராயிரம் கண்,
அனந்தன் என்னும் வரி அரவின்
உயர் வெள்ளை அணையை மேவி,
மின்னும் மணிமகர குண்டலங்கள் வில் வீச,
துன்னிய தாரகையின் பேர்ஒளிசேர்
ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால்
இரு சுடரை மன்னும் விளக்குஆக ஏற்றி,
மறிகடலும் பன்னுதிரைக் கவரி வீச,
அறிதுயில் அமர்ந்த பருவரைத்தோள் பரம புருடனை,
கருமாணிக்க மலைமேல் மணித்தடம் தாமரைக் காடுகள்போல்,
திருமார்வு, வாய், கண், கை, உந்தி, கால்உடை எம்மானை,
வெள்ளத்து அரவில் தன் கோலச் செந்தாமரைக்கண் உறைபவன்போல
ஓர்யோகு புணர்ந்த வித்தை;

தேன்உடைக் கமலத்து அயனோடு, திரிபுரம் செற்றவனும்,
இந்திரனும், கதிரவனும், சந்திரனும், தொண்டுஆர் இனமும்,
இமையோரும், துணைநூல் மார்வின் அந்தணரும்,
கார்ஆர் வரைக்கொங்கை, கண்ஆர் கடல் உடுக்கை,
சீர்ஆர் சுடர்ச்சுட்டி செங்கலுழிப் பேர்ஆற்றுப் பேர்ஆர மார்பில்,
பெருமா மழைக்கூந்தல், நீர்ஆர்வேலி நிலமங்கையும்,
மாமுனிவரும் பலரும் கூடி, மாமலர்கள் தூவி,
கொந்து அலர்ந்த நறுந்துழாய், சாந்தம், தூபம் தீபம் கொண்டு தொழுது,
ஆயிரம் பெயரால் இறைஞ்சி,
“பொருகடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியே!
சோதி தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்!
துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்!
அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே!
எம் ஆர்உயிரே!கருமாமுகில் உருவா!
கனல் உருவா! புனல் உருவா!சந்தோகா! பௌழியா!
ஐந்தழல் ஓம்பு தைத்திரியா! சாமவேதி!
எம்மையும் ஏழ்உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா!
நீ அன்றி யாம் ஒரு புகலிடம் இலம்,
ஆவி காப்பார்ஆர் இவ்விடத்து,
நமது இடர் கெட, அண்டா நமக்கு அளியாய்,
நல்துணைஆகப் பற்றினோம், சரண் தா”
என்று அலற்றி நின்று,
கண்ணன் அல்லார் இல்லை கண்டீர் சரண்
மண்ணின் பாரம் நீக்குதற்கே என்று வேண்டி
சரண் தா என இரங்க,
உயர்வு அற உயர்நலம் உடையவன் தான் சரண்ஆய்
அவன் மகிழ்ந்து துவர்கனிவாய் நிலமங்கை துயர்தீர,
மண்உலகில் துயரில் மலியும் மனிசர் உய்ய,
அடியார்படும் ஆழ்துயர் ஆயஎல்லாம் நிலம்தரம் செய்ய,
அதிர்கொள் செய்கை அசுரர் மங்க,
சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு
அங்கு ஒரு மாயையினால்,
துயர்இல் சுடர்ஒளி தன்னுடை ஆதிஅம் சோதி உருவை,
நின்றவண்ணம் நிற்கவே அங்குவைத்து,
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் தன்
தெய்வநிலை உலகில் புக உய்க்கும் அம்மான்,

இங்கு மன்னிய சீர்மதனன் மதுவார்சோலை உத்தர மதுரையில்,
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச் சித்தம் பிரியாத
செப்பு இளமென்முலை தேவகி தன்வயிற்றில்,
செந்நாள் சொப்படத் தோன்றி,
மக்கள் அறுவரைக் கல்லிடை கூற்று இயல் கஞ்சன் மோத
இழந்த சுருப்பார் குழலி தேவகித்தாயை குடல் விளக்கம் செய்து,
மன்னுபுகழ் வசுதேவர் வாழ்முதலாய்
மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில்தான்,
பெற்றோர் தளை கழல, இருட்கண் வந்து,
ஒருத்தி மகனாய் அத்தத்தின் பத்தாம் நாள் பிறந்து
ஆலை நீள்கரும்பு அன்னவன் தாலேலோ என்று
வாயிடை நிறைய தால் ஒலித்திடும் திருவினையில்லா
தாயரிற் கடைஆய தாய்,
பன்னிரு திங்கள் வயிற்றில்கொண்ட அப்பாங்கினால்
தேவகி புலம்ப, தந்தை மனம் உந்து துயர் நந்த,
ஓர் இரவில், ஊர் எல்லாம் துஞ்ச, உலகு எல்லாம் நல் இருளாய்,
உலகில் மற்ற ஆரும் அஞ்ச அரவு குடை ஆகப்போய்,

அங்கு அயல்இடத்து உற்றார் ஒருவரும் இன்றி,
அறிவு ஒன்றும் இல்லாத பெற்றம் மேய்த்துண்ணும் ஆய்க்குலம் புக்கு,
ஆலைக்கரும்பின் மொழி அனையாள் அசோதை
தொல்லை இன்பத்து இறுதி காண,
ஆயர் குலத்து ஈற்று இளம்பிள்ளை ஒன்றாய்,
எடுத்த பேராளன் நந்தகோபன் மக்கட்பெறாத
மலடன் ஏமாற்றம் தவிர்த்து,
தன் உயிர் நீல நிறத்துச் சிறுவனாய்,
மைந்நம்பு வேல்கண் நல்லாள் முன்னம் பெற்ற
வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றலாய்,
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தாய்,
ஆயர்குலத்தின் அணிவிளக்காய், அடுத்த பேரின்பக் களிறாய்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கமாய்,
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய, காண்டல் இன்றி,
ஒருத்தி மகனாய், திண்கொள் அசுரரைத்தேய,
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப்பேர்த்து,
ஓர் தாய்இல் வளர்ந்தான்
பரவி வானவர் ஏத்த நின்ற பரமன்
 
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக