Friday, March 2, 2012

வைத்தமாநிதி 10

[ஸ்ரீ கௌஸ்துபமணி ஸ்வாமி அடுத்ததாக ஸ்ரீஇராமாவதாரத்தை நாலாயிரத்தின் சொற்களால் சொல்வதற்கு ஆரம்பிக்கிறார். பாலகாண்டம் முதல் யுத்த காண்டம் வரை ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஏற்கனவே அனுக்ரஹித்திருப்பதால் அதை அப்படியே தனது நூலில் இணைத்துக் கொண்டு பெரியவாச்சான் பிள்ளை பாடாததான உத்தர காண்டத்தை மட்டும் இயற்றி ஸ்ரீஇராம சரிதத்தை நிறைவு செய்திருக்கிறார். பெரியவாச்சான்பிள்ளையின் பாசுரப்படி இராமாயணம் எல்லோரிடமும் இருக்கக் கூடியதால், அதைத் தட்டச்சிடாமல் கௌஸ்துபமணி ஸ்வாமியின் உத்தரகாண்டத்தை மட்டும் இங்கு இடுகிறேன்]

வைத்தமாநிதி

பாசுரப்படி இராமாயணத்தில்

உத்தர காண்டம்

நாஅகாரியம் சொல் இலாதவர்,
நாள்தொறும் விருந்து ஓம்புவார்,
தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ்,
அம்பொன் நெடுமணிமாட அயோத்திநகர் அரசு எய்தி,
திருமகளோடு இனிது அமர்ந்து,
வாதமாமகன் மர்க்கடம் விலங்கு மற்று ஓர் சாதி,
தூதுவந்த குரங்கு, என்று ஒழிந்திலை,
உகந்துகாதல் ஆதரம் கடலினும் பெருகச்செய்
தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதுஇல் வாய்மையினோடும்
உடனே உண்பன் நான் என்று உண்டு,

வந்த மாமுனிவரும் பாவநாசனை வியந்துதி செய்ய
அகத்தியன் வாய்த்தான் முன் கொன்றான் ---
பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் ---
தன்பெரும் தொல்கதை கேட்டு
தனம் மருவு வைதேகி பிரியல் உற்று
தீ வேள்வி மிக்க பெரும் சபை நடுவே
மிதிலைச் செல்வி உலகு உய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டு
செறிதவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று,
செழுமறையோன் உயிர் மீட்டு
தவத்தோன் ஈந்த நிறைமணிப் பூண் அணியும் கொண்டு
இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி
முனிவன் வேண்டத் திறல் விளங்கும்
இலக்குமனைப் பிரிந்து

அன்று புல் பாமுதலா,
புல்,எறும்பு, ஆதி ஒன்று இன்றியே,
நல்பால் அயோத்தியில் வாழும் சராசரம்
முற்றவும் வைகுந்தத்து ஏற்றி

அடல் அரவப் பகையேறி,
இலங்குமணி நெடுந்தோள் நான்கும் தோன்ற,
சுடர் ஆழிவெண் சங்கு இருபால் பொலிய,
வென்றி வில்லும்,தண்டும், வாளும் மன்னு பூணும்,
மின்னு நூலும், குண்டலமும், மார்பில் திருமறுவும்,
பொன்முடியும், வடிவும், பூந்தண்மாலைத்
தண்துழாயும் தோன்ற

விண்முழுதும் எதிர்வரத் தன்தாமம் மேவிச்சென்று
மாமணி மண்டபத்து உடன் அமர் காதல் மகளிர்
சந்து அணி மென்முலை மலராள், தரணிமங்கை, புலமகள் என்ற மூவரும்
பிறைஏறு சடையானும், சந்தமலர்ச் சதுமுகனும், புரந்திரனும்,
கதிரவனும், சந்திரனும், அளகைக்கோனும்,
இறை ஆதல் அறிந்து ஏத்த, அயர்வுஅறும் அமரர்கள்
துயர்அறு சுடர் அடி தொழுது எழ,
அமரர் அரிஏறாக, இனிது வீற்றிருந்த அம்மான் – எம்மான் –
எம்பெருமான்தன் சரிதை,
செவியால் கண்ணால் பருகுவோம்;
இன்னமுதம் மதியோம் ஒன்றே, ஏத்துகின்றோம்
நாத்தழும்ப இராமம் திருநாமம்.

இனி நாளை முதல் தொடரவிருப்பது

“ஸ்ரீ கிருஷ்ண லீலாமிர்தம்”